சென்னை அமெரிக்க தூதரக அதிகாரிகள் மௌலானா சம்சுதீன் காசிமியுடன் சந்திப்பு:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றிய அவதூறு திரைப்படம் பற்றி கருத்து பரிமாரிக்கொள்வதற்காக சென்னை அமெரிக்க தூதரக அதிகாரிகள் மௌலானா சம்சுதீன் காசிமியுடன் 03 -10 -2012 அன்று காலை 11 .30 மணிக்கு மக்காப்பள்ளியில் நேரில் சந்தித்தனர். சந்திப்பில் கலந்து கொண்ட தூதரக அதிகாரிகள் ; டேவிட் .கே .கேய்னர் (பொது விவகாரத்துறை அதிகாரி),மத்தேயு .கே .பேஹ்(அரசியல் &பொருளாதார அதிகாரி ) , பின்னி ஜேகப் (மக்கள் தொடர்பு அதிகாரி). இச்சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடந்தது .அப்போது நடைபெற்ற உரையாடலின் சுருக்கம்;
தூதரக அதிகாரிகள்: சமீபத்தில் நபிகள் நாயகம்(ஸல்) பற்றி வெளியான திரைப்படம் விஷயத்தில் எங்கள் ஆழ்ந்த மன வருத்தத்தையும் அப்படக்குழுவினருக்கு எங்களது கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம். எங்கள் நாட்டு அதிபரும் வெளியுறவுத்துறை அமைச்சரும் கூட தங்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ள நிலையில் தங்களை போன்ற மார்க்கத்தலைவர்களை நேரில் சந்தித்து தங்கள் கருத்துக்களை அறிய வந்துள்ளோம். தங்களின் கருத்துக்கள் முழுமையாக பதிவு செய்யப்பட்டு எங்கள் நாட்டு அதிபருக்கும் வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் அனுப்பப்படும்.
மௌலானா: இந்தப்படம் வெளிட்டவுடனேயே உங்கள் நாட்டு அதிபரும் வெளியுறவுத்துறை அமைச்சரும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருந்தால் புண் பட்ட உலக முஸ்லிம்களுக்கு ஓரளவாவது ஆறுதலாக இருந்திருக்கும். பிரச்னையும் இந்தளவுக்கு கைமீறி போயிருக்காது. ஆனால் அதனை செய்யத்தவறியது உங்கள் குற்றம்.
தூதரக அதிகாரிகள்: செப்டெம்பர் 14 அன்றே கண்டன அறிக்கை வெளியிட்டு விட்டார்கள்.ஆனால் உண்மை என்னவென்றால்அந்தப்படக்குழுவினர் மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கவும் எங்கள் சட்டத்தில் இடமில்லை. இந்திய சட்டம் போன்று எங்கள் சட்டம் இல்லை. அங்கே கருத்து சுதந்திரமும் பேச்சு சுதந்திரமும் மிக மிக அதிகம். எனவே இது போன்று நபிகள் நாயகம்(ஸல்) மட்டுமின்றி பல்வேறு மதத்தலைவர்களையும் இழிவு படுத்தப்ப்படும்போதும் (ஏராளமான உதாரண சம்பவங்களை குறிப்பிடுகிறார்கள்) அவர்களை தண்டிக்க எங்களிடத்தில் சட்டமில்லை. சட்டத்தின் பிடியிலிருந்து இலகுவாக தப்பித்தும் விடுகிறார்கள். எனவே அவற்றை சகித்துக்கொள்வதை தவிர வேறு வழியில்லை.
மௌலானா: மற்ற தலைவர்கள் பற்றி எங்களுக்கு கவலையில்லை. ஆனால் எங்கள் நபிகள் நாயகத்தின் விஷயத்தில் நாங்கள் சகித்துக்கொள்ளவும் மாட்டோம். சகித்துக்கொள்ளவேண்டும் என்ற அவசியமும் எங்களுக்கு இல்லை. ஏனென்றால் உலக முஸ்லிம்களின் ஒவ்வொருவர் வாழ்க்கையோடும் ரத்ததொடும் கலந்தவர்கள் நபிகள் நாயகம். அவர்கள் கற்று தந்த வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை காலை கண் விழித்தது முதல் தூங்கும் வரை தினம் தினம் ருசித்து அனுபவித்து வரும் முஸ்லிம்கள் நபிகள் நாயகத்துக்காக தங்கள் உயிரையும் கொடுக்க முன் வருவார்கள். அது ஏன் என்ற காரணத்தை சொல்லி உங்களுக்கு புரிய வைக்க முடியாது. நீங்களும் அந்த முஸ்லிம்களில் ஒருவராக ஆனால் தான் உங்களால் உணர முடியும். இப்போது நடந்த சம்பவத்தை உங்கள் அரசாங்கம் கண்டித்து விட்டது. ஆனால் வருங்காலத்தில் இது போன்று மீண்டும் நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்.
தூதரக அதிகாரிகள்: உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அத்தகைய எந்த உத்தரவாதமும் எங்களால் தர முடியாது.ஏனென்றால் தனி நபர் கருத்து சுதந்திரமும் எழுத்து சுதந்திரமும் எங்கள் அரசியலமைப்பு சட்டத்தில் அபரிமிதமாக வழங்கப்பட்டு விட்டது, எங்கள் சட்டம் அப்படி இருக்கிறது.
மௌலானா: மற்றவர்களின் உணர்வுகளை ஊனப்படுத்துவதற்கு துணைபோகும்,சட்டத்தை மாற்றுங்கள், அல்லது சட்ட திருத்தம் கொண்டு வாருங்கள்.
தூதரக அதிகாரிகள்: கடந்த 50 ஆண்டுகளாக எங்கள் அரசியலமைப்பு சட்டத்தில்எந்த திருத்தமும் வந்ததில்லை.
மௌலானா: இப்போது அதற்கான நேரம் வந்து விட்டதாக எண்ணிக்கொள்ளுங்கள், உங்கள் நாட்டு தனி நபர் கருத்து சுதந்திரம் உங்களுக்கு முக்கியம் என்றால் கோடானு கோடி மனிதகுலம் தங்கள் உயிரினும் மேலாக மதிக்கும் எங்கள் நபிகள் நாயகத்தின் கண்ணியம் எங்கள் உயிரையும் விட எங்களுக்கு முக்கியம்.நீங்களே மனிதாபிமானத்துடன் யோசித்துப்பாருங்கள். இப்படி அடுத்தவர் மனதை ரணப்படுத்தி அதனை ரசிக்கும் கொடூர செயலை கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அனுமதிப்பது பைத்தியக்காரத்தனமான சட்டமில்லையா? (நாங்கள் என்ன செய்ய முடியும் என்பது போல் கையை விரிக்கிறார்கள்).இன்னொன்றையும் புரிந்து கொள்ளுங்கள், நாங்கள் எங்கள் மக்களை ஓரளவுக்குத்தான் கட்டுப்படுத்த முடியும். இப்போது உணர்ச்சி வசப்பட்ட மக்கள் உங்கள் தூதரகத்தின் மீது கற்களைத்தான் எறிந்தார்கள். இன்னொருமுறை உங்கள் சட்டத்தையும் கருத்து சுதந்திரத்தையும் காரணம் காட்டி இதுபோன்று நடக்குமேயானால் உணர்ச்சி வசப்படும் பொதுமக்கள் எங்களது கட்டுப்பாட்டையும் மீறி கற்களுக்கு பதிலாக பெட்ரோல் குண்டுகள் கூட வீசலாம். அப்போது எங்களால் எங்கள் மக்களை கட்டுப்படுத்த முடியாது (அவர்கள் முகத்தில் பலத்த அதிர்ச்சி). இந்த தகவல்களை உங்கள் நாட்டு அதிபருக்கும் வெளியுறவு செயலாளருக்கும் தெரிவித்து விடுங்கள்.
தூதரக அதிகாரிகள்: நிச்சயமாக உங்கள் உணர்வுகளை புரிந்து கொண்டோம். இதனை எங்கள் நாட்டு தலைவர்களுக்கும் தெரிவிப்போம்.
(இறுதியில் அவர்களுக்கு திருக்குர்ஆன் ஆங்கில மொழிப்பெயர்ப்பு வழங்கப்பட்டது).
Source : http://makkamasjid.com/
No comments:
Post a Comment