என்னுடைய சீனியர் கருணாகரன் சார் ரெண்டு நாட்களுக்கு முன்பு சொன்ன விஷயம் சுவாரஸ்யமாக இருந்தது. முந்தைய நாள் இரவு ஒன்றரை மணி நேரத்துக்கு அவர் வசிக்கும் ஏரியாவில் கரண்ட் கட். பையனோடு ஜாலியாக விளையாடியிருக்கிறார். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் சுவரில் முயல், நரி, பாம்பு என்று உருவங்களை நிழலாக்கி விளையாடும் விளையாட்டு. கரண்ட் கட் என்று ஒன்று இருக்காவிட்டால் தகப்பனும், மகனும் இதுபோல இப்போது விளையாட வாய்ப்பு இருக்குமா என்று தெரியவில்லை. டிவி, கம்ப்யூட்டர், இண்டர்நெட் என்று பெருகிவிட்ட சாதனங்கள் உறவுகளுக்குள் ஏற்படுத்தும் இடைவெளி பற்றிய ஓர்மை நமக்கு எந்தளவுக்கு இருக்கிறது?
எனக்கும் என்னுடைய அப்பாவுக்கும் இருந்த நெருக்கம், எனக்கும் என்னுடைய மகளுக்கும் இருக்கிறதாவென்று சந்தேகமாகவே இருக்கிறது. தூங்குவதற்கு அடம்பிடிக்கும் குழந்தைகளோடு துணைவியார் மல்லு கட்டிக் கொண்டிருக்கும்போது, இல்லறத்தை தற்காலிகமாக துறந்து நள்ளிரவில் ஐ.பி.எல். பார்க்கும்போது கொஞ்சம் குற்றவுணர்ச்சியாகதான் இருக்கிறது. ஐந்துவயது வரை அப்பா என்னை தோளில் சாய்த்து, தெருவெல்லாம் அப்படியும் இப்படியுமாக நடந்துகொண்டே பாட்டு பாடி தூங்கவைப்பார்.
அப்பாக்கள் மட்டும் மாறிவிடவில்லை. முன்பெல்லாம் இடுப்பில் குழந்தையை இடுக்கியபடி சோறூட்டும் தாய்மார்களை நிறைய பார்க்க முடிந்தது. இப்போது சென்னையில் இதுவொரு அரிதான, அதிசயமான நிகழ்வாகி விட்டது. மெகாசீரியலின் எஃபெக்ட்தான். வேறென்ன. அப்போதெல்லாம் சென்னையை சுவாரஸ்யப்படுத்துவதே குழாய்ச்சண்டைகள்தான். இப்போது சண்டை போட யாருக்கும் நேரம் இருப்பதில்லை. இந்த நேரத்தை சீரியல் பார்த்து பயனுள்ளதாக கழிக்கலாம்.
ஒருவகையில் பார்த்தால் மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவி அவர்களின் ‘ஆட்சி நம்முடைய மரபினை மீட்டு தந்துக் கொண்டிருக்கிறது. பனையோலை விசிறி, டார்டாய்ஸ் கொசுவர்த்தி என்று தொலைந்துப்போன தலைமுறையின் அடையாளங்களை மீட்டுத் தருகிறது. தூளி கட்டி குழந்தைக்கு தாலாட்டு பாடி தூங்க வைக்கிறார்கள் தமிழக தாய்மார்கள். இளம் அப்பாக்கள் குழந்தைகளோடு யானைசவாரி விளையாடுகிறார்கள். புதிதாக மணமான தம்பதிகள் ‘நிலா காயுது, நேரம் நல்ல நேரம்’ என்று டூயட் பாடுகிறார்கள். அப்பா, அம்மா, மகன், மகள், மருமகள், குழந்தைகள் என்று குடும்பம் கூடி நிலாச்சோறு சாப்பிடுகிறது.
ஒட்டுமொத்தமாக பார்த்தால் புரட்சித்தலைவியின் ஆட்சி நமது பொற்காலத்தை மீட்டுத்தரும் முயற்சியில் தீவிரமாக இயங்கிவருவதாகவே தெரிகிறது. மாண்புமிகு அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தனிமனிதராக நம்மை முப்பதாண்டுகளுக்கு பின்னே முன்னேற்றியிருக்கிறார். மற்ற அமைச்சர்களும் கொஞ்சம் மெனக்கெட்டால் ராஜராஜசோழன் ஆட்சி காலத்துக்கே கூட தமிழகம் கால இயந்திரத்தில் பயணிக்கும் அற்புதம் நேரலாம். மேலும் கொஞ்சம் முக்கி கற்காலத்துக்கும் போய்விட முடியுமானால் அனாவசியமாக டிரெஸ் வாங்கும் செலவாவது மிச்சம்.
எழுதியவர் யுவகிருஷ்ணா
Source : http://www.luckylookonline.com
No comments:
Post a Comment