Sunday, June 15, 2014

” பாலைவனத்திலிருந்து ஒரு பரிதாபக் குரல்”

திரியாய்த் தானே வாழ்வினில்
 *****தினமும் எரியும் ஆசைகள்
புரியா மடமை இலாமலே
 *******புரிந்தே நாங்கள்  உணர்வதும்
தெரியா தொன்றும் அல்லவே
 ********தெரியும் வெளிச்சம் காணவே
சரியா பிழையா விடைகளை
 *******சரியாய்த் தெரியா வாழ்விதே!


இளமை விதையை விதைப்பதால் 
*******இழப்பின் ஈட்டைப் பெற்றிலோம்
வளமை ஒன்றே   பயிரென
*********வானம் பார்க்கும் உழவராம்
குள்மாயக் கண்ணீர் வேரினுள்
*********குடமென ஊற்றி உழைத்திடும்
களமெனக் காணும் பாலையில் 
**********காசு வளர்க்கும் மரமிதே

பாலைச் சூடும் உணர்ந்திடா
*******பாழும் மனமும் உன்வசம்
நீலக் கடலைத் தாண்டியே
*******நீயும் இருப்பாய் என்னுயிர்
காலம் பிரித்த காதலைக்
******காதில் சொல்லும் செல்லிடை
கோலம் போடும் வலைதளம்
*********கொடுஞ் சிறையின் மீன்களாய்!

 முகநூல் வாயால் கதைத்திட
********முகமும் காண  விழித்திரை*
சுகமும் ஊடல் பேச்சினில்
*******சுவனம் காண்போம் கணினியில்
அகமும் புறமும் இல்லறம்
********அடையும் இன்பம் இதுவென
பகரும் உலகில் வாழ்வதால்
*******பாழாய்ப் போகும் நாட்களே!   


விடுப்பில் கிடைக்கும் விடுதலை
*********விம்மிக் கரையும் நாட்களும்
அடுத்தி ருக்கும் நட்பினால்
**********அகலும் துயர எண்ணமே
படுத்து றங்கும் பாயிலும்
********பசியைப் போக்கும் உணவிலும்
தொடுத்த குறிப்போ வேறிடம்
*********தொடரும் இதயம் இந்தியா!

தினமும் ஈரம் சேர்த்திட
*******திர்ஹம் செலவு செய்திட
மனமும் ஒப்பி வருவதும்
********மாதம் ஒன்று ஆண்டினில்
கனமாய்ப் பாரம் சேர்ந்ததை
******காய்ந்துக் கருகிப் போனதை
வனமாய்ப் போன மனத்தினை
******வடிநீர் ஊற்றிக் காக்கவே!

பெட்டி நிறையப் பெற்றதும்
*******பிரிவுச் சொரிய இழந்ததும்
கட்டிக் கொண்ட கடனுடன்
********கட்டு டல்கள் சிதைந்ததும்
சுட்டும் விழியை விற்றபின்
*******சொக்கும் கனவுச் சித்திரம்
விட்டில் பூச்சி கவர்ச்சியில்
*******விடையை அறியா விசித்திரம்



கரு:..... கவிமகன் காதர் (kaayal pattinam, India)
உரு: கவியன்பன் கலாம் காதர் (adirampattinam,India)

No comments: