Monday, June 30, 2014

இலங்கையில் இஸ்லாமியர்கள் ஏன் தாக்கப்படுகிறார்கள்?

“இலங்கையில் மதங்களுக்கு இடையேயான பதட்டநிலை பெரிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. முஸ்லிம், இந்து, பவுத்த மதங்களை சேர்ந்த மக்கள் ஒருவருக்கொருவர் அவநம்பிக்கையோடு இருக்கிறார்கள்” அமெரிக்க காங்கிரஸுக்கு அந்நாட்டு அரசாங்கம் கடந்த ஆண்டு இறுதியில் சமர்ப்பித்த அறிக்கை ஒன்றில் இடம்பெற்றிருந்த வரிகள் இவை. இலங்கையில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக ஆங்காங்கே நடந்த சிறு தாக்குதல்கள், பவுத்த பிக்குகளால் இஸ்லாமிய பள்ளிவாசல்கள் அழிப்பு என்று நடந்த சம்பவங்களை அவ்வறிக்கையில் எடுத்து சொல்லப்பட்டிருந்தது. இலங்கையில் மீண்டும் எப்போது வேண்டுமானாலும் மதமோதல்கள் எழலாம் என்றும் கவலையோடு அமெரிக்க அரசு சுட்டிக் காட்டியிருந்தது.

அளுத்கமாவில் வெடித்த கலவரம்

இலங்கையின் மக்கள்தொகையில் இஸ்லாமியர் கிட்டத்தட்ட பத்து சதவிகிதம் பேர் இருக்கிறார்கள். இவர்கள் இலங்கை அரசியலில் ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பதாக நெடுங்காலமாகவே பவுத்த பிக்குகள் குற்றம் சாட்டி வருகிறார்கள். இவர்களது பிடியில் இலங்கை போய்விடக்கூடாது என்று வலியுறுத்தி ஆங்காங்கே கூட்டங்கள், பேரணிகள் நடத்தத் தொடங்கினார்கள். குறிப்பாக இஸ்லாமியர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஊர்வலமாக சென்று அவர்களுக்கு எதிராக கோஷம் இட்டு வந்தனர். இப்படிதான் இருதரப்புக்கும் இடையே மோதல் சமீபமாக தொடங்கியது.

ஒரு ஞாயிறு மாலை அன்று இலங்கையின் தென்மேற்கு பகுதியிலிருக்கும் அளுத்கமா, பெருவலா ஆகிய கடலோர நகரங்களில் நடந்த பேரணியில் கடுமையான வன்முறை ஏற்பட்டது. மூன்று முஸ்லிம்கள் பலியாகினர். எழுபத்தைந்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மசூதிகள் தாக்கப்பட்டன. தொழுது கொண்டிருந்தவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடக்க சிதறி ஓடினர்.

வேடிக்கையான முரண் என்னவென்றால், மத வன்முறையால் ஆங்காங்கே மோதல்களும், நாடு முழுக்க மக்கள் மத்தியில் மனதளவிலான பதட்டமும் நிலவிவரும் இதே வேளையில் பொலிவியாவில் ராஜபக்‌ஷேவுக்கு அமைதிக்கான விருது வழங்கப்படுகிறது. அங்கிருந்தபடியே கூலாக “சட்டம் தன் கடமையை செய்யும்” என்று அதிபர் அறிவிக்கிறார்.

யார் தூண்டியது?

வலதுசாரி புத்தமத குழுவான ‘போது பல சேனா’ (புத்த வீரப்படை) என்கிற அமைப்புதான் இப்பகுதியில் வன்முறை வெடிக்க காரணமாக இருந்திருக்கிறது. இவர்கள் நடத்திய பேரணியில்தான் இஸ்லாமியரை வேண்டுமென்றே வம்புக்கு இழுத்து தாக்குதலில் இறங்கியிருக்கிறார்கள்.

ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற அந்த பேரணியில் புத்த வீரப்படையின் தலைவர் கலகோடா அத்தே ஞானசரா, மதவெறுப்பு தொனிக்க படுமோசமாக பேசியிருக்கிறார். “எந்த இஸ்லாமியராவது இனி சிங்களர்கள் மீது கைவைக்க நினைத்தால் – குறிப்பாக புத்த துறவிகளை சீண்டினால் – அதுதான் இஸ்லாமியர்களின் இறுதிநாளாக இருக்கும்” என்று அவர் நேரடியாகவே எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

இவரது பேச்சை கேட்டதுமே வெறிபிடித்த கூட்டம் அப்படியே இஸ்லாமிய குடியிருப்புகளுக்கு போய் தாக்குதலை ஆரம்பித்தது. இஸ்லாமியர்களின் வணிக நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஏராளமானோர் வீட்டை விட்டு வெளியேறி அங்கிருக்கும் மசூதியில் பாதுகாப்புக்காக தஞ்சமடைந்தனர்.

குரான் எரிப்பு

“ஒவ்வொரு இரவையும் அச்சத்தோடே கடக்கிறோம். காவல்துறையினர் எங்களுக்கு பாதுகாப்பு அளிப்பார்கள் என்கிற நம்பிக்கை இல்லை” என்று அப்பகுதி இஸ்லாமியர் சர்வதேச ஊடகங்களிடம் குமுறுகிறார்கள்.

“எங்கள் வீட்டை அடித்து நொறுக்கியவர்களிடம் கெஞ்சினோம். அவர்கள் எங்களை ஆபாசமாக ஏசினார்கள். வீட்டுக்குள் இருந்த குரானை கொண்டு போய் நடுரோட்டில் போட்டு எரித்தார்கள்” என்று கண்கலங்குகிறார் எண்பது வயது பன்சியா ஃபைரூஸ்.

கொல்லப்பட்ட மூன்று முஸ்லிம்களில் இருவரது உடலில் துப்பாக்கிக்குண்டு பாய்ந்திருக்கிறது. நான்காவதாக கொல்லப்பட்ட ஒருவர் தமிழர். ஒரு இஸ்லாமியரின் நிறுவனத்தில் காவல்காரராக பணிபுரிந்த அவர்மீதும் கொலைவெறி தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள்.

இந்த வன்முறை வெடித்ததற்கு முந்தைய நாள் ஒரு புத்தமத துறவி மீது இஸ்லாமிய இளைஞர்கள் சிலர் தாக்கினார்கள் என்றொரு தகவல் பரவியிருந்தது குறிப்பிடத்தக்கது.

“புத்த வீரப்படை இப்படியெல்லாம் வன்முறையில் ஈடுபடும் அமைப்பில்லை. இதில் ஈடுபட்டவர்கள் யாரென்று காவல்துறைதான் கண்டுபிடிக்க வேண்டும். அன்று எங்கள் தலைவர் கொஞ்சம் காட்டமாக பேசியது உண்மைதான். ஆனால் வன்முறையை தூண்டவில்லை. எல்லா மக்களும் அமைதிவழியில் வாழவேண்டும் என்றுதான் அவர் கேட்டுக்கொண்டார்” என்று புத்தவீரப்படையின் தலைமை செயலரான திலந்தா வித்தனாகே அவசர அவசரமாக மறுத்திருக்கிறார்.

அரசியல் ஆகிறது மதம்

மியான்மரை போலவே இலங்கையிலும் பவுத்தமதம் அரசியலில் ஆளுகை செலுத்த முயல்கிறது. அதிபர் ராஜபக்‌ஷேவுக்கு நெருக்கமானவர்கள், அமைச்சரவை சகாக்களே கூட மதவன்முறையை ஊதிப்பெருக்கும் வேலைகளில் ஈடுபடுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

இலங்கை அரசின் சட்டத்துறை அமைச்சரான ஹக்கீமே கூட இச்சம்பவங்களை குறிப்பிட்டு, “பவுத்தர்கள் நடத்திய தாக்குதலை காவல்துறையினர் கைகட்டி வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். இலங்கை அரசில் அங்கம் வகிப்பதற்காக நான் அவமானப்படுகிறேன்” என்று குமுறினார்.

அமைதியை விரும்பும் புத்த துறவியான வடாரகா விஜிதா தெரோ இருதரப்பு மக்களிடையே சமத்துவத்தை ஏற்படுத்த கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். அவரை புத்த வீரப்படையின் ஞானசரா வெளிப்படையாகவே அவரது அமைதிப்பணிகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று எச்சரித்தார். சில வாரங்களுக்கு முன்பாக உடல் முழுவதும் ஆழமான வெட்டுக்காயங்களோடு கொழும்புவின் புறநகர் சாலை ஒன்றில் குற்றுயிரும் குலையுயிருமாக விழுந்து கிடந்தார் விஜிதா தெரோ.

புத்த வீரப்படைக்கு அதிபர் ராஜபக்‌ஷேவின் மறைமுக ஆசி இருக்கிறது என்று வெளிப்படையாகவே எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. இதுவரை அதை அதிபரும் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையை சேர்ந்த கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், அறிவுஜீவிகள் என்று சுமார் முன்னூறு பேர் புத்தவீரப்படை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ஞானசராவின் மதவெறி பேச்சுகளை தடுத்து நிறுத்தவேண்டும் என்றுகோரி கையெழுத்து இயக்கம் நடத்தியிருக்கிறார்கள்.

பொலிவியா நாட்டின் ஜி-77 சந்திப்பு முடிந்ததுமே நாடு திரும்பிய ராஜபக்‌ஷே பாதிக்கப்பட்ட இஸ்லாமிய கிராமம் ஒன்றுக்கு நேரில் சென்றார். வன்முறை சம்பவங்கள் தொடர்பாக நடுநிலைமையான விசாரணை நடத்தப்படும் என்று உறுதிகூறினார். ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களை கைது செய்திருக்கிறோம் என்று காவல்துறையும் அறிவித்திருக்கிறது.
ஆனால், இதெல்லாம் வெறும் கண்துடைப்பு. புத்த வீரப்படை மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என்று அரசினை நோக்கி கேட்கிறார்கள் இஸ்லாமியர்கள். அரசு எதுவும் செய்யக்கூடிய எண்ணத்தில் இல்லை என்பதுதான் கடைசிக்கட்ட நிலவரம்.

(நன்றி : புதிய தலைமுறை)
எழுதியவர் யுவகிருஷ்ணா
 நன்றி :http://www.luckylookonline.com/

No comments: