Sunday, November 15, 2015

என்னை சுற்றியிருந்த வேலிகள் உடைக்கப்பட்டு உலகம் அழகாய் தெரிய தொடங்கியது

 சுற்றிலும் மனித உடல்களின்
சிதறல்கள்! மனம் பதைக்க
தூரத்தில் நின்று பார்த்துக்கொண்டிருந்த கூட்டத்தில் நானும் ஒருவன்!
மனம் உருகி இறைவா
இவர்களுக்கு ஏற்பட்ட அநீதம்
யாருக்கும் நேர்ந்து விடாமல்
காப்பாற்று கண்களை மூடி
பிரார்த்தித்து நிமிர்ந்தால்
கூட்டத்தின் பல ஜோடி கண்கள்
என்னை உற்று நோக்குவதை
அறிந்தேன்!

அந்தப் பார்வைகள் சுட்டது!
உன்னால்தானே இதெல்லாம்
என்ற சுடுதல் அதில் இருந்ததை
அறிய முடிந்தது! கை என்னை
அறியாமல் என் தொப்பியையும்,
தாடியையும் தொட்டுப்பார்த்தது!
மனம் வேதனைப்பட்டது!
யாரோ சிலர் செய்யும்
அநீதிகளுக்காக ஒட்டுமொத்த
சமுதாயத்தையும் குற்றவாளி
கூண்டில் ஏற்றுகிறதே
உலகம்!
மெல்ல விலகி நடந்தேன்!
முதுகில் உஷ்ணமான பார்வைகள்
சுட்டதை அறிய முடிந்தது!
சற்று தூரம் வந்ததும்
மனம் அமைதியடைய, இறைவா,
உலகெங்கும் இறப்பதும், பாதிக்கப்படுவதும் முஸ்லிம்களே!
குற்றவாளிகள் என்ற அவப்பெயரை
அடைவதும் அவர்களே இந்த
நிலை என்று மாறும்! தலை தாழ்த்தி வேண்டியபோது
தொப்பி கீழே விழுந்தது!
கண்ணை மூடி இருந்தேன்!
யாரே தொடுவது போன்ற உணர்வு!
எதிரே மூன்று வயது பிரெஞ்சுக் குழந்தை அன்று மலர்ந்த பூவை
போல அழகான சிரிப்புடன் என்
தொப்பியை எடுத்து என்னிடம்
நீட்டிக்கொண்டிருந்தது!
நான் கீழே அமர்ந்து மெல்ல
அந்தக் குழந்தையின் கையில்
இருந்து வாங்க முயன்றேன்!
ஆனால் அந்தக் குழந்தை
அதை தராமல் என் நெற்றியை
பார்த்து தன் பிஞ்சுக்கைகளால்
தடவி அங்கிள் இது என்ன காயம்?
வலிக்கிறதா?என்று தொழுகையால் நெற்றியில்
ஏற்பட்ட தழும்பை தடவி கேட்டது!
ஆமாம்மா! வலிக்கிறது ஆனால் அங்கல்ல இங்கு என்று
நெஞ்சை தடவிக்காண்பித்தேன்!
கவலைப்படாதீங்க! நான்
தடவிக்கொடுக்கிறேன்! வலி
போயிடும்!
சரிம்மா!
தலையை காட்டுங்க! நானே
தொப்பியை மாட்டி விடுகிறேன்!
சரிம்மா
தொப்பியை மாட்டி விட்டு ஒரு முத்தம் தந்து விட்டு தூரத்தில் இதை பார்த்துக்
கொண்டிருந்த பெற்றோர்களை
நோக்கி ஓடியது!
பேதங்கள் பார்ப்பது
அனைத்தும் அறிந்த பெரியவர்களே
குழந்தைகள் எதையுமே அன்பாக பார்க்க கூடியவர்கள் வருங்காலம்
இவர்கள் கையில் அப்போ நிச்சயம்
விடிவு வரும் என்ற நம்பிக்கையில்
/////என்னை சுற்றியிருந்த வேலிகள்
உடைக்கப்பட்டு உலகம் அழகாய்
தெரிய தொடங்கியது////
ராஜா முகமது சீன தேசத்திலிருந்து
கொடுத்த தலைப்புக்கு நான்(Mohamed Rafiudeen )
எழுதிய கட்டுரை!
Mohamed Rafiudeen

No comments: