Thursday, August 10, 2017

தலைவரிடம் இருக்க கூடாத மிக முக்கிய தீய பண்புகள் !


தலைவரிடம் இருக்க கூடாத மிக முக்கிய தீய பண்புகள் !

1. பதவிக்கு ஆசைப்படுதல் ,
2. பதவியை குடும்ப சொத்தாக கருதுதல் ,
3. தன்னை முன்னிலைப்படுத்துதல், புகழாசை
4. பலவீனராக இருத்தல்
5. சொல் வேறு செயல் வேறாக செயல்படுதல்
1. பதவிக்கு ஆசைப்படல்
“பதவிக்காக ஆசைப்படாதீர்கள் நீங்கள் அதைக் கேட்டு பெற்றால் அதனிடமே நீங்கள் ஒப்படைக்கப் படுவீர்கள். நீங்கள் கேட்காமலேயே அப்பதவி உங்களுக்கு கிடைத்தால் அதன் பொறுப்புகளை நிறைவேற்ற உங்களுக்கு உதவி கிடைக்கும்.” (புகாரி) என்ற நபி மொழிப்படி பதவிக்கு ஆசைப்படுபவரை தலைவராக்க மாட்டோம் என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியது போன்று அலைபவராக தலைமை இருக்கக் கூடாது.
2. குடும்ப சொத்தாக கருதுதல்
ரசூல் (ஸல்) அவர்கள் கூறியது போன்று பதவியை ஒரு அமானிதமாக கருதி பொறுப்புடன் தன் கீழுள்ளவர்களுக்கு செய்ய வேண்டிய கடமையை செய்ய வேண்டுமே தவிர குடும்ப சொத்தாக பொறுப்பை கருதக் கூடாது.
“முஸ்லிம்களின் கூட்டு விவகாரங்களுக்கு பொறுப்பான அதிகாரி அவர்களிடம் மோசடித்தனமாக நடந்து கொள்வானாயின் அவன் மீது அல்லாஹ் சுவனத்தை ஹராமாக்குகிறான்” (புகாரி)
3. தன்னை முன்னிலைப்படுத்துதல், புகழாசை
புகழ் பெறவேண்டும் என்பதற்காக செருக்குடன் பிறரை புறக்கனித்து தன்னை முன்னிலைப்படுத்துபவராக தலைமை இருக்கக் கூடாது “அணுவளவு கர்வம் உள்ளவர் சுவனத்தில் நுழைய மாட்டார்”. (முஸ்லிம்)
4. பலவீனமானவர்
அபூதர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் பொறுப்புகளை கேட்ட போது முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் “அபூதர்ரே நிச்சயமாக நீர் பலவீனமானவர் அப்பொறுப்போ மிகப் பளுவான அமானிதமாகும். அதனை உரிய முறையில் நிறைவேற்றாதவருக்கு மறுமையில் அதுவே சாபமாகவும் இழிவாகவும் மாறிவிடும்” (முஸ்லிம்) எனும் நபிமொழிக்கேற்ப அப்பொறுப்புக்கேற்ற உடல் உள தகுதியுள்ளவர்களே அப்பொறுப்பை ஏற்க வேண்டும்.
5. சொல் வேறு, செயல் வேறு
“ஈமான் கொண்டவர்களே! நீங்கள் செய்யாத காரியங்களை ஏன் ஏவுகின்றீர்கள்” (அஸ்ஸப் 2) எனும் இறைவாக்கிற்கேற்ப தலைவர்கள் தேவையற்ற வாக்குறுதிகளை வழங்கக் கூடாது. தங்களால் சாத்தியமானதை மட்டும் சொல்ல வேண்டும்.
தம்முடைய பதவியை தவறான வழியில் பயன்படுத்து பவர்களையும் அல்லாஹ் வன்மையாக எச்சரிக்கிறான். அவர்கள் இந்த உலக வாழ்விலிருந்து (அதன்) வெளித்தோற்றத்தையே அறிகிறார்கள் - ஆனால் அவர்கள் மறுமையைப் பற்றி அலட்சியமாக இருக்கிறார்கள்.(அல்குரான் 30:7)
புத்தகம் தனது இடது கையில் கொடுக்கப்பட்டவன் 'எனது புத்தகம் கொடுக்கப்படாமல் இருக்கக் கூடாதா? எனது விசாரணை என்னவாகும் என்பது தெரியவில்லையே! (இறப்புடன்) கதை முடிந்திருக்கக் கூடாதா?எனது செல்வம் என்னைக் காப்பாற்றவில்லையே! எனது அதிகாரம் என்னை விட்டும் அழிந்து விட்டதே” எனக் கூறுவான்.(அல் குர்ஆன் 69:25-29)
ஒரு இணையதளத்தில் வந்த இந்தப் பதிவு... நமதூர் தலைவர்கள், முத்தவல்லிகள், பொறுப்பாளிகள் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் ஏதோ ஒருவகையில் பயன் தரும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் பதிவிட்டுள்ளேன் ...
தலைவர்கள் , நிர்வாகிகள் பதவி காலம் முடிந்தும் ஒரு சில காரணங்களை காட்டி தொடர்ந்து பதவியில் இருப்பதை சிலர் விரும்புகிறார்கள்.. நிர்வாகத்தில் இல்லாத ஒரு சில நபர்களும் இதற்கெல்லாம் உடந்தையாகவும் இருக்கிறார்கள் ...பல ஊர்களில் நடக்கிறது இது அக்கிரமம் .. மேற்காணும் ஹதீஸில் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியது போன்று பதவிக்கு அலைபவராக தலைமை இருக்கக் கூடாது.
- தக்கலை கவுஸ் முஹம்மத்

தக்கலை கவுஸ் முஹம்மத்

No comments: