“சொல்லாத சொல்” என்ற நாகூர் ரூமியின் 
கவிதைத் தொகுதி ஒன்று விரைவில் வெளிவர இருக்கிறது.
வெறும் சதை, இரத்தம், எலும்பு, இவைகளால் படைக்கப்பட்டவன்தானா மனிதன்? நிச்சயமாக இல்லை. இவற்றிற்கும் மேலாக உணர்ச்சிகள், பகுத்தறிவு போன்ற குணங்கள் அவனை ஜடப்பொருளை விட்டு வேறுபடுத்திக் காட்டுகிறது.
வெறும் கற்கள், சிமெண்ட், இரும்புக்கம்பிகள் இவற்றால் கட்டப்பட்டதுதானா வீடு? ஆங்கிலத்தில் “House” “Home” இரண்டிற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. “Home” என்பதில் பந்தம், பாசம், உறவு எல்லாமே கலந்திருக்கிறது. “East or West Home is the best” என்றுதான் பழமொழியில் சொல்லப்பட்டிருக்கிறது. அதில் “House” என்ற வார்த்தை கையாளப்படவில்லை.
கவிஞர் ரூமி கட்டிடங்கள் என்று கூறுவது அந்த உன்னத வீட்டைத்தான் என்று புலப்படுகிறது.
கற்களால் ஆனதே
கட்டிடங்கள்
என நினைத்திருந்தேன்
இடிவதற்கு முன்

என்று கூறுகிறார் கவிஞர். இடிந்த பிறகுதான் புரிகிறது வெறும் கற்களுக்கும், இரும்புக் கம்பிகளுக்குப் பின்னால் இனம்புரியாத ஒரு ஈர்ப்பு, சொல்ல இயலாத ஒரு பிணைப்பு அந்த வீட்டோடு இணைந்திருக்கிறது என்று.
அந்தப் பிணைப்பு எப்படிப் பட்டது என்று அறிந்துக் கொள்ள வேண்டுமா?
குடும்பத்தைத் துறந்து, கடல் கடந்து வந்து, திரவியம் தேடுகிறானே பணியாளன்; அவனிடம் கேட்டு பாருங்கள்.
தன் பிறந்த நாட்டை விட்டு, பிறந்த வீட்டை விட்டு அடித்து துரத்தப் பட்டானே பாலஸ்தீனச் சகோதரன்; அவனைக் கேளுங்கள்.
சுனாமியால் அடித்துச் செல்லப்பட்ட தன் வீடு இருந்த இடத்தில் வெறும் இடிபாடுகளுக்கிடையே நின்று வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தானே பாதிக்கப்பட்டவன்; அவனிடம் விசாரித்துப் பாருங்கள்.
“வீடு” என்பதற்கு உண்மையான அர்த்தம் அவனுக்குத்தான் புரியும். இதைத்தான் கவிஞர் கூறுகிறார். மேலும்,
சொற்களால் ஆனதே
கவிதைகள்
என நினைத்திருந்தேன்
மெளனிப்பதற்கு முன்

என்று தன் கருத்தை வெளிப்படுத்துகிறார். கவிதை என்றால் என்ன?
“கருத்துக்களை கற்பனை நயத்தோடு எடுத்துக் கூறுவது கவிதை” என்கிறான் ஆங்கிலக் கவிஞன் ஷெல்லி.
“இரவு பகலாக எண்ணங்கள் தொடருகின்றன. தேவி எழுதென்று சொன்னால் செவி சாய்த்து எழுதுவதே கவிதை” என்று பகர்கிறார் உயர்ந்த மனிதன் Long Fellow.
“உவமை அணிகளிலும் வருணனைகளிலும் விளையாடிக் காலங் கழிப்பவனல்ல கவிஞன். பிறர் அறிய முடியாத அருளாவேசத்தை விளக்குபவன்” என்றுரைக்கிறார் வால்ட் விட்மன்.
கவிதை என்பது வெறும் வார்த்தை ஜாலம் அல்ல. அதற்குப் பின்னால் எவ்வளவோ விடயம் இருக்கிறது. “சொல்லாத சொல்லை” சொன்ன நாகூர் ரூமிக்கே மொளனியாய் இருந்தபோது தெரியாது அவர் சொல்ல வந்த  விடயங்களுக்குப் பின்னால் இத்தனை விடயங்கள் இருக்கின்றதென்று. அடுத்த வரிகளைப் பாருங்கள்.
கதவுகளால் ஆனதே
வாசல்கள்
என நினைத்திருந்தேன்
திறப்பதற்கு முன்

என்கிறார். உதாரணத்திற்கு பள்ளிவாயிலை எடுத்துக் கொள்ளுங்கள். காண்பதற்கு அது ஒரு கட்டிடம். அதற்கு நிலையும் இருக்கிறது, வாசலும் இருக்கிறது, கதவும் இருக்கிறது.
இறைவனை வழிபடுவதற்கு உள்ளே சென்று தியானித்து இருக்கையில்தான் புரிகிறது, எப்படிப்பட்ட ஒரு ஆத்ம திருப்தி, மனச்சாந்தி, உள்ளத்தெளிவு கிடைக்கிறதென்று. கவிதையின் இறுதி வரிகள் இதோ:
இறகுகளால் ஆனதே
சிறகுகள்
என நினைத்திருந்தேன்
பறப்பதற்கு முன்

“முயற்சி திருவினையாக்கும்” என்று சொல்வார்கள். ஒருவன் முயற்சி செய்தால்தான் ஒரு காரியத்தில் வெற்றியடைய முடியும். இறகுகள் வேறு சிறகுகள் வேறு. இந்த வேறுபாட்டை எனது “போன்சாய்” கவிதை நூலில் கீழ்க்கண்டவாறு கவிதை வடித்திருந்தேன்.
வீழ்ந்தபின்தானே
இறகுகள்.. ?

சேர்ந்திருந்து
சீறிப் பாய்கையில்
நீங்கள் சிறகுகள்

நினைத்துப் பாருங்கள்
சோர்ந்து போய்
காதுகுடையும் நீங்கள்

ஒருகாலத்தில்
காற்றையே கிழித்தவர்கள்
என் கற்பனையோடு கவிஞர் ரூமியின் கற்பனையும் ஒத்துப் போகிறது. அல்லாமா இக்பாலின் கவிதை ஒன்று இப்போது நினைவில் வருகிறது.
“பஞ்சணை மெத்தையில் ஓய்வெடுத்துக்
கொள்ள விரும்பாதீர்கள்;
நீங்கள் பறந்து செல்லும் இராஜாளிப் பறவைகள்;
மலையுச்சியிலே உங்கள் கூடுகளை
கட்டிக் கொள்ளுங்கள்”

உயரத்தை எட்ட நினைக்கும் இளைய சமுதாயத்திற்கு இதைவிட நல்ல கருத்தை யாரால் சொல்ல முடியும்?
கவிஞர் ரூமியின் கூற்றும் இதுதான். சிறகுகள் பறப்பதற்கு மட்டுமல்ல. உயரத்தை எட்டுவதற்காகவும்தான்.
- அப்துல் கையூம்
 Filed Under: நாகூர் ரூமி
நன்றி : http://nagoori.wordpress.com/