Wednesday, August 11, 2010
நூல் : கொடுமை உனக்கில்லை -- நூல் ஆசிரியர் : கவிஞர் கலாவிசு --- நூல் ஆய்வு: கவிஞர் இரா.இரவி
நூல் : கொடுமை உனக்கில்லை
நூல் ஆசிரியர் : கவிஞர் கலாவிசு
நூல் ஆய்வு: கவிஞர் இரா.இரவி
'கொடுமை உனக்கில்லை' அட்டைப்படம் அற்புதம். முட்டையை உடைத்து குஞ்சு வரும், பார்த்து இருக்கிறோம். ஆனால் குழந்தை வரும் ஓவியம் வடிவமைப்பு மிக நன்று. 'புதுவை கவிதை வானில்' மாத இதழில் வந்த கவிதைகளின் தொகுப்பு நூல் இது. நூல் ஆசிரியர் கவிஞர் கலாவிசு, 'புதுவை கவிதை வானில்' மாத இதழின் ஆசிரியர் மட்டுமல்ல, மாதந்தோறும் கவியரங்கம் நடத்தி, வளரும் கவிஞர்களை ஊக்குவிக்கும் உன்தை படைப்பாளி. தொடர்ந்து சளைக்காமல் நூல் எழுதி வெளியிட்டு வரும் படைப்பாளி, கடின உழைப்பாளி, புதுவையின் பெருமைகளில் ஒன்றாகத் திகழ்பவர், புதுவை முதல்வர், அமைச்சர், முனைவர் அ.அறிவுநம்பி ஆகியோரின் அணிந்துரை நூலிற்கு அழகு சேர்க்கின்றது.
'புதுவை கவிதை வானில்' இதழில் படித்த கவிதைகள் என்றாலும் தனி நூலாகப் படிக்கும் போது சுவையாக இருந்தது. புதுவை நகரத்தில் வாழ்ந்த போதும், நூலாசிரியர் கவிஞர் கலாவிசு-விற்கு கிராமிய மொழி நன்கு வருகின்றது. கிராமிய அனுபவம் இல்லாமல் இவ்வளவு உயிரோட்டமாக கவிதை எழுத முடியாது. கிராமத்துப் பெண்களின் இன்னல்களை உணர்ந்து, அவர்கள் மொழியிலேயே பெண்ணியம் பாடி உள்ளார். பெண்ணியம் என்ற பெயரில் உடல் மொழிகளில் கொச்சையாக சில பெண்கள் எழுதி வரும் காலத்தில், மென்மையாகவும், மேன்மையாகவும் எழுதி உள்ள நடைக்குப் பாராட்டுக்கள்.
இந்த உலகில் மரணம் என்பது மிகக் கொடியது. நண்பனின் மரணம் மிகக் கொடியது, நண்பனின் மரணத்தை நாம் நம்புவதும் கூட கடினம், அதனை உணர்த்தும் கவிதை.
நாட்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன இன்று வரை என்னால்
நம்ப இயலவில்லை, நீ இங்கு இல்லை என்பதை
அப்படியே வைத்திருக்கிறேன் உன் கைப்பேசி எண்களை
என்றாவது ஒருநாள் உன்னிடமிருந்து அழைப்பு வரும்
என்ற நம்பிக்கையில்.
உண்மை தான். நானும், என் நண்பன் இறந்து விட்ட போதும், அவனது எண்ணை செல்லிடப் பேசியிலிருந்து அகற்ற மனமின்றி இன்றும் வைத்து இருக்கிறேன். எனவே கவிதைகளை உணர்ந்து ரசித்தேன்.
விஞ்ஞான யுகம், கணினி யுகம் எவ்வளவோ வளர்ச்சியடைந்த போதும், இன்றைக்கும் சுடுகாடு வரை பெண்களை அனுமதிக்காத வழக்கம் இருந்து வருகின்றது. இந்நிலை மாற வேண்டும். கணவனை இழந்த மனைவி, சுடுகாடு வரை வந்து பார்ப்பதில் தவறு ஒன்றும் இல்லை. இது போன்ற மூட நம்பிக்கைகள் மாற வேண்டும் என்பதற்காக கவிதையில் உரக்கக் குரல் கொடுத்துள்ளளார் நூல் ஆசிரியர்.
'கொடுமை உனக்கில்லை' நூலின் தலைப்பிலான கவிதை மிக நன்று. பெண்களுக்கான அநீதியைப் பட்டியிலிடுகிறார். சிந்திக்க வைக்கிறார்.
கண்ணை உசத்திப் பார்த்தாலே கட்டிப் போட்டு உதைக்கிற பூமி இது!
பொம்பள சிரிச்சா போச்சுனு புழுதி வாரி அடிக்கிற உலகம் இது!
புள்ள பெக்கறது மட்டும் தான் பொம்பளன்னு பேசிச் கொல்லுற பூமி இது!
ராத்தரிக்கு மட்டும் தான் பொண்டாட்டின்னு தேடுற உலகம் இது!
நன்றியில்லாத மனுசனுக்கு நாயா உழைக்கிறதை விட
நம்மைத் தாங்குற மண்ணுக்கு உரமா போறதை பெருமையா நினைச்சுடு
என் ராசாத்தி உன் மகளை கொல்ல வேண்டிய கொடுமை உனக்கில்லை
சந்தோஷமா உறங்கிடு என் ராசாத்தி
ஆணாதிக்க உலகத்தின் அவலத்தை விவரித்து கண்களில் கண்ணீர் வர வைத்து விடுகிறார் கவிதைகளால். இது தான் படைப்பாளியின் வெற்றி. மனைவியை சக மனுசியாக நேசித்து அன்பு செலுத்த வேண்டும். அவர்களுடைய கருத்திற்கும் மதிப்பளிக்க வேண்டும் என்பதை ஆண்களுக்கு உணர்த்துகின்றார். பெண்சிசுக் கொலை ஒழிய வேண்டும்.
சில கிராமங்களில் பெண்களை ஏமாற்றி விட்டு, கம்பி நீட்டும் ஆண்கள் இன்றைக்கும் வாழ்கிறார்கள் என்பதை உணர்த்திடும் கவிதை.
காணும் பொங்கலன்னைக்கு கண்டு விட்டு போன மச்சான்
கட்டாயம் வருவாருன்னு கனாக் கண்டு காத்து கிடந்தேன்
போனவரு வரலையே பொழைக்கவும் வழி தெரியலையே
சீவிச் சிங்காரிச்சி சிரிப்புக் காட்டி சீரழிச்சி போனியளே
சிங்காரத் தோப்புக்குள்ளே என் சிங்காரம் தொலைஞ்சிடுச்சே
குழந்தை பிறக்கவில்லை என்றால் அது கணவனின் இருப்பதற்கும் வாய்ப்பு உண்டு என்று இன்றைய விஞ்ஞானம் உரைக்கின்றது. ஆனால் நமது ஆணாதிக்க சமுதாயமோ குழந்தை இல்லை என்றால் பெண்ணிற்குத் தான் குறை என்று பேசுகின்ற அவலத்தை கவிதைகளால் உணர்த்துகின்றார்.
குழந்தைத் தொழிலாளி முறை ஒழிக்க சட்டம் உள்ளது. குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வி திட்டம் உள்ளது. ஆனால் நாட்டில் நடப்பது என்ன? தந்தை டாஸ்மாக்கில் குடித்து கவிழ்ந்து கிடக்கும் போது, குடும்பம் நடத்துவது எங்ஙனம்? வேறு வழியின்றி குழந்தைகளை வேலைகளை அனுப்பும் அவலமும், அதையும் மறுத்து வேலை தராத நிலையும், வறுமையும் தலைவிரித்து ஆடுவதை. அரசாங்கங்கள் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யாத அவலத்தையும், கவிதைகளால் தோலுரித்துக் காட்டுகின்றார். ஊறுகாய் போல் ஒரு சில காதல் கவிதைகளும் நூலில் உள்ளது.
என்றாவது ஒரு நாள்?
பேசாத வார்த்தைகள் மௌனத்திற்கு வேண்டுமானால்
அழகு சேர்க்கலாம்
சத்தியமாக காதலுக்கு இல்லை என்பதையும் நீ உணரத் தான் போகின்றாய்?
விலைமகளின் நிலை பற்றியும் கவிதை வடித்துள்ளார்.
பஞ்சாயத்து
நாதியத்து நான் போக நாரு நாரா கிழிஞ்சி கிடக்க
இனிப்புக் காட்டிச் சீரழிச்ச சீமான் தான் இப்பஞ்சாயத்துத் தலைவனாம்.
ஒழுக்கம் கெட்டவர்கள் எல்லாம் ஊர்த்தலைவன், கட்சித் தலைவன் ஆகும் அவலத்தை கவிதையால் சுட்டி, சாட்டையடி தருகின்றார். தகுதியற்றவர்களை தலைவனாக்காதீர்கள் என விழிப்புணர்வை விதைக்கின்றார். தேர்தல் என்ற பெயரில் நடக்கும் அரசியல்வாதிகளின் நாடகத்தை கவிதைகளால் அம்பலப்படுத்தி உள்ளார். நூலில் 32 தலைப்புகளில் கவிதைகள் உள்ளது. கடைசியாக குட்டிக் கவிதைகள் என்ற தலைப்பில் ஹைக்கூ கவிதைகளும் உள்ளது.
அயல்நாடுகளில் தூய தமிழ்
யார் சொன்னது?
தமிழ் இனி மெல்லச் சாகுமென்று
புதிய வியாபாரம்
தமிழ்த் தாய்க்குக் கோயில்
கொள்ளை இலாபம்
சாப்பிட்ட உணவு
உடனே செரித்தது
விலையைப் பார்த்ததும்
நூலாசிரியர் கவிஞர் கலாவிசு அவர்களுக்கு பாராட்டுக்கள், தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துக்கள்...
eraeravik@gmail.com
நன்றி : http://www.tamilauthors.com/04/111.html
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
hiya
great forum lots of lovely people just what i need
hopefully this is just what im looking for, looks like i have a lot to read.
Post a Comment