Wednesday, December 4, 2019

நீடூர் அலி அண்ணன்

நீடூர் அலி அண்ணன்


இந்தமுறை என் மகன் திருமணத்திற்காக நான் ஊர் சென்று நான்கு மாதங்கள் இருந்தேன். அந்த நான்கு மாதங்களில் அண்ணன் நீடூர் அலி அவர்களைச் சந்தித்தது மறக்கமுடியாது

நீடூர் அலி அண்ணனை எனக்குப் பத்தாண்டுகளாகத் தெரியும். என் கவிதைகளின் மகா பிரியர். என் கவிதைகளை அவர் தளத்தில் அழகாக வடிவமைத்து எப்போதும் இட்டுக்கொண்டே இருப்பார்.

நீடூர் அலி அண்ணன் அவர்கள் 82 வயது இளையவர். ஆமாம் இன்னமும் அவர் உள்ளம் 16ஐத் தாண்டாமல் அப்படியே ஆணியடித்தாற்போல் நிற்கிறது.

நண்பர்களே, உங்கள் முதுமையில் உங்களுக்கு முதுமை வேண்டாமா, மனதை இளைமையாக சிறு பிள்ளையாகவே கள்ளம் கபடம் இல்லாமல் வைத்திருங்கள். அதுதான் என்றும் பதினாறு இளமை பதினாறு


என் மகனின் திருமணம் முடிந்த மூன்றாவதுநாள் பெண் அழைப்பதற்காக பெண் வீட்டார் அறந்தாங்கியில் இருந்து 250 பேர் வருவதாகச் சொன்னார்கள். ஆகவே ஒரு திருமணத்தைப் போலவே பெரிய மண்டபம் பிடித்து 500+ பேருக்கு அருசுவை பிரியாணி காடை வறுவல் என்று ஏற்பாடு செய்திருந்தேன். திருமண வீட்டு பிரியாணியைவிட இந்த பெண்ணழைப்பு விருந்து படு சூப்பர் என்று பாராட்டாதவர்களே இல்லை.

அந்த விமரிசையான விருந்துக்கு நீடூர் அலி அண்ணன் வந்திருந்தார். பத்தாண்டுகளாக அறிவேன் என்றாலும் அன்றுதான் நான் முதன்முதலில் நேரில் பார்க்கிறேன். வந்தவர் அவர் மட்டும் வரவில்லை கூடவே சகோதரர் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்களையும் அழைத்து வந்திருந்தார்.

தேரிழந்தூர் தாஜுதீன் அவர்களின் குரல் வளம் நினைவிழக்கச் செய்யும். பெண்ணழைப்பு மேடையை இரண்டுமணி நேரம் தன் வசீகரக் குரலாலும் வாஞ்சையான பாடல்களாலும் கட்டிப் போட்டிடுந்தார்.

ஊர் திரும்பும்போது நீடூர் அலி அண்ணனையும் தாஜுதீனையும் மயிலாடுதுறை சென்று சந்திப்பதாய் இருந்தேன், பெருமுயற்சி செய்தேன் ஆனால் என் மாமியார் அவசர சிகிச்சையில் இருந்ததால் இயலாமலேயே போய்விட்டது. அந்த இழப்பை நான் என் அடுத்த பயணத்தில் மீட்டெடுக்க வேண்டும்

அன்புடன் புகாரி

No comments: