Sunday, December 3, 2017

இவன் யாரென்று தெரிகின்றதா?

இன்று உலக அளவில் பெரியவனாகப் பேசப்படும் 13 வயது சிறுவனை இங்கு ஒரு மாநாட்டில் சந்தித்தேன். உலகின் தலைசிறந்த அறிஞர்களெல்லாம் குழுமியிருந்து அவனது அறிவுப்பூர்வமான உரையினைக் கேட்டுக்கண்டிருந்தனர். ஒரு ஓரத்தில் உட்கார்ந்து ரசித்துக்கேட்ட சாதாரணமானவர்களில் நானுமொருவன்.
பேசிமுடித்து வெளியில் வந்தவனை, உலகத்தின் பல ஊடகங்கள் கரும்பைச் சுற்றிச்சூழும் எறும்புகள் போல சூழ்ந்துகொண்டனர்.
அவனைச் சந்தித்து வாழ்த்தவேண்டும் என்று காத்திருந்தேன். நீண்டநேரம் காத்திருப்பதைக் கண்டுகொண்ட அவன், ஒரு அரேபியத் தொலைக்காட்சியின் பெண் நிருபர் நீட்டிய 'மைக்'ஐ மெல்லத்தள்ளி, "எக்ஸ்க்யூஸ் மீ, பி ரைட் பேக்." என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்து புன்னகைக்க அருகில் சென்றேன்.
"ஹாய் ஹவ் ஆர் யூ?" என்றவனுக்கு நன்றி சொல்லிவிட்டு, தம்பி ரொம்ப பெருமையாக இருக்கிறது. உலக அரங்கிலிருந்து பல்வேறு நாட்டு தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்துகொண்டிருக்கும் இந்த மாநாட்டில் நம்நாட்டின் பெருமையை நீ உலகிற்குப் பறைசாற்றியிருக்கிறாய். இந்தியனாக மிகவும் பெருமிதம் கொள்கிறேன். இன்னும் பல சாதனைகள் படைத்து நீ உயரவேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்துவிட்டு, "நீ இந்தியா வரும்பொழுது அங்குள்ள அரசுப் பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களிடையே உரையாற்றவேண்டும். இது நம்நாட்டு மாணவர்களுக்கும் நல்ல முன்மாதிரியாக, உத்வேகமேற்படுத்துவதாக இருக்கும் என்று சொல்லி முடிக்கும் முன் அவன் சொன்ன வார்த்தை, "எனக்கும்கூட விருப்பம்தான் ஆனால், .........." என்று முழுவதுமாக முடிக்கும் முன்னரே அவனின் தாயார், "மன்னிக்கவும். அந்த அரேபியத் தொலைக்காட்சி காத்திருக்கிறார்கள்." என்று சொல்லி அழைத்துச் சென்றுவிட்டார்.
பதிமூன்று வயதைத் தொட்டிருக்கும் தன்மய் பக்க்ஷி 2003 ஆண்டு இந்தியாவில் பிறந்தான். தனது பெற்றோர் பணிநிமித்தமாக இந்தியாவைவிட்டு 2004 ஆம் ஆண்டு குடிபெயர நேர்ந்ததால் ஒரு வயது முதல் கனடாவாசியாக வாழ்வு தொடரவேண்டியதாயிற்று. ஆப்பிள் சாப்பிடும் ஐந்து வயதியிலேயே இவன் ஆப்பிள் - ஐபோனுக்கு அப்ளிக்கேஷன் எழுதத் தொடங்கிவிட்டான். இவனது ஒன்பதாவது வயதில்தான் இவனது அப்ளிகேஷன்களுக்கு ஆப்பிள் நிறுவனம் அங்கீகாரம் அளித்தது. அன்று முதல் அநேகமான அப்ளிகேஷன்களை எழுதிக் குவித்து வருகிறான்.
இன்னும் AI என்று சுருக்கமாக அழைக்கப்படும் Artificial Intelligence எனும் தொழில்நுட்பத்தை இந்தச் சிறுவயதிலேயே கற்றுத்தேர்ந்து பாடம் எடுக்கத் தொடங்கிவிட்டான். இவனெடுக்கும் வகுப்புகளைக் கண்டு வியந்த, (இந்தத் துறையில் பல்வேறு புதிய சாதனைகள் படைத்துவரும்) ஐ பி எம் நிறுவனம் தனது வாட்ஸன் தொழில்நுட்பத்தின் மென்பொருள் தயாரிப்பாளராகளில் ஒருவராக இணைத்துக்கொண்டது. மேலும் IBM - cloud தொழில்நுட்பத்தின் கௌரவ ஆலோசகராகவும் நியமித்திருக்கிறது.
இவன் எழுதிய அல்காரிதம் எனப்படும் கணினி நெறிநிரல் ஒரு கணிதப் புதிரைத் தீர்க்க பேருதவி புரிந்திருக்கிறது.
சமீபத்தில் பிரபல்யமாகி இருக்கும் IoT தொழிநுட்பத்தில் சாதனங்களை, ஐபிஎம் மற்றும் வால்மார்ட் ஆகிய நிறுவனங்களுக்கு உருவாக்குவதற்காக உழைத்துக்கொண்டிருக்கிறான்.
உலகிலேயே முதன்முறையாக NLQA எனும் இயல்பான மொழியில் கேள்வி கேட்டு பதில் பெறும் சாதனங்களை ஐபிஎம் உதவியுடன் இவன் தயாரித்திருப்பதே தற்போதைய பெரும் சாதனை.
நான் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் தனது அடுத்த கண்டுபிடிப்பான, பக்கவாதம் ஏற்பட்டு பேச இயலாத நோயாளியின் மூளையில் தூண்டப்படும் மின்னலைகளைப் பகுப்பாய்ந்து அதை மொழியாக மாற்றி பிறருக்குப் புரியவைக்கும் முயற்சி என்று விளக்கிக்கொண்டிருந்தான்.
சாதனைகள் தொடரட்டும் பக்க்ஷி. வாழ்த்துகள்!! வாழ்த்துங்களேன்!!!
-  Rafeeq Sulaiman

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails