Saturday, April 13, 2013

ஏங்கி நின்றான் ! ஏக்கம் தொடர்கிறது…

பள்ளிப்பருவத்து முன்பருவத்தில்
பகல் உணவில் கூட பால் தந்த
அந்த அன்னையின் பாசம்
இன்று தூரமாகி போனதை எண்ணி
ஏங்கி நின்றான் !

பள்ளிப்பருவம் எட்டியதும்
பார்ப்போர் வியக்க பணிவிடை செய்து
பாடசாலை அனுப்பி வைத்த காட்சி நினைத்து
ஏங்கி நின்றான் !

படித்தது போதும் என்று
பாதிலேயே கல்வி விட்டு
பன்னாட்டு விமான நிலையம் கண்டு
புலம்பெயரும் கனவு சுமந்து
பாசத்தை தூரமாக்கி
ஏங்கி நின்றான் !

வாப்பா பார்த்து, உம்மா பார்த்து
வரதட்சணை கண் மறைத்து
வாயாடிப்பெண்ணை மணந்து
அன்புக்காக
ஏங்கி நின்றான் !

வாப்பாவை பார்க்காமலே
வாப்பாவின் பாசம் அறியாமலே
மூன்றுவயதை தொடும்போது
தாயகம் போய்
தான் ஈன்ற தங்கப்பிள்ளை
தன்னிடம் வருமா என்று
ஏங்கி நின்றான் !

சுற்றித்திரிந்த காலங்களில்
சுதந்திரம் கற்றுத்தந்து
பட்ட கஸ்டங்களில்
பாதி பங்கெடுத்த
அன்பு நண்பர்களை பிரிந்து
ஏங்கி நின்றான் !
.
அயல்நாட்டு நிரந்தர வாழ்க்கை
நிரந்தரமாக அந்நியமாகி
அனாதை போல் வாழ்ந்து விட்டு
முதுமை அடைந்தும் அறியாமல்
முடியாமல் ஊர் திரும்பும் காலம் வந்து
உறவுக்காகவும்
உண்மையான அன்புக்காகவும்
ஏங்கி நின்றான் !

 -அதிரை மெய்சா


 இலண்டன் தமிழ் வானொலியில் அதிரை மெய்சா அவர்களின் கவிதை [ காணொளி ] !
இலண்டன் தமிழ் வானொலி தனது கவிதைகளை வாடிக்கையாக ஒளிபரப்புச் செய்வதன் மூலம் அதிரையருக்கு முன்னோடியாகவும், எதிர்கால தலைமுறையினருக்கு நல்லதொரு வழிகாட்டியாகவும் திகழ்ந்து கொண்டுருக்கின்ற 'கவியன்பன்' அபுல் கலாம் அவர்களின் வரிசையில் அதிரை மெய்சா அவர்களின்  'ஏங்கி நின்றான் !' என்ற தலைப்பிட்ட விழிப்புணர்வுக் கவிதையை இலண்டன் தமிழ் வானொலியில் கடந்த [ 11-04-2013 ] அன்று ஒளிப்பரப்பு செய்தது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றோம்.

இவரைப்பற்றிய சிறு குறிப்பு :
'மெய்சா' என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் இவரின் இயற்பெயர் A. முகைதீன் சாகிப். அதிரை நடுத்தெருவை பிறப்பிடமாய் கொண்டாலும் கீழத்தெருவை இருப்பிடமாய் பெற்று தற்போது வசிப்பிடமாய் மேலத்தெரு சானா வயலில் குடியமர்ந்து, அமீரகத்தில் பணிபுரிந்து வருகின்றார்.

சிறுவயது முதல் கவிதை - கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உள்ள இவர் சமூக விழிப்புணர்வு பக்கங்களில் தொடர்ந்து விழிப்புணர்வூட்டும் ஆக்கங்கள் / கவிதைகள் எழுதி பலரின் பாராட்டை பெற்று வருகின்றார். மேலும் உள்ளூர் நிகழ்வுகளை உடனுக்குடன் பதிந்து வரும் வலைதளமாகிய 'அதிரை நியூஸ்'  குழுமத்தில் ஒருவராகவும் இருந்து வருகிறார்.

இலண்டன் வானொலியிலும் இவருடைய கவிதைக்கு அங்கீகாரம் கிடைத்து வாசித்திருப்பது நமதூருக்கு மட்டுமல்லாமல் எதிர்கால புதிய தலைமுறையினரின் எழுத்தார்வத்தைத் தூண்டுகின்ற விதமாக அமைந்துருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளன.

அதிரை நியூஸ் குழுமத்தின் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் அன்புடன் தெரிவித்து கொள்கிறோம்.


ADIRAI NEWS: இலண்டன் தமிழ் வானொலியில் அதிரை மெய்சா அவர்களின் கவிதை !

 குறிப்பு :-''காணொளியில் இக்கவிதை 0.59 நிமிடத்திலிருந்து தொடங்குகிறது என்பதை அறியப்படுத்திக்கொள்கிறோம்''
Source: http://theadirainews.blogspot.in/

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

'மெய்சா' அவர்களுக்கு எனது அன்பான பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள் பல...

அதிரை.மெய்சா said...

பாராட்டுத்தெரிவித்து மறுமொழி பதிந்த சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு மிக்க நன்றி.

அதிரை.மெய்சா said...

பாராட்டுத்தெரிவித்து மறுமொழி பதிந்த சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு மிக்க நன்றி.

அதிரை.மெய்சா said...

பாராட்டுத்தெரிவித்து மறுமொழி பதிந்த சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு மிக்க நன்றி.

அதிரை.மெய்சா said...

என் கவிதையை தாங்கள் வலைதளத்தில் பதிந்து கௌரவித்ததர்க்கு மிக்க நன்றி அண்ணன் முகம்மது அலி ஜின்னா அவர்களே.!