Thursday, November 5, 2015

அதீத நம்பிக்கை உங்களுடைய வெற்றியைப் பறித்துக் கொள்ளலாம்…!!

 by

நீங்கள் வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்றால் உங்களுக்கு நம்பிக்கை அதிகமாக இருக்க வேண்டும் என்று பலர் கூறக் கேட்டு இருப்பீர்கள்.இது தவிர இதுவரை நடந்த ஆய்வுகள் பலவற்றில், அதிக நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கும் போது, உங்களது வழியைத் தாங்கும் சக்தி, மன உறுதி மற்றும் மன தைரியம் ஆகியவை அதிகமாகும் என்று கண்டறியப் பட்டுள்ளது. இது தவிர உங்களுடைய ஆரோக்கியம், உறவு மற்றும் செயல் திறன் ஆகியவற்றை அதிகப் படுத்துவதில் நம்பிக்கை அதிக பங்கு வகிக்கின்றது என்பதும் அனைவரும் அறிந்ததே.

ஆனால் ‘அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு’ என்பதும் நம்பிக்கைக்கும் பொருந்தும். அதீத நம்பிக்கை உங்களை படு குழியிலும் தள்ளலாம். பொதுவாக அதிக போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில், முக்கிய வியாபார உலகில் உங்களுடைய நிலைமையை மிகுந்த தன்னம்பிக்கையுடன் அணுகுவது நிறைய பிரச்சனைகளை உண்டு பண்ணலாம்.

நம்பிக்கை அதிகமாக இருப்பது உங்களுக்கு கீழ்க்கண்ட ஐந்து வழிகளில் பிரச்சனைகளை உருவாக்கலாம்.
1. ‘நானே மேலானவன்’ என்ற உணர்வு

சராசரியாக நம்மில் பெரும்பாலானோர் நாம் மற்றவர்களை விட உயர்ந்தவர்கள்,மேலானவர்கள் என்னும் எண்ணம் அதிகம் கொண்டவர்களே. இதை நான் சொல்லவில்லை. பல ஆராய்ச்சிகள், ஆய்வு முடிவுகள் இதை உறுதி செய்து விட்டன. நாம் இந்த விஷயத்தில், படிப்பில், வண்டி ஓட்டுவதில், ஆரோக்கியத்தில் மற்றவர்களை விட நல்ல நிலைமையில் இருக்கின்றோம் என்ற எண்ணம் கொண்டுள்ளோம். நம்மை விட சுமார் 80 சதவிகிதம் பேர் மேலானவர்களாக இருந்தாலும், நாமும் அந்த மேலான 20 சதவிகிதம் பேரில் தான் இருக்கின்றோம் என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றோம்.

வியாபார உலகில் அதிகம் தன்னம்பிக்கை கொண்டவர்களாக இருப்பது உங்களுக்குப் பல வகையில் உதவினாலும், உங்களுடைய திறன்களை பெரிது படுத்தி நினைத்துக் கொள்வது தவறாகவும் முடியலாம். நான் இதில் வல்லவன் அதில் வல்லவன் என்று நினைத்துக் கொள்வது உங்களது காலை நீங்களே வாரிக் கொள்வது போல.

உங்களால் எது முடியும் ஏதும் முடியாது என்பதில் தெளிவாக இருங்கள்.
2. இது எனக்கு மிக எளிது என்னும் இறுமாப்பு.

நாம் ஒன்றை கவனமாக கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். எந்த நேரத்திலும் நம்முடைய அதீத தன்னம்பிக்கை இறுமாப்பாக மாறி விடக் கூடாது. அது நம்முடைய வாழ்வை கொஞ்சம் கொஞ்சமாக அளித்து விடும். “நான் எப்போது நினைத்தாலும் புகைப் பழக்கத்தை நிறுத்தி விட முடியும்”, “எனக்குத் தான் இது நன்றாகத் தெரியுமே நான் ஏன் தயார் செய்ய வேண்டும்” என்று நீங்கள் அடிக்கடி நினைக்கின்றீர்கள் என்றால் இப்பொழுதே அதை மாற்றிக் கொள்ளுங்கள்.

பின்னால் வர இருக்கும் பிரச்சனைகளை நீங்கள் குறைத்து மதிப்பிட்டால் அதற்கு உங்களை நீங்களே தயார் செய்து கொள்ள மறந்து விடுவீர்கள். அனைத்தும் வாழ்வில் எளிதாகக் கிடைத்து விடும் என்ற நினைப்பு உங்கள் சுய கவுரவத்தைக் குலைக்கும் வாய்ப்பும் அதிகம். மேலும் நீங்கள் ஒவ்வொரு முறையும் முதல் தடவையிலேயே வெற்றி பெறுகின்றீர்கள் என்றால், பெரிய போட்டியில் நீங்கள் பங்கு பெறுவதே இல்லை என்று அர்த்தம்.
3. கனவிற்கும், தன்னம்பிக்கைக்கும் உள்ள இடைவெளியை மறந்து விடுவது

இது பெரும்பாலும் அனைவருமே செய்யும் தவறு. நல்லதை மட்டுமே நினைக்க வேண்டும் என்பது உண்மை தான். அதற்காக உரிய முயற்சியை எடுக்காமல் பகல் கனவு காண்பது எந்த விதத்திலும் உங்களுக்கு உதவி செய்யாது. “எண்ணங்கள் வலிமையானவை. நீங்கள் நினைத்தது நடக்கும்” என்பது போன்ற தத்துவங்கள் இன்னும் விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப் படவில்லை. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் நமக்கு லாட்டரி விழ வேண்டும் என்று பல வருடங்களாக கனவு காணும் அனைவரும் இன்று லட்சாதிபதியாக இருக்க வேண்டும்.

உயர்ந்த எண்ணங்கள் மட்டுமே உங்களுக்கு வெற்றியைத் தந்து விடாது. இத்துடன் உங்களுக்கு உயரிய நடத்தையும் மிகவும் அவசியம்.
4. உங்கள் திட்டப்படியே அனைத்தும் நடக்கும் என்ற எண்ணம்

எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்ற நம்பிக்கை வேறு. ஆனால் நிச்சயமாக அதில் எந்த தடங்கலும் வராது என்று உங்களை நீங்களே ஏமாற்றிக் கொண்டு இருப்பது மடமை. இது போன்று நம்பிக்கையான வாசகங்களை உதிர்த்தாலும் வெற்றியாளர்கள் எப்பொழுதுமே ஒரு மாற்று வழியை கை வசம் வைத்து இருப்பார்கள்.

எந்த முன் யோசனையும் இல்லாமல், கூடுதல் வருமானத்திற்காக அதிக வேலையை எடுக்கப் போகின்றோம் என்று ஒரு நிறுவனம் முடிவு செய்தால், அதனால் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் பொய் விடும். இது வரவிருக்கும் தடங்கலைத் தடுக்கக் கண்ணைப் பொத்திக் கொள்வது போன்றது.
5. வெளுத்ததெல்லாம் பால் என்று நம்புவது

எல்லா விஷயத்திலும், ஒவ்வொருவரிடமும் தவறு கண்டு பிடிப்பது எவ்வளவு தவறானதோ, அது போலவே அனைவருமே நல்லவர்கள் என்று நினைப்பதும் தவறு. இது உங்களை மற்றவர்கள் மத்தியில் ஏமாளியாகவும் காட்டலாம். எனவே கவனமாக இருப்பது முக்கியம். மேலும் நீங்கள் தவறான ஒரு நபரின் மீது நம்பிக்கை வைக்க நேரிடலாம்.

அதீத நம்பிக்கை இது போன்ற பல நேரிடையான மற்றும் மறைமுக பிரச்சனைகளை நமக்கு ஏற்படுத்தலாம். எனவே நாம் சரியான அளவில் நம்பிக்கையும், அதே அளவு சந்தேகமும் கொண்டு இருப்பது அவசியம். தேவை அற்ற நம்பிக்கையைத் தவிர்த்து, சரியான அளவை நீங்கள் தெரிந்து கொண்டால் வெற்றி நிச்சயம்.

நன்றி http://www.tamilenfo.com/story/106340

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails