Saturday, September 10, 2022

கண்ட காட்சி ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

 


தினமும் அதிகாலைத் தொழுகைக்குப் பின்னர் அபூபக்கர் (ரலி) அவர்கள், பள்ளிவாசலை விட்டு வேகமாக வெளியேறி மதீனாவின் எல்லையில் இருக்கும் ஒரு குடிசை வீட்டுக்குச் செல்வதையும் சற்று நேரத்திற்குப்  பின்னர் அங்கிருந்து வெளியேறுவதையும் உமர் (ரலி) கவனித்தார்.

அபூபக்கர் (ரலி) எனென்ன நல்ல காரியங்கள் செய்கிறார் என்பது பெரும்பாலும் உமர் (ரலி) அவர்களுக்குத் தெரியும். ஆயினும் இந்த விஷயம் மட்டும் தெரியவில்லை.

நாட்கள் நகர்ந்தன. கலீஃபா அபூபக்கர் (ரலி) அவர்களோ தொடர்ந்து அந்த குடிசை வீட்டுக்குச் சென்று கொண்டே இருந்தார். அங்கு சென்று அவர் என்ன செய்வார் என்பதும் உமர் (ரலி) அவர்களுக்குத் தெரியாமலே இருந்தது.

ஒருநாள்….

அபூபக்கர் (ரலி) வெளியே சென்ற பின்னர், அந்த குடிசைக்குச் சென்று என்ன நடக்கிறது என்பதை பார்த்தே தீரவேண்டும் என்ற முடிவுக்கு வந்தார் உமர் (ரலி).

குடிசைக்குள் நுழைந்தார்வயதான பார்வையற்ற நடக்க இயலாத ஒரு மூதாட்டி இருப்பதைக் கண்டார்.

பின்னர் குடிசையைக் கவனித்தார். கண்ட காட்சி ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

கண் தெரியாத இந்த மூதாட்டி அபூபக்கர் (ரலி) அவர்களின் உறவினராக இருக்குமோ என்ற எண்ணத்தில் அவரிடம் உமர் (ரலி) கேட்டார்:

"தினமும் ஒருவர் இங்கே வருகிறாரே அவர் இங்கு வந்து என்ன செய்வார்?”

மூதாட்டி: "அருமை மகனே, அல்லாஹ்வின் மீது ஆணை! அவரைக் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. தினமும் காலையிலேயே இங்கு வருவார். வீட்டைத் துடைத்து சுத்தம் செய்வார்.

ஆட்டிலிருந்து பால் கறப்பார். எனக்கு உணவு சமைத்துத் தருவார். பின்னர் எதுவும் பேசாமல் திரும்பிவிடுவார்”.

அது கேட்ட உமர் (ரலி) குலுங்கிக் குலுங்கி அழுதவராக வீட்டைவிட்டு உடனே வெளியேறிவிட்டார்.

அபூபக்கர் (ரலி) மரணித்த பின்னர், அந்த மூதாட்டிக்கு பணிவிடை செய்யவேண்டும் என்றும் அபூபக்கர் (ரலி) மரணமடைந்த செய்தியை அந்த மூதாட்டிக்குத் தெரிவிக்க வேண்டாம் என்றும் உமர் (ரலி) தீர்மானித்தார்.

அந்த குடிசைக்குச் சென்றார். முதல் நாளே அந்த மூதாட்டி கேட்டார்:

"உமது நண்பர் மரணித்துவிட்டாரோ…?”

உமர் (ரலி) திடுக்கிட்டார். திகைப்புடன் கேட்டார்: "உங்களுக்கு எப்படி அது தெரிந்தது?”

மூதாட்டி: நீர் எனக்கு உண்ணத் தரும் பேரீத்தப் பழத்தை விதை நீக்காமல் தருகிறீர். உமது தோழர் விதை நீக்கித் தருவார்”.

நடுங்கத் துவங்கிவிட்டார் உமர் (ரலி).

நிற்க முடியாமல் தரையில் அமர்ந்தார். கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது.

அப்போதுதான் அந்தப் புகழ்பெற்ற வாசகத்தைக் கூறினார் உமர் (ரலி):

"உமக்குப் பின்னர் வரவிருக்கும் கலீஃபாக்களுக்குப் பெரும் சுமையை விட்டுவிட்டுச் சென்றுவிட்டீரே அபூபக்கரே…!”

இப்போது நாம்

அபூபக்கர் (ரலி) அவர்களுக்காக அழுவதா…?

உமர் (ரலி) அவர்களுக்காக அழுவதா..?

அல்லது கொஞ்சம் கொஞ்சமாக நம்மை விட்டு அகன்று கொண்டிருக்கும் நல்ல பண்பாடுகளுக்காக அழுவதா…? தெரியவில்லை.

மரணிக்கு முன் நல்ல சுவடுகளை விட்டுச் செல்வோம். ஏனெனில் நாம் விட்டுச் செல்லும் சுவடுகள் அனைத்தும் பதிவு செய்யப்படுகின்றன.

"அவர்கள் விட்டுச் சென்ற சுவடுகளையும் நாம் பதிவு செய்து கொண்டிருக்கிறோம்” (36:12)

Al-Quran Al-Hadees


https://www.facebook.com/lifeinquranhadees

தகவல் தந்தவர் Pugazhendhi Samidurai

No comments: