Sunday, March 20, 2016

கூடற்கவிதைப் பொழுதுகள்..!!

ஒரு விடுமுறை தின நண்பகலில்
திட்டமிடப்படாத கலவிக்குப் பின்
தானும் சப்தமின்றிக் குளித்துவிட்டு
குளித்த தடயமின்றி கணவனையும் வெளிவரப் பணிக்கும்
கூட்டுக்குடும்பக் காதல் மனைவியின் கெஞ்சலில் மலர்கிறது
கோடையைக் குளிர்விக்கும் ஒரு மலர்க்கவிதை
ஈரத்தலையை முக்காடிட்டு மறைத்து
மெல்ல ஹாலைக் கடந்து சமையலறையேகுமவள் 
நிம்மதிப் பெருமூச்சுவிட்டு ஆசுவாசமாகும் சமயம்
நனைந்த ரோமநுனிச் சிறுதுளிகளில் சொட்டுகிறது 
நண்பகல் வெறுமையைப் போக்குமொரு குளிர்க்கவிதை
ஓடிவந்து கட்டிக்கொள்ளும் குழந்தை வாசனை முகர்ந்து
குளிச்சயாம்மா ஃப்ரெஷ்ஷா இருக்க என்று இறுக அணைக்க
"ஆமாப்பா என்ன வெயில்...ஷ்ஷ்ஷ்ஷ்" என்று
கணவன் கையில் தேநீரளித்து நகருமவள்
வெட்கப்பெருமிதம் பொங்கும் நமுட்டுச் சிரிப்பில் 
பூரித்துப் பொங்குகிறதொரு கூடற்கவிதை..!!





No comments: