Sunday, July 3, 2016

ஜூலை நான்கு என் வாழ்வின் முக்கியமான நாள்.- Rk Rudhran

ஜூலை நான்கு என் வாழ்வின் முக்கியமான நாள்.
Rk Rudhran
அன்றுதான் என் மனநல மருத்துவமனை ஆரம்பித்தேன். அதற்கு ஆறு மாதங்களுக்கு முன் ஒரு அரசுசாரா நிறுவனத்தில் பணியாற்றி அங்கே தொடர பிடிக்காமல், நானே சொந்தமாய் மருத்துவ மனையும் சேவை மையமும் தொடங்குவதென்று முடிவெடுத்தபோது என் கையிருப்பு ஏழாயிரம் ரூபாய். பூர்விக சொத்து சம்பாதித்த சொத்து எதுவும் கிடையாது. படம் வரைந்து தந்ததால் கிடைத்த ஒரு டிவியெஸ்50 மட்டுமே சொந்தம். க்ளினிக்கிலும் பெரிய கூட்டம் கிடையாது....
வங்கிவங்கியாய் ஏறி தெரிந்து கொண்டது கடன் வாங்கும் வழிமுறை பற்றிய முழுமையான புரிதல். 20% என்னிடம் இருந்தால் மீதி கடனாய் கிடைக்கும்..அந்த 20%?

இருந்த இடத்தின் அருகிலேயே ஒரு கட்டிடம் காலியாக இருந்தது. அது எனக்குப் பரிச்சயமான கட்டிடம். முன்பு அங்கே ஔரங்கசிப் நாடகம் போட சிம்மாசனம், முகலாய உடைகள் வாடகைக்கு எடுக்க்ப் போயிருக்கிறேன். அவர்கள் வாடகை 6000 முன்பணம் 60,000 கேட்டனர். ஆயிரம் ரூபாய் கொடுத்து, கண்டிப்பாக எடுத்துக் கொள்கிறேன், மூன்று மாதம் அவகாசம் கொடுங்கள், எடுக்கும் போது இந்த மூன்று மாத வாடகையும் சேர்த்து தந்துவிடுகிறேன், என்றதற்கு பரவாயில்லை காத்திருக்கிறோம் என்றார்கள்.
தாட்கோவில் நிதியுதவி கிடைக்கும் என கேள்விப்பட்டு, ஒரு வரைதிட்டம் தயாரித்து, ஒப்புதல் வாங்கி, இந்தியன் வங்கிக்குப் போனால், என் திட்டம் சாத்தியமா என சந்தேகித்தார்கள். அந்நேரம் நண்பர் அனந்தபத்மநாபன் கோபாலகிருஷ்ணனைப் பார் என்றார், அவர் தொலைகாட்சியில் பணியாற்றியதால் ஒரு நிகழ்ச்சி கவர் பண்றேன் அவர் வருவார் அறிமுகம் செய்கிறேன் அப்புறம் உன் பாடு என்றார். அந்நிகழ்ச்சியில் மனநலமருத்துவமனை பற்றிச் சொல்லி கடன் கேட்டேன், மறுநாள் அலுவலகம் வரச்சொல்லி, என் வரைதிட்டம் பார்வையிட்டு, வங்கிக்கிளைக்கு கடிதமும் தந்தார்.
அதே நேரம் நண்பர் வைத்தியநாதன் என் நிதிநிலைமை நன்கு தெரிந்தும் உத்தரவாத கையெழுத்திட வந்ததும்,
ஒருமாதத்தில் கட்டிடத்தை தயார் செய்து வேண்டிய எல்லாமும் வாங்கி ஆரம்பித்த நாள்_ 1990 ஜூலை நான்கு!
எப்படியோ ஒரு மாதத்திலேயே புற+உள் நோயாளிகள் நிறைய வந்தனர்.காசு இல்லாதவர்களும் அதிகம் வந்தார்கள். சலுகை தர ஆரம்பித்து ஒரு கட்டத்தில் இலவசமாகவே பலருக்கும் சிகிச்சை தர வேண்டி வந்த்து. ஏழைகளோடு சமமாய் அமர்ந்து வரிசையில் காத்திருக்க வசதியானவர்கள் விரும்பவில்லை... வருமானம் குறைந்தது. தவணைகள் தவறின, வட்டியும் கடனும் கூட ஆரம்பித்த்து...
அதே நேரம் தொலைகாட்சியில் வாரந்தோறும் மனநலம் பற்றி பேசி மக்களிடையே பரிச்சயமானதாலும், என் நூல்கள் நன்கு விற்பனையாகிக்கொண்டிருந்ததாலும், பணம் வைத்துக் கொண்டே தராமல் இருக்கிறேன் என்று வங்கி நினைத்து நெருக்கடி தர ஆரம்பித்தது. இரண்டிலும் நான் சம்பாதிக்கவில்லை என்று யாரும் நம்பமாட்டார்கள்.
ஏழாம் ஆண்டு இனி இப்படியே நடத்த முடியாது என்று புரிந்தது, வேறென்ன செய்வது என்றுதான் தெரியவில்லை.
அப்போதுதான் Y2K அமெரிக்காவில் சம்பாதிக்கும் வாய்ப்பை அள்ளி வழங்க ஆரம்பித்த கட்டம். உமா அமெரிக்கா சென்று சம்பாதித்து கடன் அடைக்கலாம் என முடிவு செய்தோம். ஒரு வருடத்தில் கடன் முடிந்தது. மருத்தவமனையும் மூடப்பட்டது.
அதன்பின் இன்னுமொரு வருடம் அவள் சம்பாதித்து, இங்கு வந்தும் சம்பாதித்து வாங்கிய வீட்டில்தான் இப்போது சிகிச்சைக்காக வருபவர்களை பார்க்கிறேன்.
ஜூலை நான்கு என் வாழ்வின் முக்கியமான நாள்- அன்றுதான் என் உமா என் மருத்துவமனைக்குள்ளும் வாழ்க்கைக்குள்ளும் நுழைந்த நாள்.

Rk Rudhran

No comments: