Sunday, October 14, 2012

நாகூர் ஹனிபாவை நெகிழ வைத்த மதுரை ஆதீனம்

சிலநாட்களுக்கு முன்பு “இறைவனிடம் கையேந்துங்கள்” என்ற நாகூர் ஹனிபாவின் பாடலைப் புகழ்ந்து அந்த பாட்டின் மகிமையை, அப்பாடல் மக்கள் மனதில் ஏற்படுத்திய பாதிப்பை சிலாகித்து என் வலைப்பதிவில் எழுதியிருந்தேன். இணையதளத்தில் – குறிப்பாக குழுமங்களிலும், பிற வலைப்பதிவுகளிலும், முகநூல்பக்கங்களிலும் அந்த பதிவுக்கு பெருத்த வரவேற்பு கிடைத்தது.

இதோ அந்த சுட்டி : அப்படி என்னதான் இருக்கிறது நாகூர் ஹனிபாவின் பாடலில்?

அப்பாடலுக்கு மதுரை ஆதினம் அருணகிரிநாதர் அவர்கள் ஆத்மார்த்த ரசிகர் என்ற விஷயத்தையும் நாம் அப்பதிவில் கண்டோம். ஓய்வு நேரங்களிலும், காரில் பயணம் செல்லுகையிலும் அப்பாடலைக் கேட்க அவர் தவறுவதே இல்லை.

வயதின் முதிர்ச்சியால் உடல் சோர்வுற்றிருக்கும் நாகூர் ஹனீபா அவர்களை அண்மையில் நோன்பு காலமான ரமலான் மாதத்தில் நேரில் கண்டு அளவளாவுவதற்கு மதுரை ஆதீனம், நாகூர் சென்றிருந்தார். பழைய நண்பரைக் கண்டதும் நாகூர் ஹனிபா அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.


மதுரை ஆதீனம் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க நோன்பு பிடித்து களைப்புற்றிருந்த நாகூர் ஹனிபா அவர்கள் அப்பாடலை பாட ஆரம்பித்தார். காது கேளாத நிலையிலும், மறதி ஆட்கொண்டிருந்த போதிலும், குரல் தளர்ந்திருந்த போதிலும் நண்பரின் வேண்டுகோளைத் தட்ட முடியாத நிலை. நாகூர் ஹனிபா எதையும் பொருட்படுத்தாமல் பாட ஆரம்பித்தார். பாடலை முழுதும் பாட முடியாமல் அவர் திணறுவதை மதுரை ஆதீனத்தால் உணர முடிந்தது.

நாகூர் ஹனீபாவின் தீவிர ரசிகரான மதுரை ஆதீனம் உணர்ச்சி வசப்பட்டு அவரே தன் குரலால் பாட ஆரம்பித்தார்.

இதை மதநல்லிணக்கம் என்று சொல்லுவதா அல்லது இரு பழைய நண்பர்களின் உணர்ச்சிமயமான சந்திப்பு என்று சொல்லுவதா என்று எனக்கு புரியவில்லை.

மதச்சகிப்புத்தன்மை சிறுகச் சிறுக வெகுவாகவே குறைந்து வரும் இக்கால கட்டத்தில் இதுபோன்ற மனிதநேய உறவுகள்  இன்னும் முழுமையாய் மரித்து விடவில்லை என்பதை உணர்த்துகிறது இந்த பரஸ்பர சந்திப்பு.

நாகூர் ஹனிபாவை நெகிழ வைத்த மதுரை ஆதீனத்தின் சந்திப்பு அடங்கிய அந்த அபூர்வ காணொளி இதோ உங்கள் பார்வைக்கு :


(சுவாமி நித்யானந்தா விஷயத்தில் மதுரை ஆதீனம் அவர்களின் பெயர் சர்ச்சைக்குள்ளான விஷயம் இங்கு நமக்குத் தேவையில்லாதது. உடல் நலிவுற்றிருக்கும் ஒரு நண்பனை நேரில் கண்டு நலம் விசாரித்து, அன்பை பொழிந்த அந்த மனிதநேயப் பண்பினை நான் பெரிதும் மதிக்கிறேன்)

- அப்துல் கையூம்
Source :  http://nagoori.wordpress.com/

No comments: