Friday, June 13, 2014

புவியுள்ளவரை பொருளியல் -3 - புதுகை அப்துல்லா


லயோனல் ராபின்ஸின் பற்றாக்குறை இலக்கணம்  (scarcity definition of Lionel Robbins) :

ஒருபய சொன்னதும் சரியில்லை,பேசாம நம்மளே ஒரு இலக்கணத்தைச் சொல்லிருவோம்னு முடிவு பண்ண ராபின்ஸ் 1932 ல ”பொருளியலின் இயல்பும்,முக்கியத்துவமும் பற்றியக் கட்டுரை” அப்படின்னு ஒரு நூலை வெளியிட்டாரு.இதில் அவர் சொன்ன இலக்கணம்தான் பற்றாக்குறை இலக்கணம் அப்படின்னு அழைக்கப்படுது.

ராபின்ஸின் இலக்கணம் – ”பொருளியல் என்பது மனிதனின் விருப்பத்திற்கும்,மேலும் பலவித பயன்களுக்குப் பயன்படுத்தக்கூடிய பற்றாக்குறையான பொருட்களுக்கும் இடையே இருக்கக்கூடிய மனித நடவடிக்கைகளைப் பற்றி கூறுகிறது”.

அவர் சொன்னதை நேரடியா மொழிபெயர்த்தா இப்படித்தான் வருது. இதை இப்படியே படிச்சா அவர் சொன்னதைவிட அதிக குழப்பமா இருக்கும். இருங்க.. ஒரு சின்ன உதாரணத்தோட சொல்றேன்.

அதாவது நம்ம இப்ப சத்யம் தியேட்டர் போக நினைக்கிறோம்.அங்க டிக்கட் 100 ரூபாய். ஆனா கையில 30 ரூபாய்தான் இருக்கு. என்ன பண்ணுவோம்?? தற்காலிகமா கிருஷ்ணவேனி தியேட்டருக்குப் போயிருவோம். ஆனா ஆசை நம்மளைவிடுமா?? இன்னும் 70 ரூபாய் எப்படியாவது சம்பாதிச்சு ஒருவாட்டியாவது சத்யம் தியேட்டர் உள்ள போகணும்னு நெனப்போம்ல?? அதுக்காக கடுமையா உழைப்போம்ல?? அந்த மிச்சம் இருக்குற 70 ரூபாயைத் தேத்துவோம்ல?? இப்ப நம்ம சம்பாதிச்ச அடிஷனல் 70 ரூபாய் நம்ம நிலையையும் உயர்த்தி மொத்தத்துல நாட்டோட பொருளியல் வளர்ச்சிக்கும் குட்டியூண்டு லெவல்ல ஹெல்ப்ஃபுல்லா இருக்கும்ல?? இதைத்தான் ராபின்ஸ் சொன்னாரு. நம்முடைய ஆசையைகளை நிறைவேற்ற நம்மிடையே பற்றாக்குறை ஏற்படும்போது அதை ஈடுசெய்ய நாம் ஈடுபடும் நடவடிக்கைகளே பொருளியல்னாரு. இந்த பாயிண்ட் ஆஃப் வியூவ்லதான் பொருளாதாரத்தை அணுகணும்னாரு.

இவர் சொன்னக் கருத்துக்களை முக்கியமான மூணு சாராம்சமா நம்ம பிரிச்சிடலாம்.

1.எண்ணற்ற விருப்பங்கள் ( countless desires ):

மனுசனோட மனதின் ஆசைகளுக்கு முடிவே இல்லை. நிச்சயித்த கல்யாணம் பண்ணுனவனைவிடுங்க.. லவ் மேரஜ் பண்ணுனவன்கூட கொஞ்சநாளானா இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணி நல்ல பொண்ணா லவ் பண்ணிருக்கலாமோன்னு நினைப்பான்/ள். இதுமாதிரி இறக்கும்வரையில் இடைவிடாது மாறிக்கொண்டே இருக்கும் விருப்பத்தை ஒவ்வொரு முறையும் அடைவதே மனிதனின் விடாத முயற்சியாய் இருக்கிறது. பல விருப்பங்கள் தோன்றினாலும் அதில் முக்கியமானவற்றைத் தேர்ந்தெடுத்து பூர்த்தி செய்துகொள்ள வேண்டியிருக்கிறது. அதாவது பொருளியல் தெரிவியல் ( science of choice). சுருங்கக்கூறின் பொருளியல் நடவடிக்கைகளுக்கு தூண்டுகோலாக விருப்பங்களே உள்ளன.

2.பற்றாக்குறையான சாதனங்கள் (scare means):

மனிதனின் கணக்கில்லாத விருபங்களை நிறைவேற்றும் சாதனங்கள் எந்தக் காலத்திலும் பற்றாக்குறையாகவே இருக்கிறது. இங்க சாதனம் என்ற சொல்லில் பொருளும்,பணமும் அடங்கும். காலமும் சரி,பணமும் சரி கிடைப்பதற்கு அரியனவாக இருக்கிறது.ஆக கிடைக்கிற நேரத்தையும்,கிடைக்கிற பணத்தையும் சிக்கனமாகப் பயன்படுத்தி விருப்பங்களை நிறைவேற்ற வேண்டியிருக்கு. தேவைகளோடு தொடர்புபடுத்திப் பார்த்தோம்னா பொருட்கள் கிடைப்பது எப்பவுமே பற்றாக்குறையா இருக்கு. எண்ணற்ற விருபங்களும்,பற்றாக்குறையான பொருட்களுமே பொருளியலின் அடிநாதம்.

3. மாற்றுவழியில் பயன்படுத்துதல் ( alternative uses):

ஒரு சாதனம் பற்றாக்குறையாக இருப்பினும்கூட அதை மாற்று வழியில் பயன்படுத்தலாம்.அதாவது நம்மிடையே இருக்கும் பணத்தைக் கொண்டு பல்வேறு பொருட்களை வாங்கலாம்.அதாவது ஒரு விருப்பத்தை நிறைவேற்ற இயலவில்லை எனினும் மாற்று வழியில் அதைப் பயன்படுத்தலாம்.

எண்ணற்ற விருப்பங்களும்,பற்றாக்குறையான சாதனங்களும் அவற்றை மாற்று வழியில் உபயோகிப்பதும் பொருளியலின் கருப்பொருளாக இருக்கிறது.இதனால்தான் ராபின்ஸ் மனித நடத்தையை அவனுடைய தேவைகளுக்கும், அவற்றை நிறைவேற்றக் கிடைக்கும் பற்றாக்குறையான சாதனங்களுக்கும் இடையே நிகழும் ஒரு போராட்டமாகக் கொண்டு ஆராயும் அறிவியல் என்கிறார்.

இந்த இலக்கணத்தின் சிறப்புகளை என்னன்னு பார்த்தோம்னா முக்கியமா இது பொருளியிலின் எல்லையை விரிவுபடுத்துகிறது.பற்றாக்குறை என்பது எங்கெல்லாம் நிகழ்கிறதோ அந்த நடவடிக்கைகலெல்லாம் பொருளியலில் அடங்கும். அதேமாதிரி இந்த இலக்கணத்தை ராபின்ஸ் அறிவியல் அடிப்படையில் விளக்கியுள்ளார். மத்தவங்க மாதிரி சும்மா ஒன்னு,ரெண்டு,மூணு அப்படின்னு வரிசையா பாயிண்ட் சொல்லி இதுதான் பொருளியல்னு சொல்லாம பொதுவான இயல்புகளையே விளக்கி இருக்காரு. முக்கியமா இவர் விளக்கத்தாலதான் பொருளியல் பணத்தை வழிபடும் இயல் என்ற முக்கியமான குற்றச்சாட்டு மறைஞ்சது.

எந்த விஷயமா இருந்தாலும் அது எவ்வளவுதான் நல்ல விஷயமா இருந்தாலும் எதாவது ரெண்டு குறை இருக்கத்தானே செய்யும்! அதுமாதிரி இவரோட இலக்கணுத்துல என்ன குறைன்னு பார்த்தோம்னா.. இவரோட இலக்கணம் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் எடுத்துச் சொல்லுது. நம்மூரு பாஷையில சொல்லனும்னா அகல உழுகுறதுக்குப் பதிலா ஆழமா உழுகுது. பேரியல் ஆய்வா ( macro research) இல்லை. அதேமாதிரி பற்றாக்குறையால் மட்டும் பொருளியல் பிரச்சனை எழுவதில்லை. சில சமயம் பொருட்கள் தேவைக்குமீறி அதிகமாவதாலும் பொருளியல் பிரச்சனை தோன்றும். உதாரணமா நம்மகிட்ட நாலு பழைய டிரெஸ்தான் இருக்கு. ஒரு முக்கியமான விஷேசத்துக்குப் போகணும்னா இருக்குற 4 டிரெஸ்ல கொஞ்சம் நல்லா இருக்குறது எதுன்னு திருப்பித் திருப்பிப் பார்த்துகிட்டு இருப்போம். அதேமாதிரி 40 புது டிரெஸ் இருக்குன்னு வச்சுக்கங்க. அப்பவும் திருப்பித் திருப்பித் திருப்பித்தானே பார்த்துகிட்டு இருப்போம்!! இல்லையா??  ஆக இது முக்கியமான குறை இந்த இலக்கணத்துல. அதேமாதிரி இப்ப உள்ள நவீன பொருளாதாரத்துல பொருளாதார வளர்ச்சி என்பது முக்கியமான விஷயமா இருக்கு. ஆனா இந்த இலக்கணுத்துல அதைப்பற்றி எதுவும் சொல்லலை.

ஆனா என்னதான் சில குறைபாடுகள் இருந்தாலும் பற்றாக்குறை இலக்கணம் இன்னிக்கும் செல்வாக்கோட இருக்கு.பொதுவா எல்லாராலையும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய இலக்கணமா இது இருகுறதுக்கு முக்கிய காரணம் இந்த இலக்கணம்தான் பொருளாதாரப் பிரச்சனைகள் எதனால் எழுகிறதுங்குறதை திட்டவட்டமாக் கூறுது.

இந்த நிலமையில மாறிவரும் நவீனகாலப் பொருளாதாரச் சூழலுக்கு ஏற்ப பேராசிரியர்.சாமுவேல்சன் ஒரு இலக்கணம் குடுத்து இருக்காரு. அது இன்னான்னா???..
-தொடரும்.
 கட்டுரை  ஆக்கம் .(புதுகை அப்துல்லா ) M.m. Abdulla
முன் பகுதி படிக்க 
 புவியுள்ளவரை பொருளாதாரம்
 புவியுள்ளவரை பொருளியல் - 1
புவியுள்ளவரை பொருளியல் - 2
                                               (புதுகை அப்துல்லா ) M.m. Abdulla

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails