Sunday, March 27, 2016

இசை நினைவலைகள் நிகழ்வு...!

Hilal Musthafa

நேற்று (26/03/2016) சென்னை AVM அறக்கட்டளை இராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில், மறைந்த "இசைமுரசு நாகூர் ஹனீபா நினைவலைகள்" என்ற தலைப்பில் ஒரு நிகழ்வு நடந்தேறியது.
இசைமுரசு மகனார் இசைமுரசொலி நௌஷத் அலியின் இசைநிகழ்ச்சி நிகழ்ந்தது. அப்போது நௌஷத் அலி தன் தந்தையின் வாழ்வில் நடந்த
ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தார். அது எனக்குக் கடந்த கால நிகழ்வுகளை மீட்டெடுத்துத் தந்தது.
இசைமுரசு ஹனீபா அண்ணன் தமிழகச் சட்ட மன்ற மேலவை (M.L.C.)உறுப்பினராக இருந்த காலக் கட்டம்.
சென்னை அண்ணாசாலை அரசினர் தோட்டத்திற்குள் இருந்த
அன்றைய தினம் "புதிய எம். எல். ஏ.ஹாஸ்டல்" என அழைக்கப்பட்ட
அடுக்கு மாடிக் கட்டடத்தின் 6 - வது தளத்தில் ஒரு அறை இசைமுரசுக்காகச் சட்டமன்றம் ஒதுக்கி இருந்தது. சென்னைக்கு இசைமுரசு வரும் வேளைகளில் அங்குதான் தங்குவார். பதவி இல்லாத காலத்தில் சென்னை எழும்பூர் கென்னத் லேனில் இருக்கும் லட்சுமி மோகன் லாட்ஜில் தங்குவார்.
ஒருநாள் காலை இசைமுரசின் சட்ட மன்ற ஹாஸ்டல் அறைக் கதவு தட்டப்பட்டது.அறைக்குள் இசைமுரசு, நௌஷத் அலி, இன்னும் சிலர் இருந்தனர். நௌஷத் அலி அறைக் கதவைத் திறக்கிறார். அறைக்கு வெளியே மெல்லிய வடிவத்தில் கறுத்த மேனியில் ஒரு இளைஞர் நிற்கிறார்.
வந்தவர், நௌஷத் அலியிடம் "அய்யாவைப் பார்க்கணும்" என்கிறார்.
தன் பெயரை ராசையா எனச் சொல்கிறார்.

நௌஷத் அலியும், இசைமுரசிடம் ராசையா என்பவர் உங்களைப் பார்க்க வந்திருப்பதாகத் தகவல் தருகிறார்.இசைமுரசும், வரச் சொல் என்கிறார். ராசையா அறைக்குள் வருகிறார்.
"தம்பீ! நீங்கள் யார்? என்ன விஷயமா வந்தீர்கள்?" என இசைமுரசு கேட்கிறார்.
"அய்யா உங்கள் பாடலுக்கு நான் இசை அமைக்க வேண்டும்"என்கிறார், ராசையா.
"தம்பி அதற்கு நீங்கள் இங்கு வந்திருக்கக் கூடாது.அண்ணாசாலையில்
உள்ள HMV நிறுவனத்திற்கு அல்லவா சென்றிருக்க வேண்டும்? என இசைமுரசு பதில் தருகிறார்.
"அவர்கள் சொல்லித்தான் அய்யா நான் இங்கு உங்களைப் பார்க்க வந்திருக்கிறேன்"என்கிறார், ராசையா.
"அப்படியா? நல்லது. இன்று நான் கொஞ்சம் வெளியில் செல்கிறேன், நாளைக் காலையில் வாருங்கள் பார்க்கலாம்" என்றார், இசைமுரசு.
மறுநாள் காலை குறித்த நேரத்திற்கு ராசையா வருகிறார்.இசைமுரசும் தன் கைவசம் இருந்த ஒரு பாடலைக் கொடுத்து "Tune"(மெட்டு) அமைக்கச் சொன்னார்.
ராசையா தரையில் அமர்ந்து, அவரின் ஹார்மோனியப் பெட்டியை மீட்டுகிறார்.
ஹார்மோனியத்தில் ராசையாவின் விரல்கள் விளையாடின.நர்த்தனம் புரிந்தன. கூத்தாடின. இசைமுரசு வியந்து போனார்.
அன்று இசைமுரசு கொடுத்த பாடல் சமுதாயக் கவிஞர் தா.காசிம் எழுதிய பாடல்.
"தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு
திருநபியிடம் போய் ஸலாம் சொல்லு"
இந்தப் பாடல்தான் அது.
அன்றைக்கு இந்தப் பாடலுக்கு இசையமைத்த ராசையாதான், இன்றைய இசைஞானி இளையராஜா.
இந்தச் சம்பவத்தை நௌஷத் அலி மேடையில் நினைவு கூர்ந்தார்.
கவிஞர் தா.காசிம் எழுதிய இந்தப் பாடல் உருவாகிய களம் என் நினைவிற்கு வந்தது.
சென்னை மண்ணடியில் உள்ள மரைக்காயர் லெப்பைத் தெரு 8-ஆம் எண் கட்டிடம், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ் மாநிலத் தலைமையகம்.
அந்தக் கட்டிடம் நாள் முழுவதும் திருவிழா போலவே காட்சி தரும்.
குறிப்பாக இரவு வேளைகளில் அங்கே இலக்கிய விமர்சனம், அரசியல் விவாதம் தூள் பறக்கும்.
அந்தக் கட்டிடத்தில் தங்கி இருந்து கவனித்துக் கொள்ளக் கூடிய பொறுப்பைத் தலைவர் அப்துஸ் ஸமத் சாஹிப், என்னிடமும்
நாகூர் ஜபருல்லாஹ்விடமும் ஒப்படைத்து இருந்தார். நான் அப்போது வட சென்னை மாவட்டச் செயலாளராகவும் இருந்தேன்.
இரவு வேளைகளில், நான், கவிஞர் தா.காசிம்,ஜபருல்லாஹ்,மணிவிளக்கு மாதயிதழ் கம்பாஸிடர் பலராமன், (இஸ்லாமிய இலக்கியஞானம் நிரம்ப உள்ளவர்)
மர்ஹும் கா.மு.ஆதம், பலநேரங்களில் கிளியனூர் கவிஞர் அஜீஸ்,
புரவலர் போர்த்திய பொன்னாடை ஆசிரியர் N.S.N.அப்துல் காதர் பாகவி, இப்படியோர் பட்டாளம் கூடி இருக்கும்.
அப்படிப்பட்ட ஓர் இரவில் கவிஞர் தா.காசிம் எழுதிய பாடல்தான்
"தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு".
இந்தப் பாடலுக்குத்தான் ராசையா என்ற இளைய ராஜா இசையமைத்தார்.
இளையராஜா இசையமைத்த முதல் இஸ்லாமியப் பாடலும் இதுதான.
இசைமுரசு ஹனீபா அண்ணன், ராசையாவின் இந்த இசையமைப்பிற்காக மனப் பூர்வமான பாராட்டைத் தெரிவித்தார்.
ராசையா படீரென்று இசைமுரசின் காலில் விழுந்து வணங்கினார். உடனடியாக அவரைத் தூக்கி நிறுத்தி இசைமுரசு சொன்னார்...
"தம்பீ! யாருடைய காலிலும் விழாதே. அது உயர்வானதும் இல்லை.
ஒப்புதலானதும் இல்லை.
உன் கையில் அசாத்தியமான திறமை குடிகொண்டிருக்கிறது. அதுவே உன்னை மிக மிக மிக உயர்வான இடத்திற்கு அழைத்துச் செல்லும்.
மனிதனை வணங்கிப் பழக வேண்டாம்.
இன்று எங்கள் நபிகளார் பாடலுக்கு இசையமைத்துள்ளாய்.
உன் வாழ்வில் முன்னேற்றம் இப்போதிருந்தே நிச்சயமாக இறைவன் அருளால் துவங்கி விட்டது."என இசைமுரசு துஆச் செய்தார்.
இராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடந்த இசை நிகழ்ச்சிக்குப்
பலப்பல அரசியல் இயக்கத் தலைவர்களும் வந்திருந்தனர்.அவர்களையெல்லாம் பார்த்த மாத்திரத்தில் சம்பந்தமே இல்லாத வேறொரு பழம் நினைவு என்னில் வந்து புகுந்து கொண்டது.
அது சரியா? தவறா? பட்டிமன்றம் தேவையில்லை.
ஆனாலும் அந்தப் பழம் நினைவு வந்து புகுந்து கொண்டதே...!
அது பற்றி அடுத்து எழுதுகிறேன்.

                                Hilal Musthafa

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails