கவி கா.மு. ஷெரீப் இசைப்பாடல்களையும் யாத்தளித்துள்ளார். அவை இஸ்லாமிய இசைப் பாடல்களாகவும் திரைவானில், இனிமையாக ஒலிக்கும் தீங்கானங்களாகவும் தமிழக எல்லை மீட்புப் போராட்டங்களில் ஆங்காங்கே உடனுக்குடன் எழுதிப் பாடப்பட்ட உணர்ச்சிமிகு பாடல்களாகவும் திகழ்கின்றன.
நீங்களும்
பாடலாம் இஸ்லாமிய இசைப்பாடல்கள்
கவி கா.மு. ஷெரீப்
‘நீங்களும் பாடலாம் இஸ்லாமிய இசைப்பாடல்கள்’
எனும் நூலினை 1984 ஆம் ஆண்டு ஜனவரி
மாதம் வெளியிட்டார். இந்நூலில் 46 இஸ்லாமிய இசைப்பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஆ.கா.அ.
அப்துஸ்ஸமது இந்நூலுக்கு வாழ்த்துரை வழங்கியுள்ளார். இசைப்பாடல்களின் தனித்தன்மை குறித்து அதில் அவர் மனம்கொளத்
தக்க வகையில் குறிப்பிடுகிறார்.
ka mu sherif“கவிதையில்
என்னதான் கருத்து இருந்தாலும் அதை
இசையோடு குழைத்து வழங்கும் போது கேட்பவர் இதயங்களில்
கவிதையின் கருத்துக்கள் ஆழமாகப் பதிந்துவிடுவதோடு இசைமுறைப்படி
பாடமுடியாதவர்களைக்கூட குரலெடுத்து நாவசைத்துப் பாடத்தூண்டும் ஒரு தனி வலிமை
இசைப்பாக்களுக்கு இருப்பதைப் பார்க்கிறோம். இன்னும் சொல்வதாயின், கருத்தில்லாப்
பாடல்கள்கூட இனிய இசையோடு அமைந்து
விடுமாயின் அந்த இசை, தகுதி
இல்லா அந்தப் பாடலைக்கூட வாழ
வைக்கிறது” எனக் கருத்துரைக்கும் ஆ.கா.அ. அப்துல்ஸமது,
“அத்தகைய பாடல்களைக் கேட்கும்போதெல்லாம் பொருள் செறிந்த இஸ்லாமியக்
கருத்துக்கள் மேவிய இசைப் பாடல்களை
நம் கவிஞர்கள் ஆக்கித் தரக்கூடாதா என்ற
ஏக்கம் என்னுள் எழுவதுண்டு” எனத்
தம் ஏக்கத்தையும் வெளியிடுகிறார்.
இக்கருத்தை
ஆ.கா.அ.
அப்துல்ஸமது கவிஞரிடம் தெரிவித்தார். கவிஞரும் மறுநாளே அச்சிடப்பட்டுள்ள 46 இசைப்பாடல்களை
ஸமது சாகிபுவிற்கு அனுப்பியிருக்கிறார். இதைப்
படித்துப் பார்த்த பின்னும் ஸமது
சாகிபு இந்நூல் குறித்த தம்முடைய
கருத்தைப் பதிவு செய்கிறார்.
“பல்வேறு
சந்தர்ப்பங்களில் பல்வேறு தலைப்புகளில் அவர்கள்
எழுதிய இசைப் பாடல்களின் அருமையானதொரு
தொகுப்பாக இது அமைந்திருக்கிறது. இதைப்
படிக்கத் தொடங்கிய போது என்னை அறியாமலேயே
நான் பாடிக்கொண்டிருப்பதை உணர்ந்தேன்.
திருக்குர்ஆனின்
சாரம் எனப்படும் ‘அல்ஹம்து' சூராவில் ஆரம்பித்து ‘அந்நாஸ்’ சூராவின் பொருள் தரும் பாடலோடு
இத்தொகுப்பு நூல் அமைந்திருக்கிறது. இடையே
அல்லாஹ்வைப் பற்றியும் அண்ணலெம் பெருமானார் (ஸல்) அவர்களைப் பற்றியும்
ஸலவாத்தின் சிறப்பு பற்றியும் நோன்பின்
மாண்பு பற்றியும் பல்வேறு சந்தங்களில் பாடத்தக்க
பாடல்கள் அமைந்துள்ளன.
சின்னஞ்சிறு
குழந்தைகள் கூடி விரசமான சினிமாப்
பாடல்களை வீடுகளிலும் வீதிகளிலும் முணுமுணுத்து தமிழக இஸ்லாமியப் பண்பாடுகளையே
சிதைத்து வரும் இந்நாளில், கலைமாமணி
இதில் தொகுத்துத் தந்துள்ள இஸ்லாமியப் பாடல்களை நம் சிறுவர், சிறுமிகள்
ஏன், பெரியோரையும் கூடப் பாடச் செய்வித்தால்
ஒழுக்கமும் உன்னதப் பண்புகளும் தமிழ்
மக்களின் செவிகளில் எதிரொலிக்கும்” என்பது அவர் கருத்தாகும்.
கவிஞரும்
இந்நூல் குறித்தும் இந்நூலிலுள்ள பாடல்கள் குறித்தும் தம்முடைய கருத்தை நூன்முகத்தில் எடுத்துரைக்கிறார்.
“இந்த நூலின்கண் உள்ள பாடல்கள் அனைத்தும்
இஸ்லாமியத் திங்கள் ஏடுகளில் அவ்வப்போது
வெளிவந்தவையாகும்.”
ஏடுகள்
பலவற்றைக் கண்ட பாடல்கள் என்பது
போன்று ஆண்டுகள் பலவற்றையும் கண்டுள்ள பாடல்கள் இவை.
ஆம்,
1974 ஆம் ஆண்டில் தொடங்கி 1983 ஆம்
ஆண்டு வரை ‘முஸ்லீம் முரசு’,
‘குர்ஆனின் குரல்’ போன்ற ஏடுகளில்
இப்பாடல்கள் வெளிவந்துள்ளன.
‘நோன்புப்
பாவை’ எனும் தலைப்பின் கீழ்
உள்ள பாடல்கள் 1973 ஆம் ஆண்டு ‘பிறை’
ஏட்டில் வெளிவந்தனவாகும்.
‘பலரின்
கண்களைக் குளமாக்கிய கண்ணொளி வேண்டல்' பாடலும்
பிறையில் வெளிவந்ததுதான்” எனக் குறிப்பிடும் கவிஞர்,
‘சூரத்துல் ஃபாத்திஹா’, ‘அல்ஃபலக் சூரா’, ‘அந்நாஸ் சூரா’க்களைக் கவிதைகளாக முதலிலும்
முடிவிலுமாகப் பாதுகாப்புத் தேடும் வகையில் சேர்த்துள்ளேன்”
என்கிறார்.
"இஸ்லாமிய
இசைப் பாடல்கள் குறித்தும் இஸ்லாமிய இசைப் பாடல்கள், சுருதிகள்,
கீர்த்தனைகள், பதங்கள், உருப்படிகள், வண்ணங்கள், திருப்புகழ் போன்ற ஆயிரமாயிரம் இசை
நுணுக்கப் பாடல்களை யாத்தளித்த இஸ்லாமிய இசைத் தமிழ்ப் புலவர்கள்
எண்ணிறந்தோர் உண்டு. இவர்களின் காலம்
இன்றைக்கு இருநூறு முந்நூறு ஆண்டுகட்கு
முந்தியதெனலாம்" என்றும், "இசைப் பாடகர்கள் நீண்ட
நெடுங்காலமாகத் தமிழக இஸ்லாமியரிடையே இருந்துள்ளனர்.
அவர்களில் கல்லிடைக் குறிச்சி மொய்தீன், திருச்சி காதர் பாட்சா போன்றோர்
என் காலத்தே வாழ்ந்து நிரந்தரமானவர்கள்
ஆவார்கள். இவர்களின் இசை ஞானமும், குரல்
வளமும், இனிமையும் கேட்போரைத் தன்வயமாக்க வல்லதெனலாம்" என்றும் குறிப்பிடும் கவிஞர்,
"இன்று வாழ்வோரில் நாகூர் எஸ்.எம்.ஏ. காதர், மேலக்காவேரி
A.D. சுல்தான், இசைமுரசு நாகூர் அனிபா, இசைமணி
யூசுப், மதுரை முகம்மது, நாகர்கோயில்
உசேன் பாகவதர் போன்ற இசை
வல்லாரும் குரல் வல்லார்களும் நாடறிந்தோராவர்"
என்றும் கருத்துரைக்கிறார்.
“முந்திய
இஸ்லாமிய இசைப் பாடலாசிரியர்களின் மரபு
பேணி, இன்றுள்ள இசைமாமணிகள் ஏற்றுப் பாடும் வகையில்
இப்பாடல்களை அமைத்துள்ளேன்” எனவும் அவர் தெரிவிக்கிறார்.
இந்நூலின்
முதல் பாடல் ‘சூரத்துல் ஃபாத்திஹா!’
எனும் தலைப்பில் அமைந்துள்ளது. தொடர்ந்து ‘ஆசைப்பட்டேன் ஆண்டவனே அடைவதற்கே அருள்புரிவாய்!’,
‘எனக்கு வேண்டும் நின் கருணை, இயம்ப
வேண்டும் உன்பெருமை!’, ‘ஆண்டவன் அருள் புரிவான்
அவனையே நம்பிடும் அடியார் தமக்கு!’ எனப்
பல நிலைகளில் ஆண்டவனின் அருளை வேண்டுகிறார்.
பாடல்களின்
தலைப்புகளைக் கருணை வேண்டும், சொல்
மனமே, திருவின் திருவாய், எங்கும் நிறைந்தனன், அல்லா
பெரியவன், ஆனந்த நிலை, அறிவின்
சாகரம், நாயகமே, தூதரை வாழ்த்துவோம்,
நன்னபி திருப்புகழ், அற்புத நபி, நோன்புப்
பாவை, பெண்ணறிவு மாலை, நெறிபட நிற்போம்,
அறிந்து வாழ்வோம், கருணைக்கடல், இறைவா போற்றி, கண்ணொளி
வேண்டல் எனக் கவிஞர் அழகு
மிளிர அமைத்துள்ளார்.
இறையருள்
கிடைப்பதற்கான வழிகளைக் கவிஞர், ‘தன்னலம் கருதாத் தன்மையில்
வாழ்ந்தால் தரித்திரப் படுவோர்க்கு உதவிகள் புரிந்தால், அண்ணல்
நபிவழி அடங்கியே நடந்தால், அனுதினம் தவறாது ஐவேளை தொழுதால்
ஆண்டவன் அருள்புரிவான்’ என எடுத்துக் காட்டுகிறார்.
‘அல்லா பெரியவன் அனைத்தையும் படைத்தவன் அவனையே நம்பிடு மானிடனே’
என வேண்டுகோள் விடுக்கிறார். இங்ஙனம் இறைவனை நம்பி
வாழ்ந்தால் ‘தொல்லை நீங்கியே வாழலாம்.
மறுமையில் சொர்க்கம் கிடைத்திடும்’ எனப் பாடும் கவிஞர்
நல்வாழ்க்கை வாழ்வதற்கான வழிகளையும் ‘ஆசையை அடக்கிடு ஈகையைப்
பெருக்கிடு அன்புடன் நடந்திடு உயிர்களிடம்! ஏசுவோர் இடத்திலும் இரக்கமே
காட்டிட என்றும் முயன்றிடு வாழ்க்கையிலே’
எனவும் காட்டுகிறார். ‘அவனின்றி எதுவுமில்லை’ அதனால் இறைவனையும் நபிகள்
நாயகம் காட்டிய வழியையும் பின்பற்றி
வாழ வேண்டும் எனக் கூறும் கவிஞர்,
‘அல்லா என்று சொல்லச் சொல்ல
ஆனந்தம் மேவிடுமே! நல்ல ஆற்றல் பெருகிடுமே!
வாழ்வில் அல்லல் நீங்கிடுமே’ எனப்
பாடி ‘அல்லா’ எனும் இறைவனின்
மகிமையை உணர்த்துகிறார்.
திருமறையான
திருக்குர்ஆனை ‘ஓத ஓதி ஞானம்
பிறக்கும் உள்ளம் தனிலே சீலம்
சுரக்கும்’, ‘அறிவின் சாகரம் அழகின்
பூஷணம் அரிய நாயகன் இனிய
தூதுவர்’, ‘ஹக்கன் திருத்தூதர் எங்கள்
நபிநாதர் மக்கள் குறை தீர்க்க
வந்த வள்ளல் மஹ்மூதர்!, ‘நாவினை
அடக்கா மானுடன் நாளை நரகிடை
விழநேரும்’, ‘என்பும் தீனுக் கெனஉழைத்த
எழி லார் எங்கள் நாயகமே
நன்மை மணக்கும் வாழ்வெல்லாம் நாளும் உமது பெயர்
சொன்னால்’ என்பன இந்நூல் நெடுகிலும்
காணலாகும் அழகிய மணிமொழிகள்.
இறைவனின்
திருநாமமும் நபிகளாரின் அரும்பெருங் குணநலன்களும் மனிதகுலம் நல்வழிபெற அவர்கள் காட்டிய சிறந்த
வழிமுறைகளும் ஐம்பெருங்கடமைகளும் மக்கள் ஏற்றுப் போற்றி
வாழவேண்டிய நல்வழிகளும் தள்ளி வாழவேண்டிய தீயவழிகளும்
கவிஞரால் இஸ்லாமிய இசைப்பாடல்களில் எடுத்தியம்பப்பட்டுள்ளன.
திருப்பாவை,
திருவெம்பாவை ஆகிய பாவைப் பாடல்கள்
முறையே வைணவ சைவ சமயத்தாரால்
மார்கழி மாதம் பாடத்தக்க வகையிலே
பாடப்பட்டவையாகும். கவிஞர் நோன்பு மாதமான
ரமலான் மாதத்தில் துயிலில் இருந்து எழுந்து நோன்பு
நோற்க அழைக்கும் நோன்புப் பாவைப் பாடல்களைப் பாடியுள்ளார்.
“தூய ரமலானில் தோழியேயென் நற்தோழி
நேய முடனெழுவாய் நியமமுடன் சகர்செய்
ஆயத்த மாவோம் அண்டை அயலவரை
போயெழுப்பிச்
சகர் செய்யப் புகன்றிடுவோம் எம்பாவாய்!”
எனத் தம் பாவைப் பாடலைத்
தொடங்கும் கவிஞர்,
“அன்னை
கதீஜாவும் ஆயிஷா நாச்சியாரும்
மன்னுபுகழ்
பாத்திமா மற்றுமுள நற்பெண்டீர்
உன்னதமாய்
நோன்பிருந்த உயர்மாதம் இம்மாதம்
சொன்னயிவை
நீயறிந்தும் துயிலுவதோ எம்பவாய்!”
என்று விழிப்புணர்வையூட்டுகிறார்.
“முப்பது
நோன்பிருந்து முடித்தபின் புத்தாடை
தப்பாது
நாமுடுத்திச் சார்ந்தில்லத் தாருடனே
ஒப்பில்லாப்
பெருநாளை உவப்புடனே கொண்டாடி
எப்போதும்
இறைநினைப்பில் இருந்திடுவோம்
எம்பாவாய்!”
என்று நிறைவு செய்கிறார். இந்தப்
பாடல்களில் ரமலான் நோன்பின் மாண்பை
உணர்த்திப் பயில்வோரை ஐம்பெருங்கடமைகளும் மூன்றாவது கட்டாயக் கடமையான நோன்பை நிறைவேற்றத்
தூண்டுகிறார்.
இஸ்லாமிய
மார்க்கத்தில் சிறந்து திகழ்ந்த ஆமினாத்
தாயார், அன்னை கதீஜா, அன்னை
பாத்திமா, ஆசியா, சுமையா, ரஹீமா,
ஆயிஷா நாச்சியார் ஆகியோரையும் அவர்களின் வாழ்க்கையையும் எடுத்துக்காட்டி பூமியைப்போல் பொறுமை காட்ட வேண்டும்’,
‘அறச்செயலைப் பேணிடவே வேண்டும்’ எனப்
பெண்களுக்கு வழிகாட்டுகிறார். ‘பெண்ணறிவு மாலை’ எனும் ஒரு
பாடலிலும் நல்ல பெண்களின் அடையாளங்களைக்
காட்டும் கவிஞர் பெண்ணை, ‘தெள்ளுதமிழ்
மொழியைப் போல் இனிமை யானவள்
என்றும் தீன்குலத்தின் மேன்மையோங்க வாழ்ந்து வருபவள்’ என்றும் குறிப்பிடுகிறார்.
‘என்னை
மன்னிப்பாய்! யான் செய் குற்றம்
யாவையும் பொறுப்பாய்’ என இறைவனிடம் வேண்டும்
கவிஞர் 1974ஆம் ஆண்டு பார்வையிழந்தபோது அவனிடம் கண்ணொளி வேண்டிப்
பாடுகிறார். இது படிப்பாரைக் கசிந்துருக
வைக்கிறது.
“கண்ணில்ஒளி தந்திடுவாய்
அல்லாஹூ அல்லாஹ்!
காணும்நிலை ஈந்தருள்வாய்
அல்லாஹூ அல்லாஹ்!
புண்ணியனே பூரணனே
அல்லாஹூ அல்லாஹ்!
போற்றியுன்னை வேண்டுகின்றேன்
அல்லாஹூ அல்லாஹ்!”
“என்னபிழை யான்புரிந்தேன்
அல்லாஹூ அல்லாஹ்!
ஏன் எனது கண்பறித்தாய்
அல்லாஹூ அல்லாஹ்!
முன்னோர்கள் செய்வினையோ
அல்லாஹூ அல்லாஹ்!
மூளுகின்ற என்விதியோ
அல்லாஹூ அல்லாஹ்!”
உன்புகழை நானெழுத
அல்லாஹூ அல்லாஹ்!
உற்றவழி
செய்திடுவாய்
அல்லாஹூ அல்லாஹ்!
உன்மறையை நான்பயில
அல்லாஹூ அல்லாஹ்!
உதவியகண் போனதுவே
அல்லாஹூ அல்லாஹ்!”
என்று பலவாறு இறைவனிடம் கவிஞர்
முறையிடுகிறார். அதற்குப் பின்பு கண்ணொளி பெற்றுக்
கவிஞர் எழுதிக் குவித்த ஏந்தலாய்
வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்க செய்தி.
இத்தகைய
பல்வேறு பொருண்மைகளை உள்ளடக்கிய ‘நீங்களும் பாடலாம் இஸ்லாமிய இசைப்பாடல்கள்’
எனும் இந்நூலை இஸ்லாமிய மார்க்கத்தையும்
இஸ்லாமிய வாழ்வியல் நெறிமுறைகளையும் இனிய தமிழில் எளிய
நடையில் எல்லோர்க்கும் புரியும் வடிவில் எடுத்துரைக்கும் நோக்கில்
கவிஞர் படைத்துள்ளார். படிப்பார் ஒவ்வொருவரையும் பாடல் இயற்றுவோராகவும் பாடகராகவும்
ஆக்கும் வல்லமை மிக்க பாடல்களாக
இந்நூற் பாடல்கள் திகழ்கின்றன.
- பேராசிரியர் உ. அலிபாவா, தமிழியல்துறைத் தலைவர், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி
No comments:
Post a Comment