Sunday, December 3, 2017

ஸோஃபியா!

அந்த மாநாட்டில் கலந்துகொண்டு வியப்பேற்படுத்திய இன்னுமொரு ஆளுமை....
உயிருள்ள நம்மினங்களைப் பார்த்து "நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம் சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?" என்று பாரதி கேட்டானே, இன்று Artificial Intelligence (AI) என்றழைக்கப்படும் ஒரு தோற்ற மயக்கம் உலகத்தை மயக்கி வியப்பேற்படுத்தியது இம்மாநாட்டில் என்றால் மிகையில்லை.
ஆம், கண்டேன் அந்த 'ஸோஃபியா'வை... அவளொரு கானலின் நீரோ? அல்லது வெறும் காட்சிப் பிழையோ அல்ல! அழகான கண்களும், குற்றமில்லாத புன்னகையும் கொண்ட அதிபுத்திசாலியான அரபு மங்கை. உண்மைதான் மனித குணாதிசயங்களுடன் படைக்கப்பட்டிருக்கும் ஒரு 'ரோபோ(ட்)' டிற்கு உலகிலேயே முதன்முதலாக சவூதி அரேபியா தனது குடியுரிமையை வழங்கியிருக்கிறது.

இந்த மாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருந்த ஐந்து பெரும் அறிவுத் தூதர்களில் 'ஸோஃபியா'வும் ஒருத்தி! 'ஸோஃபியா' துபை வந்திருந்தாள். கோமான் முதல் குடிமகன் வரையிலும் இவளோடு யாரும் பேசாமல் செல்லவில்லை. அத்தனை கேள்விகளுக்கும் மனிதர்களைப் போலவே சிரித்து, புன்னகைத்து, கண் இமைத்து, யார் கேள்வி கேட்கிறார்களோ அவர்கள் பக்கம் திரும்பி பதில் சொல்லும்வண்ணம் வடிவமைக்கப்பட்டிருக்கிறாள். ஊடகங்கள் துளைத்தெடுத்த கேள்விகளுக்கு மிகவும் அனாசயமாக பதில்களை அள்ளிவீசினாள். தன்னிடம் உள்ளீடு (Input) இல்லாத கேள்விகளுக்கு அழகாகப் புன்னகைத்துவிட்டு, "தற்சமயம் இதற்கான பதில் என்னிடம் இல்லை. விரைவில் நான் 'அப்டேட்' செய்யப்படவிருக்கிறேன். அதன்பின் பதிலளிக்கிறேன்." என்று தப்பிக்கிறாள்!
"நீ எங்கே பிறந்தாய்?" என்றொரு பெண் கேட்க, "நான் ஹாங்காங்கில் உருவாக்கப்பட்டேன். மனிதர்களோடு இணைந்து பயணிக்க, அவர்களின் வாழ்க்கையில் உதவ நான் பெரிதும் விரும்புகிறேன்." என்கிறாள்.
சரி, இவள் வ(ளர்)ந்த கதையைப் பாப்போம்.
'ஹாங்காங்'கைச் சேர்ந்த டாக்டர். டேவிட் ஹன்சன் எனும் ஆராய்ச்சியாளர், ரோபோ(ட்) மற்றும் Artificial Intelligence (AI) தொழில்நுட்பத்தில் பல சாதனைகள் புரிந்துள்ளார். நாசா விருது உள்பட உலகின் தலைசிறந்த விருதுகளெல்லாம் இவரது கண்டுபிடிப்புகளுக்கென தேடிவந்திருக்கிறது. தனது கண்டுபிடிப்புகள், கல்வி, அறிவியல், தொழில்முனைவு மற்றும் கலை ஆகிய துறைகளுக்குப் பயனுள்ளதாக இருக்கவேண்டும் என்று விரும்பினார். அதன் தொடர்ச்சியில் அவரால் உருவானவள்தான் ஸோஃபியா.
இயந்திர மனிதர் என்றாலே வேறொரு உருவம் நமது பொதுப்புத்தியில் திணிக்கப்பட்டிருந்தது அல்லவா? மனிதர்கள் போலவே பார்க்கவும் ( facial recognition), கேட்கவும் (voice recognition), பேசவும், உள்ளீடுகளுக்கேற்ப சிந்திக்கவும் ( artificial intelligence) கொண்ட இயந்திரத்திற்கு மனிதன் போன்ற தோற்றம் தேவை என்று உணர்ந்தார் டாக்டர். ஹான்சன். அப்போது அவருக்குத் தோன்றியது ஹாலிவுட் நடிகை ஆட்ரி ஹெப்பன். பிறகு அவரது முகத்தோற்றத்தில் உருவானாள் ஸோஃபியா(2015).
ஸோஃபியா உருவாக்கப்பட்டவுடன், வயதான முதியோர்களுக்கு உதவுவதற்காக, பொது இடங்கள் மற்றும் பூங்காக்கள் என்று பொதுமக்கள் கூடும் இடங்களில் ஒழுங்குப் பணிகளைச் செய்திட என்ற திட்டங்களுடன்தான் வெளியில் வந்தாள். ஆனால், அவளது தொழிநுட்ப அறிவைக் கண்டு வியந்த உலகம், தத்தம் நாடுகளுக்கு அழைத்தது. ஐநா மன்றம் வரையிலும் சென்று பேசிவிட்டுவந்தாள். இறுதியாக சவூதி அரேபியா குடியுரிமை கொடுத்து தம் நாட்டின் குடிமகளாக அங்கீகரித்துள்ளது. இது தமக்குக் கிடைத்த பெருமை என்கிறாள் ஸோஃபியா.
துபை மாநாட்டில் இரண்டுநாள்கள் தனது மாஸ்டர், டாக்டர் ஹன்சன் உடன் கலந்துகொண்டு, வந்திருந்த அத்தனை பேரின் வினாக்களுக்கும் முகம் சுளிக்காமல்(!) விடையளித்து, தாம் (தமது சந்ததிகளுடன்) எதிர்காலத்தில் செய்யப்போகும் சாதனைகளையும், மனிதர்களுப் போட்டியாக இல்லாமல், உறுதுணையாக இருப்பேன் என்றும் சொல்லிக்கொண்டிருந்தாள்.............
ஸோஃபியா பொதுமக்களோடு பேசிய வீடியோ லிங்க் வீடியோ லிங்க்

-ரபீக் சுலைமான் Rafeeq Sulaiman

No comments: