Saturday, December 2, 2017

குஞ்ஞு முஹம்மது!


கட்டுரை ஆசிரியர் அபூபிலால் கத்தரில் வசிப்பவர். தம்மைச் சுற்றி வாழும் மனிதர்களை வாசிப்பவர். அவ்வாறு அவர் வாசித்தவர்களுள் ஒருவரான ‘ஹாஜிக்கா’வைப் பற்றி நமது சத்தியமார்க்கம் தளத்தில் இதற்கு முன்னர் அறிமுகப்படுத்தி இருந்தார்.
இப்போது இன்னொருவர். பெயர் குஞ்ஞு முஹம்மது!
குஞ்ஞு முஹம்மது சாஹிபின் பூர்வீகம் கோழிக்கோடு. கத்தரின் எண்ணெய்க் கம்பெனி ஒன்றின் இயந்திரவியல் பிரிவில் ஒரு மேலாளருக்குச் செயலாளராகச் சுமார் இருபத்தி ஐந்து ஆண்டுகள் தொடர் பணியாற்றல். அறுபதாவது வயதில், சுமார் முப்பத்துச் சொச்சம் ஆண்டுகள் வெளிநாட்டு வாழ்க்கைக்குப் பின், ஆறு குழந்தைகளுள் இரு மகள்களை மருத்துவர்களாகவும் ஒரு மகனைப் பொறியாளராகவும் உருவாக்கிவிட்ட உள நிறைவோடு ஓய்வுபெற்றுக் குடும்பத்துடன் ஊருக்குப் போய்ச் சேர்ந்தாகிவிட்டது.

இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நான் கத்தரில் காலடி வைத்தபோது கிடைத்த நட்புகளுள் தலையாயது குஞ்ஞு முஹம்மது சாஹிபினுடையது. ஒரு மக்ரிப் தொழுகைக்குபின் பள்ளி வாசலின் வராந்தாவில் ஐந்தாறு பேர் சுற்றியிருக்க, நீண்ட தாடியுடனும் மெல்லிய உருவத்துடன் படபடவெனப் பேசிக்கொண்டிருந்தார் குஞ்ஞு முஹம்மது சாஹிப். அரபிகள் தரிக்கும் வெள்ளை நிறத்தில் நீண்ட அங்கியும் தொப்பியும்.
முதல் நோட்டத்தில் தப்லீக் அல்லது மார்க்க வகுப்பு நடைபெறுவது போல இருந்த அச்சிறு குழுமத்தில், எனக்குத் தெரிந்த ஒருவரும் இருந்ததால் சிறிது நேரம் அங்கிருக்கும்படி ஆயிற்று. வெளியிலிருந்து பார்ப்பவருக்குப் பலதரப்பட்ட விஷயங்களை விவாதிப்பது போல இருந்தாலும் விவாதிக்கப்பட்டதென்னவோ ஒருதரப்பட்ட விஷயம் மட்டுமே.
விஷயம் சுற்றியிருந்த மனிதர்களின் பிரச்சினைகள்தாம்.
ஒருவருக்கு வேலை இல்லையாதலால் உணவுக்குப் பணம் இல்லை. அதனால் வேலைவேண்டும். இன்னொருவருக்கு ஐந்து மாதமாகச் சம்பளம் வரவில்லை. கம்பெனியில் போய்ப் பேசி சம்பளம் வாங்கித்தரவேண்டும். வீட்டுச் சாரதியான மற்றொருவருக்கு, கவலைக்கிடமான தாயாரைப் பார்க்க ஊருக்குச் செல்லவேண்டும்; எஜமானன் விடமாட்டேன் என்கிறான். இப்படிப் பலப் பல பிரச்சினைகள். வெளிநாடு வாழ் பிரவாசி(சஃபராளி)களுக்கே உரிய பிரச்சினைகள்.
இவ்வாறான கஷ்டங்களில் வழி தெரியாமல் சுற்றிக் கொண்டிருப்பவர்கள், யார் யாரோ சொல்லக்கேட்டுக் கடைசியாக வந்தடையும் இடம் குஞ்ஞு முஹம்மது சாஹிபின் இந்தப் பள்ளி வராந்தா. தினமும் மாலை மக்ரிபிற்குப்பின் கூடும் மனு நீதி நாளில், பலருக்கும் இயன்ற உதவிகளைச் செய்து அல்லது செய்யக் கூடியவருகுக்குப் பரிந்துரை செய்து, சில நூறு பேருக்காவது தமது கஷ்டங்களில் இருந்து வெளிவர உதவி செய்திருக்கின்றார்.
அந்தப் பள்ளியில் இருந்து இப்படிப் பொதுச் சேவை செய்து கொண்டிருந்த நாட்களில், தொழுகைக்கு வரும் சோமாலி ஒருவரின் செயல் வித்தியாசமாகப் பட்டது நமது குஞ்ஞு முஹம்மது சாஹிபுக்கு.
நடுத்தர வயதுடைய சோமாலியர், அசர் தொழுகை முடிந்தவுடன் குர்ஆன்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அலமாரியின் பக்கத்தில் போய் நின்று குர்ஆன்களை எடுத்துத் துடைத்து அடுக்கி வைப்பதும், முன்-பின் அட்டைகளைப் பிரித்து வாசம் பிடிப்பதும், சிலநேரம் நெஞ்சோடு அணைத்துவைப்பதும், கண்களில் ஒற்றிக் கொள்வதுமாக இருப்பார்; மீண்டும் அடுக்கி வைப்பார்.
இது ஏறக்குறைய அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சி! விடுவாரா நம் குஞ்ஞு முஹம்மது சாஹிப்?. “அவரிடம் ஒரு திரைக்கதை இருப்பதற்கான எல்லா சாத்தியமும் இருக்கிறது” என்று என்னிடம் சொல்லிவிட்டு சோமாலியரிடம் கதை கேட்கப் போனார். சிறிது தினங்கள் பிடி கொடுக்காத அந்த சோமாலியச் சேட்டன், இறுதியில் குஞ்ஞு முஹம்மது சாஹிபிடம் சொன்ன கதை:
தாய் நாடான சோமாலியாவில் ஒரு நிறுவனத்தில் காவலாளராக வேலை செய்திருக்கின்றார் சோசேட்டன். சோமாலியாவிலேயே பின் தங்கிய (!) பகுதியில் மிகவும் ஏழ்மையான குடும்பம். குடிசை வீடு. ஒரு நாளுக்கு ஒரு நேரச் சாப்பாட்டுக்கு வழி உண்டு. இருநேரம் கிடைத்தால் பெருநாள்போல். தண்ணீருக்குக் காலையில் குடங்களைத் தலையில் சுமந்து கொண்டுக் கிளம்பினால் - இடையில் யாரும் கொள்ளையடித்துச் செல்லவில்லை என்றால் - மதியம் தண்ணீரோடு குடிசை வந்து சேரலாம்.
இந்நிலையிலும் சோசேட்டன் பாடசாலைக்குச் செல்வதை விடவில்லை. புத்தகம் மற்றும் எழுது பொருட்கள் எல்லாம் அம்மக்களுக்கு ஆடம்பரத்திற்பாற்பட்டது. அதனால் ஒரு புத்தகத்தை வைத்துப் பலர் படிக்கவேண்டும். பாடசாலையில் குர்ஆன் பாடமும் உண்டு. முழுமையான குர்ஆன் அந்த ஊரிலேயே ஒன்றுதானாம்.
பாடசாலையில் மாணவர்களுக்கு முழுக் குர்ஆனை, முப்பதாகப் பிரித்து ஒரு ஜுஸ்வுவை ஒரு புத்தகமாக்கி அதை வைத்து ஒரு குழுவிற்கு ஓதக் கொடுப்பார்கள். பிரதிகள் மாறிக் கொண்டே இருக்கும்.
சோசேட்டன் பள்ளிப் படிப்பை முடித்த அச் சிறுவயதில் ஒரு சபதம் எடுத்துக் கொண்டு வெளிவந்தார். அதாகப்பட்டது, ஒரு முழு குர்ஆனைத் தன்வசம் வைத்திருக்க வேண்டும். தனக்கே சொந்தமாக!
இங்கு, பள்ளியில் குர்ஆன்கள் மொத்தமாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்த உற்சாகத்திலும் சந்தோஷத்திலும் சோசேட்டன் தன்னையறியாமல் மேற்படி காரியங்களைச் செய்திருக்கிறார்.
மனத்தைப் பிசைந்த சோசேட்டனின் கடந்த கால நிகழ்வுகள் ஏற்படுத்திய ஏக்கமும் இயல்புக்கு மாற்றமான அவரது நிகழ்கால நடவடிக்கைகளும் குஞ்ஞு முஹம்மது சாஹிபால் ஜீரணிக்க இயலாதவையாக இருந்தன. “அவை, சில நாள்கள் தூங்க விடாத கனவாகத் துரத்தியது” என்று அவர் பின்னாட்களில் சொல்லியிருக்கிறார்.
அல்லும் பகலும் ஆலோசனை செய்து ஒரு மாஸ்டர் பிளான் தயாரித்தார். முதலில், "பழைய, உபயோகப்படுத்தப் படாத, சேதமுற்ற குர்ஆன்கள் ஏற்றுக்கொள்ளப்படும்" எனும் வேண்டுகோளை, அரபி, ஆங்கில, மலையாள மொழிகளில் கம்பியூட்டர் பிரிண்டுகள் A4 அளவில் அடித்துவருமாறு என்னிடம் சொன்னார். வரப்போகும் பிரதிகளைச் சேமிப்பதற்காக ஒரு மரப்பெட்டியும் பள்ளியில் வைக்கப்பட்டது.
என்ன செய்யலாம் என்று தெரியாமல் வீட்டில் வைத்திருந்த பழைய குர்ஆன் பிரதிகள் ஒன்றிரண்டாக, ஐந்தாறாக, பத்திருபதாக இரண்டே நாட்களில் பலரிடமிருந்தும் வர ஆரம்பித்தன. மரப்பெட்டி வழிந்தது.
தன் கத்தரி மேலாளரின், உபயோகத்தில் இல்லாத ஒரு வீட்டை இலவசமாகச் சில நாட்களுக்கு எடுத்தாயிற்று. குர்ஆன் பிரதிகள் இடமாற்றம் செய்யப்பட்டு, வீட்டின் மூன்று அறைகள் முழுவதும் குர்ஆன், குர்ஆன், குர்ஆன் என்றாயிற்று.
அந்தவீட்டில் குர்ஆனைச் செப்பனிடுவதிலும் புதுப்பித்ததிலும், தரக் கட்டுப்பாட்டிலும் எனது நிறைய நாள்கள் கழிந்திருக்கின்றன. பகுதி நேர வேலையாக. அப்படி உருவாக்கப்பட்ட குர்ஆன்கள் பின்னர் இங்குள்ள சில அறக்கட்டளைகளின் வழியாக ஆப்பிரிக்க நாடுகளுக்கு அனுப்பப்பட்டன.
oOo
குர்ஆன் பிரதிகளுக்கான உழைப்பில் அவ்வப்போது ஒத்துழைப்பு நல்கிய என்னுடன் பணியாற்றும் ஃபலஸ்தீனர் ஒருவர் குர்ஆனின் அருமையான காணொளித் துண்டு ஒன்றை எனக்கு அனுப்பியிருந்தார்.
குர்ஆன் வசனங்கனை அழகிய ஏழு வேறுபட்ட விதங்களில் (Styles) ஓதலாம். சிலர் பத்து வகைகள் இருக்கின்றன என்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன். அப்படி ஆப்பிரிக்கர் ஒருவர் ஒரு வசனத்தின் ஒரு பகுதியை ஏழு விதங்களிலும் ஓதும் அருமையான ஒளித்துணுக்கு அது. குர்ஆனின்அழகிய அத்தியாயம் என்று சிறப்பிக்கப்படும் ஸூரா "யூசுஃப்".
கதவுகளைத் தாழிட்டுக் கொண்டு (தன் விருப்பதிற்கு இணங்குமாறு) “வாரும்!” என்று அழைத்தாள் - (அதற்கு அவர் மறுத்து,) “அல்லாஹ் (இத்தீய செயலிலிருந்து) என்னைக் காத்தருள்வானாக!"
என வரும் வசனத்தின் பகுதிதான். ஓதுபவர் ஏழை ஆப்பிரிக்க ஜிம்பாம்வே நாட்டினர். கண்களை நிறைத்த அந்தக் காட்சி நமது சோசேட்டனையும் குஞ்ஞு முஹம்மது சாஹிபையும் நினைவூட்டியதைத் தவிர்க்க இயலவில்லை. நீங்களும் கேளுங்கள்:
சத்தியமார்க்கம்.காம்
அபூ பிலால்

No comments: