Monday, June 11, 2018

#குர்ஆன்_இறங்கிய_இரவு ... - அபு ஹாஷிமாவழக்கம் போல்
ரமளான்
வசந்தம் வந்தது !

*
மணத்தோடு பூக்களும்
சுகத்தோடு தென்றலும்
மக்காவைச் சுற்றி வந்தன !

*
அது -
புனிதத்தைப் பூசிக் கொண்டப்
புண்ணிய மாதம் !
*
வஞ்சகர்களால் வருத்தமுற்ற
வள்ளல் முஹம்மதின்
நெஞ்சிறைந்த வேண்டுதலுக்கு
வானிலிருப்பவன்
வசமான மாதம் !

*

குப்ரின் இருள் அழித்து
தன் வேதக் கதிர்களை
விதைப்பதற்கு
வேத நாயன்
தேர்ந்தெடுத்த இரவுதான்
லைலத்துல் கத்ர் !

*
இது -
ரமளான் மாத
இறுதியில் வருகின்ற
இனிய நாளின்
இரவுத் திருநாள் !

*
புனித இரவில்
பெருமானார்
எப்போதும்போல்
ஹிராவின் வயிற்றுக்குள்
கர்ப்பமானார் !

*
விண்மீன்கள்
பணி விடுப்பு
எடுத்ததினால்
வான் மேகம்
வெளிச்சத்தை
இழந்து நின்றது !

*
முழு இருட்டுக்குள்
முழு உலகும்
விழுந்து கிடந்த போதுதான்
இறைவன்
வெளிச்ச வெள்ளத்தை
விதைத்து விட்டான் !

*
வானிலிருந்து இறங்கி வந்த
ஒளி வெள்ளம்
ஹிராவின் சுவர்களுக்கு
வெளிச்சத்தைப் பூசியது !

*
மலைகளும் தகர்ந்து விடும்
இடியோசை ஒன்று
இதயத்தை
உறைய வைத்தது !
*
பூ இதழினும் மெல்லிய
புண்ணியரின்
இதயச் சுவர்கள்
இடியோசைக் கேட்டு
அதிர்ந்து போயின !

*
மழையாக இறங்கி வந்த
ஒளியின் வெள்ளம்
வள்ளலின் திருமுன்
உருவாகக் கருக் கொண்டது !

*
அண்ணலின் விரல்கள்
கண்களைக்
கசக்கிக் கொண்டன !

*
வான் வழி வந்தது
சந்திரனா ?
கண்ணைப் பறிக்கும் சூரியனா ?

*
இருட்டுக் குகைக்குள்
ஒளியின் குளியலா ?

*
பயப்படுவதா ?
பதுங்கிக் கொள்வதா ?

*
அண்ணலின் இதயம்
அடித்துக் கொண்டது !
ஆதரவாய்
ஹிராக் குகையின்
பக்கச் சுவரைக்
கை பற்றிக் கொண்டது !

*
அறிவுக்கும்
அனுபவத்திற்கும் எட்டாத
அதிசயம் ஒன்று
அங்கே ...
அரங்கேறிக் கொண்டிருந்தது !

*
அர்ஷிலிருப்பவன்
அனைத்தையும்
நிகழ விட்டு - தன்
ஹபீபை
ஆட்கொண்டு விட்டானோ ?

*
வந்தது ஒளியா ?
உருவா ?
திருவா ?

*
குழப்பத்தின் உச்சத்தில்
அண்ணலின்
புருவ ஓரங்கள்
கொக்கி போட்டுக் கொண்டன !
*
#ஜிப்ரீல் ...

ஒளியிலிருந்து
இறங்கி வந்ததொரு உரு !
பெயர் ஜிப்ரீல் !

*
இவர் -
ஆண்டவன் படைத்த
அமரர்களின் தலைவர் !
வானுக்கும் பூமிக்கும்
உயர்ந்த உருவினர் !
மானிடர் கண்களுக்கு
அருவமிவர் !

*
இவர் வயதிற்கு
வரம்பில்லை !
இவர் ஆற்றலை
சிந்திக்கும் அளவிற்கு
மானிடற்கு அறிவில்லை !

*
இறைவன் அனுப்பிய
தூதர்களுக்கு
ஜிப்ரீல்
மறை கொண்டு வருபவர் !

*
அவன்
ஆணையிடும் போதெல்லாம்
மகத்தான செயல்களை
செய்து முடிப்பவர் !

*
இன்று -
முதலவனாம் அல்லாஹ்வின்
உத்தரவு பெற்று
ஹிராவில் தரை இறங்கிய
வானப் பறவை
ஜிப்ரீல்
ஞானத் தூதைக்
கொண்டு வந்தார் !

*
தன்னை விடத்
தகுதியிலும் - இறைக்
கருணையிலும்
மிகுந்திருக்கும்
நூரே முஹம்மதியாவை
ஜிப்ரீல்
நெருங்கி வந்தார் !

*
இறைவன் அருளிய தன்
அற்புத எழிலுருவை
அண்ணலின் கண்களுக்கு
விருந்தாக்கிக் கொடுத்தார் !

*
அறிமுகமில்லாத
மனிதரைப் பார்த்து
மிரண்டு நிற்கும்
குழந்தையைப்போல ஆனார்
அண்ணல் !

*
பயக்கடலில் தத்தளித்த
அண்ணலின்
இதயப் படகு
திடீரென்று
நங்கூரம் பாய்ச்சியது !

*
அண்ணலின் முகத்தில்
ஆயிரம் தெளிவுகள் !

*
விண்ணுக்கும் மண்ணுக்கும்
வளர்ந்து நிற்கும் இவரே
தன்னைக் கனவில் துரத்தியவர்
என்பதை
அண்ணல் அறிந்தார் !

*
ஜிப்ரீலின்
ஒளி விழிகளை
தன்
கருணை விழிகளால்
எதிர் கொண்டார் !

#இறைவனே_ஆசிரியன்

விந்தை புரிய வந்த
வித்தகனின் தூதரவர்
மென்னகைப் புரிந்தார்
வார்த்தையொன்றை உதிர்த்தார் !

*
" ஓதுவீராக "
வேதத்தின் முதல் வரியை
வேதம் கொடுத்த முதல்வனின்
ஒளித் தூதர் ஜிப்ரீல்
உலகத்தில்
முதன் முதலாக
அண்ணலுக்கு உபதேசித்தார் !

*
ஜிப்ரீலின்
அருள் வார்த்தை
ஒளியாக உருவெடுத்து
உத்தமரின் உள்ளத்தில்
ஊடுருவியது !

*
உலர்ந்துபோன
அண்ணலின் உதடுகள்
உதறலை உதறி விட்டு
உறுதியை
உறுதி செய்து கொண்டன !

*
" நான் ஓதத் தெரியாதவன் "
என்ற
உண்மையின் வார்த்தைகளை உரைத்தன !

*
ஒளி உருவம்
உண்மையின் பக்கம் வந்தது !
அள்ளி அணைத்தது !
" ஓதுவீராக "
மீண்டும் உரைத்தது !

*
உண்மையே உரைக்க வந்த
உத்தமரின் உதடுகள்
மீண்டும் உரைத்தன
" நான் ஓதியவனல்லேன் "

*
ஒளியுரு மீண்டும் ஒருமுறை
தன்னிலும் மேலான ஒளியை
அணைத்தது !
" ஓதுவீராக " எனும்
வார்த்தை முத்துக்களை
உதிர்த்தது !

*
எத்தனை முறை உரைத்தாலும்
உடலோடு
கட்டி அணைத்தாலும்
உண்மையே உரைக்க வந்த
உத்தமரின் உதடுகள்
இப்போது
உருக்கமாய் கேட்டது...
" எதை ஓதுவது ?"

*
ஒளி உருவம்
நெருங்கி வந்தது !
தன்னை
ஒளியென்று தெரிந்து கொள்ளாத
ஒளியின் ஒளியை
ஒளியென்று உணர வைக்க
மீண்டும் ஒருமுறை
வாரி அணைத்தது !
வேத நாயன்
அனுப்பி வைத்த
வேதத்தைச் சொன்னது !

*
" ஓதுவீராக !
உம்முடைய இறைவனின்
திருப்பெயரைக் கொண்டு
ஓதுவீராக !
இறைவன்
அனைத்தையும் படைத்தவன் !
இரத்தக் கட்டியிலிருந்து
மனிதனைப் படைத்தவன் !
இறைவன்
மிக்க தயாளமானவன் !
எழுதுகோலைக் கொண்டு
மனிதன் அறியாதவற்றை
அவனுக்குக் கற்றுக் கொடுத்தவன் !"

*
வல்லோன் இறக்கிய
வேத வரிகளை
வள்ளலின் உள்ளம்
உள்வாங்கிக் கொண்டது !
தன் உதட்டுப் பூக்களால்
ஒப்பித்துக் காட்டியது !

*
அண்ணல் ஓதி முடித்ததும்
ஒளி உருவம்
ஹிராக் குகையிலிருந்து
வெளியே வந்தது !
தன்
சுய உருவை மீண்டும்
அண்ணலின் விழி சேர்த்தது !

#அண்ணல்_ரஸூலானார்

பூமிக்கும் வானுக்கும்
உயர்ந்து நின்ற
மா உருவம்
மா மன்னர்
முகம் பார்த்தது !
மா பெரியோன்
செய்தியைச் சொன்னது !

*
" முஹம்மதே !
ஏக இறைவனின்
திருத் தூதர் நீங்கள் !
என் பெயர் ஜிப்ரீல் ..
அல்லாஹ்வின் அடிமை !"
எனக் கூறியது !
பரிசுத்த ஆவி
மறைந்து விட்டது !

*
அன்றுதான்
குர் ஆனின் முதல் பாடத்தை
அதன் ஆசிரியன்
அரங்கேற்றம் செய்தான் !

*
எழுதத் தெரியாத
படிக்கத் தெரியாத
உம்மி மனிதருக்கு
வான் மறையைப் பாடமாக்கி
முதன் முதலாய் ஓதுவித்தான் !

*
அகிலங்களைப் படைத்தவன்
அண்ணலைப் படைத்தவன்
வேதங்களைப் படைத்தவன்
தான் வகுத்த வேதத்தின் பாடத்தை
புண்ணியருக்குப் புகட்டி விட்டான் !

*
ஆதியும் அந்தமும் இல்லா
தனித்தவனின் திருநாமத்தைத் தாங்கி
திருமறையைத் தன்
திருவாயால்
நபிபெருமான்
திறந்து வைத்தார் !

*
இறைவேதம் இறங்கிய
அந்தப் புண்ணிய
இரவில்தான்
முஹம்மதுக்குப் பட்டமளிப்பு விழா !

*
அறியாமையை எரித்து
பொய்மையைப் புறந்தள்ளி
ஆன்மாவில் பாடம் எழுதிய
அண்ணல் முஹம்மதுக்கு
அல்லாஹ் வழங்கிய பட்டம்
" ரஸூலுல்லாஹ் "
" அல்லாஹ்வின் தூதர் "

*
அண்ணல் முஹம்மது
முஹம்மது ரஸூலுல்லாஹ் ஆனார் !

*
அல்ஹம்துலில்லாஹ்

*
புலர்ந்து வந்தக் கதிரவன்
தன் ஒளியைச் சற்றுக்
குறைத்துக் கொண்டு
இறைவன் அனுப்பி வைத்த
பேரொளியை
முத்தமிட்டு
மரியாதை செய்தது !

*
தங்கள் வாழ்வுக்கு
விடியல் வந்த செய்தி தெரியாமல்
மக்காவின் மனிதர்கள்
விடிந்த பின்னும்
முடியாத உறக்கத்தில்
விழுந்து கிடந்தார்கள் !

*
பெருமான் ரஸூலுல்லாஹ்
தங்கள் இல்லம் நோக்கி
விரைந்து நடந்தார்கள் !

#லைலத்துல்_கதர்_இரவு


அபு ஹாஷிமா

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails