Tuesday, August 1, 2017

தமிழின் தாயகம்

Vavar F Habibullah
தமிழின் தாயகம்

கவிமணி... 'செந்தமிழ்ச் செல்வன்' என்று இவருக்கு பட்டம் அளித்து கவுரவித்தார் என்றால், பாண்டித்துரைத் தேவர் ஒருபடி மேலே போய் 'தமிழின் தாயகம்' என்று இவரை போற்றி வாழ்த்தினார்.இப்படி தமிழ் அறிஞர் களால் போற்றி வணங்கப்பட்ட பெருமகன் தான் செய்கு தம்பி பாவலர் அவர்கள்.
கோட்டாறு ஊரைச் சார்ந்த இந்த தமிழ் அறிஞர் சதாவதானக் கலையில் வித்தகர்.
சென்னையில் தமிழ் அறிஞர்கள் முன்னிலை யில் ஒரே நேரத்தில் நூறு விசயங்களில் தன் கவனத்தை செலுத்தி தன் நுண்ணறிவால் மக்களை ஈர்த்த இவர் திறன் கண்டு தமிழ் மன்றம் இவருக்கு மகாமதி சதாவதானி என்ற சிறப்பு பட்டத்தை சூட்டி கவுரவித்தது.

தமிழறிவின் சிகரமாக விளங்கிய இவர் எழுதி குவித்த தமிழ் நூல்கள் இன்றும் போற்றி பாது காக்கப்படுவது தமிழினத்திற்கு கிடைத்த பெருமை என்றே கொள்ளல் வேண்டும்.
சதாவதானம் என்ற தன் நிலை மறந்த நிலை யில் தன்னை சுற்றிலும் நடக்கும் பல விசயங்களை தன் மதிநுட்பத்தால் உணர்ந்து அதற்காக சரியான விடைகளை துல்லியமாக தருவது என்பது எளிதான செயல் அல்ல.இன்றைய கணிணி உலகம் கூட இவர் அளவுக்கு விரைந்து பதில்களை தர இயலுமா என்பது விஞ்ஞான உலகிலும் ஒரு விந்தையான கேள்விக் குறி தான்.
சதாவதான நிகழ்வின் போது ஒரு தமிழ் அறிஞர் கேள்வி ஒன்றை பாவலரை நோக்கி வீசுகிறார்.
"துருக்கனுக்கு ராமன் துணை"
இந்த ஈற்றடியை நீங்கள் எப்படி கையாள்வீர்கள்!
பாவலர் முஸ்லிம் என்பதால் இந்த வினாவின் பதில் அறிஞர்கள் மத்தியில் மட்டுமல்ல, பாமர மக்கள் மத்தியிலும் பல அதிர்வலைகளை தூண்டியது.
பாவலரா விட்டு கொடுப்பவர்..
துருக்கன் என்றால் முஸ்லிமை குறிக்கும்
எனவே முஸ்லிம்களுக்கு ராமன் எப்படி துணையாக முடியும்.
பாவலர் சொன்னார்...
பரத லட்சுமண சத் துருக்கனுக்கு ராமன் துணை
மக்களின் ஆரவாரம் அடங்க வெகு நேரம் ஆனது.வள்ளலாரின் தூய பக்தர் இவர்.அந்த நாளிலேயே மத நல்லிணக்கத்திற்காக பாடு பட்ட உன்னத தலைவர்.காங்கிரஸ் காரர்.
மத்திய அரசும் சரி தமிழக அரசும் சரி இவரது
திறமைகளை முழுமையாக அங்கீகரித்து சிறப்புக்கள் பல செய்துள்ளன.
முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆர் இவருக்காக இவர் பிறந்த ஊரான இடலாக்குடியில் ஒரு மணிமண்டபத்தை ஏற்படுத்தி பாவலரை பெருமை படுத்தினார்.
பாவலர் தெரு, பாவலர் அரசு பள்ளி என்பதெல்லாம் பாவலரின் பெருமையை நிலை நாட்டும் நினைவகங்களாகும்.
பாவலரின் மகன்களில் மூத்தவர் கவிஞர் பக்கீர் மீரான்.இளைய மகன் நாடறிந்த தமிழ் அறிஞரும் அகில இந்திய வானொலி நிலைய முன்னாள் இயக்குனருமான செந்தாமரை கேபிஎஸ் ஹமீது அவர்கள்.
முழக்கம் ஆசிரியரும், தமிழ்நாடு முஸ்லிக் லீக் தலைவருமான கேபி செய்கு தம்பி, பாவலரின் பேரர்.கவிஞர் ஜமால் மற்றும் பாவலர் சித்தீக் போனறோர் பாவலரின் புகழ் பரப்பும் பேரர்களாவர்.
பாவலரின் பிறந்த நாள் இன்று தான்!
தமிழர் மனதில் வாழும் இந்த தமிழ் தாத்தா எனக்கும் தாத்தா என்பதில் பெரு மகிழ்ச்சி
Vavar F Habibullah 

No comments: