Monday, November 23, 2015

உலகையே வாசிக்கலாம்

குனிந்து நீ வாசிப்பது
கொஞ்சமோ கொஞ்சம்தான்
நண்பா

நீ தலை நிமிர்ந்து வாசித்தாலோ
அந்த வானத்தின் விரியழகும் மாயமும்
உன் கண்களின் விரல்களில்
கெட்டித் தேனென வழியும்
நண்பா

இன்னொரு விழி பார்த்ததை
நீ பார்க்கக் குனிவதே
காகிதங்களின் மேனியில்

ஆனால்
உன் விழிகள் தானே நடந்து
நீயே பார்ப்பவைதான்
நிரம்பிக் கிடக்கின்றன
இயற்கையில்

எத்தனை முறை வாசித்தாலும்
தீர்ந்தே போகாதவை
அண்டத்தின் கோள்களில்
திறந்தே கிடக்கின்றன

காணும் திசையெல்லாம்
ஒரு ராட்சச நூலகம்
உன் கண்ணில் தெரிகிறதா?

இயற்கைக்குள் யாவும் அடங்கும்
ஆனால் இயற்கையோ
அதனுள் மட்டுமே அடங்கும்

காட்சி ஒருதிசையாய்
கற்பனையோ பலதிசையாய்
பல்கிப் பெருகிய வண்ணம்
காலத்தின் கர்வம் வென்று
நீள்வதே இயற்கை

அதை வாசிக்க வேண்டாமா
நண்பா

வா வா என்று
வற்றாமல் அழைக்கும்
கவிதைகளே
காடுகள்

எழுத்துக்களை அள்ளி
உன் கருத்துக்குள்ளும்
கற்பனைக்குள்ளும்
ஊட்டிவிடும்
குளிர் அன்னையர்தாம்
குளங்கள் குட்டைகள்
மேகங்கள் அருவிகள்
நதிகள் கடல்கள்

வேர்களை வாசித்துப்பார்
வாழ்க்கை புரியும்
வியர்வையை வாசித்துப்பார்
பெரும் புரட்சியே தெரியும்

கார்முகிலை வாசிக்க
இந்த மண்மீது அது கொண்ட
காதலின் காவியத்தை
எம்மொழியிலேனும் செய்யவியலுமா
நண்பா

ஒரு மொழியை
அறிந்திருந்தால் மாத்திரமே
அந்த மொழியின் நூல்களை
வாசித்தல் இயலும்

பிறந்ததும் பிள்ளை
எந்த மொழியினை அறியும்?

ஆனால்
அது இயற்கையின் இயல்பு மொழிகொண்டு
இந்த உலகையே வாசிக்கும் அல்லவா

எவனோ திணிக்கத் திணிக்க
உன் நரம்புகளில் ஏறுவது
மாற்றான் ரத்தம்தானே

இயற்கையை
நீ வாசிக்க நேசிக்க
உன் நரம்புகளில் ஏறுவது
உனதே உனதான ரத்தமல்லவா?

சொல்லித் தெரியாக் கலையான
காதலைச்
சொல்லித்தந்தது யார்?

பார்த்துப் புரியாத பசியை
வார்த்துக் கொடுத்தது யார்?

அறிவுரையில் வராத உறக்கத்தை
அள்ளித் தருவது யார்?

ஒரு சிங்கத்தின் வீரம்
எந்த வழியே வந்தது?

ஒரு சிறுத்தையின் பாய்ச்சல்
எந்தக் காகிதத்தில் படிக்கப்பட்டது

குஞ்சுகளைக் காக்க
கோழிக்குப் பாடம் எடுத்தக்
கொம்பன் யார்?

எந்த நூலகத்தை மேய்ந்துவிட்டு
எறும்புகள்
அற்புத வாழ்க்கையை வகுத்துக்கொண்டன?

எந்தக் கட்டுரையை வாசித்துவிட்டு
தேனீங்கள் தேனெடுக்கும்
சாதுர்யத்தைக் கற்றுக்கொண்டன

இயற்கையை மிஞ்சிய
ஓர் எழுத்தாளன் உண்டா
கவிஞன் உண்டா
கலைஞன்தான் உண்டா

மறந்துபோன மனித வாழ்க்கையை
மீண்டும் சொல்லித்தரவல்லன
நூல்களல்ல நூல்களல்ல
எழுதப்படாத எழுத்துக்களால்
நம்மைச் சுற்றிச் சுற்றி
இறைந்துகிடக்கும்
இயற்கைதான் இயற்கைதான்

மூதாதையர் காவியம்
உன் மரபணுக்களில் எழுதிக் கிடக்கின்றது
ஆழ்ந்திருந்து வாசித்துப் பார்த்தாயா?

பார்த்திருந்தால்
அந்நிய மோகம் கொண்டிருக்க மாட்டாயே?

உன் அகங்காரங்களைப் பழிக்கும் கவிதைகள்
ஆகாயத்தில் நிரம்பிக் கிடக்கின்றனவே
பாடிப்பார்த்தாயா?

பார்த்திர்ந்தால்
நீ மனிதனாக மாறியிருப்பாயே?

நீ வசிக்க வேண்டிய சூழலை
சூரியன் சொல்லித் தருகிறதே
ஒருநாளேனும் கேட்டிருப்பாயா

கேட்டிருந்தால்
பனியிலும் பாலையிலும்
அலைந்து திரிவாயா?

உன் நிலையில்லா வாழ்வை
அழியும் அலைகளும்
உதிரும் இலைகளும்
எழுதி எழுதிச் செல்கின்றனவே
ஞானம் பெற்றாயா?

பெற்றிருந்தால்
நீ கருணையே தானென
மாறியிருப்பாயே

புலன்கள் ஐந்தாலும்
அண்டமனைத்தையும்
வாசிப்பதென்பதே வாசிப்பு

நீ
புத்தகம் வழியாக வாசிப்பதெல்லாம்
கடல்முன் நின்று
ஒரு துளி யாசிக்கும்
உன் குற்றுயிர் நேசிப்பு

அன்புடன் புகாரி
http://anbudanbuhari.blogspot.in/

No comments: