Tuesday, June 28, 2011

எங்க ஊரு நல்ல ஊரு (இது தொடர் பதிவு)

எங்க ஊரு நல்ல ஊரு (இது தொடர் பதிவு): "
எங்க ஊரு நல்ல ஊரு” என்ற தலைப்பில் இருபத்தைந்து பதிவர்களை தேர்வு செய்து தொடர் பதிவெழுத அழைப்பு விடுத்து அதில் என்னையும் அன்பு சகோதரி ஸாதிகா அவர்களுக்கு முதலில் நன்றி கூறிக் கொள்கிறேன்.

தொடர் பதிவு எப்படி எதை எழுதவேண்டும் என்பதை இதோ ஸாதிகா கூறுகிறார்கள்

“பதிவர்கள் அவரவர்கள் சொந்த ஊர்,புகுந்த ஊர்,வாழ்ந்த ஊர்,புலம் பெயர்ந்த ஊர் மற்றும் நாடுகளில் உள்ள நிறைவான,குறைவான,போற்றத்தக்க,வெறுக்கத்தக்க,சுவாரஸ்யமான,சிறப்பான குணாதிசயங்களை எழுதிப்பகிர்ந்தால் அவ்வூர்களைப்பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களை அனைவரும் அறிந்து கொள்ளலாமே.”

இது நல்ல முயற்சி பல பதிவர்களிடமிருந்து பல ஊர்களைப் பற்றிய விபரங்கள் கிடைக்கும்.

,இதில் எனது ஊரைப்பற்றிய செய்திகளை நீங்களும் தெரிந்துக் கொள்ளுங்கள்.
Please click here : http://www.masjids.in/masjid/kiliyanur-jamia-masjid/
* கிளியனூர் எங்கு இருக்கிறது? எந்த கிளியனூர்? என்ற கேள்விகள் பலருக்கு தோன்றலாம். ஆம் இதே பெயரில் மூன்று கிளியனூர் இருக்கிறது. ஒன்று விழுப்புரம் பக்கமும், இன்னொன்று நன்னிலம் பக்கமும் இருக்கிறது. நான் பிறந்த கிளியனூர் தஞ்சை மாவட்டத்தின் கிழக்குப் பகுதி தற்போது நாகை மாவட்டத்திற்குள் ஐக்கியமாகி, மயிலாடுதுறையிலிருந்து (12 கீ.மீ) திருவாரூர் செல்லும் சாலை வழியாக சுந்தரப்பன் சாவடியிலிருந்து 4 கீ.மீ தூரம் உள்ளே சென்றால் பசுமைப் போர்வையை போர்த்தியதுபோல, சுற்றிலும் வயலும், தோப்புகளும் சூழ்ந்து அழகிய மாதிரி கிராமமாக பல ஆண்டுகளுக்கு முன்னே பெயர் பெற்றது கிளியனூர் வரலாறு.


* 1955 ஆம் ஆண்டிலேயே சுய தேவை பூர்த்தியில் தன்னிறைவு அடைந்த இந்திய கிராமங்களின் வரிசையில் தஞ்சை மாவட்டத்தில் முதலிடம் பெற்ற கிராமமாக “மாதிரி கிராமம்” என்ற சிறப்பை பெற்று அன்றைய முதல்வர் கர்மவீரர் காமராஜ் அவர்களின் கரங்களால் நேருவிருது வாங்கிய பெருமை எங்கள் கிளியனூருக்கு உண்டு.

* கிளியனூர் என்றாலே கொடைவள்ளல் S.A.அப்துல் மஜீதை (சீனா அனா) அவர்களை யாருமே மறக்க மாட்டார்கள். கிளியனூருக்கு மட்டுமல்ல தமிழகத்தில் பல ஊர்களுக்கு கல்வியிலும், பொருளாதாரத்திலும் வள்ளலாக திகழ்ந்தவர்கள். இன்று புகழ் பெற்ற டாக்டர் முஹம்மது ரிலா அவர்கள் இவருடைய பேரர் ஆவார்.

பிறந்து ஏழு நாட்களே ஆன குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்து இந்த உலகத்தையே வியக்க வைத்தவர் டாக்டர் ரிலா.

தகவல் ஒலிபரப்பு முன்னாள் அமைச்சர் பிரமோத் மகாஜன் குண்டடிப்பட்டு கல்லீரல் பழுதுப்பட்டிருந்த போது சிகிச்சையளிக்க லண்டனிலிருந்து தனி விமானத்தில் மும்பை வந்தவர் டாக்டர் முஹம்மது ரிலா.
முன்னால் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் சந்திக்க விரும்பிய நபர் டாக்டர் முஹம்மது ரிலா. இவருடைய பரம்பரை எங்கள் ஊரைச் சார்ந்தவர்கள் என்பதில் எங்களுக்கு பெருமை.

பள்ளிவாசல் மினாராவிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம்


* நாகூர் ஹனிபா அவர்கள் பாடிய - “இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை” - என்ற இந்தப்பாடலை கேட்காத காதுகள் தமிழகத்தில் இருந்திருக்க முடியாது மதங்களை கடந்து இரசித்த இந்தப் பாடலை எழுதியவர் எங்கள் ஊரைச்சார்ந்த மரியாதைக்குரிய காலம் சென்ற கவிஞர் அப்துல்சலாம் அவர்கள் என்று குறிப்பிடுவதில் நான் பெருமைக் கொள்கிறேன்.


* நான் ஏழாம் வகுப்பு படித்த தருணத்தில் எங்கள் ஊரில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு வருகைப்புரிந்த நாகூர் ஹனீபா அவர்களும் அதே மேடையில் கவிஞர் அப்துல்சலாம் அவர்களும் அமர்ந்திருந்து “இறைவனிடம் கையேந்துங்கள்” பாடலை அரங்கேற்றிய அந்தக் காட்சி இன்றும் என் மனத்திரையில் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது. கவிஞர் மறைந்தாலும் அவருடைய கவிதைகள் பல பாடகர்களின் வழியாக இன்னும் அவரை வாழவைத்துக் கொண்டிருக்கிறது..

* எங்கள் ஊரின் சிறந்த கவிஞர்கள் வரிசையில் இடம் பெற்றிருப்பவர் கிளியனூர் அஜீஸ், அவரைத் தொடர்ந்து அ.மு.இப்ராஹிம், கவிஞர் சஹிதா செல்வன் (அப்துல் அலீம்) போன்றவர்களை இங்கு குறிப்பிடுவதில் மகிழ்கிறேன்.

* எங்கள் ஊரின் பல சாதனைகளுக்கு துணையாக இருந்தவர் தூணாக இருந்தவர் மதிப்பிற்குரிய அபுல்ஹசன் அவர்கள்.

* ஆண்டுதோறும் ரமாளான் பெருநாளில் விளையாட்டு போட்டிகள் நடைபெறும் எனக்கு கருத்து தெரிந்த நாளிலிருந்து இன்று வரையில் விளையாட்டு போட்டிகள் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது.


* தங்கம் செய்யாததை சங்கம் செய்யும் என்பார்கள் எங்கள் ஊரில் இஸ்லாமிய முன்னேற்ற சங்கம் துவங்கி நூற்றாண்டு காலத் தொடராக இருக்கிறது. அந்த காலத்தில் எங்கள் ஊரில் திருமணங்கள் இரண்டு தினங்கள் நடக்குமாம் இரவு முழுவதும் மாப்பிள்ளை ஊர்வலம் விடியற்காலை திருமணம் (நிக்காஹ்) தெருவெல்லாம் இறைமாலை திருநபி புகழ்பாடி சங்கத்து இளைஞர்கள் சுற்றிவருவார்கள். ஒவ்வொரு தெருவிலும் உள்ள உறவினர்கள் சங்கத்து பிள்ளைகளுக்கு தேனீர் குளிர்பானங்கள் என்று வழங்குவார்கள் சங்கத்து பாடகர்களுக்கு பனகற்கண்டு பால் வழங்குவார்கள். இந்த சங்கத்தில் 1970 க்கு பிறகு நானும் உறுப்பினராக இருந்து வந்தகாலமும் இருக்கிறது.(இது இப்போதும் நடைபெறுகிறதா? என்று கேட்டுவிடாதீர்கள்)


* நோன்பு காலங்களில் நோன்பு திறப்பதற்கு என்னதான் வசதி படைத்தவராக இருந்தாலும் பள்ளிவாசலில் எல்லோருடனும் அமர்ந்து நோன்பு திறப்பார்கள்.

* கிளியனூரில் சாதிக்கப்பட்ட நலத்திட்டங்கள் அரசினர் உயர் நிலைப்பள்ளி, மருத்துவமனை, தபால்நிலையம் ,டெலிபோன் எக்சேஞ், ஐஒபி வங்கி, வசதிகள் மின்சார வசதிகள் எல்லாமும் கிளியனூருக்கு மட்டுமல்ல கிளியனூரைச் சுற்றியுள்ள கோவில்கிளியனூர், பழவலாங்குடி, கடக்கம், முத்தூர், கீழப்பெரம்பூர், வேலூர், மேலப்பெரம்பூர், கீழவல்லம், அகரவல்லம், எடக்குடி, வல்லம், பெருஞ்சேரி மற்றும் சுற்றியுள்ள தலீத் குடியிருப்புகள் உட்பட எல்லா சமூக மக்களும் பயன்படத்தக்கதாகவே விளங்கி வருகின்றன.

* எல்லாவற்றுக்கும் மேலாக எங்கள் ஊர்காரர்கள் ஒற்றுமையில் பல ஊர்களுக்கு முன்னோடியாக இருந்துள்ளார்கள் அதனால்தான் பல சாதனைகளை கிளியனூர் அன்று நிகழ்த்தி இருக்கிறது.

பலரும் வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் இன்றைய காலத்து இளைஞர்கள் படிப்பில் ஆர்வம் கொண்டு படித்துவருவது எங்கள் ஊருக்கும் நம் நாட்டிற்கும் கிடைத்திருக்கும் பலம். இது எங்கள் ஊரைப்பற்றிய நிறைவு அல்ல.

எங்கள் ஊரின் சிறப்புகளை எழுதுவதற்கு ஒரு தூண்டுகோளாக விளங்கிய சகோதரி ஸாதிகா அவர்களுக்கு மிக்க நன்றி.!

 Source : http://kismath.blogspot.com/2011/06/blog-post.html

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails