வளைகுடா முத்திரை குத்தப்பட்ட வாழ்த்து

சங்ககாலத்துக்கு முன்பு தொட்டு இனி வரப்போகும் காலம்வரை பிரிவும் அதன் துயரும் உறவுகளையும் கவிதைகளையும் பிரியாமல் கிடக்கும் உணர்வுப் பொதிகள்.
பொருள்தேடி, தொழில்தேடி, கல்விதேடி, பாதுகாப்புதேடி, வாழ்க்கைதேடி, வளம்தேடி என்று மனிதன் உறவுகளைப் பிரிகிறான். அப்படியொரு பிரிவுப் பொழுதில் பிரிந்து நிற்கும் துணையின் பிறந்தநாள் வருகிறது.
பிரியாத பிரியத்தோடு இதழ்கள் பிரியப்பிரிய இவன் தன் பிரிவைப் பாடுகிறான் இழையிழையாய்ப் பிரிந்து சிதைந்து கிடக்கும் இதயத்தோடு.
தழுவவரும் இமைகளையும்
தகிக்கின்ற விழிகளுக்குள்
பொழுதுக்கும் கனவுகளே
பொன்னழகே நீயாக
எழுதுவது எளிமையல்ல
என்நெஞ்சத் துடிப்புகளை
எழுதுவதால் அமைதிபெறும்
என்னுள்ளம் இன்றில்லை
வருவேன்நான் வருவேனெனவழியெங்கும் விழிநட்ட
மருதாணிக் கிளையேயுன்
மனநெருப்பை நானறிவேன்
நெருப்புக்குச் சமாதானம்
நிச்சயமாய் வேறில்லை
வருகைக்கு ஈடாக
வையகமும் ஆவதில்லை
கரம்பற்றி வந்தவள் நீ
கண்பற்றிக் கவிதந்தாய்
நரம்புகளில் உன்னழகை
நதியாக ஏற்றிவிட்டாய்
சேயாக மடிகிடத்தி
சொன்னசொல் மறக்கவில்லை
வாயார உன்பெயரை
ஓதாமல் உறக்கமில்லை
பிரிவுகள் சொல்லித்தான்
பெருமைகள் அறியவரும்
பிரிந்தவர் சேரும்போதோ
புதியதோர் பிறவி பூக்கும்
பிறவிகள் யாவும் நீயே
பிறப்பாய் எனக்கேவென்று
பிறந்தநாள் வாழ்த்தும் இன்று
பிரியமுடன் தூவுகின்றேன்



1 comment:
pl support our cause
Post a Comment