Sunday, March 27, 2016

அறிவுக்கூர்மையால் நிகழும் என நினைத்தால்

 உங்களின் அத்துனை அபிலாசைகளிலும் வீசப்பட்ட திராவகத்திற்கு எவரையும் வருந்தி என்ன செய்வது; ஒருவரைப்பற்றிய நம்பிக்கையையும் அதீத பேராசை எண்ணத்தையும் உங்களுக்கு நீங்களே உற்பத்தி செய்துக்கொண்டு, பின் நேசித்தவர்களின் அதிருப்தி செய்கையில் உங்கள் கைகளையும் மூளையையும் பிசைந்துக்கொண்டிருப்பதில் எந்தவொரு பயனுமில்லை; உங்களுக்கு உகந்தவர் ஆகாதவர் என்பதையெல்லாம் இறைவனால் தீர்மானிக்கப்பட்ட விதிகள் எடுத்து இயம்பும்; அவன் இயற்றிய வழியில் நடைப்போடுவது மட்டுமே நம் இயல்பாய் இருக்கும் என்பதை உணர்ந்து இடையில் ஏற்படும் அனைத்து மனமாச்சர்யங்களுக்கும் அதிகப்படியான எந்தவொரு உணர்ச்சி குழம்புகளை வெளியிடுவது அவசியமில்லாதது;

 பத்து நபர்கொண்ட பாலைவனத்தின் பிரயாணத்தில் ஆட்கொண்ட இடியும் மின்னலும் அவர்களை அச்சுறுத்த, எதோ அதீத பாவத்தை எம்மில் எவரோ செய்தவர் உண்டென பிரயாணக் கூட்டத்தில் கூற, அதோ அந்த ஈச்ச மரத்தின் அடியில் ஒவ்வொருவராய் அங்கு நிற்க வேண்டும், தவறிழைத்தவருக்கு இறைவன் இடியையும் மின்னலையும் இறக்கி மற்ற நபரின் பிரயாணத்தை இலகுவாக்கி வைப்பான் என ஏகமுடிவுடன் காட்சிகள் அரங்கேறியது; ஒவ்வொருவராய் செல்ல, ஒன்பது நபர்களும் தப்பித்துக்கொள்ள ஒருவர் மட்டுமே மிச்சம்; ஒன்பது நபர்களும் ஒற்றை நபரை பார்த்து உங்கள் தவறுக்கான தண்டனை பெற்று எங்கள் பயணத்தை தொடரவிடுங்கள் என்றுக்கூற...

அச்சத்தில் ஒட்டியிருக்கும் பீதியோடு ஈச்ச மரத்தின் அடிக்கு செல்ல.. அந்தோ பாரிய இடியும் மின்னலும் பலமாய் வந்து விழுந்தது; ஒன்பது பேரும் மாண்டனர்; ஈச்ச மரத்தின் அடியில் இருந்தவர் பயணத்தை தொடர்ந்தார்; இப்படிதான் உங்களின் எண்ணங்களுக்கு என்றாவது சம்மட்டி அடி விழும்; எதுவுமே உங்கள் கையில் இல்லை; எல்லா முடிவுகளும் செய்கைகளும் உங்களின் அறிவுக்கூர்மையால் நிகழும் என நினைத்தால் உங்களின் எண்ணத்திற்கு என்றாவது சம்மட்டி அடி விழும்; அன்றைய பொழுதில் உங்களின் அறிவுத்தனம் புத்திக்கூர்மை நீங்கள் சிலாகிக்கும் அனைத்துமே உங்களைக் கண்டு சிரிக்கும்;

 வெற்றி எவற்றுக்குமே அதிகப்படியான உணர்ச்சிகளை வெளிப்படுத்தாதிருங்கள்; அவை இன்னொரு தோல்வி உங்களை மெல்லமாய் கிள்ளும்போது துடி துடித்து போவீர்கள்; உங்களின் அத்துனை அபிலாசைகளிலும் வீசப்பட்ட திராவகத்திற்கு எவரையும் வருந்தி என்ன செய்வது; ஒருவரைப்பற்றிய நம்பிக்கையையும் அதீத பேராசை எண்ணத்தையும் உங்களுக்கு நீங்களே உற்பத்தி செய்துக்கொண்டு!
‪#‎Tafara‬ Rasay

                                                          Yasar Arafat

No comments: