நான் நாகூருக்குச் சென்று கொண்டிருந்தபோது தொலைபேசி அழைப்பொன்று வந்தது. பேசியவர் நாகூர்க்காரர். பெயர் நௌஷாத். எனக்கு முதலில் அவர் யாரென்று தெரியவில்லை. என்ன விஷயமென்று கேட்டேன். வாழ்த்துக்கள் என்றார். நன்றி என்று சொல்லிவிட்டு எதற்கு என்று கேட்டேன். நல்லி தமிழாக்க விருது கிடைத்ததற்கு காலதாமதமாகப் பாராட்டுகிறார் என்று நினைத்தேன். அவர் சொன்ன விஷயம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
சென்னையில் 13.12.2009 அன்று நடக்க இருந்த இஸ்லாமியத் தமிழ் இலக்கிய 2-ம் மாநில மாநாட்டில், என்னொடு சேர்த்து பெரியார் தாசன், ஆர்னிகா நாசர், சாத்தான் குளம் அப்துல் ஜப்பார் உள்ளிட்ட 15 பேருக்கு விருதுகள் வழங்கப்பட இருக்கின்றன. சிறந்த உரைநடை ஆசிரியர் (!) என்று என்னைத் தேர்ந்தெடுத்து எம்.ஆர்.எம். அப்துல் ரஹீம் அவர்கள் நினைவாக எனக்கு விருது. ஒவ்வொருவருக்கும் பரிசாக ரூ 5000/-ம் உண்டு (இதை ஏன் பொற்கிழி என்று சொல்கிறார்கள்? படித்துக் கிழித்த காலம் முடிந்து இப்போது எழுதிக் கிழிப்பதை சூசகமாக உணர்த்தவா?).ஆனால் எனக்கு எந்தத் தகவலும் வரவில்லை. யுனிவர்சல் பப்ளிஷர்ஸ் நடத்திக் கொண்டிருக்கும் ஷாஜஹான் அவர்களால் எனக்கு அந்த விருது தரப்படுகிறது. ஐயாயிரம் ரூபாய் தரக்கூடிய பல புரவலர்கள் ஒவ்வொரு பெயரில் / தலைப்பில் ஒவ்வொருவருக்கு விருது கொடுத்தார்கள். உதாரணமாக நாகூரின் முன்னால் எம்.எல்.ஏ. நிஜாமுதீன் குலாம் காதிர் நாவலர் பெயரில் ஒரு விருது கொடுத்தார். இது முன்கூட்டியே தெரிந்திருந்தால் நானும் யாராவது ஒரு நல்ல எழுத்தாளருக்கு / கவிஞருக்கு ‘ரூமி விருது’ — நாகூர் ரூமி அல்ல, மௌலானா ஜலாலுத்தீன் ரூமி — கொடுத்திருப்பேன். சரி போகட்டும்.
நான் ஷாஜஹான் அவர்களுக்கு தொலைபேசினேன். என்ன, அழைப்பிதம் வரவில்லையா? என்று ஆச்சரியப்பட்ட அவர் ஆம்பூருக்கு அனுப்பியிருப்பதாகச் சொன்னார். நான் சென்னையில் அப்போது இருந்ததால் சென்னை முகவரிக்கு ஒன்று அனுப்பி வைக்கச் சொன்னேன். அனுப்பினார். அழைப்பிதழ் பார்த்தேன். அது விருது வழங்கும் நிகழ்ச்சியல்ல. இஸ்லாமிய தமிழிலக்கிய மாநாடுதான் அதில் பிரதானம். உபரியாக விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி இருந்தது. அண்ணன் மு.மேத்தாவுக்கு உமறுப்புலவர் விருதாக ஒரு லட்ச ரூபாய் வழங்க இருந்தார்கள்.
விருதுகள் வாங்க இருக்கும் 15 பேரின் பெயர்களும் அச்சிடப்பட்டிருந்த பக்கத்தில் எத்தனை மணிக்கு என்ற விபரமே இல்லை. அது மாநாடு, அதுவும் கவர்னர் பர்னாலா, ஜெகத் ரட்சகன் போன்ற அமைச்சர்களும் வரும் இடம். ஒரு நாள் முழுக்க நடக்கும் செயல்திட்டங்கள். அதில் மாட்டிக்கொண்டு என் நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை. பத்து பக்க அழைப்பிதழில் கடைசியாக எங்கள் பெயர்கள் போடப்பட்டிருந்ததால் இறுதி நிகழ்ச்சியாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். மாலை ஆறு மணிக்கு நானும் சன் தொலைக்காட்சி அரசியல் விமர்சகர் வீரபாண்டியன், நண்பர்கள் டாக்டர் ராஜா ஹுசைன், ராஜேஷ் ஆகியோர் சென்றோம். போய் உட்கார்ந்தோம். மு.மேத்தாவுக்கு விருது பர்னாலா கொடுத்தார். பொதுச் செயலாளர் எஸ். எம். ஹிதாயத்துல்லா பேசினார் என்று சொல்வதைவிட கத்தினார் என்றுதான் சொல்ல வேண்டும். ‘உரத்த சிந்தனை’யாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டாரோ என்னவோ! விழா ஏற்பாடுகள் ரொம்ப சொதப்பலாக இருந்தன. எனக்குப் பின்னால் அமர்ந்திருந்த கனிசிஷ்தி அண்ணன் என்னிடம் ஏதோ சொன்னார். சைகையில். எனக்குப் புரியவில்லை. கடைசியில்தான் புரிந்தது. எங்களுக்கெல்லாம் விருதுகள் காலையிலேயே கொடுத்துவிட்டார்களாம்! நான் ஷாஜஹான் அவர்களைச் சந்தித்து விஷயம் சொன்னேன். அவர் ஏன் காலையிலேயே வரவில்லை என்று கேட்டார். எத்தனை மணிக்கு என்ற குறிப்பு அழைப்பிதழில் இல்லையே என்றேன். இருக்கிறதே என்றார். காட்டினால் உங்கள் காலில் விழுகிறேன் என்றேன். அப்படியெல்லாம் சொல்லாதீர்கள் என்றார். அவர் அனுப்பிய கடிதத்தில் நேரம் குறிப்பிடப்பட்டிருப்பதாகச் சொன்னார். நான் அதை கவனமாகப் பார்க்கவில்லை. என்னுடைய தவறாக இருக்கலாம்.
ஐயாயிரம் ரூபாயைத் தூக்கிக் கொடுத்துவிட்டால் வாலாட்டிக் கொண்டு வந்து வாங்கிக் கொள்வார்கள் என்று நினத்து ஏற்பாடு செய்த மாதிரி இருந்தது. விருது பெற்றவர்கள் எந்த வகையில் கண்ணியம் செய்யப்பட்டார்கள் என்று காலையில் போயிருந்தால் பார்த்திருக்கலாம். ஆம்பூரில் நான் சென்று விசாரித்தபோது அங்கே அழைப்பிதழ் எதுவும் வரவில்லை என்ற தகவல் கிடைத்தது. ஒரு நௌஷாத் எனக்கு தொலைபேசி இருக்காவிட்டால், அல்லது நான் ஷாஜஹான் அவர்களைத் தொடர்பு கொள்ளாமலிருந்தால் இந்த விருது பற்றி எனக்குத் தெரியாமலே போயிருக்கலாம். தெரியாமலே போயிருந்திருக்கலாம் என்றே இப்போது தோன்றுகிறது.
எல்லாவற்றையும்விட, விருதுகள் அனைத்துக்கும் இருந்த பொதுத்தன்மை என்னவெனில், அந்த விருதுகளின் பொதுப் பெயர்தான் — இலக்கியச் சுடர். நாங்கள் பெற்றது இலக்கியச் சுடர் விருது. அதல்லாமல் பதினோறு பேருக்கு ‘சமுதாயச் சுடர்’ என்ற விருது. சமுதாயத்திலே பதினோறு பேர் ஒளிவிட, இலக்கியத்திலே பதினைந்து பேர் ஒளிவிட இந்த விருதுகள்!
எம்.ஆர்.எம். அப்துல் ரஹீம் நினைவு விருதாக மட்டும் அது இல்லாமலிருந்தால் நான் நிச்சயம் அதை வாங்கப் போயிருக்க மாட்டேன். காரணம் எம்.ஆர்.எம். அவர்கள் என் மரியாதைக்குரிய மூத்த தலைமுறை சாதனையாளர். தனிப்பட்ட முறையில் சுடர், மெழுகு வர்த்தி, சிம்னி விளக்கு, ட்யூப் லைட் போன்ற பட்டங்கள் வழங்குவதையும் பெறுவதையும் நான் ஒரு பாரம்பரிய நகைச்சுவையாகவே நினைக்கிறேன். எம்.ஆர்.எம். அப்துல் ரஹீம் நினைவு விருது, குலாம் காதிர் நாவலர் விருது என்பது சரி. அதென்ன இலக்கியச் சுடர்? சமுதாயச் சுடர்? இவ்வகையான பெயர்களை வைக்கின்ற அல்லது ஏற்றுக்கொள்கின்ற மனநிலை கொண்டவர்கள் ஒன்று சிந்தனையற்றவர்கள் அல்லது அரசியலாக்கப்பட்ட சிந்தனை கொண்டவர்கள். கவிக்கோவின் சம உரிமை பத்திரிக்கையில் இது பற்றி வந்திருந்த ஒரு பக்கத்தில் என் பெயருக்கு பதிலாக வேறொருவர் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. அப்படியானால் அவரை ஏன் கைகழுவி விட்டார்கள்? என்னை ஏன் தேர்ந்தெடுத்தார்கள்? என்னைத் தேர்ந்தெடுத்த பிறகு அவர் பெயர் கொண்ட பத்திரிக்கைப் பக்கத்தை ஏன் விழா முடிந்த பிறகு வெளி வந்த அந்தப் பத்திரிக்கையில் போட்டார்கள்? இதன் பின்னால்கூட ஏதாகிலும் அரசியல் உள்ளதா?
கவியரசு, கவிப்பேரரசு, கவிக்கோ, அறிஞர், பேரறிஞர் — இப்படியெல்லாம் அழைப்பதும், அழைக்கப்படுவதை விரும்புவதும் தமிழ்நாட்டின் சாபக்கேடு என்று சொல்லலாம். அல்லது தமிழர்கள் உலகுக்குச் சமர்ப்பிக்கும் நகைச்சுவை என்று சொல்லலாம். இந்தப் பட்டப் பெயர்களின் பின்னால் உள்ளவர்கள் உண்மையிலேயே திறமைசாலிகள்தான். ஆனால் இந்தப் பெயர்களை அவர்களாக முன்வந்து உதறுவது சர்வதேச அரங்கில் நிச்சயமாக அவர்களுடைய மதிப்பை உயர்த்தும்.
மிக்க நன்றி : http://nagoorumi.wordpress.com
No comments:
Post a Comment