Sunday, April 28, 2013

எந்தத் தாயும் பெற முடியாத அழகானக் குழந்தை நீங்கள் !

எந்தத் தாயும் பெற முடியாத

அழகானக் குழந்தை நீங்கள் !

*******************

தங்கள் கண்களை விட

கருமையான

அழகானக் கண்கள் இல்லை !

எந்தத் தாயும்

தங்களை விட

அழகானக் குழந்தையை

பெற்றதில்லை !

***

தாங்கள்

குறையில்லாமல் படைக்கப்பட்டீர்கள் ....

தாங்கள் எப்படிப் படைக்கப்பட

விரும்புவீர்களோ

அப்படி !

***

தங்கள் புகழ் இவ்வுலகில் பரவுகிறது ...

கஸ்தூரியை விட அதிக மணத்தோடு !

தங்கள் அதிர்ஷ்டம் நிறைவானது !

தங்கள் கரம் பெரிய கடலை விட தாராளமானது !

தங்கள் தர்மம் ஓடும் நதியைப் போன்றது !

தங்களைப் பார்த்துப் பொறாமைப் படுபவர்கள்

பொறாமைத் தீயிலேயே வெந்து கொண்டிருப்பவர்கள்

ஆகியோரிடமிருந்து

அல்லாஹ்

தங்களை பாதுகாக்க வேண்டும் !

***


எங்கள் எஜமானரே !

தங்களுக்கு தகுமான அளவுக்குப்

புகழ் சேர்க்க

என்னால் இயலவில்லை !

நான் சொல்லாற்றலில் ஏழை !

ஏழை எப்போதும்

தோற்று விடுகிறான் !

***

அண்ணலே

முஹம்மது ரஸூலே !

என் கவிதைகளால்

உங்களுக்கு

பெரும் புகழ் எதுவும்

வந்து சேர்ந்திடவில்லை....

தாங்கள்தான்

என் கவிதைகளுக்கு

என்றென்றும்

புகழ் நிலைக்கச் செய்தீர்கள் !

****************

........... நபித் தோழர்

ஹஸ்ஸான் இப்னு தாபித்(ரலி) அவர்கள்

நபிகள் (ஸல் ) அவர்களின் முன்னிலையில் பாடிய கவிதை

Abu Haashima Vaver

-------------------------------------------------------------------------------------------------------------

நபிகள் வெறுத்ததும் ஒறுத்ததும் குறைஷிக் காபிர்களில் உள்ள சிலக் கவிஞர்களை. அவர்கள் இஸ்லாத்தை, நபிகளை, முஸ்லிம்களை மிகக் கேவலமாக வசை பாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு மரண தண்டனை கூட அறிவித்தார்கள். ஆனால் முஸ்லிம் கவிஞர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்கள். ஹஸ்ஸான் பின் தாபித் அவர்கள் பொன்னாடை போர்த்தி , " ஹஸ்ஸானே...பாடும் ..உமது கவிதைகளுக்கு ஜிப்ரயீல் வழியாக அல்லாஹ் உதவி செய்வான் " என்று நபிகள் ( ஸல் ) அருளினார்கள். இதில் உதவி என்பது கவிதைக்கான ஞானத்தைக் குறிக்கும்.
Abu Haashima Vaver

Abdul Kareem Aljeely உலகத்தைத் தேடுபவர்கள் கண்ணைத் திற்ந்துக் கொண்டு தேடட்டும். தம்மைப் புகழ்ந்து பாடுவதற்காக நபிகள் (ஸல்) அவர்கள் கவியரசு ஹஸ்ஸான் (ரலி) அவர்களுக்கு மஸ்ஜிதுன் நபவியில் தனி மேடை அமைத்துக் கொடுத்தார்கள். அந்த மேடை மீதேறி நின்று ஹஸ்ஸான் (ரலி) பாடல்கள் பாடுவார்கள். ஹஸ்ஸான் (ரலி) அவர்களின் பாடல்களை நபிகள் (ஸல்) அவர்கள் கேட்டு ரசிப்பார்கள். கஃபு இப்னு சுஹைர் (ரலி) அவர்கள் மஸ்ஜிதுன் நபவியில் நபிகள் (ஸல்) அவர்களுக்கு முன்னே அமர்ந்து நபிகள் (ஸல்) அவர்களைப் புகழ்ந்து பாடல்கள் பாடியபோது மகிழ்ச்சி மீக்குற்று தம் மேனியில் போர்த்தியிருந்து போர்வை எடுத்து கஃபு (ரலி) அவர்களுக்குப் போர்த்தி மகிழ்ந்தார்கள். கஃபு (ரலி) அவர்கள் அந்தப் போர்வையை பத்தாயிரம் திர்ஹமுக்கு விலைக்குக் கேட்டபோது கொடுக்காமல் தம் மரணம் வரை பெரும் பொக்கிஷமாகப் பாதுகாத்தார்கள். -------------------------------------------------- Abdul Kareem Aljeely ##Abdul Kapur Mohamed Noohu## நபிகள் (ஸல் ) அவர்கள் கவிதையை வெறுத்ததாக சிலபேர் சொல்கிறார்களே அது உண்மையா ? அப்படி என்றால் இக்கவிதை பாட பெருமானார் அவர்கள் எப்படி சம்மதித்தார்கள் ! பெருமானார் (ஸல்) அவர்கள் தம்மைப் புகழ்ந்து பாடுவதற்கு அனுமதி வழங்கியது மட்டுமின்றி, தமது தோழர்களைப் புகழ்ந்து பாடுவதற்கும் அனுமதி வழங்கியிருந்தார்கள். கவியரசு ஹஸ்ஸான் (ரலி) அவர்களிடம் “ஹஸ்ஸான்! தாங்கள் அபூபக்ர் ஸித்தீக் அவர்களைக் குறித்து ஏதாவது பாடல்கள் பாடி இருக்கிறீர்களா? எனக் கேட்க, “ஆம்! பாடல்கள் படி இருக்கின்றேன்“ என்றார்கள் ஹஸ்ஸான் (ரலி) அவர்கள். அந்தப்பாடல்களை நானும் கேட்க வேண்டும். எனவே அப்பாடல்களைப் பாடுங்கள்“ எனக் கேட்டார்கள் நபிகள் (ஸல்) அவர்கள். அபூபக்ர் (ரலி) அவர்களைப் புகழ்ந்து தாம் பாடிய பாடல்களை ஹஸ்ஸான் (ரலி) பாடியபோது நபிகள் (ஸல்) கடைவாய் பற்கள் தெரியச் சிரித்தார்கள். இச்செய்தியை இமாம் ஜலாலுத்தீன் சுயுத்தி (ரஹ்) தாரீகுல் குலபா என்ற நூலில் பதிவு செய்துள்ளார்கள். ருபய்யி (ரலி) என்ற ஸஹாபிப் பெண்மணியின் திருமணத்தின்போது சில சிறுமிர் குழுவாக அமர்ந்து “தப்“ அடித்து பத்ருப் போரில் வீரமரணமடைந்த தம் தந்தையரின் சிறப்புக்களைப் பாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கே வருகை தந்த நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களைக் கண்டதும் சிறுமியருள் ஒருவர் “நாளை நடக்கும் விஷயங்களை அறிகின்ற ஒரு இறைத்தூதர் எங்களிடையே வாழுகிறார்கள்“ என்று பாடினார். அதைக் கேட்ட நபிகள் (ஸல்) அவர்கள் “அப்படிப் பாடாதீர்கள், நீங்கள் பாடிக் கொண்டிருந்ததையே பாடுங்கள்“ என்றார்கள். (இந்த ஹதீஸ் திர்முதியில் கிதாபுன் நிகாஹ் என்ற பிரிவிலும், அபூதாவூதில் கிதாபுல் அதப் என்ற பிரிவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது) இந்த ஹதீஸில் “பத்ருப் போரில் வீர மரணமடைந்த தம் தந்தையரைப் பற்றி பாடினர்“ என்பதற்கு “யன்துப்ன“ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. “யன்துப்ன“ என்றால் மரணமடைந்தவர்களின் வீர-தீரச் செயல்கள், நற்குணங்கள், புகழ் மற்றும் சிறப்புகளைப் பாடுதல் என்று பொருள். இன்று மவ்லிதுகளில் நடைபெறுவதுபோல நபிகள் (ஸல்) அவர்களின் சன்னிதானத்தில் சிறுமியர் குழுவாக அமர்ந்து பத்ரு மாலை பாடினார்கள். அதற்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அங்கீகாரம் வழங்கினார்கள் என்பதை மேற் சொன்ன நிகழ்வு தெளிவுபடுத்துகிறது. கவியரசு ஹஸ்ஸான் (ரலி) அவர்கள் நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களைப் புகழ்ந்து கவிதைகள் யாத்ததுபோலவே நபிகள் (ஸல்) அவர்கள் மண்ணுலக வாழ்வை முடித்துக் கொண்டபோது நெஞ்சம் நெக்குருக பல இரங்கற்பாக்களையும் பாடியுள்ளார்கள். ஜாஹிய்யா காலகட்டத்தில் இலக்கிய நயம் மிகுந்த காம ரசம் சொட்டும் காவியங்களையும், கவிதைகளையும் அரபுப் புலவர்கள் யாத்தனர். இன்றும் அபு இலக்கியத்திற்கு ஜாஹிலிய்யா கால புலவர்களின் கவிதகளிலிருந்து மேற்கோள் காட்டுவதுண்டு. இலக்கியத் துறையில் அவர்கள் கொடி கட்டிப் பறந்த காரணத்தால்தான் அவர்களது இலக்கிய கர்வத்திற்கு சம்மட்டி அடி கொடுக்கும் விதத்தில் அரபுப் புலவர்கள் அசந்து போகும் நடையழகில், இலக்கியச் சுவையில் அல்லாஹ் அல்குர்ஆனை அருளினான். பெருமானார் (ஸல்) அவர்கள் வெறுத்த, தடை செய்த கவிதைகள் ஜாஹிலிய்யா கால கவிதைகளைப் போன்ற அர்த்தமற்ற, அசிங்கமான கவிதைகளைத்தான். --------------------------------------

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அழகானக் குழந்தை மட்டுமல்ல... சிறப்பான குழந்தையும் கூட... வாழ்த்துக்கள்...

mohamedali jinnah said...

அன்புள்ளம் கொண்ட சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களது தங்களது கருத்துரைக்கு மிக்க நன்றி .உயர்ந்த மனிதரான நாயக்தினை தாங்கள் அளித்த அருமையான சொற்கள் 'அழகானக் குழந்தை மட்டுமல்ல... சிறப்பான குழந்தையும் கூட... ' உயர்வானவை இது மனித நேயத்தை வளர்க்கக் கூடியது .வாழ்த்துக்கள்...

LinkWithin

Related Posts with Thumbnails