Wednesday, June 13, 2018

ஒரு அரசு அலுவலகி அள்ளித் தெளிக்கிறாள்..! (7) (8)------ மர்யம் சித்திகா

ஆபத்து..!

எல்லாவற்றினுள்ளும்
எளிதில் தென்படாத,
உள் ஒன்று
உள்ளது..!

அந்த,
உள்களில்
தவறவிடப்பட்டவையும்,
தவறி விடப்பட்டவையும்,
எவை, எவையோ..?

அன்றொரு நாள்,
இந்த
உள்களின்
ஆராய்ச்சியில்,
என்
வெளிகளையும்
தொலைத்து
வெறுமையாகிப் போனேன்..!

உள்ளும் அற்ற,
வெளியும் அற்ற,
எதுவும் அற்ற,
முற்றிலுமான
வெறுமை..!

சில
நொடிகளே
நீடித்த - அந்த
வெறுமையில் இருந்து
மீண்டெழுந்த பொழுது...

தொலைத்தது
எதை..?
மீட்டெடுத்தது
எதை..?
எதுவும்
தெரியவில்லை..!

உள்களின்
ஆராய்ச்சி,
ஆபத்தானதுதான்,
எனது
வெளிகளுக்கு..!


ஒரு அரசு அலுவலகி அள்ளித் தெளிக்கிறாள்

(8)

----மர்யம் சித்திகா

பரிமாணங்கள்....!

அந்த ரமளான் நோன்பு தொடங்கிற்று..!

நோன்பு ஆரம்பித்ததில் இருந்தே வாப்பா ஊரில் இல்லை.

எனவே, பஸ் ஸ்டாப்பிற்கு நடந்து சென்று, மாலையும் நடந்தே வருவேன்.

நோன்பு வைக்கும் முஸ்லிம் அரசு ஊழியர்கள்
ரமளான் மாதம் முழுக்க அலுவலகத்தைவிட்டு
4.30 மணிக்கு கிளம்பிவிட அனுமதி உண்டு.

அரசு ஊழியராக இருப்பதில் உள்ள இன்னொரு வசதி இது..!

வாப்பா ஊரில் இல்லாததாலும்,
4.30 மணிக்கே அலுவலகத்தை விட்டு கிளம்புவதாலும்
வெளிச்சத்தில் நடந்து வரும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த வெளிச்சத்தில் ஒரு குட்டி உலகத்தைக்
காணும் வாய்ப்பும் வாய்த்தது..!

மூன்று, நான்கு சிறுவர்கள்
பத்து வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்கலாம்.
அவர்கள் அளவிற்கு ஏற்ற சிறு சைக்கிள்களில்
தெருக்களை சுற்றி வந்து கொண்டு இருந்தார்கள்.

அந்தக் குழைந்தைகள் நிறைந்த அந்தத் தெரு
முன் எப்போதையும் விட அழகாக இருந்தது..!

இந்த உலகமே குழைந்தைகளுக்கானது தானே..!

குழந்தைகளால் மட்டுமே இவ்வுலகத்தை
அதன் இயல்போடு அனுபவிக்க முடியும்.

குழந்தைகள் அற்ற உலகம் கற்பனையில் கூடக்
கொடூரமாக உள்ளது.

அந்தச் சிறுவர்களின் சைக்கிள் சக்கரங்களுடன்
என் மன உருளையும் சுற்ற ஆரம்பித்து விட்டது.

அவர்களின் சைக்கிள்களை வைத்தே
அவர்களின் வாழ்க்கைத் தரம் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.

ஒருவன் கொஞ்சம் வசதியான குடும்பத்துச் சிறுவன்.

இருவர் நடுத்தரக் குடும்பத்தவர்.

நான்காமவன் எளிய குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன்.

இவர்களுக்குள் யார் வேகமாக ஓட்டி இலக்கை அடைவது என்ற போட்டி.

ஆனால், அது உண்மையானப் போட்டியாக இல்லை.
முந்திச் செல்பவன் நின்று பின்னால் வரும்
தோழர்களையும் அழைத்துக்கொண்டே சென்றான்..!

அந்த வசதி படைத்த சிறுவனுக்கு
அது டியூஷன் செல்லும் நேரம் போலும்..!

வீட்டிலிருந்து டியூஷனுக்கு செல்லும் வழியில்
தனது நண்பர்களைச் சந்தித்து
தனக்கேயான உலகத்தை அவர்களுடன்
பகிர்ந்து கொள்கிறான்..!

அவனது அவசரத்தில் இருந்து,
அந்த நேரம், அந்த இடம் மட்டுமே தனது
இந்த எளிய நண்பர்களைச் சந்திக்க
அவனுக்குக் கிடைத்த வாய்ப்பு என்று புரிந்தது.

இன்னொரு விஷயமும் புரிந்தது,
அவனது பெற்றோர் அவனது இந்த நட்பை
விரும்பவில்லை என்பதும்.

என்னதான் தடைகள் விதித்தாலும்,
குழைந்தைகள் வரிகளுக்கு நடுவே வழிகளைத் தேடி
பாதையை அமைத்துக் கொள்பவர்கள் ஆயிற்றே..!

அவன் நேரத்திற்கு டியூஷனுக்கும் செல்ல வேண்டும்,
இந்த நண்பர்க் குழாமை பெரியவர் எவரும் கண்டு விடவும் கூடாது,
அத்தோடு அவனது தோழர்களை இழந்து விடவும் கூடாது
என்பதில் அவன் காட்டிய அவசரம், பதைபதைப்பு,
சின்சியாரிட்டி அவனது நண்பர்கள் உலகத்தில்
அவனது மகிழ்ச்சியை முழுமையாக
அனுபவிக்க அவனை விடவில்லை..!

நாம் எவ்வளவு கொடூரர்களாக ஆகிவிட்டோம்..?

குழந்தைத் தன்மை அற்ற குழந்தைகளை
உற்பத்தி செய்ய முயன்று கொண்டு இருக்கிறோம்.

குழந்தைகளின் நண்பர்களையும் நாமே தேர்வு செய்கிறோம்..!

அவர்களின் இயல்பான பாதையை மாற்றி விட்டு,
விபரீதத்தை விளைவித்துக் கொண்டு இருக்கிறோம்.

பாதை மாறிய ஆறு அழிவை ஏற்படுத்தும் என்பதை
மறந்தா போய் விட்டோம்..?

இக்குழந்தைகள் தாமே பின்னாளில்
தம் சுயம் எது என்று விளங்காமல்
தம்மைத்தொலைத்து
அகதிகளாக அலைகிறார்கள்..?

குழந்தைகள் குழந்தைகளாக இல்லாத போது
உலகத்தின் அழகும் உதிர்ந்து போகும்.

ஆபத்தான குழந்தைகளை உருவாக்கிக் கொண்டு இருக்கிறோம்..!

நம் கொடூரங்களை அவர்களின் உலகத்தில் சிறு, சிறு
விஷத்துளிகளாக செலுத்திக் கொண்டு இருக்கிறோம்.

குழந்தைகளின் உலகங்களை
அதற்கேயுரிய அழகியலோடு விட்டு இருந்தால்,
ஒருவேளை உலகப் போர்கள் நிகழாமல் இருந்து இருக்கலாம்,
அணு குண்டுகள் தயாரிக்கப் படாமல் போய் இருக்கலாம்.

நமது அத்தியாவசியத் தேவை,
புத்திசாலிக் குழந்தைகள் அல்ல,
குழந்தைத் தன்மையுள்ள குழந்தைகள்தாம்..!

புத்திசாலிகளை உருவாக்கி விட்டு,
குழந்தைகளைத் தொலைத்து விட்டோம்.

ஒரு வேளை இதுவும் உலகம் அழிவதற்கான
அறிகுறிகளில் ஒன்றா..?

பஸ் ஸ்டாப்பில் இருந்து என் வீட்டிற்கான
10 நிமிட குட்டிப் பயணம் என்னை
இவ்வளவு எழுத வைத்து விட்டது..!

நீண்ட, நெடிய பயணங்கள்
வரலாற்றைப் புரட்டிப் போட்டதில்
ஆச்சரியம் ஒன்றும் இல்லை..!

ஒவ்வொரு பயணமும்
உட்புறமாகவோ அல்லது வெளிப்புறமாகவோ
நமக்கு ஒரு புதிய பரிமாணத்தைத் தருகின்றன...!

Hilal Musthafa

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails