Wednesday, June 13, 2018

பெருநாள் தினத்தில்..!


இதோ  பெருநாள்  நம்மை  நெருங்கி  விட்டது.
பெருநாளை  மகிழ்ச்சியாக  கொண்டாடும் விதமாக , ஈத்  பெருநாளை  தொழுது  விட்டு  மகிழ்ச்சியான  பொழுதை  நாம்  அடைய  இருக்கிறோம்.

வீட்டில்  பிரியாணியோ, குஸ்காவோ சமையலில்  தயார் 
செய்யும் திட்டம் நமக்கு  இருக்கலாம். 

பெருநாள்  அன்று
மத்தியானம்  நல்லா  சாப்பிட்டு  விட்டு, ஐஸ் க்ரீம்  சாப்பிட்டு  விட்டு, ஒரு  குட்டித்  தூக்கம்  போட்டு  விட்டு, சாயங்கலாமா  எங்கயாவது அவுட்டிங்  போனா  பெருநாள்  தினம்  சந்தோசமா   முடிஞ்சுடும்  என்று  நினைக்கிற  சராசரி  மனிதரா  நீங்கள்.???

இது  போதாது  சகோதரரே.!

இந்த  பெருநாள்  தினம்  வெறுமனே  உண்டு  ருசித்து, உடுத்தி  மகிழ்ந்து, உறங்கி  எழுந்து  , ஊர்  சுற்றிக்  களிப்பதற்கான நாளல்ல.

அன்று   நாம்  செய்ய  வேண்டிய  வேறு  பல  வேலைகளும்  இருக்கிறது.


முதலாவதாய்..
உங்கள்  அண்டை  வீட்டில் என்ன  செய்கிறார்கள்  என  கவனியுங்கள். அவர்களில்  ஏழைகள் யாரேனும்  இருந்தால், அவர்களில்  எவருக்கேனும்  சிறு  சிறு  உதவிகள் தேவைப்பட்டால் – நீங்களே அவர்களைத்  தேடிப்போய் உதவி  செய்ய  முயலுங்கள்.

உங்கள்  இரத்த  பந்த  உறவுகளான  அக்கா, தங்கை, அண்ணன், தம்பி  வீடுகளுக்கு  உங்கள்  குடும்பத்தோடு சென்று  வர  முயற்சி  செய்யுங்கள்.

ஆண்டு  முழுதும்  பரபரப்பாய்  பறந்து  இருப்பீர்கள். இந்த  நாளிலாவது வயதான  உங்கள்  பெற்றோருடன் மனம்  விட்டுப் பேச   நேரம்  ஒதுக்குங்கள்.

உங்கள்  வேற்றுமத  நண்பர்களை  உங்கள்  வீட்டுக்கு  அழைத்து, பெருநாள்  விருந்து  கொடுக்க  முயற்சி  செய்யுங்கள்.
அதன்  மூலம்  மத  நல்லிணக்கமும், உறவும்  வளர  உதவும்.

உங்களுக்கு  வாழ்த்து  செய்தி  அனுப்புவருக்கு  மறக்காமல் பதில்  அனுப்புங்கள்.

உங்கள்  பழைய  நண்பர்களுடன் தொலைபேசி  மூலமாகவாவது  தொடர்பு  கொண்டு, உங்கள்  வாழ்த்துக்களை  தெரிவியுங்கள்.

இன்னைக்கு  எத்தனையவாது  பிறை  தெரியுமா.?
ஈத்  முபாரக்  சொல்வது  கூடுமா – கூடாதா.?  என்பது  போன்ற  தேவையற்ற  வாதங்களைத்  தவிருங்கள்.

பெருநாள்  தினத்தை  உல்லாசம்  அனுபவிக்கும்  தினமாக   மாற்றி  விடக்  கூடாது என்பதில்  உறுதியாக  இருங்கள்.
தொலைக்காட்சியின் சிறைகளுக்கும்  மீண்டும்  சிறைப்பட்டு  விட, உங்கள்  மனைவி  மக்களை  அனுமதிக்காதீர்.

இஸ்லாம்  அனுமதித்துள்ள  வகையில், மன  நிம்மதி  அளிக்கும் வகையிலான செயல்பாடுகளை மேற்கொள்ள    உங்கள்  குடும்பத்தினர் அல்லது  குழந்தைகள் அனுமதி  கேட்டால் அவர்களுக்கு   தடை  விதிக்காதீர். 
                         


 இந்த  ரமளானில்  மேற்கொண்ட   பயிற்சிகளை  வாழ்நாள்  முழுதும்  கடைப்பிடிக்க  உறுதி  எடுங்கள். குறிப்பாக  நாமும்,  நம்  குடும்பத்தினரும்  தொழுகையை தொடர்ந்து  கடைப்பிடிக்க வேண்டும்  என்பதில்  உறுதியாக  இருங்கள்.

இறுதியாக,
இந்த  பெருநாளை  கொண்டாட  முடியாத  சூழ்நிலையில்  எவரெல்லாம்  மருத்துவமனையில்  இருக்கிறார்களோ, அவர்கள்  அனைவரும் விரைவில்  குணமடைய  பிரார்த்தியுங்கள்.

சிரியா, ஆப்கான் , பாலஸ்தீன், பர்மா  போன்ற  நாடுகளில்  வாழும் முஸ்லிம்கள்  போர்கள், சண்டைகளுக்கு  மத்தியிலும், அன்றாட  நிகழ்வாகிப்  போன  ஜனாஸா  தொழுகைகளுக்கு  மத்தியிலும்தான் நாம்  கொண்டாடும்  அதே பெருநாளை  சந்தித்துள்ளனர். அவர்களும், அவர்களைப்  போன்றோரும்  விரைவில்  அமைதியான்  சூழ்நிலையை  அடைய  வல்ல  இறைவனை  பிராத்தியுங்கள்.

நாம்  வாழும் நாடும், அதன்  மக்களும் எல்லா  வகையிலான நீதி, சுதந்திரம், பாதுகாப்பு   மற்றும் அடிப்படை  உரிமைகளை  பெற்று  வாழ  வேண்டி, நீங்கள்  துவா  செய்யுங்கள்.

முகம்  தெரியா  என்னையும், என்  குடும்பத்தினரையும்  உங்கள்  துவாவில்  நினைவில்  வையுங்கள்.. -

எல்லாம்  வல்ல  இறைவனே.! என்  பிழைகள், குறைகளைப்  பொறுத்துக்  கொண்டு  மன்னித்து,
என்  நோன்பையும், சதக்காவையும், தொழுகைகளையும்  உன்  மேலான  அருளினால்  ஏற்றுக்  கொள்வாயாக. ஆமீன்
No comments:

LinkWithin

Related Posts with Thumbnails