Sunday, December 8, 2019

வெற்றி

Dr.Fajila Azad
(International Life Coach – Mentor – Facilitator)

dr. ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்

                 வெற்றி

நாம் எல்லோருமே மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றுதான் விரும்புகிறோம். மகிழ்ச்சியாக இருங்கள் என்று மற்றவர்களை மனதார வாழ்த்துகிறோம். ஆனால் என்னதான் மகிழ்ச்சி மகிழ்ச்சி என்று பேசினாலும், ஒரு இனிய நாள் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கும் போதே மனதில் ஏதோ பதைபதைப்பு வரும். நீங்கள் விரும்பியபடியே நடந்து, உருகிய ஐஸ்கட்டியாக உச்சி முதல் பாதம் வரை உள்ளுக்குள் உற்சாக சிலீர் பரவசமாக பரவிக் கொண்டிருக்கும் போதே அடி வயிற்றில் ஒரு பயப்பந்து சுழன்று தவிக்க செய்யும்.

இந்த மகிழ்ச்சி நீடிக்குமா… இந்த சூழல் மாறாமல் இருக்குமா.. ஏதாவது அல்லது யாராவது இந்த இனிய சூழலை மாற்றி விடுவார்களோ.. இந்த மகிழ்ச்சியை ஏதாவது கவலை வந்து சூறையாடி விடுமோ… இந்த வெற்றியை, இந்தப் புகழை, நான் பழகிக் கொள்ளத் தொடங்கும் போது, அது என்னிடமிருந்து விலகிக் கொள்ளுமோ… இந்த உயரம் நிலைக்குமா.. விழுந்தால் அடி பலமாக இருக்குமோ… இப்படி என்னென்னவோ எண்ணங்கள் மனதில் சுழன்று பலரையும் மகிழ்ச்சி இல்லாமல் தவிக்க செய்யும்.


தான் எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்க வேண்டும், தான் வெற்றி பெற்றவனாக இந்த உலகம் தன்னை உற்றுப் பார்க்க வேண்டும் என விரும்பும் ஒருவன் வெற்றி பெற்ற உடனேயோ அல்லது வெற்றிக்கு அருகே வரும் போதோ தன்னையுமறியாமல், தான் கவனிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறோம், தன்னுடைய திறமை வெளிச்சத்திற்கு வரக் கூடிய அதே நேரம் தன்னுடைய குறைகள் படம் பிடிக்கப் பட்டுவிடுமோ என பல நேரம் பதைபதைக்கத் தொடங்கி விடுகிறான். அன்ன நடைக்கு ஆசைப் பட்டு சொந்த நடையை மறந்து விடுவோமோ, வெற்றி சுகத்திற்காக தன் சுயத்தையே இழக்க வேண்டி இருக்குமோ என அவன் ஆழ்மனதிற்குள் பலவிதமான எண்ணங்கள் தோன்றத் தொடங்குகிறது.

தவிர, ஒரு முறை வெற்றி பெற்றுவிட்டால் இந்த உலகம் இதையே என்னிடம் எதிர் பார்க்குமே, தொடர்ந்த வெற்றியை என்னால் கொடுக்க முடியுமா.. என்னிடம் அதற்கான திறமை இருக்கிறதா அல்லது என்னுடய பலவீனம் வெளிப்பட்டு விடுமோ என தனக்குள்ளேயே பல கேள்விகள் எழ, தான் தானாக இயல்பாக இருந்ததில் தான் வெற்றி பெற்றோம் என்பதை மறந்து விட்டு, தான் பிறருடைய எதிர்பார்ப்புக்கு இப்போது இருக்க வேண்டுமே என எண்ணத் தொடங்குகிறான். அவனுடைய இயல்பை மாற்றத் தொடங்கி அப்படி பிறருடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாத சூழலில், தன்னை தற்காத்துக் கொள்வதற்காக தன்னை தனிமைப் படுத்திக் கொள்கிறான். சமூகத்தின் பார்வையில், தன்னுடைய இமேஜை பாதுகாக்க வேண்டுமே என அவனுக்குள் ஒரு தகிப்பு தொடங்கி விடுகிறது.

இந்த நினைப்பே திறமையான பலரையும் ஒரு அளவிற்கு மேல் சாதிக்க விடாமல் தடுக்கிறது. இப்போது இருப்பது தான் நிம்மதியாக இருக்கிறது. இதை விட்டு விட்டு பறக்க முயற்சித்தால், இப்போது திடமாக நான் ஊன்றி நிற்கும் என் கால்களை இழக்க நேரிடுமோ என மனக் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அதுவே அவர்களை அறியாமல், பல செயல்களை முடிக்காமல், நாளை, மறுநாள் என்று அதை தள்ளிப் போடச் செய்து வெற்றியை தள்ளிப் போடுகிறது.

ஏதாவது ஒரு வகையில் உங்கள் வெற்றி உங்களுக்குள் மன அழுத்தத்தைத் தந்தால், அல்லது வெற்றியை நோக்கி போய்க் கொண்டிருக்கும் போது உங்களுக்குள் இனம் புரியாத தடுமாற்றம் வந்தால் அமைதியாக உட்கார்ந்து உங்களுக்குள் உற்றுப் பாருங்கள். எந்த பயம் உங்களுக்குள் சீர் செய்யப் படாமல் கிடக்கிறதென்று ஆழ்ந்து யோசித்துப் பாருங்கள்.


பொதுவாக, உங்கள் திறமையால் நீங்கள் தனித்து விடப் பட்டு விடுவீர்களோ, பலருடைய பொறாமைக்கும் தீய பார்வைக்கும் ஆளாகி விட நேரிடுமோ, வேலைப்பளு கூடி விடுமோ, பின் தங்கிப் போகிறவர்களின் வேண்டாத பகையை இழுத்து வந்து விடுமோ... என ஏதாவது ஒரு பயம் உங்கள் வெற்றிக்கு வேட்டு வைக்கும். பொதுவான ஆழ்மன சிந்தனை இப்படி இருப்பதால் இது வெளிப்படையாகத் தெரிவதில்லை.

நீங்கள் எப்போதும் போல் இருப்பதாகவே நினைத்துக் கொண்டிருக்கும் அதே நேரம் இத்தகைய எண்ணங்கள் ஆழ்மனதில் தோன்றி உங்களை அறியாமலேயே உங்கள் வேகத்தையும் விவேகத்தையும் தடை செய்து விடுகின்றன.

ஒரு கிராமத்தில் மேற்படிப்புக்கு அயல்நாட்டுக்கு செல்ல வேண்டும் என்ற கனவுகளோடு படித்த அந்த இளம்பெண்ணிற்கு அதற்கான சந்தர்ப்பம் வாய்க்கிறது. ஆனால் அந்த நேரத்தில் அவளுடைய தாய் நோய்வாய்ப்பட்டு விட இவள் அவரை விட்டு விட்டு போகத் தயங்குகிறாள். அப்போது நிலமையை அறிந்த அவள் தாய் தன் மகளிடம் 'நீ கவலைப் படாமல் செல், நீ அங்கு சிறந்த பெயரும் பட்டமும் வாங்கும் வரை எனக்கு ஒன்றும் ஆகாது' என ஆறுதலாக சொல்லி அனுப்பி வைக்கிறார். வெளி நாடு சென்று நல்ல முறையில் படித்துக் கொண்டிருக்கும் அவளுக்கு இறுதி வருடப் பரீட்சை நெருங்கும் போது உடல் நலம் சரியில்லாமல் போய் அந்தத் தேர்வை எழுத முடியாமல் போய் விடுகிறது. தேர்வுகள் முடிந்தபின் உடல் நலம் தேறிய அவள் மறு தேர்வுக்கு விண்ணப்பிக்கிறாள். மறு தேர்வின் தேதி கிடைக்கும் வரை ஆரோக்கியமாக இருப்பவளுக்கு தேர்வுத்தேதி நெருங்கும்போது மீண்டும் உடல் நலமில்லாமல் போய்விடுகிறது. இதுவே மீண்டும் மீண்டும் தொடர்கதையாக, அவளது மருத்துவர் மனநல ஆலோசனைக்குப் பரிந்துரைக்கிறார்.

அவளுடைய ஆழ்மனது அவளையுமறியாமல், அவள் தாய், 'நீ பட்டம் வாங்கும் வரை எனக்கு ஒன்றும் ஆகாது' என்று சொன்னதை 'தான் பட்டம் வாங்கி விட்டால் தனது தாய் இறந்து விடுவார்' என்று அர்த்தம் பண்ணிக் கொண்டு இறுதித் தேர்வை எழுத விடாமல் தடுத்துக் கொண்டிருப்பது மனநல ஆலோசனையின் போது தெரிய வருகிறது.

தன்னுடைய வெற்றியை அவளுக்கு ஒரு பயமாக அவள் மனம் முன்னிறுத்துகிறது என்பதை அவளுக்கு உணர வைத்து அவள் பட்டம் பெற்று வருவதைப் பார்ப்பதற்காக அவளது தாய் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறார், அவளுடைய படிப்பு இந்த சமுகத்திற்கு உதவ வேண்டும், தானும் அதில் பங்கெடுக்க வேண்டும் என  மிகுந்த விருப்பத்தோடு அவர் அவள் வெற்றியை எதிர் நோக்கி  நல்ல ஆரோக்யத்தோடு இருக்கிறார் என அந்தத் தாயின் அடுத்த இலக்கை அவரே சொன்னவுடன் தான் அவளால் அதில் இருந்து மீண்டு வெற்றி பெற முடிகிறது.

ஆழ்மனம் மிக ஆற்றல் வாய்ந்தது. அதன் நன்மையும் தீமையும் அதை நீங்கள் எப்படிக் கையாள்கிறீர்கள் என்பதிலேயே இருக்கிறது. சில நேரம் இப்படி, உங்களையுமறியாமல் ஏதாவது ஒன்றைத் தன்னுள் ஒரு வரையறையாக பிடித்து வைத்துக் கொள்ளும். அது வெற்றியை நெருங்கும் நேரத்தில் மீண்டும் தொடங்கிய இடத்தில் வந்து விட்டு விடும். உங்களுக்கே அது பல நேரம் புரியாமல் இருக்கும்.

உண்மையில் வெற்றி என்பது ஒரு முடிவு அல்ல. அது ஒரு அழகிய அனுபவம். அது இனிய பயணம். எல்லாவற்றிலுமே நன்மையும் தீமையும் இருக்கிறது. ஆனால் தேங்கிப் போவதை விட்டும் முன்னேறிக் கொண்டிருப்பது நன்மையே தரும் என்பதை ஆழமாக நம்புங்கள். அது உங்கள் anxiety யைக் குறைக்கும். நிரந்தர வெற்றி உங்கள் வசப்படும்..

dr. ஃபஜிலா ஆசாத்
fajila@hotmail.com    FB:fajilaazad.dr   youtube:FajilaAzad

No comments: