Thursday, August 9, 2018

திரும்பிப் பார்க்காதே! முன்னால் பார்!!

திரும்பிப் பார்க்காதே! முன்னால் பார்!!
சீனாவில் ஹூஹான் என்றொரு நகரம். இங்கே சீற்றத்துக்கு பேர் போன மஞ்சளாறு சுழித்துக்கொண்டு ஓடும். நம்மூரில் ஜல்லிக்கட்டு போல, ஆண்டுக்கு ஒருமுறை இந்த ஆற்றில் இளைஞர்கள் குதித்து ஆற்றின் போக்கை எதிர்த்து எதிர்நீச்சல் போடுவது வீர மரபாக அங்கே பின்பற்றப்பட்டு வருகிறது.ஜூலை 16, 1966.சீன மக்கள் குடியரசின் தலைவர் மாவோ, ஹூஹான் நகருக்கு வருகை தந்தார். அந்த எதிர்நீச்சல் திருவிழாவைத் தொடங்கி வைத்தவர், திடீரென தானும் ஆற்றில் குதித்தார். சீறிக்கொண்டு வந்த நீரோட்டத்தில் மாவோவும் எதிர்நீச்சல் போட ஆரம்பிக்க, வேறு வழியின்றி அவரது பாதுகாவலர்களும் நீரில் குதித்து, கரையேறச் சொல்லி அவரை வற்புறுத்தினார்கள்.ஆனால், மாவோவோ, மற்ற சீன இளைஞர்களுக்குப் போட்டியாக சுமார் பதினைந்து கிலோ மீட்டர் தூரத்துக்கு நீந்தினார். அப்போது அவரது வயது 73 என்பது குறிப்பிடத்தக்கது.


உலகம் முழுக்க மாவோவின் இந்த எதிர்நீச்சல் பிரபலமானது. இந்த சாதனையை தன் அரசியலுக்கும் அவர் பயன்படுத்திக் கொள்ளத் தவறவில்லை. அப்போது அவர்மீது சுமத்தப்பட்டிருந்த பல்வேறு குற்றச்சாட்டுகள் இந்த சாதனை எதிர்நீச்சலின் காரணமாகத் தவிடு பொடியானது. கடுமையான அரசியல் நெருக்கடி நேரத்தில் எல்லாம் ‘நீச்சல்’தான் மாவோவைக் கரையேற்றியது. “சிறுவயதிலேயே என்னுடைய அப்பா எனக்கு நீச்சல் கற்றுக் கொடுத்தார். நீந்தும்போதுதான் எப்படிப்பட்ட சிக்கல்களுக்கும் தீர்வு காணக்கூடிய சிந்தனைகள் எனக்கு ஏற்படுகிறது...” என்றார் மாவோ.

அவருடைய புரட்சிகர சிந்தனைகளில் பெரும் பகுதி, அவருடைய நீச்சலின்போது தோன்றியவையே. மாவோவின் இறுதிக் காலத்தில், “மாவோவின் அத்தியாயம் முடிந்தது. இனி அவரால் நடக்கக்கூட முடியாது...” என்று மேற்கத்திய ஊடகங்கள் எழுதிக் கொண்டிருந்தன.எழுந்து நடமாடியதோடு மட்டுமின்றி, அதே மஞ்சளாற்றை இக்கரையிலிருந்து அக்கரைக்கு நீந்திக் கடந்து சீன மக்களுக்கு தன்னுடைய மன வலிமையைப் பறைசாற்றினார் மாவோ. 82 வயதில் இத்தகைய அரிய சாதனையைச் செய்தார்!உலகின் மகத்தான தலைவர்கள் அனைவருக்குமே இந்த ‘Never Ever Give Up’ என்கிற மனோபாவம் இருக்கும். எத்தகைய நெருக்கடியும் தங்களைச் சாய்த்து

விடாமல், வெற்றி தோல்வியைக் கருத்தில் கொள்ளாமல் எதிர்த்து நின்று போராடுவார்கள்.

மாவோவைப் போன்ற ஓர் எதிர்நீச்சல் நாயகன், நம்மூரிலும் உண்டு. மாவோவின் புகழ்பெற்ற அந்த 1966 நீச்சலுக்கு, முப்பதாண்டுகள் முன்னதாகவே தன்னுடைய டீன் ஏஜில் இப்படியொரு நீச்சல் சாதனை நிகழ்த்தியவர், வேறு யாருமல்ல,திமுக தலைவர் கலைஞர் அவர்கள்தான்.

கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாக வாழும் கலைஞர், காலம் முழுக்கவே ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் ஓயாமல் போராடிக் கொண்டிருப்பவர். அவருக்கு பிரியமான கலை, இலக்கியப் பணிகளில் அவரை முழுமையாக ஈடுபடவைக்க இடம் கொடுக்காமல், அரசியல் மற்றும் சமூகப் பணிகள் அவரது அசுர உழைப்பை கோரிக்கொண்டேதான் இருக்கின்றன.

ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் 100 சதவிகித உழைப்பை மக்களுக்குக் கொடுக்கிறார் என்றால், எதிர்க்கட்சி வரிசையில் அமரும் போதெல்லாம் 200 சதவிகித உழைப்பைக் கொடுத்தாக வேண்டிய நெருக்கடியை தனக்குத் தானே அவர் ஏற்படுத்திக் கொள்வார். தூங்கும்போதும் கூட அவரது மூளை கட்சி நலனையும், மக்களுக்கு ஆற்றவேண்டிய பணிகளையும்தான் சிந்தித்துக் கொண்டிருக்கும்.

 கலைஞரை நோக்கி ஒரு முறை அவருக்கு நெருக்கமான பத்திரிகையாளர் கேட்டார்.‘ஓய்வு, ஒழிச்சல் இல்லாமல் தொடர்ச்சியாக இத்தனை ஆண்டுகளாக உழைத்துக்கொண்டே இருக்கிறீர்களே, இவற்றையெல்லாம் விட்டுவிட்டு உங்கள் மனசை மகிழ்ச்சிப்படுத்தக் கூடிய பணிகளில் ஈடுபடலாமே என்று எப்போதுமே தோன்றியதில்லையா?’அந்தப் பத்திரிகையாளருக்கு கலைஞர் சொன்ன பதில்தான், அவருடைய சிறுவயது எதிர்நீச்சல் கதை.

“பள்ளிப் பருவத்தில், நானும் என்னுடைய உயிர்த் தோழனுமான தென்னனும் எப்போதும் திருவாரூரின் மிகப்பெரிய கோயில் குளமான கமலாலயத்தில் நீந்திக் களித்துக் கொண்டிருப்போம்.ஒரு நாள் இருவருக்கும் அந்தக் குளத்தின் மைய மண்டபத்துக்கு நீந்திச்செல்ல வேண்டும் என்கிற ஆர்வம் ஏற்பட்டது. கோயில் குளங்களிலேயே மிகப்பெரியது கமலாலயம்தான். நீந்திக் கடக்க முடியுமா என்கிற சந்தேகம் இருந்தாலும், இருவரும் ஒரு வேகத்தில் நீந்த ஆரம்பித்து விட்டோம்.பாதி தூரத்துக்கும் மேலாக நீந்திவிட்டோம். இருவருக்கும் மூச்சு இரைக்கிறது. தென்னன், பயந்துப் போனான். நானும்தான். ‘திரும்பிவிடலாம் கருணாநிதி’ என்றான்.

மனசுக்குள் அச்சமிருந்தாலும், தென்னனுக்கு தைரியம் அளிக்கும் விதமாக நான் சொன்னேன். ‘தென்னா, இதுவரை முக்கால் பங்கு நீந்திவிட்டோம். மையத்துக்குச் செல்வதென்றால் இன்னும் கால் பங்குதான். திரும்புவதென்றால் இன்னும் அதிக தூரம் நீந்த வேண்டும். தெரிந்தோ, தெரியாமலோ ஓர் இலக்கை நிர்ணயித்து விட்டோம். அதை எட்டுவோம், வா’ என்று அழைத்தேன்.அதன்படியே மைய மண்டபத்தை அடைந்தோம். சில நிமிடங்கள் ஓய்வெடுத்து விட்டு மீண்டும் உற்சாகமாகக் கரைநோக்கி நீந்த ஆரம்பித்தோம். எங்கள் இலக்கை எட்டிய மகிழ்ச்சியின் காரணமாக, திரும்ப வரும்போது எங்களுக்கு அலுப்பே இல்லை.

அன்றைய சிறுவன் கருணாநிதிக்கு இருந்த அதே போர்க்குணம், இன்றும் எனக்கு இருக்கிறது. முன் வைத்த காலை நான் என்றுமே பின் வைக்க விரும்புவதில்லை. அரசியல் துறையை விரும்பித்தான் தேர்ந்தெடுத்தேன்.எல்லாப் பாதையிலுமே குளிர் சோலையும் இருக்கும், சுடும் பாலையும் இருக்கும். பாலையைக் கண்டு பயந்து திரும்புபவன் குளிர் சோலையின் இன்பத்தை எட்டுவதே இல்லை...” என்று சொன்னார் கலைஞர்.

கலைஞரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ளவேண்டிய அடிப்படைப் பண்பு இதுதான்.

“திரும்பிப் பார்க்காதே! முன்னால் பார்!!”


(நன்றி : குங்குமம்)

எழுதியவர் யுவகிருஷ்ணா https://www.luckylookonline.com/2018/08/blog-post.html

No comments: