Saturday, July 23, 2016

ரியாத் தமிழ்ச் சங்கம் நடத்தும் உலகளாவிய, கல்யாண் நினைவு கவிதைப் போட்டி - 2016.


உணர்வுகளை மலரச் செய்யும் கவிதை உங்களுக்குக் கைவரக் கூடியதா?

ஒரு காட்சியை, ஓர் அனுபவத்தை, ஒரு திரைப்படத்தை, ஓர் அற்புதத்தை உங்களால் உணர்வுபூர்வமாகவும் பார்க்க இயலுமா?

மலர்களின் மகரந்தப் புன்னகையை, மழலையரின் பேதமற்ற உலகை, காதலின் யெளவனத்தை, பால்திரியா பொதுமையின் இலக்கணத்தை, இனம் பிரியா மானுட இலட்சணத்தை, பேதங்களின் அவலட்சணத்தை, உரிமைக்குரல்களின் முழக்கத்தை, நியாயத்தின் தர்மாவேசத்தை மொழிபெயர்க்க அறிந்தவரா நீங்கள்?

அப்படியானால் இந்தப் போட்டி உங்களுக்குத் தான்..

ரியாத் தமிழ்ச்சங்கம் - எழுத்துக்கூடம் சார்பில் கல்யாண் நினைவு மாபெரும் கவிதைப் போட்டி - 2016 நடைபெற இருக்கிறது. இப்போட்டியில் வெல்வோருக்குக் கீழ்க்காணும் பரிசுகள் வழங்கப்பட இருக்கின்றன.

முதல் பரிசு - 10,000 இந்திய உரூபாய்கள்

இரண்டாம் பரிசு - 5000 இந்திய உரூபாய்கள்

மூன்றாம் பரிசுகள் (இருவருக்கு) - தலா 2500 இந்திய உரூபாய்கள்

உலகின் எந்த மூலையிலிருந்தும் தமிழர்கள் பங்கேற்கும் அரிய சந்தர்ப்பம்.



சிந்தனைச் சிறகை விரியுங்கள் - சிறந்த கவிதையை வடியுங்கள் - சிறப்பான பரிசுகளை வெல்லுங்கள் - கலந்து கொள்வதற்கான ஒரே தகுதி : தமிழராய் இருப்பது மட்டுமே...

விதிமுறைகள் :

1. தமிழ் மொழி அறிந்த, உலகின் எப்பகுதியில் வசிப்பவரும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம்.வயது வரம்பு இல்லை.

2. கவிஞர்கள் தமக்குப் பிடித்தமான எந்தத் தலைப்பிலும் தம்மைக் கவர்ந்த எந்தச் சிந்தனையிலும் கவிதை எழுதலாம் என்றாலும் மதநெறி, தனி மனிதத் தாக்குதல் மற்றும் பாலியல் போன்ற விதயங்களை விலக்கியதாகப் பாடுபொருள் அமைந்திருக்க வேண்டும்.

3. குறைந்த அளவில் 15 வரிகளும் அதிகமாய் 40 வரிகளுக்கு மிகாமலும் இருத்தல் நலம்.

4. தமிழ்க்குழுமங்கள் மற்றும் நாளேடுகளில் கவிதைப் போட்டியும் அதன் முடிவும் அறிவிக்கப்படும்

5. சிறந்த முதல் மூன்று கவிதைகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்

எப்படி கலந்துகொள்வது?

1. கவிதைகளை ஒருங்குறி (Unicode) அமைப்பில் நேரடி மின்னஞ்சலாகவோ அல்லது இணைப்புக் கோப்பாகவோ (Using MS Word) rtskavithaipotti2016@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

2. தட்டச்சு வடிவம், இயலாவிடில் நல்ல தெளிவான உயர்தர தெளிவுறு (High-resolution) அமைப்பில் ஒளிவருடி (Scan செய்து) இணைப்புக் கோப்பாகவும் அனுப்பலாம்.

3. கவிதை அனுப்புவோர் தங்களின் முழு அஞ்சல் முகவரி , தொடர்பு தொலைபேசி/அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைத் தெளிவாகக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

4. இந்தக் கவிதை இதுவரை எந்த அச்சு ஊடகத்திலும் - இணையத்திலும் - இணைய மடலாற் குழுமத்திலும் - செய்திக் குழுமங்களிலும் இன்னபிற ஊடகங்களிலும் வெளிவரவில்லை என்ற உறுதிமொழி மற்றும் ஆக்கியவர் கையொப்பமிட்ட கவிதைகள் மட்டுமே போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

5. கவிதைகளை அனுப்புகையில் "ரியாத் தமிழ்ச் சங்கம் - கல்யாண் நினைவு கவிதைப் போட்டி 2016" என அஞ்சலிலும், மின்னஞ்சலிலும் தவறாமல் குறிப்பிட வேண்டும்.

விதிமுறைகள் :

1. நடுவர்களின் முடிவே இறுதியானது; உறுதியானது; அதன் மீதான மேலதிகக் கருத்து விவாதங்கள் அனுமதிக்கவோ அங்கீகரிக்கவோ படமாட்டாது.

2. ரியாத் தமிழ்ச்சங்க செயற்குழு உறுப்பினர்கள் - ஆட்சி மன்ற குழுவினர் - அதன் உள்ளமைப்பு உறுப்பினர்கள் யாரும் இந்த போட்டியில் கலந்து கொள்ள அனுமதி இல்லை.

3. இந்தப் போட்டியை எந்த நேரத்திலும் எந்த நோக்கத்திற்காகவும் நிறுத்தவோ விதிமுறைகளை மாற்றிக் கட்டமைக்கவோ ரியாத் தமிழ்ச்சங்க அமைப்புக்கு முழு உரிமை உண்டு.

4. போட்டியில் பங்கு பெறுவோரிடமிருந்து படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 2016 செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி நள்ளிரவு இந்திய நேரம் 00:00 மணி வரை.

5. தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த கவிதைகள் ரியாத் தமிழ்ச்சங்க ஆண்டு விழா மலரில், வலைத்தளத்தில், மடலாற்குழுமத்தில் உரியவர் பெயரோடு வெளியிடப்படும்.

இங்ஙனம்

Fakhrudeen Ibnu Hamdun

தலைவர் - ஒருங்கிணைப்பாளர்

கலை இலக்கியப் பிரிவு (எழுத்துக்கூடம்)

ரியாத் தமிழ்ச்சங்கம்

ரியாத், சவூதி அரேபியா


Sheik Mohamed, Muthusamy Vetrivel

No comments: