Wednesday, August 29, 2018

முகமது அலி ” இரண்டாவதாக வருபவனை, உலகம் ஒருபோதும் ஞாபகம் வைத்துக் கொள்வதில்லை!”

இரண்டாவதாக வருபவனை, உலகம் ஒருபோதும் ஞாபகம் வைத்துக் கொள்வதில்லை.

- தன்னம்பிக்கை கதை

ஹெவிவெயிட் குத்துச்சண்டைப் போட்டியில், 1964-ம் வருடம், முதன்மையான குத்துச்சண்டை வீரர் லிஸ்டைன எதிர்த்து நின்ற 22 வயது கறுப்பு இளைஞன் முகமது அலியைப் பார்வையாளர்கள் பரிதாபமாகப் பார்த்தார்கள். போட்டியின் முதல் இரண்டு சுற்றுகள் சாதாரணமாகவே நடந்தன. மூன்றாவது சுற்றில் முகமது அலியின் குத்து, லிஸ்டனின் புருவத்தைப் பதம் பார்த்தது. காயத்துக்கு மருந்து போட்டு வந்த லிஸ்டன் ஆக்ரோச‌மாக குத்துக்களை விட்டார்.


அவரது புருவத்தில் இருந்த மருந்து தெறித்து, முகமது அலியின் கண்ணுக்குள் விழுந்துவிட, பெரும் உறுத்தலோடு அடுத்த இரண்டு சுற்று சண்டை போட்டார் அலி. ஆறாவது சுற்றின் போது உறுத்தல் நீங்க, அதிரடி தாக்குதலில் இறங்கினார். அந்தச் சுற்று முடிந்த பின்பு தான், தன் கைமூட்டு இடம் பெயர்ந்திருப்பது லிஸ்டனுக்குப் புரிந்தது. அவர் தொடர்ந்து போட்டியில் பங்கேற்க முடியாமல் போகவே முகமது அலி உலக முதன்மை குத்துச்சண்டை வீரரானார்.

நிருபர்கள், ‘‘இந்த வெற்றியை எதிர்பார்த்தீர்களா?’’ எனக் கேட்க, உற்சாகமாகப் பேசினார் அலி. ‘‘இரண்டாவதாக வருபவனை, உலகம் ஒருபோதும் ஞாபகம் வைத்துக்கொள்வதில்லை என்று எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார் என்னுடைய கோச் மிஸ்டர் ஃபிரட்ஸ் டோனர். அதனால், முதல் இடம் தவிர எதையும் எப்போதும் நான் ஏற்றுக் கொள்வதில்லை’’ என்றார் அலி தன்னம்பிக்கையுடன். ஆம், கலந்துகொண்ட போட்டிகள் எல்லாவற்றிலும் வெற்றியே பெற்று, இறுதிவரை முதல்வனாகவே திகழ்ந்த முகமது அலிக்கு ஊக்கம் தந்த மந்திரச் சொல் அது தான்.

அமெரிக்காவின் லூயிஸ்வில்லி நகரத்தில் (1942), ஒரு பியானோ கலைஞரின் மகனாகப் பிறந்தார் முகமது அலி. இயற்பெயர், காஸியஸ் மெர்ஷிலிஸ் கிளைவ்.12-வது வயதில் குத்துச்சண்டை கற்றுக் கொள்ளத் துவங்கினார். அவருடையகோச் ஃபிரட்ஸ் டோனர், ‘‘வண்ணத்துப் பூச்சியைப் போல பறந்து, தேனியைப் போல‌த் தாக்கு’’ என்று ஒரு புதிய ஸ்டைலை கற்றுக் கொடுத்தார்.

18-வது வயதில் இத்தாலியில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்று, தங்கப்பதக்கத்துடன் தாய்நாடு திரும்பிய காஸியஸ், அந்த சந்தோஷத்தைக் கொண்டாட, நண்பர்களுடன் ஒரு பெரிய கேளிக்கை உணவகத்திற்கு நுழைய, அவரைத் தடுத்து, ‘‘கறுப்பர்களுக்கு இங்கு எதுவும் வழங்குவதில்லை. வெளியே செல்லுங்கள்’’ என்றார் மேலாளர்.
‘‘நான், நம் நாட்டுக்காக இத்தாலியில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம் ஜெயித்திருக்கிறேன்’’ என்று காஸியஸ் சொன்ன பிறகும், மேலாளரிடம் எந்த மாற்றமும் இல்லை. உடனே கடும் ஆத்திரத்தில் தங்கப்பதக்கத்தை ஆற்றில் வீசி எறிந்தார். சொந்த நாட்டில் அந்நியராகக் கேவலப்படுவதாக உணரவே, இஸ்லாம் மதத்துக்கு மாறி ‘முகமது அலி’ எனப் பெயரை மாற்றிக்கொண்டு, கடுமையாகப் பயிற்சிகள் செய்து, உலக சாம்பியன் பட்டத்தை எட்டிப் பிடித்தார். அதன்பின், அவருக்குப் பல தடைக் கற்கள் வந்தபோதும், சளைக்கவில்லை. தொடர்ந்து வெற்றிகளைக் குவித்தார்!

1981-ம் வருடம் அவரை அல்ஸீமர் நோய் கடுமையாகத் தாக்கியது. அதன் பின்னர், கறுப்பர்களின் உரிமைகளுக்காக அரசியலில் ஈடுபட்டதுடன், சமூக சேவையிலும் இறங்கினார். பள்ளி விழாக்களில் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு உற்சாக விதை தூவுவதை மிகவும் விரும்புவார்.‘‘சூரியனுக்கு ஒரு காரியம் இருக்கிறது; சந்திரனுக்கு ஒரு காரியம் இருக்கிறது;

ஏன், மிருகங்களுக்கும் கூட செய்வதற்கு என ஒரு காரியம் இருக்கிறது. அது போல் ஒவ்வொரு மனிதனும் தனக்குரிய காரியம் எது என்பதைக் கண்டறிந்து அதில் முழுமையாக ஈடுபட்டு, முதல்வனாக வெற்றி பெற வேண்டும். ஏனென்றால், இரண்டாவதாக வருபவனை, உலகம் ஒருபோதும் ஞாபகம் வைத்துக் கொள்வதில்லை!’’ என்பது தான் அவர் தூவிய உற்சாக விதைகளில் முக்கிய விதை!
ஆதரிப்போம் நல்லவர்களை

No comments: