Saturday, June 18, 2011

செக்ஸ் கல்விக்காகவே தனிக்கல்லூரி நிறுவினால் என்ன?

தண்ணீருக்கு அடியில் கண்ணீர் விட முடியுமா...? - சீதா, நாகர்கோவில்.

முடியும்; ஆனால் அது நீரில் கலந்து விடுவதால் வெளியே தெரிவதில்லை.


ஸ்பெக்ட்ரம் ஊழலில் கைதாகிச் சிறையில் இருக்கும் ராசா அனுபவிக்கும் வசதிகளைப் படித்தால் அவர் கைதி மாதிரியே தெரியவில்லையே? எல்லா அரசியல் கைதிகளுக்கும் இம்மாதிரி வசதிகள் கிடைக்குமா? - ப.கோ. வசீகரன்.

கொலைக்குற்றத்தில் கைது செய்யப்பட்ட சங்கராச்சாரி சிறையில் அனுபவிக்காத வசதிகளா?

ராசா அரசியல் கைதி அல்லர்.  முறைகேட்டில் ஈடுபட்டு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய வழக்கில் இப்போது விசாரணைக் கைதி;  குற்றம் நிரூபிக்கப்பட்ட தண்டனைக் கைதி அல்லர்.

நாடாளுமன்ற உறுப்பினர் என்ற தகுதியில் முதல் வகுப்பில் அவர் இவ்வசதிகளைப் பெறுகிறார். முதல் வகுப்புத் தகுதி பெற்ற கைதிகளுக்கு இவ்வசதி சட்டப்படி கிடைக்கும். ஆனால் பீகார் போன்ற மாநிலங்களில் கொலைக் குற்றத்துக்குத் தண்டனை பெற்ற கைதிகளும் தாதாக்களும்  ராசா பெறுவதை விட அதிக வசதிகளைப் பெறுகின்றனரே... இதற்கு என்ன சொல்ல?.

பாடத்தில் செக்ஸ் கல்வி அவசியம் என்கிறார்களே, செக்ஸ் கல்விக்காகவே தனிக்கல்லூரி நிறுவினால் என்ன? - சபாபதி, சேலம்.
நல்ல ஆள்தாம் போங்கள். 

உங்கள் வினாவிலேயே "பாடத்தில் செக்ஸ் கல்வி" என்றுதான் வினவியுள்ளீர்கள். கலைக்கல்லூரியில் பட்டப் படிப்புக்குத் தேர்ந்தெடுக்கும் பொருளியல், வணிகவியல், வேதியியல், இயற்பியல், கணிதவியல் போன்ற சிறப்புப் பாடத்துக்கே தனிக்கல்லூரி நிறுவுவதில்லை. மற்ற பாடங்களுடனே அதைக் கற்பிப்பர். அதுபோல்தான் செக்ஸ் கல்வியும். மருத்துவம், பொறியியல் போன்ற வருவாய் ஈட்டும் தொழிற்கல்விகளுக்கே தனிக்கல்லூரி.. 

செக்ஸ் என்ன வருவாய் ஈட்டும் தொழிலா?.

நாய்களுக்காக விற்கப்படும் உணவில் புதிய சுவைகூட்டப்பட்ட உணவு என்று விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது, அதை எப்படி சோதித்து தெரிந்து கொள்வது? - ராஜன், மதுரை.

நீங்கள் சுவைக்க வேண்டாம். உங்கள் நாய் வெளிப்படுத்தும் மகிழ்ச்சியில் அறிந்து கொள்ளலாம்.


காப்பிரைட் சின்னத்தை யார் காப்பிரைட் செய்துள்ளார்கள்? - ஜோஸ், சென்னை.

யாரும் இல்லை. எனவே அதை நீங்கள் பயன்படுத்தத் தடை இல்லை.தேர்தல் முடிவு வெளிவந்த கையோடு உங்கள் பதில்களிலும் சுருதி குறைந்துள்ளதுபோல் தெரிகிறதே.. நீங்கள் ஏதேனும் கட்சிக்கு ஆதரவாளரா சார்? - குற்றாலம் பாபு.

எதை வைத்து அப்படித் தவறாக முடிவு செய்துள்ளீர்கள்? வினாவைப் பொறுத்தே விடை அமையும். நீங்கள் நம் தளத்தில் பதிந்து வைக்கப்பட்டுள்ள வ மு விடைப் பகுதியின் அனைத்துத் தொகுப்புகளையும் படித்தால் உங்கள் வினா தவறு என்பதை உணர்வீர்கள்.


கடும் வெயிலில் 8 மணி நேரத்துக்கும் மேலாக கடுமையாக உழைக்கும் கட்டிட, சாலை பணியாளர்கள் துச்சமான ஊதியம் பெறும்போது, ஏசி ரூமில் காலாட்டிக்கொண்டு ஹாயாக அமர்ந்து ஏனோ தானோவென உடல் உழைப்பின்றி வேலை பார்ப்பவர்கள் கைநிறைய ஊதியம் பெறும் நிலையினைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? - அருள், கத்தர்.

உங்கள் பார்வைக்கு அப்படித் தோன்றினாலும் உண்மை அதுவன்று! உடலுழைப்பை விட மூளை உழைப்புக்கு அதிக ஊதியம்.

தேயிலை தயாரிக்கும் நிறுவனங்களில் ஒருவர் அமர்ந்து சும்மா தேநீரைப் பருகிக் கொண்டே இருப்பார். பனியிலிலும் குளிரிலும் நின்று தேயிலை பிடுங்கும் தொழிலாளியை விட அவருக்கு ஊதியம் அதிகமே! அவர் tea appraiser அவரது பணி தேநீரைச் சுவைத்து மதிப்பிடுவதே! அவரது திறமைக்குத்தான் அதிக ஊதியம்.

கார் தயாரிக்கும் தொழிற்சாலை அலுவலக  மாடியில் நின்று கொண்டு சாலையைப் பார்த்துக் கொண்டு  பொழுது போக்கும் ஒருவருக்குத் தொழிலாளர்களை விடச்  சம்பளம் அதிகம். அவர் சாலையில் ஓடும் கார்களின் வடிவங்களைப் பார்த்துத் தம் நிறுவனத்துக்குப் புதிய மாடல் டிஸைன் செய்யும் நிபுணர் ஆவார்.

கட்டிடப் பணி, சாலைப் பணி, உயர்ந்த உருக்குக் கோபுரங்களை எழுப்பி அதில் மின் / தொலைத் தொடர்புக் கம்பிகளை இணைக்கும் ஆபத்தான பணிகளைச் செய்யும் ஊழியர்கள் போன்றோரை விட நீங்கள் வினவிய காலாட்டிகளுக்குச் சம்பளம் அதிகமே. ஆனால் தொழிலாளர்களை விடப் பொறுப்பும் நிறுவனத்துக்கு விளக்கம் அளிக்கும் கடமையும் உள்ளவர்கள் அவர்கள். தொழிலாளர்கள் வேலை முடிந்ததும் வீட்டுக்குப் போனால் மறுநாள் வேலைக்கு வந்தால் போதும்; வராமலும் இருக்கலாம். ஆனால் உயர் பதவியில் இருப்பவர்களுக்கு இரவுத் தூக்கம் கூடக் குறைவுதான். தம் நிறுவனம், தாம் வேலை ஒப்பந்தம் எடுத்துச் செய்யும் நிறுவனம், அரசு எனப் பல பக்கங்களில் இருந்து வரும் வினாக்களுக்கும் விசாரணைகளுக்கும் நேரம் காலம் பாராது விளக்கம் அளிக்கும் அறிவும் திறமையும் விவரங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் விவேகமும் நிறைந்தவர்களுக்கே, நீங்கள் சொன்ன உயர் சம்பளமும் காலாட்டும் வாய்ப்பும்.

"Bureaucrats in padded chairs only know the pain of piles" என ஓர் ஆங்கிலச் சொலவடையைக் கேட்டதில்லையா?.


டெல்லியில் கைது செய்யப்பட்டவர்களைச் சென்னை சிறையில் அடைக்காதபோது தமிழகத்தில் கைது செய்யப்பட்ட ராசா மற்றும் கனிமொழி ஆகியோரைத் திகார் சிறையில் அடைப்பதன் நோக்கம் என்ன?- செல்வராஜ், துபை.

சென்னை என்ன.?. குற்றம் சுமத்தப்பட்டோர் எங்கு கைது செய்யப்பட்டாலும் குற்றம் நிகழ்ந்த இடம் மற்றும் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ள நீதிமன்ற எல்லை போன்றவற்றை வைத்தே காவலில் வைக்கும் இடம் முடிவு செய்யப்படும். கோவை வெடிகுண்டு வழக்கில் கேரளாவில் கைது செய்யப்பட்டுக் கோவைச் சிறையிலும் பின்னர் இப்போது கேரளாவில் கைது செய்யப்பட்டுக் கர்நாடகச் சிறையிலும் மதானி அடைக்கப்பட்டுள்ளாரே?

உங்கள் வினாவில் நீங்கள் வினவியுள்ளபடி ராசாவும் கனிமொழியும் தமிழ்நாட்டில் கைது செய்யப்படவில்லை. அவர்கள் டெல்லியில் கைது செய்யப்பட்டனர்.  குற்றம் நிகழ்ந்த இடம் மற்றும் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ள நீதிமன்ற எல்லை போன்றவை டெல்லி என்பதால் அங்குள்ள சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். அப்போதுதான் ஒவ்வொரு விசாரணைக்கும் அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்த முடியும். இதுதான் நோக்கம்.

சில ஸாடிஸ்ட் ஆட்சியாளர்கள் தம் மகிழ்ச்சிக்காக எதிர்க்கட்சி  அரசியல் கைதிகளைப் பழிவாங்கும் நோக்கத்தில்  இழுத்தடிப்பர். ஜெயலலிதாவின் ஆணையில் முன்னர் 'பொடா'வில் சென்னையில் கைது செய்யப்பட்ட வை கோ, வேலூர்ச் சிறையில் அடைக்கப்பட்டு ஒவ்வொரு விசாரணைக்கும் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு அலைக்கழிக்கப்பட்டார். இது ஜெயலலிதா ஸ்டைல்.

காங்கிரஸ் ஆட்சியில் பாளைச் சிறையில் கருணாநிதி அடைக்கப்பட்டிருந்தார்.

நாய்களுக்கு வெறி பிடித்தால் அடித்துக்கொல்ல வேண்டும். மனிதர்களுக்கு வெறி பிடித்தால்? - மீனாட்சி, துபை.

அறையில் / சிறையில் அடைக்க வேண்டும்.

மீனுக்குத் தாகம் எடுக்குமா? - ப.கோ. வசீகரன்.

நீரில் பிறந்து வாழும் மீன் வாயால் நீரைக் குடித்துச் செவிள் வழியாக வெளியேற்றியே சுவாசிக்கிறது. நீர் கிடைக்காவிட்டால் செத்து விடும். எப்போதும் நீரைக் குடித்துக் கொண்டேயிருக்கும் மீனுக்குத் தாகம் எடுக்காது.

இந்தியாவின் அண்டைநாடான சீனா ஏன் இந்தியாவுக்குள் தீவிரவாதிகளை அனுப்புவதில்லை? -  S.கதிர்-தேனி.

பாகிஸ்தான் நமது  பங்காளி.. காஷ்மீர் எனும்  கன்னிக்காக இருவரும் போராடும் நிலை இருப்பதால் தீவிரவாதிகளை அனுப்புகிறது. மேலும் நம் இரு நாடுகளுக்கும் இடையே பகை மூட்டிப் போர் தொடங்கச் செய்வதற்கு இரு நாடுகளிலும் உள்ள சில சக்திகளுக்கு ஆவல் அதிகம். அதனால் வெளிப்படையாகத் தெரியும் படியே பாகிஸ்தான் தீவிரவாதிகளை அனுப்புகிறது. சீனா அப்படி வெளிப்படையாகச் செய்வதில்லை. தீவிரவாதிகளுக்கு அனைத்து வகை உதவிகளையும் ரகசியமாகச் செய்தாலும் அதுவும் தீவிரவாதமே. நமது பாதுகாப்புத் துறை அமைச்சர்களும் ராணுவ ஜெனரல்களும்  பாதுகாப்பு ஆலோசகர்களும் சொன்ன ஒரு விஷயம்:-- "பாகிஸ்தானை விடச் சீனாவால் ஆபத்து அதிகம்."

ஓரே ஒரு டி.வியை கூட ஏன் ஆங்கிலத்தில் TV Set என்று சொல்கிறார்கள் / எழுதுகிறார்கள்? - மல்லிகா, அபுதாபி.

படம் பார்க்க 'பிக்சர் ட்யூப், ஒலி கேட்க ஸ்பீக்கர், சானல்களைப் பிடிக்க ட்யூனர், சிக்னல்களைப் பிடித்துத் தர ஆன்டென்னா என அனைத்தும் இணைந்து ஒரு பெட்டியாக வருவதால் TV Set.

பிரபலங்களின் சிகிச்சைக்காக வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் மருத்துவர்களுக்கு இறக்குமதி வரிகள் உண்டா? - சங்கீதா, அடையாறு.

மருத்துவர்களுக்கு ஊதியம் கொடுப்பர். சிலர் இலவசமாக மருத்துவம் பார்ப்பதும் உண்டு. ஆனால் மருத்துவர்களுக்கு இறக்குமதி வரி விதிப்பதாகக் கேள்விப்பட்டதில்லை.

தமிழ்தாய் வாழ்த்தை எழுதியவர் கருணாநிதியா? கணியன் பூங்குன்றனாரா? - அருணகிரி, ஆழ்வார்பேட்டை.

கருணாநிதிக்குப் பிறமொழிக் கலப்பின்றித் தமிழை எழுதவோ பேசவோ இயலாது என்பதைப் பல முறை இப்பகுதியில் சொல்லியுள்ளேன். தமிழ்மொழி வாழ்த்தை எழுதியவர் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை ஆவார். பள்ளியில் கீழ் வகுப்பு மாணவன் கூட அறிந்திருக்கும் செய்தி இது. பாடப்புத்தகத்தைத் திறந்து முதல் பக்கங்களைப் பார்த்ததே இல்லையா?

பேராசிரியர் சுந்தரம்பிள்ளை எழுதிய மனோன்மணியம் நாடகத்தில் வரும் வரிகளை எடிட் செய்து உருவாக்கப்பட்டதே, தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வரும்  "நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்" எனும் தமிழ்த்தாய் வாழ்த்து.

"கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாள  மும் துளுவும்

உன்னுதரத்தே உதித்தெழுந்து ஒன்றுபல ஆயிடினும்

ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையா நின்.........."


எனும் வரிகள் வெட்டப்பட்டுப் பாடப்படுகின்றது இன்று.

(வணங்காமுடி பதில்கள் அனைத்தையும் இங்கு காணலாம்)
வணங்காமுடிக்குக் கேள்விகளை அனுப்ப விரும்பும் வாசகர்கள் ask@inneram.com என்ற மின் அஞ்சல் முகவரி மூலம் அனுப்பலாம்.

Source : http://www.inneram.com/2011061217180/vanagamudi-answers-12-06-2011

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails