Tuesday, July 26, 2016

நெஞ்சை நடுநடுங்க வைத்த ஒரு உண்மை சம்பவம்...


இருபத்தைந்து வருட உழைப்பில் தெரிந்து கொள்ளும் அனுபவத்தை கூடிப் போனால் பதினைந்து நிமிடங்களில் சுலபமாக தெரிந்து கொள்ளலாம்...

உகாண்டா தலை நகரம் கம்பாலாவில் இருந்து மேற்கு திசையில் கிட்டத்தட்ட 250 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் ஒரு சிறிய நகரம் அது, பெயர் மஸாக்கா.

விவசாயத் தொழில் மிகுந்த ஒரு பகுதி, காபி, தேயிலை, இரப்பர், புகையிலை, வாழை, இப்படியானவை முக்கிய தொழில்கள்,

குறிப்பிட்ட சில கனிம வளங்களினால் குறைந்த அளவில் நாட்டுக்கு அந்நிய செலாவணி, இது போக ஓரளவுக்கு மீன்பிடி தொழில்,

இவைகளுடன் இணைந்த சில சொற்பமான ஏற்றுமதிகள், நகரசபை கைச்செலவுக்கு தேறும் சுற்றுலா வருமானம் என்று இப்படித்தான் இன்னமும் இருக்கிறது அந்த பூமி.

கடந்த காலங்களில் ஏற்படிருந்த பக்கத்து நாடுகளின் போர் படையெடுப்பால், இன்னமும் நகரில் அங்குமிங்குமாய் சிதிலமடைந்து காட்சி அளிக்கும் இடிபாடான கட்டடங்களின் பராமரிப்பற்ற சோகங்கள்.


மஸக்கா நகரில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஒரு சாலை, எல்டாம்ஸ் ரோடு, அங்கே ஒரு வங்கி, பெயர் டி.எஃப்.சி.யு. (Dfcu Bank) பிரிட்டிஸ் அரசின் ஒரு நிதித்துறையும், உலக வங்கியின் கமர்சியல் வங்கிப் பிரிவின் ஒரு அங்கமும், கவர்ன்மெண்ட் ஆஃப் உகாண்டாவின் பப்ளிக் பண்ட் நிதித்துறையும் சேர்ந்து பங்குகள் கொண்டிருந்த ஒரு கமர்ஸியல் வங்கி, அன்றைக்கு உகாண்டாவில் இரண்டாம் இடத்தில் இருந்த, மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருந்த ஒரு நிதி நிறுவனம், முழுக்க முழுக்க எம்.டி.முதற்கொண்டு சீஃப் ஆடிட்டர் வரை பிரிட்டிஷ் ஆட்களாலேயே நிர்வகிக்கப்பட்ட ஒரு வங்கி,

இன்னமும் மக்களின் அதே நம்பிக்கையை பெற்று தொடர்வது மகிழ்ச்சியான விஷயம்.

இனி நேரடிக் காட்சிகள்

ஆண்டு 2001, ஜூன் மாதம் 1-ந்தேதி, ஒரு திங்கட்கிழமை என்றுதான் நினைவு, காலை 11.50 மணி, காஃபி விளைச்சல் ஸீஸன் என்பதால் காலையிலேயே பேங்கிங் ஹாலில் நிறைய வாடிக்கையாளர்கள், பணம் எடுப்பதும், போடுவதும், சிலர் செக் எழுதுவதும், இன்னும் சிலர் வாங்கிய பணத்தையும், இன்னும் சிலர் டிபாசிட் செய்யும் பணத்தையும் அங்குமிங்குமாக இருந்து கொண்டும் நின்று கொண்டும் எண்ணிக் கொண்டிருக்கும் ஏகமாய் களை கட்டி இருக்கும் பிஸி நேரம்.

இப்படியாக வங்கியின் உள்ளே இருக்கும் நிலையில், அங்கே வங்கிக்கு வெளியில், சாலையில்.....

மாருதி டைப்பில் இன்னும் கொஞ்சம் நீளமான மூடிய கதவுகள் கொண்ட ஒரு வெள்ளை நிற வேன் வங்கியின் பார்க்கிங் ஏரியாவில் வந்து மெதுவாக நிற்கிறது.

ஐந்து நிமிடஙகளுக்கு மேலால் எந்த சலனமும் இல்லை, அதன் பிறகு, கனத்த, கறுகறுத்த ஒரு ஆப்பிரிக்கன், மெல்லமாய் சிலைடிங் கதவை திறந்து கொண்டு பதமாய் இறங்கி, கவனமாய் திரும்பவும் கதவை அடைத்துக் கொள்கிறான்.

யாரையோ தேடுவது போல் பாசாங்கு செய்து யாரும் தன்னை கவனிக்கிறார்களா என்று பார்த்து அப்படி இல்லை என்று தீர்மானித்தவனாய், வங்கி நோக்கி நடந்து வந்து, வாசல் செக்கூரிட்டியிடம் ஏதோ வங்கி வேலை என்று விளக்கம் கூறி முன் கதவை திறந்து விட்டு உள்ளே வந்து நேரடியாகவே மேனேஜர் அறைக்கு வருகிறான்.

காலை வணக்கம் சொல்லி சம்பிரதாய பேச்சுக்குப் பிறகு, வந்த நோக்கம் சொல்கிறான், 10,000 டாலர் மாற்றி உகாண்டா ஷில்லிங்ஸ் வேண்டுமாம, என்ன ரேட் என்று கேட்கிறான்,

ஒருவித சந்தேகம் ஏற்பட்ட மேனேஜர் வேண்டுமென்றே உண்மை எண்ணத்தை தெரிந்து கொள்ள வேண்டி, அன்று மார்கெட் ரேட் 1.87 என்று இருந்ததை சொல்லாமல், 1.60 என்று பதில் கொடுக்கிறார்,

எந்தவித ஆட்சேபணையும் தெரிவிக்காத அந்த மனிதன், டாலர், வண்டியில் இருக்கிறது, போய் எடுத்து வருகிறேன் என்று நிதனமாகச் சொல்லி விட்டு, எழுந்து போகிற போக்கில், மொத்தமாய் வங்கியை ஒரு நோட்டம் போட்டு விட்டு, கதவை திறந்து கொண்டு வெளி ஏறுவதை, தன் இருக்கையில் அமர்ந்தபடியே பார்க்கிறார் வங்கி மேனேஜர்.

ரேட் இவ்வளவு குறைத்துச் சொல்லிய பிறகும் மறுப்பேதும் சொல்லாமல், இப்படி சரி என்று தலை ஆட்டி விட்டு போகிறானே என்று வங்கி மேனேஜருக்கு அப்பவே சந்தேகம் வர,

செக்கூரிட்டிகளை உஷார் படுத்தி, முன்வாசல் கதவுக்கு ஒளிந்த நிலையிலும் தன் அறைக்கு எதிராய் சிவில் டிரஸில் ஒளித்து வைத்த ரிவால்வருடன் இன்னொருவரையுமாக வைத்து விட்டு, வெளியே சென்றவனின் நடமாட்டத்தை கவனிக்க ஏதோ ஒரு அவசர தேவைக்காக வெளியே வருவது போல் வருகிறார்.

வந்தவர் கண்ணுக்கு, அந்த நபர் இன்னமும் காரின் கதவை கொஞ்சமாய் திறந்து வைத்துக் கொண்டு உள்ளே இருப்பவருடன் பேசிக் கொண்டிருப்பது தெரிகிறது, அருகில் போகலாம் என்றால், ஆபத்தை விலை கொடுத்து வாங்குவது போலாகும் என்று நினைத்து, பார்க்கலாம் என்னதான் நடக்கிறது என்ற எண்ணத்தில் திரும்பவும் வங்கியின் உள்ளே வந்து தன் ஸீட்டில் வந்து அமர்ந்து கொள்கிறார்

நெஞ்சில் ஒரு படபடப்போடு, ஏதோ ஒன்று இன்று நடக்கத்தான் போகிறது என்று மட்டும் அவர் உள் மனதுக்கு தெரிந்து விட்டது.

எண்ணியது போலவே, அப்போது அந்த விபரீதம் நடக்க ஆரம்பித்து விட்டது,

மொத்தம் நாலு பேர்கள், எல்லோரிடமும் மெஷின் கன்கள், முன்கதவை அப்படி படாரென்று திறந்து, அங்கே காவலுக்கு இருந்த பெண் போலீஸை அக்கணமே சுட்டு வீழ்த்துகிறது அந்த வெறி பிடித்த கூட்டம்,

ஓ வென்ற பெருத்த அலறலுடன் இரத்த வெள்ளத்தில் அப்படியே மரம் போல சாய்ந்து விழுகிறாள் அவள்.

இன்னொரு பக்கத்தில் அமர்ந்திருந்த அடுத்த காவலாளியையும் சுடுகிறது அந்த கூட்டம், தலை சாய்த்து தப்பித்து, தோளில் குண்டடிப் பட்டு இரத்தம் கொப்பளித்து தரையெல்லாம் சிதறும் நிலையிலேயே சாடி ஓடி விடுகிறான் அவன்.

வங்கியில் உள்ள ஜனங்களை அப்படி அப்படியே தரையில் படுத்துக் கொள்ளச் சொல்லி தலைவன் போலிருந்த, நெடுமாமலை போல் நீண்ட வளர்த்தி உள்ளவன் காட்டுக் கத்தல் போடுகிறான்,

இந்த நிலையில், வங்கியில் வேலை பார்க்கும் ஊழியர்களும் திறந்திருந்த பின்கதவை பயன் படுத்தி தரையில் படுத்துக் கிடந்த நிலையிலேயே ஊர்ந்து ஊர்ந்தே வெளியேறிய நிலையில், சொற்ப நபர்களே வங்கியின் உள்ளே மாட்டிக் கொண்டார்கள்.

விபரீதத்தை பார்த்த வங்கி மேனேஜரும், கூட்டத்தோடு கூட்டமாய், வாடிக்கையாளர்களுடன் சேர்ந்து தரையில் முகம் குப்புற படுத்துக் கொண்டார்.

வங்கியின் முன் கதவு உள்ளே தாழிடப்பட்டு பூட்டும் போடப்பட்டு சாவி கவனமாக கொள்ளையர் தலைவனிடம் கொடுக்கப்படுகிறது.

இதுபோன்ற நிலையில், முதலில் டாலருக்கு பணம் கேட்டு வந்தவன், சாடி வந்து படுத்துக் கிடக்கும் மேனேஜரின் கீழ் முதுகுத் தண்டில், போட்டிருந்த கனமான மிலிட்டரி ஸூ காலுடன் அப்படியான ஓங்கி ஒரு மிதி,

மிகச் சரியாக முதுகுத் தண்டில் மிதித்துவிட்டு சொல்கிறான் நீதான் இங்கே மேனேஜர் என்று எங்களுக்கு தெரியும், மரியாதையாக எழுந்து ஸ்ட்ராங் ரூம் சாவியும் உள்ளே இருக்கும் ஸேஃப் சாவியையையும் இன்னும் ஐந்து நிமிடங்களுக்குள் தர வேண்டும் என்று கன்னத்தோடு ஓங்கி ஒரு அறை கொடுத்து கத்து கத்து என்று கத்துகிறான்.

குலை நடுங்கிப் போன மேனேஜர், அப்படியே ஆகட்டும் என்று சொல்லி, வேகமாய் தன் ஆபீஸுக்கு ஓடிப் போய் சாவிகளை தேட ஆரம்பிக்கிறார்.

இப்போது, தலைவன் போலிருப்பவன் கையில் வைத்திருக்கும் கனத்த பிஸ்டலால், மேனேஜரின் நெற்றியில் ஓங்கி அடித்து என்ன நேரம் போக்குகிறாய் என்று கத்துகிறான், நெற்றியில் இருந்து இரத்தம் பீறிட்டு பாய்கிறது.

இந்நிலையில் அவர் சொல்கிறார், இப்படி அடித்துக் கொல்லவோ இல்லை சுட்டுக் கொல்லவோ திட்டம் இருந்தால் அப்படியே செய்து கொள்ளுங்கள், காரணம், இன்ஸூரன்ஸ் இருக்கிறது என்றும் மரணம் சம்பவித்தால் அது அவர் குடும்பத்துக்கு கிடைத்து விடும் என்றும் சொல்லி விட்டு, கொள்ளையர் தலைவனிடம் அவரின் மனதில் இருந்த ஏதோ ஒரு திட்டப்படி இப்படிச் சொன்னார் -

கிட்டத்தட்ட ஒரு பில்லியனுக்கு மேல் ஸேஃபில் இருக்கிறது உண்மைதான் (அன்றைய கணக்கில் டாலர் 540,000 @ 18.50) இப்போது நீங்கள் வங்கியை கைப்பற்றி விட்ட நிலையில், உங்கள் நோக்கமான அந்த பணத்தை உங்களிடம் ஒப்படைப்பதில் எந்த தயக்கமும் இல்லை,

ஆனால், நீங்கள் எல்லாம் உள்ளே வரும் போது, வங்கியின் கணக்காளர் தப்பித்து போகும் போது, அவரிடம் இருந்த இன்னொரு சாவியையும் சேர்த்தே கொண்டு போய் விட்டார், (Dual Control System) அதனால் இப்போது ஸ்ட்ராங் ரூம் சாவியும், ஸேஃபுக்கு உள்ள ஒரு சாவியும் மட்டுமே இருக்கிறது,

மேலும் ஸேஃபை திறக்க சில நுணுக்கங்களும் இருக்கிறது, நீங்கள் என்னைக் கொன்று விட்டால், நீங்கள் நினைத்து வந்த காரியம் நடக்காது,

உங்களால் ஸேஃபையும் திறக்க முடியாது, அதனால் உங்கள் திட்டம் தோல்வி அடையும் என்று அந்த நிலையிலும் அவர் நிதனாமாக சொன்னது, அவரைக் கொல்லும் முடிவிலிருந்து அவர்களை பின்வாங்க வைத்தது.

இவ்வளவு விவேகமாக பதில் சொன்ன மேனேஜர், ஏதோ ஒரு திட்டத்தில் தான் அப்படி சொல்லி இருக்கக் கூடும் என்பது தெளிவாகியது.

எப்படியாவது கொஞ்சம் நேரத்தை போக்கி விட்டால், ஏதாவது அதிசயங்கள் நடந்து பிழைத்துக் கொள்ள எப்படியோ ஒரு வாய்ப்பு ஏற்படும் என்கிற ஒரு நம்பிக்கையை அவர் கை விடவில்லை போலும்.

இப்படிச் சொன்னதும் அவர்கள் அவர்களுக்குள்ளாலேயே அவர்கள் பாஷையிலும் கொஞ்சம் ஆங்கிலத்திலும் இப்படி பேசிக் கொண்டார்கள்,

இவன் சொல்வதும் சரிதான், நமக்கு பணம்தான் வேண்டும், இவனை இப்போது கொன்று விட்டால் மொத்த நம் திட்டமும் பாழ், இனி எல்லோருக்கும் பணம் வேறு கொடுக்க வேண்டியதிருக்கிறது

(வந்த கார், வாடகைக்கு எடுத்த துப்பாக்கிகள், பிஸ்டல் இப்படி) அதனால் கொஞ்சம் டைம் கொடுக்கலாம், பணம் நம் கைக்கு வந்தவுடன்தானே இவனை கொன்று விடலாம்,
நிறைய நேரம் நம் மூஞ்சிகளை இவன் பார்த்து விட்டான், விட்டு விட்டு போனால், போலீஸில் அங்க அடையாளமெல்லாம் சொல்லிக் கொடுத்து நம்மை மாட்ட வைத்து விடுவான் என்று அவர்களுக்குள்ளாகவே முடிவெடுத்து, தலைவன் சொன்னான் இப்படி-

இன்னும் பத்து நிமிடம் மட்டுமே உனக்கு டைம், அதற்கிடையில் உன் உயிரை காப்பாற்றிக் கொள்ள நீ நினைத்தால், அக்கௌண்டண்டுக்கு போன் போட்டு அந்த இன்னொரு சாவியை கொண்டு வரச் செய்து, எங்களுக்கு சேஃபை திறந்து பணத்தை எடுத்து தா, உயிரோடு போ, இல்லாவிட்டால் செத்து தொலை என்று மேலும் தலையில் ஓங்கி ஒரு அடி அடித்து மேனேஜரிடம் கடைசி எச்சரிக்கை செய்தான்.

இப்படிச் சொல்லி விட்டு, எந்த கேஷியர்களும் இல்லாமலிருந்த கௌண்டர்களில் இரண்டு ஆட்கள் உள்ளே நுழைந்து இருந்த பணத்தை எல்லாம் அவர்கள் தயாராகவே கொண்டு வந்த சாக்குகளில் அடைத்தார்கள்,

மேலும் வங்கி கஸ்டமர்களையும் அடித்து உதைத்து எல்லா பணைத்தையும் பிடுங்கிக் கொண்டு, தொலைபேசிகளை எல்லாம் தரையில் வீசி அடித்து நொறுக்கினார்கள்,

சில கம்யூட்டர்களையும், கவுண்டரின் கண்ணாடிகளையும் தாறுமாறகவே அடித்து உடைத்து தூள் தூளாக்கினார்கள்,

இதற்கெல்லாம் காரணம், மேனேஜரை கூடுதலாக பயமுறுத்தவும் அவருக்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தவுமே.

இப்போது மணி மதியம் 1.10 ஆகி இருந்தது. மேனேஜருக்கு மதியம் சாப்பாடு கொண்டு வரும் ஹவுஸ்மெய்ட், வங்கியின் முன்பு கூட்டம் இருப்பதைப் பார்த்து, கிரில் வழியே மேனேஜரின் அறையை எட்டிப் பார்க்கையில், நெற்றியில் இருந்து குபுகுபு என வழிந்து கொண்டிருந்த இரத்தத்தைப் பார்த்து அய்யோ அய்யோ என்று அலறி அடித்து ஒரே ஓட்டமாய் ஓடி, மேனேஜரின் மனைவி, அவள் அங்கிருக்கும் பால்கனியில் நின்று என்ன இவ்வளவு கூட்டம் இப்படி வங்கிக்கு முன்னால் என்று யோசித்துக் கொண்டிருக்கும் நிலையில்,,

அவளிடம் திரும்பி ஓடி வந்த இந்த ஹவுஸ்மெய்ட், மேனேஜரை கொள்ளைக்காரர்கள் கிட்டமாய் இருந்து நெற்றிப் பொட்டில் (Point blank range) சுட்டு, கொன்று விட்டார்கள் என்று சொல்ல,

நினவு மயங்கி, நின்றிருந்த பால்கனியிலேயே அந்த அம்மா அப்படியே சரிந்து விழ, பக்கத்தில் குடி இருந்தவர்கள் ஏதேதோ முதலுதவி செய்து படுக்கையில் கொண்டு கிடத்தி இருக்கிறார்கள்.

இந்த இடத்தில் ஒன்று சொல்ல வேண்டும், வந்த இவர்கள் மொத்தமாக இருபது பேர்கள், அதில் வங்கிக்கு உள்ளே நான்கு பேரும், பாக்கி பதினாறு பேர்கள் வெளியிலும். வங்கிக்கு முன்வாசலில் இரண்டு பேரும், எதிர்த்த கட்டடத்தின் மாடியில் இரண்டு பேரும், வங்கியின் மாடியில் இரண்டு பேரும், அங்கிருந்த போலீஸ் அவுட்போஸ்டைச் சுற்றி நான்கு பேரும், சாலையோரத்து இரண்டு மரங்களில் ஒவ்வொரு நபரும், ரோடு ஆரம்பிக்கும் முகப்பில் இரண்டு பேரும், அது முடியும் இடத்தில் இரண்டு பேரும், மொத்தமாய் அந்த ரோட்டையே முழுமையாக அவர்கள் கையில் எடுத்திருந்தார்கள்.

இங்கே மேனேஜர், ஒரு சாவியை அவர்கள் தலைவன் கையில் கொடுத்து விட்டு, இன்னொன்றுக்காக தேடிக் கொண்டிருக்கிறார், அவரின் தலையில் பிஸ்டலை அழுத்தி தலைவனும், இன்னொருவன் அவனுடைய துப்பாக்கியால் முதுகிலும் உள்ள நிலையில், தேடித் தேடி எப்படியோ எக்ஸ்ட்ராவாக எப்பவோ வைத்திருந்த அந்த இன்னொரு சாவி கடைசியில் கிடைத்தே விட்டதில் உயிர் பிழைத்து விட முடியுமோ என்கிற ஒரு மெல்லிய நம்பிக்கை மேனேஜரின் முகத்தில்.

இப்போது அந்த நிலையில், நாயை விட கேவலமாக மேனேஜர் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டு, ஸ்ட்ராங் ரூமை திறக்கச் செய்து, ஸேஃபை ஒப்பன் செய்ய துப்பாக்கியால் முதுகிலேயே குத்துகிறார்கள்.

இங்குதான் கவனமாக கவனிக்க வேண்டும், அந்நிலையில், ஒரு சாவியைக் கொண்டு மேல் உள்ள லாக்கை திறந்து விட்டு, அந்த மேனேஜரானவர், தனக்குள்ளே இப்படித்தான் பேசிக் கொள்கிறார், வாசகம் சிறிது கூட பிரளவில்லை, அவர் சொன்னது சொன்னபடி இங்கே -

“ஆமாப்பா அப்படி பாத்துட்டே ஒரே இருப்பா அங்கயே இரு, இவ்வளவு நாளும் இப்படி நேர்மையாய் கஷ்டப்பட்டதுக்கு இப்பம் இந்த சேஃபை தொறந்து ரூபாயை எடுத்துக் கொடுத்தவுடன் ஒரு நாயை விட கேவலமான முறையில் சுட்டு தள்ளப் போறதையும் அங்கேயே இருந்து வேடிக்கைப் பாரு, என்ன நன்மை செய்து என்ன,, ஒன்னெ எப்படி தொழுதுதான் என்ன, போயும் போயும் ஒன்னை நம்பினேன் பாரு, எல்லாம் என் தலை எழுத்து” –

என்று அழுது தழுதழுத்து, இப்படியே அவர் இது நாள் வரை நம்பி, நன்றி செய்து வந்த அந்த இறைவனை, குறிப்பாக அல்லாஹ்வை வெறுப்பாய் சொல்லி, கீழே இருக்கிற லாக்கை திறக்க, கண்ணை மூடிக் கொண்டு இன்னமும் அல்லாஹ்வை கூடுதலாய் நொந்து கொண்டு,

இரண்டாவது சாவியைப் போட்டு அதை திருப்ப முயலுகிற அந்த மைக்ரோ செகண்டில், நிச்சயமாகவே அது மைக்ரோ செகண்டு நேரம்தான், என்னதான் நடக்கிறது அங்கே, மடமடவென துப்பாக்கிகள் வெடிக்கும் சப்தம் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது, வங்கிக்கு மிக அருகில் இருந்து.

குழப்பத்தில் தள்ளாடி போயிருக்கிற மேனேஜருக்கு இது ஒன்றும் அவ்வளவாக காதில் விழவில்லை, ஆனால், தலையில் துப்பாக்கி வைத்து அழுத்திக் கொண்டிருக்கும் கொள்ளையர் தலைவனுக்கு தெளிவாகவே கேட்டிருக்கிறது,

வெடிக்கும் சப்தத்தை கேட்டு விட்டு பக்கத்தில் நின்றவனிடம் அவன் சொன்ன முதல் வார்த்தை- ‘இது நம்ம ஆட்கள் சுடுகிற சப்தம் இல்லை, சுடுவது நம் துப்பாக்கியும் இல்லை, இது வேறு சப்தம், உடனே போய் பார்’ என்று கட்டளை பிறப்பித்தான், இவனும் முன் கதவுக்கு ஓடி, உள்ளே பூட்டிக் கிடக்கும் கதவின் கிரில் வழியாகப் பார்த்து, அங்கிருந்தே இவனிடம் சப்தம் போட்டு சொல்கிறான்,

இரண்டு போலீஸ் காரர்கள், சிகரெட் கம்பெனிக்கு காவல் காப்பவர்கள், நம்மை போலீஸுக்கு காட்டிக் கொடுக்கும் எண்ணத்தில் வானத்தை பார்த்து தொடர்ச்சியாக சுட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று பதில் கொடுக்கிறான்
உடன்தானே தலைவன் போலிருந்த மேனேஜரின் பக்கத்தில் நின்றிருந்தவன், ஒரே சாட்டமா சாடி, முன் வாசலுக்கு போய், உடனே அந்த இரண்டு போலீஸ்காரர்களையும் சுட்டுத் தள்ளச் சொல்லி, அவன் ஆட்களுக்கு கூச்சலான கூச்சலில் கட்டளை இடுகிறான்,

மரத்தின் மீது ஒளிந்திருந்த அவன் ஆட்கள் அந்த போலீஸ்காரர்களை ஒரு பத்து நிமிட நேரத்தில் நாய்போல் நடு ரோட்டிலேயே சுட்டு வீழ்த்தி, பிணங்களை கரையோரமாய் எட்டி உதைத்தார்கள்.

இப்படியான நிலையில், ஸ்ட்ராங் ருமில் அந்த ஒரு சில நிமிடங்கள் தனித்து விடப்பட்டிருக்கும் மேனேஜரின் நெஞ்சில், இப்போது வந்து பணம் முழுவதையும் அள்ளிக் விட்டு; நாயை விட கேவலமாக இவர்களால் செத்துப் போவதை விட, தப்பித்து போய் வேறு எப்படி செத்தாலும் பரவாயில்லை என்கிற ஒரு நினைப்பு வந்து, அங்குமிங்குமாக பார்வையை சுழல விடுகிறார்.

குரூரமாய் செத்துப் போய் கிடக்கும் போலீஸ் காரன் ஒருபுறம், எங்குமே இரத்தக்கறை படிந்து மூடி இருக்கும் கதவுகளினால் உள்ளே காற்றில்லாமல் குடலை புரட்டிப் போடும் அருவருப்பு நிலை இன்னொரு புறம், இப்படி சூழ்நிலை இருக்க, எப்படி ஆனாலும் தப்பித்து போவதே என்ற வலுவான முடிவுக்கு வந்து, அந்த நேரத்திலும்; அத்தனை கனமான இரும்பினால் உள்ள பின் கதவு இன்னமும் திறந்திருப்பதை அக்கணமும் உறுதி செய்து கொண்டு, கண்களை முன் வாசலில் உள்ள கொள்ளையர்கள் மேல் பதித்தவராய், பூனை போல் மெல்லமாய் அடி மேல் அடி எடுத்து வைத்து, ஸ்ட்ராங் ரூமை விட்டு வெளியில் தலைகாட்டி,

அவன் எதிர்பாராமல் இவரை திரும்பி பார்க்கையில், அவனைப் பார்த்து திகைத்து பயந்து அப்பாவியாய் நிற்பது போல் பாசாங்கு செய்து, அவ்வளவு முரடான பின் கதவை எப்படி கையால் பற்றுவது, நொடிக்கும் குறைவான நேரத்தில் அதை எப்படி அவ்வளவு வலுவான வேகத்தில் இழுத்து திறப்பது என்று யோசித்து,

எப்படியோ தப்பித்துதான் ஆக வேண்டும் என்று இது எல்லாமே சில நொடிகளுக்குள் முடிவெடுத்து, என்ன எம்.ஜி.ஆர். என்ன ரஜினி, ஐம்பத்து ஒரு வயதான நிலையில், ஒரே பாய்ச்சலில் பாய்ந்து, முரட்டுக் கதவை அப்படித் திறந்து, வெளியே வந்து 12 அடி உயர பால்கனியிலிருந்து விரால் பாய்ந்தது போல் கால் ஒடிந்து போனாலும் போகட்டும் என்ற அலட்சியத்தோடு, ஒரே பாய்ச்சலில் சாடி,

கீழே கிடந்த ஆடுகள் அடைக்கும் பட்டியில் ஒரு ஆட்டின் மேல் போய் விழுந்து, ஆடுகளோடு ஆடாய், 45 நிமிடத்திற்கு மேலாய் அந்த நிலையிலேயே இருந்து, மூச்சைக் கூட மெல்லமாய் விட்டார்,

அப்படியே அங்கேயே ஆடு போலவே இருந்து கொண்டார் அந்த பாவமான மேனேஜர்.

ஆடுகளை பராமரிக்கும் ஒரு மூதாட்டி, வெளியே வராதே அவர்கள் பால்கனியில் வந்து நின்று தேடுகிறார்கள் என்று எச்சரிக்கை கொடுத்துக் கொண்டே இருந்தாள்.

இந்த நிலையில், இந்த கொள்ளை சம்பவம் பற்றி தலைமை போலீஸ் ஸ்டேஷனுக்கு யாரோ தகவல் கொடுத்து விட, பெரிய போலீஸ் பட்டாளமே இங்கே வருகிறது என்ற செய்தியை இவன் ஆட்கள் தெரிவிக்க,

பணம் கிடைக்காத கோபத்தினால் ஏற்பட்டிருந்த அளவில்லா வெறியில், பால்கனியில் நின்றே ரோட்டில் வருவோர் போவோரையெல்லாம் கண்மூடித்தனமாய் சுட்டு இரண்டு மூன்று பேர்களை காயப் படுத்தி விட்டு, ஒரு வகையாக தப்பித்தோம் பிழைத்தோம் என்று இவர்கள் திசைக்கொருவராக தெறித்து ஓடினார்கள்.

அந்த மூதாட்டி; அவர்கள் போய் விட்டார்கள் என்று சொன்ன பிறகு; அந்த மேனேஜர் மெல்லமாய் தலை காட்டி, யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு, பின்னால் இருந்த ரோட்டில் ஓடியே ஓடிப் போய், பக்கத்தில் இருந்த பரோடா வங்கியில் இருந்த தொலைபேசியில் தலைமை அலுவலகத்துக்கு செய்தி சொல்லி அது அப்படி ஒரு முடிவுக்கு வந்தது.

வெளியில் இருந்து பார்த்தவர்கள் சொன்னார்கள், வங்கியில் இருந்து எடுத்த பணத்தின் ஒரு பகுதியை லாவகமாக பிரித்து வைத்து, உயரத்தில் இருந்து அதை காற்று திசையில் பறக்க விட்டு, மக்கள் பொறுக்கிக் கொண்டிருந்த நிலையில்;
வண்டியை கிளப்பி இடம் விட்டிருக்கிறார்கள்..

இறந்து கிடந்த போலீஸ்காரர்களின் மீதும் இவர்கள் பணக்கட்டுகளை வைத்து விட்டே போயிருக்கிறார்கள்.

அதன் பிறகு முறையான தகவல் கம்பாலா தலைமை போலீஸ் அதிகாரியிடம் தெரிவிக்கப்பட்டு, அடுத்த ஒரு வாரத்தில், ஆங்கிலப் படங்களில் வருவது போல் சிட்டியில் காரில் பல மைல் தூரம் சேஷிங் செய்து,

கடைசியில், நட்டட்டே என்ற இடத்தில் வைத்து ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அவர்கள் சாதாரண கொள்ளையர்கள் இல்லை என்றும் கொலைகாரர்கள்தான் என்றும், ஜெஹ்ரே ராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது, அநியாயமாய் பல அப்பாவிகளை கொன்றதினால், ராணுவத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டு, தலைமறைவாகி, தேடப்படுபவர்களாவும் இருந்திருக்கிறார்கள் என்று போலீஸ் பின்னர் செய்தி வெளியிட்டது.

அந்த இக்கட்டான நிலையை சமயோசிதமாக கையாண்ட அந்த மேனேஜருக்கு இன்ஸ்டண்ட் பரிசாக டாலர் ஆயிரமும், உடனடி புரமோஷனாக, மொத்த மேற்குப் பகுதி முழுவதற்குமான ரீஜனல் மேனேஜர் அந்தஸ்தும் சம்பள உயர்வோடு கிடைத்தது என்பது தனி செய்தி.

முதுகுத் தண்டில் ஏற்பட்ட வீக்கத்துக்கும் வலிக்கும் அவர் கிட்டத்தட்ட ஒரு வருட காலம் சிகிட்சை எடுத்துக் கொண்டதாக கேள்வி..

இப்போது நான் கேட்க நினைப்பது, இந்த நிகழ்ச்சியிலிருந்து என்னால் விளங்கிக் கொள்ள முடியாத, விடை தெரியாத இன்னமும் மனதை அரித்துக் கொண்டிருக்கும் சில கேள்விகள்-

♥கடைசியில் உயிருக்கு பரிதவித்த நிலையில், அந்த மேனேஜர், அப்படியான ஒரு மன வேதனையுடன், அல்லாஹ்விடம், நீ எல்லாம் இருந்து என்னத்தே கிழிக்கிறே, என்கிற முறையிலேயே இறைவன் மேல் வைத்திருந்த எல்லா நம்பிக்கைகளையும் இழந்தது போன்ற ஒரு மனநிலையிலேயே இறைவனை கறுவறுத்திருக்கிறார்.

♥அப்படி ஒரு நிலையில், எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாலும், சம்பந்தப்பட்டவர் காதுக்கு கூட அவ்வளவு தெளிவாக கேட்டு விடாத அந்த துப்பாக்கிகளின் வெடி சப்தம், அந்த மைக்ரோ நொடியில் (அதில் ஒரு செகண்டை ஆயிரமாக பிரித்து வைத்து அதில் ஒரு பாகம் பிந்தி இருந்தாலும் சேஃப் கதவு திறந்திருக்கும், அந்த மேனேஜரும் அப்பவே கொல்லப்பட்டிருப்பார்)

அந்த தலைவன் போல் இருந்தவனுக்கு; அவ்வளவு துல்லியாமாக கேட்கச் செய்து, அதன் நிமித்தம் அந்த சபித்த, சலனமடைந்த மேனேஜர் உயிர் பிழைத்த அத்தகையான அதிசயம் இறைவனைக் கொண்டு மட்டுமே தான் நடத்தப்பட்டிருக்க முடியும் என்று நான் மிக மிக உறுதியாக நம்புகிறேன்.

அப்படியானால், அதன் இரகசியம்தான் என்ன? ஏன் இறைவன் அவரை, அவர் அவனை அவ்வளவு பேசி, ஏசிய பிறகும் காப்பாற்றினான்? தயவு செய்து தெரிந்தவர்கள் கட்டாயமாக சொல்ல வேண்டும்.

ஆக, கடைசியாக ஒரு குறிப்பு மட்டும் -

இந்த சம்பவத்தில் தொடர்பு கொண்டிருந்த அந்த வங்கியின், அப்போதைய மேனேஜராக பணியாற்றி இருந்தது இந்த சம்பவத்தை இவ்வளவு விளக்கமாகச் சொல்லும் உயிர் பிழைத்து வந்த நானே நான் தான் !!?
இதற்கும் ஒரு குறிப்பு-

இதற்கு ஒரு இமியும் குறையாத, இன்னும் திரில் கூடிய மேலும் இரண்டு சந்தர்ப்பங்களில், குறி பார்த்த துப்பாக்கி முனைகளிலிருந்தும், தலைக்கு ஒரு இஞ்ச் உயரத்தில் பறந்து வந்த குண்டுகளிலிருந்தும் தப்பித்து வந்த அதிர்ச்சி நிகழ்வுகள், வாழ்க்கை பயங்கரங்களாக என் நினைவுகளில் எப்போதுமே சுழன்றடித்துக் கொண்டுதான் இருக்கின்றன

Raheemullah Mohamed Vavar

தகவல்  Saif Saif with Raheemullah Mohamed Vavar.

No comments: