Wednesday, August 30, 2017

ஒரு அனுபவக் களஞ்சியத்துடனான சந்திப்பு...!

by Samsul Hameed Saleem Mohamed
எங்கள் நீடூர்- நெய்வாசல் "சீசன்ஸ்" முஹம்மது அலி BABL அவர்கள் ஒரு வழக்கறிஞர் என்பதைக் கடந்து சமூக நோக்கம் கொண்ட நற்சிந்தனையாளர் மற்றும் நல்ல எழுத்தாளர்! அந்த காரணத்தினாலேயே எனது மானசீக மற்றும் மரியாதைக்குரிய ஆசிரியர்!
இன்று அவரை அவரது ஜின்னாஹ் தெரு இல்லத்தில் சந்தித்து அளவளாவியதில் அவ்வளவு மகிழ்ச்சி எனக்கு!
நேற்றைய தினம் மெசேன்ஜரில் கேட்டேன் நீங்கள் எத்தனை மணிக்கு வீட்டில் இருப்பீர்கள்! உங்களை வந்து சந்திக்க விரும்புகிறேன் என்று! உன் வருகைக்காக காத்திருக்கிறேன் எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் என்னை வந்து பார்! என மிக உரிமையுடன் சொன்னதும் இன்று காலை பதினோறு மணியளவில் அவரை சந்தித்தேன்!

என்னைப்பற்றி அதிகம் கேட்டு தன்னைப்பற்றி மிக அதிகம் சொல்லி! அதோடு மட்டுமல்லாமல் இத்தனை வயதிலும் தளராத உடலும் உள்ளமும் கொண்டு அவர் பேசிய அந்த விதம் நல்ல கருத்தாளர்களுக்கு மட்டுமே உரித்தானது!
என்னப்பார்த்ததும் ஆரத்தழுவி சலாம் சொல்லிவிட்டு கேட்ட முதல் கேள்வி இவ்வளவு தமிழ் வளம் சொல்லாடல் உனக்குள் எப்படி வந்தது என்று...! அதோடு மனதார என்னை வாழ்த்திய விதம்... அல்ஹம்துலில்லாஹ்...! என் இறைவனுக்கே புகழனைத்தும்..💕
எனது மரியாதைக்குரிய அவரிடம் அளவாளவியதில் அவர் சொன்ன சில பொன்மொழிகளுக்கு நிகரான நல் வார்த்தைகள்!
👌உனது மனைவி அல்லது பிள்ளைகள் உன்னிடம் ஒரு உயர்ந்த பொருளை கேட்கிறார் என்றால் அது உனக்குள் ஒரு உந்துதலை ஏற்படுத்த வேண்டும் அதனால் உன் சிந்தனை தூண்டப்படும் அதன் மூலம் உன் உழைப்பு கூடும்! விளைவு அந்த விலை உயர்ந்த பொருளை வாங்கும் நிலையைவிட நீ அதிகம் உயர்வாய்! ஒருவேளை அந்த பொருளை அவர்கள் கேட்காமல் போயிருந்தால் உன் உயர்வு கூட சற்று பின் தங்கியே போகும்!
👌நாம் வாழும் காலத்தில் சில பொருட்களை நம் வாரிசுகளுக்கும் மற்ற பொது சமூகத்திற்கும் விட்டுச் செல்வோம்! அப்படி விட்டு செல்கையில் நமக்கான எழுதும் திறமை இருந்து அந்த நல்லெழுத்துக்களையும் இந்த சமூகத்திற்காக விட்டுச் சென்றால் அது நம் இறப்பிற்கு பின்னும் இங்கே பல காலம் பேசப்படும்! இறப்பு நமக்குத்தான் நம் எழுத்திற்கு அல்ல!
👌பள்ளிக்கு சென்று தொழ நேரிடும்போது உனது பக்கத்தில் நிற்பவன் எங்கே கைகளை கட்டி இருக்கிறான் அவன் தொழும் முறை சரியா என பார்ப்பதெல்லாம் உனது வேலையில்லை! அதை பார்ப்பவனும் அதற்கு கூலி கொடுப்பவனும் இறைவன் மட்டுமே நாம் அல்ல! அதற்காக வேண்டி சச்சரவு கூடவே கூடாது!
👌நான் வயதால் மூத்தவன்! வயது என் உடலுக்கு மட்டும்தான் என் மனதிற்கு அல்ல! உன்னைப்போன்று இளைய சமுதாயத்தை கண்டு உரையாடும் நிலை வரும்போது நானும் மனதால் இளைஞனாகவே உணர்கிறேன்!
உங்களுக்காக பிரார்த்திக்கிறேன் என் மரியாதைக்குரியவரே...!
இன்னும் ஆரோக்கியமும் ஆயுளும் பெற்று நீண்டகாலம் வாழுங்கள்!

Samsul Hameed Saleem Mohamed

No comments: