Saturday, April 27, 2013

யார் இந்த சோமாலிய கடற்கொள்ளையர்கள்?

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்... 

சோமாலிய கடற்கொள்ளையர்கள்...கடந்த சில வருடங்களாகவே மீடியாவில் அடிக்கடி தென்படக்கூடிய இரண்டு வார்த்தைகள்...

    "நாங்கள் கடற்காவலர்கள் (Coastal Guards)"

ஆம். இவர்கள் தங்களை இப்படித்தான் அழைத்துக்கொள்கிறார்கள்.

இவர்களுக்கு பின்னால் ஒரு மாபெரும் சோகக்கதையே இருக்கிறது. ஏன் இவர்கள் இப்படி ஆனார்கள்?

இந்த பதிவில் இவர்கள் இன்றைய நிலைக்கு வந்த காரணங்களை காணவிருக்கிறோம்...இன்ஷா அல்லாஹ்...

சோமாலியா 98.5% முஸ்லிம்கள் வாழக்கூடிய நாடு. வடகிழக்கு ஆப்ரிக்காவில் உள்ளது, மொத்த மக்கள் தொகை சுமார் ஒன்பது மில்லியன் (90 லட்சம்). மிக நீண்ட கடற்கரையை கொண்ட நாடு. இந்திய கடலையும், எடேன் வளைகுடாவையும் (Gulf of Aden) கொண்ட நாடு. 1991 முதல் கடுமையான சிவில் யுத்தங்களால் பாதிக்கப்பட்ட நாடு. மீன்பிடி தொழில் தான் அவர்களது முக்கியமான தொழில். அந்த தொழிலுக்கே ஆபத்து வந்தால்?


சுனாமி பேரலைகளால் உலகமே ஸ்தம்பித்து போய் நிற்க அந்த அலைகள் தான் சோமாலியாவை பற்றிய உண்மைகளை வெளிக்கொண்டுவந்தன. அதாவது, அந்த அலைகள் சோமாலிய கடலில் கொட்டப்பட்டிருந்த விஷக்கழிவுகளை வெளிக்கொண்டுவந்தன. இந்த விஷக்கழிவுகள் பெரிய கண்டைனர்களிலும் பேரல்களிலும் ஒழுகிய நிலையில் இருந்தன. கொஞ்சநஞ்சமல்ல, பெரிய அளவில் கழிவுகள். ஐ.நா சுற்றுசுழல் அமைப்பு அதிர்ச்சியில் உறைந்தது.                       


இங்கு ஒன்றை நாம் கவனிக்க வேண்டும், மிக நீண்ட காலங்களாகவே, அதாவது 1989 முதலே, ஐரோப்பிய நாட்டு தொழிற்சாலைகள் தங்கள் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை சோமாலியா நாட்டு கடலில் கொட்டுகின்றன என்று பரவலாக ஒரு குற்றச்சாட்டு இருந்தது.


இப்போது சுனாமி அலைகள்  தெள்ளத்தெளிவாக அந்த உண்மைகளை வெளிக்கொண்டுவந்துவிட்டன . இதில் என்ன பெரிய கொடுமை என்றால், அந்த கழிவுகளில் அணுக்கழிவுகளும் இருந்ததுதான்.

நீண்ட காலங்களாக சோமாலியா கடற்கரை பகுதி மக்கள் அனுபவித்து வந்த உடல்நிலை கோளாறுகளுக்கும் விடை அளித்துவிட்டது சுனாமி. கேட்பவர் நெஞ்சை நொறுக்கும் செய்தி இது. ஒருவனை அழித்து இன்னொருவன் வாழ்வது...

பின்னர் இது சம்பந்தமான உண்மைகள், ஆதாரங்கள் வெளிவந்தன. ஐ.நா சுற்றுசூழல் அமைப்பு இதற்கெல்லாம் காரணம் சில ஐரோப்பிய தொழிற்சாலைகள்தான் என்று வெளிப்படையாக கூறியது.

இந்த கொடுமையெல்லாம் போதாது என்று, ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுளில் இருந்து வரக்கூடிய கப்பல்கள் சோமாலிய கடற்பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக மீன்பிடித்தன. இது சோமாலியர்களுக்கு மாபெரும் பிரச்சனை. ஏனென்றால் இவர்களிடம் இருப்பதோ சிறிய படகுகள் மற்றும் கப்பல்கள், அவை அந்த கப்பல்களுக்கு எந்த விதத்திலும் நிகராகாது.


இப்படி ஒரு புறம் கழிவுகளாலும், மறுபுறம் சட்டவிரோத மீன்பிடி நிகழ்வுகளாலும் சின்னா பின்னமாகி போனார்கள் சோமாலியர்கள். இதையெல்லாம் தட்டிக்கேட்பதற்க்கு நிலையான அரசாங்கம் கிடையாது. இந்த சூழ்நிலை தான், சில சோமாலியர்களை மீடியாக்கள் கூறுவது போல் கொள்ளையர்கள் ஆக்கியது.

இவர்கள் என்ன கூறுகிறார்கள் இதைப்பற்றி?

தாங்கள் கொள்ளை அடிப்பது சீரழிந்து போயிருக்கும் சோமாலிய கடற்பகுதியை மேம்படுத்துவதற்க்காகவும், மேற்கொண்டு கப்பல்கள் எந்த அசம்பாவிதத்தையும் செய்யாமல் காப்பதற்காகவும் தான் என்பது.

இன்றளவும் சட்டவிரோதமாக மீன்பிடிப்பது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. சென்ற வருடம் ஒரு ஸ்பெயின் நாட்டு கப்பலை இவர்கள் கடத்தி சென்றதாக செய்திகளில் பார்த்திருப்போம். அந்த கப்பலை இவர்கள் கடத்தியதற்கு இவர்கள் கூறிய காரணம், அந்த கப்பல் சோமாலிய கடற்பகுதியில் மீன்பிடித்தது என்பது தான்.

இதனால் தான் இவர்கள் தங்களை கடற்காவலர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள்.

அதுசரி எப்படி இத்தனை கப்பல்கள் இவர்களிடம் மாட்டுகின்றன? இதற்கு நாம் சோமாலியாவின் பூலோக வரைப்படத்தை பார்த்தால் விடைச்சொல்லி விடலாம். ஐரோப்பாவில் இருந்து சூயஸ் கால்வாய் வழியாக வந்து வளைகுடா நாடுகளை தாண்டிசெல்லும் கப்பல்கள் எல்லாம் இவர்களது நாட்டையொற்றிய  எடேன் வளைகுடாவை கடந்து தான் செல்லவேண்டும். அங்கே தான் மடக்குகிறார்கள்.

எப்படி பிடிக்கிறார்கள்? எப்படி பணம் பெறுகிறார்கள்? பிடித்தவர்களை எப்படி நடத்துகிறார்கள்? பணத்தை என்ன செய்கிறார்கள்? எப்போது இது முடிவுக்கு வரும்?  இன்ஷா அல்லாஹ்...அடுத்த பதிவில்...                                 

இதையெல்லாம் விடுங்கள், சமீபத்தில் உலகை அதிர்ச்சியில் உறைய வைத்தார்கள் தெரியுமா இவர்கள்? நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மீடியாக்கள் சொன்னதாகவும் எனக்கு நினைவில்லை...

அதாவது, சமீபத்தில் ஹைய்தி தீவில் ஏற்பட்ட பூகம்பத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்விற்கு தாங்கள் ஒரு பெரிய தொகையை தருவதாகவும்,  அந்த தொகை எப்படியாவது அம்மக்களுக்கு சென்று விடும் என்று அறிவித்ததும் தான்.

அதுசரி, சோமாலியா  நாட்டை சீரழித்துவரும் சிவில் யுத்தத்திற்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள்...நான் சொல்லி தான் தெரிய வேண்டுமா என்ன?

இன்ஷா அல்லாஹ்...இன்றுமுதல் நம்முடைய துஆக்களில் சோமாலிய மக்களையும் சேர்த்துக் கொள்வோம்...

தொடர்ந்து படிக்க <<இங்கே>> சுட்டவும்...

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

References:
1. United Nations Environment programme (UNEP) report on Somalia toxic wastage crisis.
2. Al-Jazeera report on Somalia's Toxic waste, dated 11th October 2008.
3. Agence France-Presse (AFP) report on Somalia's illegal fishing and Waste Dumping, dated 25th July 2008.
4. The Times Report on Toxic waste washed ashore by Tsunami, dated 4th March 2005.
5. Somali land Press report on Pirates donate Haitii people, dated 31st January 2010.
6. The Pew Report on Somalia population released on Oct 2009.  

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ         
Source : http://www.ethirkkural.com/

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails