Monday, June 4, 2018

நபிமொழிக் கவிதைகள் – 03


09

நபித்தோழர்களாகிய உங்களைவிட

நபியாகிய நான் மேலானவன்

அதைப்போல

ஆபிதைவிட ஆலிமே மேலானவர்

ஏகனைத் தொழுபவரைவிட

அறிவை உழுபவர் மேலானவர்

என்றார்கள் ஏந்தல் நபி

(திர்மிதி, அ: அபூ உமாமா. 05 – 2685)



10

எழுதப்படிக்கத் தெரியாத

உம்மி நபி உரைத்தார்கள்:

ஞானப்பாதையில் செல்லும் அறிஞருக்கு

சுவனப் பாதையைக் காட்டுவான் இறைவன்

விண்ணிலும் மண்ணிலும் உள்ளவை யாவும்

அவருக்காக ஆண்டவனிடம் கேட்கும்

மனிதர்களின் சொத்துக்கு வாரிசு

பிள்ளைகள்

தூதர்களின் வித்துக்கு வாரிசு

அறிஞர்கள்

(சுனன் அபூ தாவூத். அ:அபூதர்தா. 04 – 3641)

11

நாயனிடமிருந்து எனக்கு

நற்செய்தி வந்தது

இறைவனுக்கு இணை வைக்காமல்

இந்த உலகைப் பிரிபவர்க்கு

சொர்க்கம் உண்டு நிச்சயம் என்று

சுந்தர நபி சொன்னார்கள்



அவர் கன்னம் வைத்திருந்தாலுமா

கள்ளக்காதல் செய்திருந்தாலுமா

என்று கேட்டார் தோழர் அபூதர்

ஆமாம் என்றார்கள்

அழகு நபி

(புகாரி, அ: அபூதர், 02 – 1237)

12

மூலவன் இறைவன் ஒருவனே — அவன்

முத்திரைத் தூதர் முஹம்மது என்பதில்

நீங்கள் உறுதியாயிருந்தால்

நக்கியும் பார்க்காது உங்களை

நரக நெருப்பு



அல்லாஹ் ஒருவனே ஆண்டவன்

அவன் தூதர் முஹம்மது என்பதில்

அணுவளவு நம்பிக்கை இருந்தாலும்

நரகிலிருந்து விடுவிக்கப்படுவீர்கள் என

நவின்றார்கள் நமது நபி

(புகாரி, அ: அனஸ், 01 – 44)

13

முதுமை தொடாது

இளமை கெடாது

நீர்க்கடல் பாற்கடல்

எல்லாம் இருக்கும்

இற்றுப்போகாது ஆடை

இல்லை அங்கே இயற்கையின் அழைப்பு

கழிவுகளில் கஸ்தூரியின் நறுமணம்



எல்லாம் இருக்கும்

இன்ப சொர்க்கத்தில்

ஈமான் மட்டும் இருந்துவிட்டால்

உங்கள் இதயத்தில் என்று

பூமான் நபி பகன்றார்கள்

(முஸ்லிம், அ:அபூஹுரைரா. 07 — 7156)

நன்றி: மக்கள் உரிமை மே 11-17, 2018

 நன்றி:பறவையின் தடங்கள்

https://nagoorumi.wordpress.com

  • நபிமொழிக் கவிதைகள் — 02


  • நபிமொழிக் கவிதைகள்

  • No comments: