Saturday, June 21, 2014

பெட்ரோல் விலை 100ஐ தாண்டினால்...


இராக்கில் உள்நாட்டு போர் ஓய வேண்டும் என்று பிரார்த்திப்போம். உலகத்தில் எங்கே யார் நாசமாக போனாலும் அது நம்மையும் பாதிக்கிறது. கம்ப்யூட்டரும் செல்போனும் வந்த பிறகு உலகம் சுருங்கிவிட்டது என்று சொல்லும் கதையல்ல இது. இந்தியா இறக்குமதி செய்கிற ஏதோ ஒரு முக்கிய பொருள் பற்றாக்குறை ஆவதால் உண்டாகும் பாதிப்பு.

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் ஆகாது. ஈரான் அணுகுண்டு தயாரிப்பதாக அமெரிக்காவுக்கு சந்தேகம். அதை தடுக்க அந்த நாட்டுக்கு எதிராக பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா. ஆனால் ஈரானில் இருந்துதான் மிக அதிகமான கச்சா எண்ணெயை நாம் இறக்குமதி செய்கிறோம். டாலருக்கு பதிலாக ரூபாயாக கொடுப்பதை ஈரான் வாங்கிக் கொள்கிறது. மற்ற நாடுகள் சம்மதிப்பதில்லை. ஈரான் எண்ணெய் அதிகம் இறக்குமதி செய்ய அதுவும் ஒரு காரணம். அமெரிக்கா அதை தடுத்தது. பெரியண்ணனை எதிர்க்க முடியுமா? ஈரானிடம் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து அப்புறம் நிறுத்திக் கொள்கிறோம் என்று இந்தியா சொன்னது. போனால் போகிறது என்று அமெரிக்கா ஒத்துக் கொண்டது. அதற்கும் நம்மிடம் சில காரியங்கள் ஆக வேண்டியிருப்பதால்.

ஈரானிடம் குறைத்ததை இராக்கிடம் அதிகரித்தோம். சென்ற ஆண்டு நிலவரப்படி இராக் நமக்கு ஒரு நாளைக்கு 4,83,000 பேரல் கச்சா எண்ணெய் தந்து கொண்டிருக்கிறது. அந்த நாட்டில் இப்போது உள்நாட்டு சண்டை நடக்கிறது. ஆரம்ப கட்டம் என்று சொல்லலாம். சர்வதேச தலையீடு நடந்து சண்டை நிற்க வாய்ப்பு உண்டு. இன்னும் பெரிதாகி பரவவும் சான்ஸ் இருக்கிறது. அதனால் நமக்கு ஆயில் கிடைப்பது நின்றுவிடும். அந்த அளவுக்கு உடனடியாக வேறு நாடுகளிடம் பேசி வாங்குவது கஷ்டம். அப்படியே கிடைத்தாலும் ஆனை விலை கொடுக்க வேண்டியிருக்கும்.

ஏற்கனவே இந்திய பொருளாதாரம் திணறிக் கொண்டிருக்கிறது. விலைவாசியை கட்டுப்படுத்த இயலவில்லை. பணவீக்கம் உயர்ந்த வண்ணம் இருக்கிறது. டீசல், எரிவாயு, கெரசின் ஆகியவற்றை இறக்குமதி செய்யும் விலையைவிட குறைந்த விலைக்கு பொதுத்துறை ஆயில் கம்பெனிகள் விற்றுக் கொண்டிருக்கின்றன. அதனால் அவற்றுக்கு ஏற்படும் நஷ்டத்தை அரசு ஈடுகட்டுகிறது. இந்த தொகையே எழுபதாயிரம் கோடிக்கு மேல் ஆகிறது. இதை குறைப்பதற்காக டீசல் விலையை மாதம் 50 பைசா வீதம் அரசு உயர்த்தி வருகிறது. அதற்கே பலத்த எதிர்ப்பு நிலவும் சூழலில் பெட்ரோல், டீசல், எரிவாயு விலைகள் திடீரென எகிறினால் என்ன ஆகும்?

புதன்கிழமை மாலை நிலவரப்படி சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 112.34 டாலர். சென்ற ஆண்டு இதே மாதத்தில் 107 டாலர் 97 சென்ட் ஆக இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டு 11 டாலர் 89 சென்ட். உண்மையில் அந்த விலையைவிட சென்ற ஆண்டு 4 டாலர் 8 சென்ட் குறைந்தபோதிலும், நாம் சில ஆயிரம் கோடிகள் அதிகம் கொடுக்க நேர்ந்தது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்ததுதான் காரணம்.

இந்த லட்சணத்தில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 150 டாலருக்கு ஏறினால்? இராக் சண்டை நிற்காவிட்டால் அப்படி ஏறுவது உறுதி. இப்போதே பார்த்தீர்கள் என்றால், 13ம் தேதி பேரலுக்கு 110.54 டாலராக இருந்த விலை 16ம் தேதி 110.42 ஆக – அதாவது 12 சென்ட் – குறைந்தபோது, அதே காலத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 59.48ல் இருந்து 60.01 ஆக மாறியது. ரூபாயின் மதிப்பு 53 பைசா குறைந்தது. குறைந்தது. இதனால் என்ன ஆனது என்றால் 13ம் தேதி பேரலுக்கு 6,575 ரூபாய் விலை கொடுத்த நாம் 16ம் தேதி சர்வதேச விலை குறைந்தபோது 6,626 ரூபாய் கொடுக்க நேர்ந்தது. ஒரு பேரலுக்கு 51 ரூபாய் அதிகரித்தால் ஏறத்தாழ ஐந்து லட்சம் பேரலுக்கு எவ்வளவு கூடுதல் ஆகிறது? இது ஒரே ஒரு நாள் கணக்கு.

சிம்பிளாக சொல்வது என்றால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாய் ஆகலாம். டீசல் விலையில் அரசு 10 ரூபாய் அதிகரிக்க நேரலாம். அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் இந்தியா தாங்காது. டீசல் விலை உயரும் போதெல்லாம் பஸ், ரயில், ஆட்டோ, லாரி கட்டணங்கள் அதிகமாகும். அதனால் பால், காய்கறி, பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகரிக்கும். பனிப்புயல் மாதிரி விலைவாசி அனைத்து தரப்பையும் புரட்டி எடுக்கும். அம்மா உணவகங்களிலும் அன்னதான கோயில்களிலும் கூட்டம் அலைமோதும்.

இராக் நிலவரம் இந்த அளவுக்கு மோசமாகும் என்று முன்பே இந்தியாவுக்கு தெரியாதா? இந்தியா மட்டுமல்ல. உலகத்துக்கே தெரியும். அமெரிக்கா கால் வைத்த நாடுகள் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை. நியுயார்க் நகரின் இரட்டை கோபுரத்தை பின் லேடன் ஆட்கள் விமானத்தை மோதி தகர்த்த நொடியில் இராக்கின் தலையெழுத்து மாறிவிட்டது. பயங்கரவாதத்துக்கு எதிரான போர் பிரகடனத்தை ஜார்ஜ் புஷ் வாசித்து முடித்ததும் சிக்கிய முதல் முயல் இராக். லட்சக்கணக்கான மக்களை ஒரே நேரத்தில் கொல்லும் அதிபயங்கரமான ரசாயன ஆயுதங்களை சதாம் உசேன் தயாரித்து வைத்திருப்பதாக சொல்லி அவற்றை அழிக்க படைகளை அனுப்பினார் புஷ். ஆயுதங்கள் இல்லை என்று தெரிந்தும் இவ்வாறு செய்தது அத்துமீறல் என்று அமெரிக்கர்களே கண்டிக்கும் நிலை ஏற்பட்டதும் சேனலை மாற்றினார்.

சதாமின் சர்வாதிகார அடக்குமுறையில் மூச்சுத் திணறும் இராக் மக்களை விடுவித்து அவர்கள் ஜனநாயகம் எனும் சுதந்திர காற்றை சுவாசிக்க உதவுவதற்காக படைகள் அங்கே இருக்கின்றன என்றார். இந்தியாவுக்கு வெங்காயம் எப்படியோ அப்படி அமெரிக்காவின் பாரம்பரிய ஏற்றுமதி ஜனநாயகம். இராக்கில் தேர்தல் நடத்தி ஒரு அரசை நிறுவி அதனிடம் பொறுப்பை ஒப்படைப்பதாக கூறிவிட்டு எட்டு ஆண்டுகளுக்கு பின் வெளியேறின அமெரிக்க படைகள். அன்று தொடங்கியது இராக்கியர்களின் கோஷ்டி மோதல்கள்.

அமெரிக்க ஆதரவுடன் ஆட்சி அமைத்தவர்கள் ஷியா பிரிவினர். சில நாடுகளில் தவிர முஸ்லிம்களில் அவர்கள் பெரும்பான்மையினர். அவர்களால் தாங்கள் ஒதுக்கப்படுவதாக சன்னி பிரிவினருக்கு அதிருப்தி உண்டு. அந்த பிரிவை சேர்ந்த உலகமகா பயங்கரவாதி பின் லேடனின் இயக்கமான அல் கய்தாவின் இராக் பிரிவு அந்த அதிருப்தியை பயன்படுத்தி உறுப்பினர் சேர்க்கை நடத்தியது. ஐஎஸ்ஐஎஸ் என குறிப்பிடப்படும் அந்த படைதான் இன்று இராக்கில் ராணுவத்துடன் மோதி ஒவ்வொரு நகரமாக தன் பிடியில் கொண்டு வருகிறது. கூட்டம் கூட்டமாக வெறியாட்டம் போடும் இவர்கள் ஷியா பிரிவினரை குறிவைத்து கொல்கின்றனர். இதனால், இந்த இயக்கத்துடன் சம்பந்தப்படாத சராசரி சன்னிக்கள் மீது பெரும்பான்மை ஷியாக்களின் பார்வை திரும்புகிறது. எனவே, இப்போதைக்கு பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் நடக்கும் சண்டை ஷியாக்களுக்கும் சன்னிகளுக்கும் இடையிலான மோதலாக வெடிக்கும் ஆபத்து தெரிகிறது. அல் கய்தா விரும்புவது அதைத்தான்.

சவுதி அரேபியா இந்த மோதலின் பின்னணியில் இருப்பதாக இராக் பிரதமர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். சவுதி அரச குடும்பத்தினர் சன்னி பிரிவினர். தங்கள் கோட்பாடுகளை பரப்புவதற்காக உலகம் முழுவதும் பயங்கரவாத அமைப்புகளுக்கு சவுதி அரசு பண உதவி செய்வதாக ஏற்கனவே புகார்கள் உண்டு. இராக்கில் ஸ்திரமற்ற நிலைமையை உருவாக்கி அதை சாக்கிட்டு ஈரானிலும் குழப்பம் உண்டாக்க சவுதி அரேபியா சதி செய்வதாக ஈரான் அரசுக்கு சந்தேகம். எனவே அது இராக் ராணுவத்துக்கு உதவ ஆலோசகர்களை அனுப்பியுள்ளது. ஆயுதங்களும் செல்வதாக தகவல்.

சிரியாவில் சண்டை முடிந்தபாடில்லை. பல நகரங்கள் பயங்கரவாதிகளின் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன. ஏமன் நாட்டிலும் குழப்பம் தலைவிரித்து ஆடுகிறது. இராக் நிலைமை மோசமானால் ஈரானுக்கு நெருக்கடி ஏற்படு, அதனால் ஈரான் – சவுதி அரேபியா போர் வெடிக்கலாம். அது நடந்தால் அபுதாபி, குவைத் போன்ற நாடுகள் கவசம் தரித்து ஒதுங்கி நிற்க வழி கிட்டாது. ஆப்கானிஸ்தான் பிரச்னையும் அமெரிக்காவின் புண்ணியத்தில் நன்றாக பழுத்து வெடிக்கும் பருவத்துக்கு வந்திருக்கிறது. இந்தியாவை பழி வாங்கவும் அமெரிக்காவிடம் பணம் கறக்கவும் பாகிஸ்தான் பாலூட்டி வளர்த்த பயங்கரவாதிகள் அந்த அரசுக்கு சவால் விட்டுள்ளனர்.

இந்தியாவின் பக்கத்தில் இதைவிட மோசமான சூழ்நிலையை யாராலும் உருவாக்க முடியாது. எரிபொருள் வளம் நிறைந்த வளைகுடா பகுதியின் காவலனாக செயல்பட்ட அமெரிக்கா திடீரென விலகி நிற்கிறது. அமெரிக்காவில் ஷேல் கேஸ் எனப்படும் எரிவாயு அபரிமிதமாக கிடைப்பதால் அரபு ஆயில் இனி தேவையில்லை என்ற முடிவுக்கு அது வந்துவிட்ட்து. தனக்கு தேவையில்லாத ஒன்றுஇருந்தால் என்ன அழிந்தால் என்ன என்ற அலட்சியம்.

இந்தியா தவிர இந்த ஆயிலை நம்பியிருக்கும் இரு பெரிய நாடுகள் ஜப்பானும் சீனாவும். ஆனால் அவை இத்தகைய நெருக்கடியை சமாளிக்க முன்னேற்பாடுகள் செய்து கொண்டுள்ளன. இந்தியா இப்போதுதான் ஏழெட்டு கடலோர மாநிலங்களில் பிரமாண்டமான நிலத்தடி ஏரிகள் கட்டி குவைத், அபுதாபி ஆயில் கம்பெனிகளுக்கு வாடகைக்கு விட முன் வந்துள்ளது. ஒவ்வொன்றும் பல லட்சம் பேரல் பிடிக்கும் இந்த ஏரிகளை அந்த நாடுகள் ஆயிலால் நிரப்பி வைக்கும். இதிலிருந்து மற்ற நாடுகளுக்கு சப்ளை செய்யும். ஆனால் இந்தியாவுக்குதான் முன்னுரிமை.

எதற்கும் பயனில்லாத ஐ.நா சபை எதற்கு இருக்கிறது என்ற கேள்விதான் மிஞ்சுகிறது.

(இழு தள்ளு 38/ கதிர்/ குமுதம் ரிப்போர்ட்டர் 26.06.2014)

கட்டுரை எழுதியவர் திரு கதிர்வேல் அவர்கள்  Kathir Vel
நன்றி  Kathir Vel அவர்களுக்கு

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails