Wednesday, January 20, 2016

குழந்தைகளின் கேள்விக்கு இன்னும் எத்தனை எத்தனை புஸ்தகங்களை படிப்பதற்கு சுமக்கப்போகிறீர்கள்;

எல்லாம் தெரிந்த உங்கள் மமதையை அடித்து நொறுக்க உங்களை திணறடிக்க மிகப்பெரிய தத்துவஞானிகளோ ஆக சிறந்த அறிஞர்களோ அவசியப்படுவதில்லை; குழந்தைகளே போதுமானவர்கள்; கற்றதைக்கொண்டும், கற்பித்ததைக்கொண்டும் உங்களுக்கு எழும் கேள்விகள் வெறும் புஸ்தகங்களை மேய்ந்து அதை தன் உணவாக உண்டு செமித்துக்கிடக்கும் கரையான்களைப் போல; நீங்கள் அறிந்ததாக, தெரிந்ததாக நினைத்துக் கொண்டிருப்பவைகளில் பெரும்பாலும் பெரும்பாலும் இன்னொருவர் விட்டுச்சென்ற எழுத்துகளைப் பிடித்துக்கொண்டு தூக்கில் தொங்குகிறீர்கள்;

சுயமாக சிந்திப்பதாக நீங்கள் கற்பித்துக்கொண்டிருக்கும் அனைத்தும் எங்கேயோ; எப்போதோ விட்டுச்சென்ற இன்னொருவரின் குரலுக்கு மாதிரியாக திகழ்கிறீர்கள்; காதுகள் இரண்டுதான் இருக்கவேண்டுமா எனும் கேள்விக்கும்; விரல்கள் பத்துதான் இருக்கவேண்டுமா எனும் குழந்தைகளின் கேள்விக்கு இன்னும் எத்தனை எத்தனை புஸ்தகங்களை படிப்பதற்கு சுமக்கப்போகிறீர்கள்;
தென்னை மரத்தில் ஏறி தேங்காய்களை பறிப்பதையும், குளத்தில் இறங்கி மீன் பிடிப்பதையும் இன்னும் நாங்கள் வாய்பிளந்துதான் வேடிக்கைப் பார்க்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்; மற்றொருவராக மாறுவதற்கும், அவருடைய அறிவுப்போல சிறப்பதற்கும் ஏக்கம் கொள்ளுகிறோம்; குழந்தைகளுக்கு அந்த நோய் இருப்பதில்லை; குறிப்பு எழுதவும், காவியம் படைப்பதற்கு காகிதங்களையும் எழுதுகோலையும் தேடும் சராசரி சாமானியன் நாங்கள்; குழந்தைகளுக்கு சுவர்களே போதுமானது; அவர்களின் பார்வை விசாலமானது; குறுகிய எண்ணத்தைக் கொண்ட நாம்தான் அவர்களை சுவற்றில் எழுத அனுமதிப்பதே இல்லை;

சக சிறுவர்களுக்கு முன்னால் அவனை மிரட்டுவதாலும்,அடிப்பதாலும் எப்படிப்பட்ட பாரிய அழுத்த மனப்பான்மையையும், கவுரவ குறைச்சலையும் கொடுக்கும் என்பதை பற்றியெல்லாம் நாங்கள் கவலைப்படுவதே இல்லை; அதிகாரம் செலுத்தவும், ஆளுமையை நிருவவுமே நாம் குறியாய் நின்றுக்கொண்டிருக்கிறோம்;

எவைதான் உங்களுக்கு ரசிக்கத்தெரியும்; எழுதும்போது உங்கள் சட்டையைப் பிடித்து இழுத்து விளையாட அழைக்கும் குழந்தைகளை ரசிக்க தெரியாது; உங்கள் மனைவி நீங்கள் வெளியில் கிளம்பும்போது சீராக சீவிய உங்கள் தலைமுடியை களைத்துவிட்டு இன்னும் உங்களுடன் சில நாழிகை கழிக்க செய்யும் சில்மிஷங்கள் உங்களுக்கு ரசிக்க தெரியாது; எதுவும் தெரியாமல் அவசர உலகில் அதோ கதியென்று வீழ்ந்துக்கிடக்கும் உங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற பெருமையிலும் மகிழ்ச்சியிலும் இருந்துக்கொண்டிருக்கிறீர்கள்;

தவளைகள் சப்தம் பிடிக்காது; எலிகளின் கீச்சுகள் பிடிக்காது; ஆடுகளின் தும்மல் பிடிக்காது , ஆந்தையின் அலறல்கள் பிடிக்காது , ஈசலின் கூட்டம் பிடிக்காது; எதுவுமே உங்களுக்கு பிடிக்காது ரசிக்கவும் தெரியாது; சுத்தம் சுத்தமென்று முழு நேர நோயாளியாக உங்களை நீங்களே மாற்றிக்கொண்டீர்கள்;

-Tafara Rasay


 Yasar Arafat

No comments: