Tuesday, April 23, 2013

இதுவும் கல்யாணம்தான்!

அமைந்தகரையில் கல்யாணம். அமெரிக்க மாப்பிள்ளைக்கு லீவு இல்லை. அதனால் என்ன.. கல்யாணத்தை ஜாம் ஜாமென்று நடத்திவிடலாம். இண்டர்நெட்தான் இருக்கே?
மணக்கோலத்தில் பூனம் சவுத்ரி நியூயார்க்கில் மதச்சடங்குகள் செய்யும் அந்த அறையில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு முன்னால் ஒரு லேப்டாப். இண்டர்நெட்டில் ஸ்கைப் சாட்டிங் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது. தன்வீர் அகமது பங்களாதேஷில் ஒரு கல்யாண மண்டபத்தில் உறவினர் புடைசூழ அமர்ந்திருக்கிறார். கல்யாணம் செய்துவைக்கும் மதகுருமார் மந்திரங்களை ஓதுகிறார். அங்கும் ஒரு லேப்டாப், ஸ்கைப் சாட்டிங். அவ்வளவுதான். இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது. சட்டப்படி பங்களாதேஷில் பதிவும் செய்யப்பட்டு விட்டது.

தகவல் தொழில்நுட்பத்தின் லேட்டஸ்ட் புரட்சி இந்த ‘ப்ராக்ஸி திருமணங்கள்’. மணமகனுக்கும், மணமகளுக்கு பல்லாயிரம் மைல் இடைவெளி இருக்கலாம். கல்வி, வேலை என்று பல காரணங்களுக்காக புலம் பெயர்ந்து வாழவேண்டிய கட்டாயம். இதனால் திருமணத்தை தள்ளிப்போட்டுக் கொண்டே போகமுடியுமா என்ன?
வரலாற்றில் கூட இம்மாதிரி ‘ப்ராக்ஸி’ திருமணங்கள் சட்டப்படி நடந்திருக்கின்றன. ஆஸ்திரியாவைச் சேர்ந்த மேரி அண்டோனியா என்கிற பெண் 1770 ஏப்ரலில் லூயிஸ் அகஸ்தே என்கிற பிரெஞ்சு இளைஞரை, அவரவர் நாட்டில் இருந்தபடியே திருமணம் செய்துக் கொண்டார்கள். சில அரசியல் காரணங்களால் வெளிப்படையாக இருவரும் இணைந்து மணக்கோலம் காணமுடியவில்லை. லூயிஸ் வேறு யாருமல்ல. பிரான்ஸை ஆண்ட மன்னர் லூயிஸ்XVIதான். மேரிதான் பட்டத்து ராணி என்பதையும் சொல்லவேண்டியதில்லை. அரசக்குடும்பத்திலேயே சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்த அதிசயத் திருமணம் நடந்தேறியிருக்கிறது. டெலிகிராம் மூலமாக கூட திருமணங்கள் சில ஐரோப்பாவில் பதிவாகியிருக்கின்றன.

இந்த பிராக்ஸி திருமணங்கள் அமெரிக்காவில் சகஜம். இராணுவத்தில் பணிபுரியும் வீரர்கள் எங்காவது போர்முனையில் இருப்பார்கள். அங்கிருந்தே தங்கள் ஊரில் இருக்கும் காதலிகளை அவர்கள் கைப்பிடிக்க இம்மாதிரி திருமணம் செய்துக் கொள்கிறார்கள். இப்போது புலம் பெயர்ந்து வாழும் ஆசிய கண்டனத்தினரும் தங்கள் செண்டிமெண்டுகளை கைகழுவி இத்திருமணங்களை நடத்த ஆரம்பித்திருக்கிறார்கள். குறிப்பாக அயல்நாடுகளில் திருமணத்துக்கு ஆகும் செலவு, அவர்களை இம்முறைக்கு நகர்த்திக் கொண்டு வந்திருக்கிறது.

இம்மாதிரி திருமணங்களை நியூயார்க்கில் நடத்தி வைக்கும் இமாம் முகம்மது கயூம், “ஆசியநாடுகளில் இருந்து இங்கு வந்து பணிபுரிபவர்கள், கல்வி கற்பவர்கள் நிறைய பேர் இப்போது இம்மாதிரியான திருமணத்தில் ஆர்வம் காட்டுகிறார்கள். தங்களுடைய துணையை உறுதி செய்துக்கொள்ளும் திருப்தி அவர்களுக்கு கிடைக்கிறது” என்கிறார். மேற்கண்ட பூனம் – தன்வீர் திருமணத்தை நடத்திக் கொடுத்தவர்களில் இவரும் ஒருவர். ஆனால் திருமணம் சட்டப்படி பங்களாதேஷில்தான் பதிவு செய்யப்பட்டதாம். அமெரிக்காவின் சில மாகாணங்கள் இத்திருமணங்களை பதிவு செய்துக் கொள்வதில்லை.

’பிராக்ஸி மேரேஜ் நவ்’ என்று ஒரு நிறுவனமே அங்கு இயங்குகிறது. வருடத்துக்கு நானூறு முதல் ஐநூறு திருமணங்களை இண்டர்நெட்டிலேயே வெற்றிகரமாக நடத்திக் காட்டுகிறார்களாம். பதிவு செய்வது மாதிரி பின்னணி விஷயங்களையும் சட்டப்படி செய்துக் கொடுக்கிறார்கள். ஏழு வருடங்களாக இந்த நிறுவனத்தை நடத்தி வரும் ஜார்ஜ் ஆண்ட்ரூஸ், “ஆரம்பத்தில் இராணுவத்தினருக்காக ஆரம்பித்த சேவை இது. இப்போது மற்றவர்களும் நிறைய பயன்படுத்திக் கொள்கிறார்கள்” என்கிறார். அவருக்கு என்ன? ஒவ்வொரு திருமணத்தின் போதும் லம்பாக ‘ஃபீஸ்’ வாங்கிவிடுகிறார்.

ஆனால் இம்மாதிரி திருமணங்கள் அமெரிக்க குடியுரிமை அதிகாரிகளுக்கு பெரிய தலைவலியாக போகிறது. திருட்டுத்தனமாக குடியுரிமை பெற நிறைய போலி திருமணங்கள் நடைபெற ஆரம்பித்திருப்பதாக குற்றம் சாட்டுகிறார்கள். குடியுரிமைக்கு விண்ணப்பிப்பவர்கள் ‘பிராக்ஸி திருமணம்’ செய்திருந்தால், பலத்த விசாரணைகளுக்கு பிறகே, பல விஷயங்களை உறுதிப்படுத்திக் கொண்டு குடியுரிமை வழங்குகிறார்கள்.


நிறைய இஸ்லாமியத் திருமணங்கள்தான் இம்முறையில் நடைபெறுகின்றன. ஏனெனில் ‘குரான்’ சாட்சியாக திருமணம் செய்துக் கொள்பவர்கள் கடவுளுக்கு விசுவாசமாக தங்கள் உறுதியை ஏற்கிறார்கள் என்கிறார் ஜமைக்கா முஸ்லீம் சென்டரை சேர்ந்த இமாம் ஷம்ஷி அலி. “ஸ்கைப் மட்டுமல்ல. கூகிள் ஹேங்-அவுட் மூலமாகவும் திருமணம் நடக்கிறது” என்று கூடுதல் தகவலையும் தருகிறார்.

இந்த திருமணங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பழம் சிந்தனையாளர்களும் இருக்கிறார்கள். ‘கலிகாலம்’ என்று தலையில் அடித்துக் கொள்கிறார்கள். திருமணம் என்கிற சொல்லின் அர்த்தத்தையே இது கேலிக்குரியதாக்குகிறது என்றும் ப்ராக்ஸி திருமணங்களுக்கு கண்டனங்கள் குவிகின்றன.

இருபத்தோரு வயது பூனம் சவுத்திரியும், முப்பத்தோரு வயது தன்வீர் அகமதும் திருமணம் முடிந்தவுடன் கேக்குகளை கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் முன்பாக ஒருவருக்கொருவர் ஊட்டிக் கொள்கிறார்கள். முன்னதாக பூனமின் அத்தை ஒருவர் இதேமாதிரிதான் இண்டர்நெட்டெல்லாம் வருவதற்கு முன்பாக டெலிபோன் மூலமாக திருமணம் செய்துக் கொண்டாராம்.

டெலிபோனில், இண்டர்நெட்டில் காதலிப்பதே கஷ்டமென்று நம்மூரில் படம் எடுத்துக் கொண்டிருக்கிறோம். அங்கே குடும்பமே நடத்த ஆரம்பித்துவிட்டார்கள்.

(நன்றி : புதிய தலைமுறை)

எழுதியவர் யுவகிருஷ்ணா
Source : http://www.luckylookonline.com/

No comments: