Tuesday, June 7, 2011

ராஜாத்தி காலில் விழுந்த ராசாவைப் பகுத்தறிவுக் கலைஞர் கண்டிக்காததன் மர்மம் என்ன?


தன்னார்வமாகச் செய்யும் பணிகளில் கூட சில வேளைகளில் அயர்ச்சி ஏற்படுகிறதே. என்ன காரணம்?  - பூபதி, மைசூர்.

உடனிருக்கும் சக தன்னார்வலர்களும் நம்மைப் போல் நேரம் காலம் தவறாமை பேணிச் சேவையாற்றுவர்; கொடுத்த பொறுப்பை நிறைவேற்றுவர் என்ற நம்பிக்கை தளரும்போது அயர்ச்சி ஏற்படுவது தவிர்க்க முடியாதது.

வணங்காமுடியின்  முப்பத்தேழாண்டு காலப் பொது வாழ்வில், சக தன்னார்வலர்களால் கைவிடப் பட்டுத் தன்னந்தனியாக நின்றதால் பல முறை அயர்ச்சி ஏற்பட்டதுண்டு; எனினும் அதைப் போக்க அடுத்த சேவையைப்  புதியவர்களுடன் சேர்ந்து தொடங்கியதும் உண்டு. 

நீங்களும் இதைப் பின்பற்றலாமே.


அகிலன், ஜெயகாந்தனுக்குப் பிறகு ஞானபீட விருது தமிழ் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படவில்லையே..ஏன்? - அரசு, மதுரை.

தமிழில் ஞானபீடப் பரிசுக்குத் தகுதியான எழுத்தாளர்களோ தரமான படைப்புகளோ இல்லை என்று அவர்கள் கருதுவதால் இந்நிலை இருக்கலாம்.

மின்மினிபூச்சிகள் எவ்வாறு ஒளியெழுப்புகின்றன? - வைதேகி,சென்னை.
மின்மினிப் பூச்சியின் வயிற்றில் இருக்கும் ஒரு வகையான உயிரணுக்களில் luciferin என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த உயிரணுக்கள் மூச்சுக் குழலுடன் இணைக்கப்பட்டுள்ளதால் மின்மினிப் பூச்சி சுவாசிக்கும்போது பிராண வாயுவுடன் அடிவயிற்றிலுள்ள லூசிபெரின் சேர்ந்து ஒளியை உமிழ்கிறது. இது ஒரு bio-chemical நடைமுறையாகும்.

புதிய அமைச்சர்கள் தங்களது சொத்துப் பட்டியலை வெளியிடுவார்களா? - ராஜா, ஒரத்தநாடு.

தேர்தலில் வேட்பு மனு அளித்த வேளையில் சொத்துக் கணக்கைக் கொடுத்துள்ளார்களே.

அமைச்சர்களான பின் ஆண்டுக்கொருமுறை மக்களுக்குத் தெரியும்படி தம் சொத்துக் கணக்கை வெளியிட முதல்வர் ஜெயலலிதா கட்டளையிட வேண்டும்.

தமிழகத்தில் புதிய புதிய பத்திரிகைகளாக வந்து கொண்டிருக்கிறதே....தமிழர்களின் வாசிக்கும் திறன் அதிகரித்து உள்ளதா? - சுல்தானா, சென்னை.

வரலாம். அவை நிலைத்து நிற்க வேண்டுமே.

பலவும் வந்த சுவடு தெரியாமல் முடங்கிப் போயுள்ளதால் வளர்ச்சியா வீக்கமா என ஐயுறவேண்டியுள்ளது.

பத்திரிகைகளின் வரவை வைத்து மக்களின் வாசிக்கும் திறன் அதிகரித்துள்ளது எனச் சொல்ல முடியாது. தொலைக்காட்சி வந்தபோது குறைந்த வாசிக்கும் பழக்கம் இணையத்தின்  வரவால் இணைய வாசிப்பு என மாறிவிட்ட இக்காலத்தில் பத்திரிக்கை வாங்கிப் படிக்கும் எண்ணிக்கை கூடிவிட்டதாக நான் நினைக்கவில்லை.

விஜயகாந்தை எதிர்த்தார் என்பதற்காக வடிவேலுவுக்கு திரைப்படங்களில் வாய்ப்புகள் மறுக்கப்படுவது அநியாயமில்லையா? - ராமையா, அஜ்மான்.

வடிவேலுவே இதைப் பற்றிக் கவலைப்படவில்லையே.
"ராணாவாவது காணாவாவது.? என்னயெ சினிமாவெ வுட்டு தூக்குனாக்கூட கவலப்பட மாட்டேன்"  என அவர் சொன்னதை நான் டி வி செய்தியில் பார்த்தேன். பட வாய்ப்புகள் குறைந்தால் தமக்கு வருத்தம் இருக்காது; சிநதிக்கவும் ஓய்வெடுக்கவும் இடைவெளி தேவை எனக்கூறித் தெளிவாகப் பேட்டியளித்துள்ளாரே.

பாமகவின் திமுக கூட்டணி தொடருமா? - மருது, பண்ருட்டி.

இப்போதைக்குத் தொடர்கிறது.

உள்ளாட்சிமன்றத் தேர்தல் வரும்போது மாற்றம் தெரியும்.

தங்கள் கட்சியோடு தங்கள் கூட்டணிக் கட்சிகளையும் தோற்கடித்து முதல்வராகியுள்ள ஜெயலலிதாவை டெல்லிக்கு டீ சாப்பிட அழைக்கும் சோனியா காந்தியின் செயல் அரசியல் நாகரிமா, சந்தர்ப்பவாதமா?- ரஜினி முருகன், திருச்சி.

தாம் வெற்றி பெற்றதற்கு சோனியா வாழ்த்து மட்டுமே தெரிவித்தார். டீ குடிக்க அழைத்ததாகப் பத்திரிகைகளில்தான் பார்த்தேன் என ஜெயலலிதாவே பத்திரிகையாளர்களிடம் தெரிவித்து விட்டாரே?.
வாழ்த்துத் தெரிவிப்பது அரசியல் நாகரீகம். அது வடநாட்டில் இருக்கிறது; தமிழ்நாட்டில் இல்லை.

சசிகலாவும் சோவும்தான் 'இலை'யை மீண்டும் துளிர்க்க வைத்தவர்கள் என்று ஒரு வார இதழ் கட்டுரை வெளியிட்டிருக்கிறது.  இது பற்றி வணங்காமுடியாரின் கருத்து என்ன? - சேதுபதி, சிங்கப்பூர்.

அனுகூல சத்ரு.

ஜெயலலிதாவுக்குச் செல்வாக்கோ அரசியல் அறிவோ தேர்தல் வியூகம் வகுக்கும் திறமையோ கிடையாது; சோவும் சசிகலாவும் தாம் இத்திறமை உள்ளவர்கள்; ஜெயலலிதா எதுவுமே அறியா வெறும் பொம்மை என்று நிறுவ முயல்கின்றனர்.

ராஜாத்தி காலில் விழுந்த ராசாவைப் பகுத்தறிவுக் கலைஞர் கண்டிக்காததன் மர்மம் என்ன? - ப.கோ. வசீகரன்.

காலில் விழுவது பகுத்தறிவுக்கு முரணானது என அவர் நினைத்திருந்தால் தம் குடும்பத்தார் சாய்பாபா காலில் விழுந்ததை அனுமதித்திருக்க மாட்டாரே?

காங்கிரஸையும் பாமகவையும் கழட்டிவிட்டிருந்தால் திமுகவுக்கு கூடுதல் சீட்டுக்கள் கிடைத்திருக்குமா? - ஆ. மூர்த்தி, பட்டுக்கோட்டை.

பிள்ளையாரைப் பிடித்த சனி, அரச மரத்தையும் பிடித்து ஆட்டிவிட்டது என்று சொல்வதுபோல, தி மு க மீது மக்கள் கொண்ட கோபம் தி மு க வின் கூட்டணிக் கட்சிகளுக்கும் எதிராக அமைந்து விட்டதே  தவிர இவர்கள் மீதுள்ள கோபம் தி மு க மீது திரும்பவில்லை. எனவே வினாவில் வலுவில்லை.

அ.தி.மு.க வெற்றிக்கு விஜய் அணிலாக உதவினாராமே? - கிரிஜா, கும்பகோணம்.

இதை ஜெயலலிதா சொல்ல வேண்டும். விஜய் தரப்பு சொன்னால் ஏற்க முடியாது.

வல்லரசின் உண்மையான அடையாளங்கள் என்னென்ன? - நீதிராஜ், கோயம்பதூர்.

பொருளாதாரம்,  உணவுப் பொருள் உற்பத்தி மற்றும் தொழில்களின் வளர்ச்சி, உள்நாட்டுப் பாதுகாப்பில் வலிமையாக இருப்பது; வெளிநாட்டுப் படை எடுப்பை எதிர் கொள்ளும் திறன் படைத்திருப்பது. போர்த் தளவாடங்கள் மற்றும் அணு ஆயுதக் கையிருப்பில் தன்னிறைவு பெற்றிருப்பது; அரசியல் குழப்பமின்றி இருப்பது போன்றவற்றைச் சொல்லலாம்.

மன்னர்கள் காலம்போல், இன்று அந்தந்த நாட்டுத் தலைவர்கள் களமிறங்கி போர் புரியவேண்டும் என்று சட்டமோ திட்டமோ இயற்றினால் போர் குறைய வாய்பபுள்ளதா? - ரகு, சென்னை.

மன்னர்கள் ஆண்ட நிலப்பரப்பு குறுகியது அவர்களது நாடு என்பது, இன்றைய இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களின் பரப்பளவே! மன்னர்கள் காலப் பேரரசு  இன்றைய அளவில் நாலைந்து மாவட்டங்கள் சேர்ந்த அளவு நிலப்பரப்பு ஆகும். வீரர்களின் எண்ணிக்கையும் அந்த அளவுக்கு மட்டுமே இருந்தது. தகவல் தொடர்புக்குக் குதிரை வீரன் அல்லது பழக்கப்படுத்தப்பட்ட புறா. அன்றைய போராயுதங்களும் ஈட்டி, வாள், வில்லம்பு , கவண்கல் போன்றவையே. போர்க்களம் என்பது ஒரு குறிப்பிட்ட இடம் அல்லது நிலப்பரப்பே. அவ்விடத்தில் இரு நாட்டுப் படைகளும் சந்தித்துப் பொருதுவர். எனவே அரசர்கள் தேரிலோ குதிரையிலோ ஏறி  வந்து போர்க் களத்தில் நிற்க வேண்டி இருந்தது. மேலும் மன்னனின் தலைமையின் கீழ் அணிவகுத்து நிற்பதும் வீரர்களின் திறமையை வெளிக்காட்ட வாய்ப்பாக அமைந்தது.

இன்று ஆட்சியாளர்கள் ஆளும் நிலப்பரப்பும் வீரர்களின் எண்ணிக்கையும் எத்தனையோ மடங்கு பெரிதாகி இருக்கின்றன.  பெரும்பாலான நாடுகளிடம் W M D   எனப்படும் பேரழிவு ஆயுதங்கள் உள்ளன. போர்க்களம் என்பது ஒரு குறிப்பிட்ட இடம் என்றில்லாமல் வான், கடல், நிலத்தில் பல்வேறு இலக்குகள் எனப் பரந்து பட்டதாகி விட்ட நிலையில், நீங்கள் வினவியுள்ளது போல் நாட்டுத் தலைவர் (பிரதமர் / ஜனாதிபதி) எந்தக் களத்தில் போய் நிற்கச் சட்டமியற்ற முடியும்? தாமிருக்கும் நாற்காலியில் அசையாமல் இருந்து கொண்டு  ஒரு விரலழுத்தத்தில் எதிரி நாட்டை அழிக்கும் வல்லமை பெற்றுள்ள தலைவர்களுக்குப் போர்க்களத்தில் நிற்கும் தேவை என்ன?.

கருணாநிதி வெள்ளைத் துண்டுக்கு மாறிட்டாரே? - கலீல் ரகுமான், மேலப்பாளையம்.

பகுத்தறிவு பல்லிளிக்கிறது.


வணங்காமுடி ஐயா!

நம்ப ராமதாஸ் அண்ணாச்சிய பார்த்தீங்களா? பார்த்தா நானு விசாரிச்சதா சொல்வீங்களா?
- எழிலன்பன், பெங்களுரு.

மே பதின்மூன்றுக்குப் பிறகு நானும் தேடிக் கொண்டுதானிருக்கிறேன்.

நீங்கள் அவரை அழைத்துக் கொண்டு வந்தால் நீங்கள் விசாரித்ததாகச் சொல்வேன்.

அண்ணே !!

மின்வெட்டை மையமாக வைத்து பிரச்சாரங்களில் பேசிய அ.தி.மு.க இப்போது வென்று விட்டது !இருப்பினும் தமிழ்நாட்டின் மின் தேவையை இவர்கள் மட்டும் போக்கி விடுவார்களா என்று சந்தேகமாக இருக்கிறது !!

இது பற்றி உங்கள் பதில்?
- சுரேஷ் குமார், கொமாரபாளையம்.

அரசியல்வாதிகளின் தேர்தல் வாக்குறுதி மீது அப்படி என்ன அதீத நம்பிக்கை? அதிமுக தேர்தல் அறிக்கையில்  சொன்னபடி 5,000 மெகாவாட் அளவிற்கு மின் உற்பத்தியை உயர்த்துவதற்குப் படிப்படியாக  நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றே ஜெயலலிதா கூறியுள்ளார். ஆட்சிக்கு வந்த மறுநாளே மின்வெட்டைத் தீர்த்துத் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு ஜெயலலிதா என்ன ஜீபூம்பாவா? அவரது கடந்த ஆட்சிக் காலத்தை விட இப்போது மின் நுகர்வு பன்மடங்கு அதிகரித்துள்ளதையும் தேவைக்கேற்ப மின் உற்பத்தி இல்லை என்பதையும் கவனத்தில் கொண்டு அப்படி ஒரு வாக்குறுதி வழங்கியுள்ளார். குஜராத்  மாநிலத்தில் உபரியாக இருக்கும் 630 மெகாவாட் மின்சாரத்தைத் தமிழ்நாட்டுக்குத் தருவதாக மோடி கூறியுள்ளார். அதை நிறைவேற்றுவாரா பார்ப்போம்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்திருக்காவிட்டால் மட்டும் அந்தப்பணம் எல்லாம் கஜானாவுக்கு வந்திருக்குமா சார்? - வடிவேல், திருவாரூர்.

அதிலென்ன ஐயம் ?

அரசு கஜானாவுக்கு வராமல் போனதுதான் முறைகேடு எனப்படுகிறது.

சட்ட விதிகளின் படி  முறைப்படி எல்லாம் நடந்திருந்தால் அப்பணம் அரசுக்கு வந்திருக்குமே?.

வணங்கமுடியாருக்குக் கப்பலில் சென்ற அனுபவம் உண்டா? - சந்தானம், கீழக்குயில்குடி.

இல்லை. கடலில் படகில் சுற்றிய அனுபவமும் காயலைக் கடந்த அனுபவமும் மட்டுமே உண்டு.


வெயிலை எப்படி சமாளிக்கிறீர்கள்  வ.மு அய்யா? - அம்சா, காட்பாடி.

வெய்யில் கொளுத்தும் வேளையில் வெளியே நடமாடாமல்……….

உங்கள் பெயர் அம்சவல்லியா அம்சவேணியா?

அல்லது வெறும் அம்சாவா? உங்கள் பெயரான அம்சாவின் பொருள் என்ன?.


மறைந்த சின்னகுத்தூசி அவர்கள் பற்றி? - முருகன், தஞ்சாவூர்.

குத்தூசி குருசாமி எனும் பெயரில் திராவிடர் இயக்கத்தில் ஒருவர் இருந்தார். அவரது தாக்கத்தால் தமக்குச் சின்னக் குத்தூசி எனப் பெயர் வைத்துக் கொண்ட மூத்த பத்திரிகையாளர். பிராமணக் குடும்பத்தில் பிறந்தவராயிருந்தும் பெரியாரிடமும் திராவிட இயக்கத்திடமும் நேசம் கொண்டிருந்தார். ஆளுங்கட்சியோடும் முதல்வரோடும் நெருக்கமாக இருந்தபோதிலும் தம் சுயநலத்துக்காக எதையும் கோராமல் எழுத்தைத் தவமாக நினைத்தவர். அதை விற்று வாழ்க்கையை நடத்தாதவர். கல்யாணம் செய்யாமல் வாழ்ந்த  தியாகராஜன் எனும் சின்னக்குத்தூசி  தம் இறுதிக்காலத்தில் நக்கீரன் கோபாலின் பராமரிப்பில் வாழ்ந்து மறைந்தார்.


தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தை ஆட்சிக்காலம் முழுவதும் நீட்டித்தால் ஊழல் குறையும்தானே? - வசுமதி-வத்தலக்குண்டு.

எங்கு? எதில்? எப்படி?

உங்கள் கூற்றுப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற / நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் வெறும் டம்மி பீஸாக இருந்து கொண்டு தேர்தல் ஆணைய அதிகாரிகள் செய்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். பின் எதற்குத் தேர்தல்? அவர்களே ஆட்சி  செய்யலாமே?

தேர்தல் ஆணையத்தின் பணி  தேர்தல் அறிவித்தது முதல் முடிவை அறிவிப்பது வரை தேர்தல் தொடர்பானது மட்டுமே. அன்றாட அரசு இயக்கத்தில் அது எப்படித் தலையிட முடியும்?

ஊழல் இல்லாத அரசுத் துறைகளே இல்லை என்றாகி விட்ட நம் நாட்டில் "திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" என்ற பட்டுக்கோட்டையாரின் வரிகள்தாம் தீர்வு. பொதுமக்களும் சட்டப் புறம்பான குறுக்கு வழிகளை நாடக்கூடாது; அரசு ஊழியர்களும் சட்டப்படி செய்ய வேண்டியவற்றைக் காசுக்காக இழுத்தடிக்கக் கூடாது. விதவை / முதியோர் பென்ஷன் வாங்கும் ஏழைகளிடம் கூடக் கை நீட்டும் கழிசடைகளைத் தேர்தல் கமிஷன் கூடத் திருத்த முடியாது.

பண்பாடுள்ள யாரும் எலும்புத் துண்டுக்காகத் தம்மை நாயாக்கிக் கொள்ள மாட்டார்கள் என்பதை உணர்ந்தவர்கள் ஊழலில் ஈடுபட மாட்டார்கள்.


சமச்சீர்கல்வித் திட்டத்தை நிறுத்திய முதல்வர் ஜெ. டாஸ்மாக்-ஐ ஏன் நிறுத்தவில்லை? - ரஜனி, உளுந்தூர்பேட்டை.

TAmilnadu State MArketing Corporation  எனும் டாஸ்மாக் சமச்சீர் கல்வித் திட்டம் போல், கருணாநிதியால் உருவாக்கப் பட்டதில்லையல்லவா? அதனால் மூட மாட்டார். எம் ஜி ஆரால் உருவாக்கப்பட்டு, அரசுக்குக் கோடிக்கணக்கான வருவாய் தரும் பொன் முட்டையிடும் வாத்தான டாஸ்மாக் அரசு மதுக் கடையை அறுப்பதற்கு ஜெயலலிதா ஆளத்தெரியாதவரா என்ன?

(வணங்காமுடி பதில்கள் அனைத்தையும் இங்கு காணலாம்)
வணங்காமுடிக்குக் கேள்விகளை அனுப்ப விரும்பும் வாசகர்கள் ask@inneram.com என்ற மின் அஞ்சல் முகவரி மூலம் அனுப்பலாம்.
Source : http://www.inneram.com/2011060517035/vanagamudi-answers-05-06-2011

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails