Tuesday, August 8, 2017

ஏங்குகிறான் மனிதன் ....

நிம்மதிக்கு ஏங்குகிறான் 
ஈன்றெடுத்த தாயின் 
அழகிய மடிதனில் 
சாய்ந்திட மறுத்தவனாய் ....
அறிவுரைக்கு ஏங்குகிறான் 
வளர்த்த தந்தையின் 
அறிவார்ந்த அனுபவங்களை 
அறிந்திட மறுத்தவனாய் ....
மகிழ்ச்சிக்கு ஏங்குகிறான் 
வாக்கப்பட்ட மனைவியின் 
ஆழமான அன்புதனை 
உணர்ந்திட மறுத்தவனாய் ....
பாசத்திற்கு ஏங்குகிறான் 

பெற்ற குழந்தைகளின் 
கபடமில்லா உள்ளங்களை 
ஈர்த்திட மறுத்தவனாய் ....
பாரமிறக்க ஏங்குகிறான் 
நேசமான நண்பனின் 
நீங்காத நட்புதனை 
நாடிட மறுத்தவனாய் ....
உணவுக்கு ஏங்குகிறான் 
ஆரோக்கிய உடலால் 
இயல்கிற உழைப்புக்கு 
முயன்றிட மறுத்தவனாய் ....
உறவுக்கு ஏங்குகிறான் 
உபசரிக்கும் குடும்பங்களின் 
உணர்வுள்ள பந்தங்களோடு 
இணங்கிட மறுத்தவனாய் ....
முன்னேற ஏங்குகிறான் 
செப்பனிட்ட பாதைகளில் 
இலக்குகளை நோக்கி 
பயணித்திட மறுத்தவனாய் ....
அறிவுக்கு ஏங்குகிறான் 
கல்வியகங்களில் குவிந்துள்ள 
சிந்தனையூட்டும் நூல்களை 
படித்திட மறுத்தவனாய் ....
நல்லாட்ச்சிக்கு ஏங்குகிறான்
காசுக்கு வாக்களித்து 
அவதியுறும் நிலையினில் 
திருந்திட மறுத்தவனாய் ....
சுவர்க்கமடைய ஏங்குகிறான் 
நன்மைகளை பெருக்குகிற 
தொழுகையினையும் நல்லமல்களையும் 
நிறைவேற்ற மறுத்தவனாய் ....

அப்துல் கபூர்

No comments: