Monday, February 27, 2023

'உஹத் போர்' எனப்படும் தற்காப்புப்போர் /அப்துல்கையூம்

 




'உஹத் போர்' எனப்படும் தற்காப்புப்போர் நடந்த இடத்தில்தான் இப்போது நான் நின்றுக் கொண்டிருந்தேன். உம்ரா, ஹஜ் செல்லும் பயணிகள் இந்த இடத்தைக் காணாமல் திரும்புவதில்லை.

பெருமானார் தலைமையேற்று நடத்திய உஹத் போர் இஸ்லாமியச் சரித்திரத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய இரண்டாவது மிகப் பெரும் யுத்தமாக கருதப்படுகிறது.

கி.பி.625-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23-ஆம் தேதி மதீனாவின் வடக்குப் புற எல்லையில் உஹத் மலையடிவாரத்தில் இப்போர் நடைபெற்றது. எனவே இதற்கு 'உஹத் போர்' என்ற பெயர் வந்தது.

மதீனா மாநகரம்,  மலைகள் அரணாகச் சூழப்பட்டு, இயற்கையே ஒரு பாதுகாப்பு வளையம் அமைத்து தந்திருந்தது. உஹத்போர் நடைபெறுவதற்கு ஒரு வருடத்திற்கு முன்னர் பெருமானார் படையுடன் நடந்த பத்ருப் போரில் மக்கா குறைஷிகள் பெரும் தோல்வியைச் சந்தித்திருந்தனர். இந்த தோல்வியை அவர்களால் ஏற்றுக் கொள்ளவே இயலவில்லை. பழிக்குப்பழி வாங்க சந்தர்ப்பம் எதிர்நோக்கி காத்திருந்தார்கள்.

பெருமானாரின் பிரதான எதிரியாக விளங்கிய அபூஜஹ்ல் வாளால் அடித்து வீழ்த்தப்பட்டது பத்ருப் போரில்தான். எனவே அதற்கு பழி தீர்க்கும் வகையில் மதீனாவுக்கு குறைஷிகள் படை எடுத்தார்கள். பெருமானாரைக் கொல்ல வேண்டும், மதீனாவைக் கைப்பற்ற வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார்கள்.


உஹத் போரில் ஈடுபட மதினாவிலிருந்து கிட்டத்தட்ட 1000 பேர்களை பெருமானார் அவர்கள் திரட்டிச் சென்றார்கள்.

அச்சமயம் எதிரிகள் மிக அதிகமான எண்ணிக்கையில் உள்ளனர்  என்று அப்துல்லாஹ் இப்னு உபை என்பவன் அநாவசியமான  பீதியைக் கிளப்பி விட   300  நயவஞ்சகர்கள்  மதீனாவுக்கு பயந்து  திரும்பி ஓடி விட்டார்கள். மீதியிருந்தோர் வெறும் 700 பேர்கள்.

ஏனையோரை ஐம்பது, ஐம்பது பேராக அணிவகுத்து எதிரிகளைத் தாக்க வேண்டும் என்று பெருமானார் போர் வியூகம் அமைத்திருந்தார்கள்.

அபூசுஃப்யான் தலைமையில்  3000  காலாட்படை வீரர்கள், 3000  ஒட்டகங்கள், 200 குதிரை வீரர்கள் என மக்கத்து எதிரிகள் பெரும் படையைத் திரட்டிக் கொண்டு வந்திருந்தார்கள்.

நபிகளாரின் பிரதானமான எதிரிகளில் ஒருவனான அபூஜஹ்லின் மகன் இக்ரிமா,  குறைஷி படைத்தளபதிகளில் ஒருவராக இருந்தார். இக்ரிமாவின் மனைவி உம் ஹக்கீம் போன்றவர்கள் பின்னணியில் இருந்துக்கொண்டு குறைஷிகளை முரசு கொட்டி, இசை பாடி உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

அம்ர் இப்னு அல் ஆஸ், அபூ அமீர் ஆகியோரும் இவ்வணியில் இருந்தனர். மக்காவாசிகளின் படைக்கு தலைமை ஏற்று வந்த தளபதிகளில் மிக முக்கியமானவர் காலித் இப்னு வலீத் என்ற மாவீரர்.. அப்போது இவர் இஸ்லாத்தில் இணையவில்லை.

நபிகளாரின் பக்கமோ வெறும்  700  காலாட்படை, 50 வில்வித்தை வீரர்கள், 4 குதிரைப்படை வீரர்கள் அவ்வளவுதான்.

நபிகளாரின் படையில்  பெருமானாரின் சிறிய தந்தை ஹம்ஸா இப்னு அப்துல் முத்தலிப் (ரலி),  பெருமானாரின் மருமகனார் வீரர் அலி (ரலி), அப்துல்லாஹ் இப்னு ஜுபைர், ஸஅது இப்னு அபூ வக்காஸ் (ரலி),   ஆஸிம் இப்னு ஸாமிதி (ரலி),  ஜுபைர் இப்னு அவ்வாம் (ரலி), தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரலி) மற்றும் பலர் அணி வகுத்து நின்றனர். 

நான் இப்போது நின்றுக் கொண்டிருக்கும் குன்றுக்குப் பெயர் ஜபல்-அல்-ருமா. இந்தக் குன்றின் மீதுதான் வில் வித்தை வீரர்கள் 50 பேர்களை நபிகள் நாயகம் நிறுத்தி வைத்திருந்தார்கள்.  "நான் சொல்லும் வரை இங்கிருந்து நீங்கள் யாரும் நகரக்கூடாது" என்று கட்டளையும் பிறப்பித்திருந்தார்கள்.

ஒரு கட்டத்தில், மக்கத்து குறைஷிகள் புறமுதுகிட்டு பின்வாங்கிச் செல்ல,  "நாம் போரில் வெற்றி பெற்று விட்டோம்" என்று நம்பி,  நபிகளாரின் கட்டளையும் மீறி, அவர்கள் விட்டுச் சென்ற போர் செல்வங்களுக்கு ஆசைப்பட்டு,  வெற்றிக் களிப்பைக் கொண்டாட குன்றிலிருந்து கீழிறங்கி வந்தார்கள்.

 நாயகமவர்களால் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் , நபிகளாரின் கட்டளையை நினைவுபடுத்தியும் கூட,   இவர்கள் அதனை  செவிமடுக்கவில்லை

குன்றின் மீது வீரர்கள் எவருமில்லை என்றறிந்து காலித் இப்னு வலீத் தலைமையில் குன்றின் பின்புறத்திலிருந்து வந்து  நபியவர்களின் படைகளை எதிரிகள் மூர்க்கமாக தாக்கத் தொடங்கினார்கள்.

இதை சற்றும் எதிர்பாராத முஸ்லிம்கள் சிதறி ஓடிப் போனார்கள். இதனால் நபியவர்களின் படையினருக்கு பெரும் சேதமேற்பட்டது. ஏறக்குறைய 70 பேர்கள் இப்போரில் இறைவழியில் உயிர் நீத்தார்கள்.

அந்தி சாயும் நேரம் அது. எதிரிப்படை வீரர்களில் யாரோ ஒருவன் எறிந்த கல் நபியவர்களின் வாயில் பட்டு, அவர்களின் பல் ஒன்று உடைந்து வாயிலிருந்து இரத்தம் கொட்டியது. இரத்தம் கொட்டியதை அறிந்த எதிரிப் படையினர் 'முகம்மது இறந்து விட்டார்' என்று கோஷமிட்டனர். வந்த காரியம் முடிந்து விட்டது, யுத்தம் நிறைவேறிவிட்டது என்று கூறி மக்கா குறைஷிகள் குதிரைகள், ஒட்டகங்களோடு மக்காவுக்குத் திரும்பினர்.

உஹத் போரில் முஸ்லீம்களுக்கு வெற்றியானது உள்ளங்கை நெல்லிக்கனியாக இருந்தது. நபிகளாரின் கட்டளையை அசட்டை செய்ததாலும், அற்ப பொருளாசையினாலும் ஏற்பட்ட தோல்வி இது.

இந்தக் குன்றின் மீது ஏறி நின்று பார்த்தால்  சுற்றுச்சுவர்கள் எழுப்பப்பட்ட மைதான எல்லைக்குள் மண்ணறைகள் காட்சி அளிக்கின்றன. இதே குன்றின் மீது ஏறி நின்றுதான் பெருமானார் அவர்கள் போர்க்களத்தைப் பார்வையிட்டார்கள். எந்தெந்த பகுதியில் நாயகத்திருமேனியின் கால்தடங்கள் பட்டதோ ! இதற்காகவே ஏராளமானோர் அந்த குன்றின் மீது ஏறுவதைப் பார்த்தேன்.

அதன் அருகிலேயேமஸ்ஜிதே ஷுஹதாஎன்ற அழகிய பள்ளிவாயில் ஒன்றை கட்டி வைத்திருக்கிறது சவுதி அரசாங்கம். நான் 2001 -ஆம் ஆண்டு ஹஜ் சென்ற காலத்திலும், அதன் பிறகு உம்ரா சென்ற காலத்திலும் இப்பள்ளிவாயில் கட்டப்படவில்லை. 2017 - ஆம் வருடத்தில்தான் இதனை கட்டி முடித்திருக்கிறார்கள்.

இதே மைதானத்தில்தானே சுமார் 70 நபித்தோழர்கள் இஸ்லாத்திற்காக உயிர்த்தியாகம் செய்தார்கள் என்பதை எண்ணிப்பார்த்தபோது  என்னை மெய்ச்சிலிர்க்க வைத்தது.

நபிகளாரின் சிறிய தந்தை ஹம்ஸா (ரலி) வெட்டி வீழ்த்தப்பட்டு அவருடைய இறந்த மேனி அபூசுஃப்யானின் மனைவி ஹிந்த் பின்த் உத்பா என்பவரால் கண்டமேனிக்கு சிதைக்கப்பட்ட நிகழ்வுகளெல்லாம் மனக்கண்முன் காட்சி தந்தது. ஹம்ஸா (ரலி) அவர்களின் ஈரல்குலையை உருவி, மாலையாய் அணிந்து,  அதை ஹிந்த் கடித்துத் துப்பிய நிகழ்வெல்லாம் நினைவில் நிழலாடியது.  இறந்தவர்களின் மூக்கையும், காதுகளையும் அறுத்து, கால் கொலுசாக்கி அப்பெண்மணி ஆனந்தக் கூத்தாடினார்.

பத்ருப் போரில் இப்பெண்மணியின் மகன்  ஹன்ளலா இப்னு அபூ ஸுஃப்யான், இவரது தந்தை உத்பா, சகோதரர், மாமா ஆகியோர் கொல்லப்பட்டதால் இத்தகைய கொடூரமான வெறிச்செயலை புரிய அவரைத் தூண்டியது.

இதே ஹிந்த் என்ற பெண்மணி பிற்காலத்தில் நடந்த தவறுக்கு வெட்கித் தலை குனிந்து பெருமானாரிடம் மன்னிப்பு கேட்டபோது, தயக்கமின்றி பெரிய மனதுடன் மன்னித்து,  இறைவனிடமும் இவருக்காக மன்னிப்பும் கோரினார்கள். பெருமானாரின் பண்பைக் கண்டு இவர்  இஸ்லாத்தை ஏற்று , ஒழுக்கமான வாழ்க்கையைத் தொடர்ந்த ஹிந்த் பின்த் உத்பா (ரலி) என்று போற்றப்பட்டவர் இவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இப்பேர்ப்பட்ட கொடிய செயலை புரிந்த ஒரு மனுஷியை நபியவர்கள் மன்னித்த உயர்பண்பு மேலைநாட்டு வரலாற்றாசிரியர்களையும் வியப்பில் ஆழ்த்துகிறது.

நபிகளாரின் சிறிய தந்தை ஹம்ஸா (ரலி) அவர்கள் எளிதில் வீழ்த்தக்கூடிய நபர் அல்ல. ஆஜானுபாகுவான தோற்றம் கொண்டவர். வாள்வீச்சில் கெட்டிக்காரர். போர்த்திறம் அறிந்த மாவீரர்.

இவரை நேருக்கு நேர் போரிட்டு கொல்ல முடியாது என்பது குறைஷி படையிலிருந்த ஜுபைர் இப்னு முத்யிம் என்பவனுக்கு நன்றாகத் தெரியும்.

ஆகையால்  ஈட்டி எறிவதில் திறமை வாய்ந்த வஹ்ஷீ இப்னு ஹர்ப் என்ற தனது எத்தியோப்பிய  அடிமையிடம்  "நீ ஹம்ஸாவை கொன்றால் நீ அடிமைத் தளையிலிருந்து விடுதலையாவாய்" என்று கூறி அவனை ஏவி விட்டிருந்தார். காரணம் பத்ருப் போரில் ஜுபைருடைய தந்தையின் சகோதரர் கொல்லப்பட்டிருந்தார்.

வஹ்ஷீ தருணம் பார்த்து ஒளிந்திருந்து தூரத்திலிருந்து ஈட்டியை குறிப்பார்த்து எறிய அது ஹம்ஸா (ரலி) அவர்களின் மேனியைக் கிழித்துக் கொண்டு பாய்ந்து அவர்களின் உயிரைக் குடித்தது.

இந்தக் கொடுமைகள் யாவும் நிகழ்ந்தது இதோ என் கண்முன் காட்சிதரும் இந்த மைதானத்தில்தான். ஷஹீதான அத்தனைப் பேர்களும் பெருமானார் கையால் இங்குதான் அடக்கம் செய்யப்பட்டனர்.

இந்த உஹத் போர் பல படிப்பினைகளை முஸ்லீம்களுக்கு கற்றுத் தந்தது.

1.முஸ்லீம்கள் என்ற ஒரே காரணத்தினால் மட்டும் உங்களுக்கு வெற்றி கிடைத்துவிடும் என்ற அதீத நம்பிக்கை பயன் தராது.

2.நபிகளாரின் கட்டளையை புறந்தள்ளுவோருக்கு அல்லது அலட்சியப்படுத்துவோருக்கு என்றும் வெற்றி கிட்டாது.

3.அற்ப பொருளாசைக்கு ஆசைப்பட்டால் முடிவு விபரீதமாகும்.

என்பன போன்ற பல படிப்பினைகளை இப்போர் முஸ்லீம்களுக்கு கற்பித்தது.

இப்போரில் வீரர் அலி (ரலி) அவர்களின் அபாரமான போர்த்திறம்,  இறுதிவரை நபிகள் நாயகத்திற்கு அரணாக நின்று பாதுகாப்பு வழங்கிய விதம் பிரமிக்கத்தக்கதாய் இருந்தது.

ஆரம்பக் காலத்தில் இம்மண்ணில் இஸ்லாம் என்ற மார்க்கம் வேரூன்ற நபித்தோழர்கள் எப்பேர்ப்பட்ட உயிர்த்தியாகங்கள் புரிந்தனர் என்பதை இதுபோன்ற இடங்களை காணும்போது நம்மால் விளங்கிக் கொள்ள முடிகிறது.

#அப்துல்கையூம்

No comments: