Saturday, November 7, 2015

அந்த ஆசிரியர் இவர்தான்! -Rafeeq Friend

Rafeeq Friend

 "எனக்குக் கிடைத்த அற்புதமான ஆசிரியர்களே, நான் ஒரு ஆசிரியராக வாழவேண்டும்  என்ற ஆர்வத்தை என்னுள் தூண்டியவர்கள்!"
 - அகீலா ஆஸிஃபி
எல்லாமே தலைகீழாய் மாறிப்போனது. அதுவரையிலும் இருந்த நிம்மதி நிறைந்த வாழ்க்கை, அதற்கெதிராய் மாறி அந்நிய நாட்டில் அகதியாக அடைக்கலம் புகுந்து வாழுமாறு பணித்தது. ஆம், 1992ம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் ஆட்சி கைப்பற்றப்பட்டு உள்நாட்டுப்போர் வெடித்ததில் சிதறுண்டு போனார்கள் அந்நாட்டு மக்கள். பல இலட்சக்கணக்கான மக்கள் பாகிஸ்தான் நோக்கி ஓடினர்.
தங்களின் சொத்து,சுகம், உறவினர்கள் மற்றும் உடமைகள் என அனைத்தையும் துறந்து ஆதரவற்றோராக அகதிகள் முகாம்களில் அடைபட்டனர். சுகமான வாழ்வு கொண்டிருந்த காபூல் மக்களும் அங்கே கண்கலங்கி நின்றனர். கல்வி கற்றிருந்தோரும் காசுபணம் இழந்திருந்தினர். வருடக்கணக்கில் வடிவமைத்துக் கட்டிய வீட்டை அப்படியே விட்டுவிட்டு, மாற்றுத் துணிகள் கூட இல்லாமல் வந்து சேர்ந்தோர் பலர் இங்கிருந்தனர்.
காபூலில் ஓரளவு வசதியான குடும்பம், கல்வியே பிரதானம் என்று, தம் சகோதர சகோதரிகளோடு (ஆண் குழந்தை / பெண் குழந்தை என்று) பேதம் பாராமல்  கல்வி புகட்டிய பெற்றோர். கற்ற கல்வியின் பயனாக காபூலில் கிடைத்த வரலாறு & புவியியல் ஆசிரியப் பணி, அன்பு செலுத்திய மாணவர்கள் என அனைத்தையும் துறந்து, தம் கணவர் மற்றும் இரு சின்னஞ்சிறு பிள்ளைகளையும் தூக்கிக்கொண்டு வந்தவர்தான் 26 வயது அகீலா ஆஸிஃபி எனும் பெண்.  இவர்தான் நாம் வியக்கப்போகும், ஐ நா போற்றிய இந்த ஆண்டின் ஆசிரியை!

இந்த வாழ்க்கை பல இரகசிய அட்டைகளைத் தன்னுள் புதைத்து வைத்திருக்கிறது. ஒவ்வொன்றையும் திருப்பிப் பார்க்க வாழ்ந்துதான் ஆகவேண்டியிருக்கிறது இல்லையா? அதுபோல தான் கனவிலும் நினைத்திராத ஒரு வாழ்க்கை கண்முன்னே நிகழ்வதை மெதுவாக அவதானித்துக்கொண்டிருந்தார் அகீலா ஆஸிஃபி.
ஆடிய கால்கள் ஓயலாம்; பாடிய வாயும் தேயலாம்; ஆனால், கற்றுக்கொடுக்கும் இதயம்?  இறுதிவரையிலும் கற்பிக்கும் இல்லையா? தஞ்சம் புகுந்து குடில்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் இலடசக்கணக்கான மக்களின் பிள்ளைகளைப் பற்றியும் அவர்களின் கல்வி பற்றியும் சிந்தித்தார் அகீலா ஆஸிஃபி. ஆண் பிள்ளைகள் அருகிலிருக்கும் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பப்படுவதையும், பெண் பிள்ளைகளுக்கென பள்ளிக்கூடங்கள் இல்லாததால் பெண் பிளைகளை குடிலிலேயே வைத்திருப்பதையும் கண்டு மனம் நொந்து போகிறார்.
"நானொரு கல்வி கற்ற பெண். என்னைப் போலவே மற்ற பெண்குழந்தைகளும் கல்வி கற்பது அவர்களின் அடிப்படை உரிமை. அவர்களுக்கு உதவுவது எனது கடமை." என்று சொல்லி தமது கணவரை அழைத்துக்கொண்டு அங்கிருக்கும் பெரியவர்களையும், சமுதாயத் தலைவர்களையும் சந்திக்கத் தொடங்குகிறார். ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று கதவைத் தட்டி பெண்கல்வியின் அவசியம் பற்றியும், இது அவர்களின் வாழ்வில் ஒரு வசந்தத்தை ஏற்படுத்தும் என்றும் எடுத்துரைக்கிறார்.  திருமணம் போன்ற விழாக்களுக்குச் சென்றாலும் அங்கு சந்திக்கும் பெண்களிடமும் பெரியவர்களிடமும் கல்வியின் அவசியத்தையும், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவையுங்கள் என்றும் தொடர்ந்து போராடுகிறார்.
12 சிறுமியர்கள் சேர்ந்தவுடன் அகதிகள் முகாமிலேயே ஒரு சிறிய குடிலமைத்து பள்ளி ஆரம்பமாகிறது. பள்ளிக்கூடம் என்றாலே என்னவென்று தெரியாத அவர்களுக்கு பெண் ஆசிரியரை எப்படி அழைப்பது என்று குழப்பத்தில் இருந்தார்களாம். எடுத்தவுடன் கடினம் என்று நினைத்துவிடக்கூடாத அளவிற்கு பாடங்கள் அமையவேண்டும் என்பதில் கவனமாய் இருந்திருக்கிறார் அகீலா ஆஸிஃபி. அன்றாடம் வீட்டிற்குத் தேவையான பயன்பாட்டுக் கணக்குகள். உடல், உடையின் தூய்மை, நல்ல மகளாக இருப்பது எப்படி? என்று எளிமையாகப் பாடங்கள் எடுத்துப் புரியவைத்திருக்கிறார்.
"இதுதானா கல்வி!" எனும் ஆச்சரியமடைய வைத்தவுடன்  பெண் பிள்ளைகளின் வருகை அதிகமானது.கல்வி அவர்களிடம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியது. விளைவு, கற்றுத்தரும் குடிலும் அதிகமானது. அப்படியே  கணிதம், வரலாறு, ஆங்கிலம் என்று பாடங்கள் விரிய அறிவும் விசாலாமாகியிருக்கிறது. எந்த அளவு தெரியுமா? அவரிடம் கற்ற மாணவிகள் பட்டங்கள் பல பெற்று இன்று பாகிஸ்தானில் சொந்தமாகப் பள்ளிக்கூடங்கள் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
இவர் நடத்திய குடில் பள்ளிகள் இன்று நிரந்தரமான கட்டிடங்களைக் கொண்டு அனைத்துப் பெண் குழந்தைகளுக்கும் அறிவொளி ஏற்றி வருகிறது. இவரின் முன்னாள் மாணவர்கள் இன்று இவரிடம் ஆசிரியைகளாகப் பணிபுரிகின்றனர். இன்னும் சில மாணவர்கள் பட்டங்கள் பெற்று தமது நாடான ஆப்கானிஸ்தான் சென்று தத்தம் மாகாணங்களில் பள்ளிக்கூடங்கள் தொடங்கி நடத்தி வருகிறார்கள்.
அகீலா ஆஸிஃபின் 23 ஆண்டுகால தன்னலமற்ற சேவையினால், இன்று பாகிஸ்தான் மட்டுமல்லாமல் ஆப்கானிலும் பெண் கல்வி காட்டுத்தீ போல பரவி வருகிறது. அறிவொளி தீபங்கள் மிளிர்கின்றன. இதுவரையிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் (அகதி)கள் கல்வி கற்றுள்ளனர். ஆறு கிராமங்களில் பள்ளிக்கூடங்கள் உருவாக்கியுள்ளார்.  இந்தச் சேவையினைப் போற்றும் விதமாக ஐநாவின் UNHCR (United Nations High Commissioner for Refugees) "நான்சேன் அகதிகள் நலவாழ்வு விருது" எனும் உயரிய விருதினை (2015 செப்டம்பர்)  வழங்கி இந்த சிறப்புமிக்க ஆசிரியரைக் கௌரவித்துள்ளது. விருதுடன் பரிசுத்தொகையாக ஒரு இலட்சம் அமெரிக்க டாலர்களையும் வழங்கியிருக்கிறது.
நான்சேன் விருதினைப் பெற்றுக்கொண்டு உரையாற்றிய ஆசிரியை அகீலா ஆஸிஃபி, "வளரும் நாடுகளுக்கு உதவ விரும்பும் தலைவராகவோ அல்லது கொடையாளராகவோ நீங்கள் இருந்தால், முதலில் அந்நாட்டிலுள்ள குழந்தைகளுக்கு முதலில் பாரபட்சமில்லாத கல்வியினைக் கொடுங்கள். கல்வியறிவு என்பது ஒருதலைமுறையோடு போவதல்ல; ஒருதலைமுறை கற்ற கல்வி தொடர்ந்து வரும் தலைமுறைகளுக்கும் பரவும். அமைதியான திறமையான சமுதாயம் உருவாகும்" என்றார்.
அறிவொளி ஏற்றுவோம்!

-Rafeeq Friend

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails