Tuesday, March 4, 2014

தொடங்க வேண்டிய கடமை

தொடங்க வேண்டிய கடமை

புல்லரித்தது அதை வாசிக்கும்போது.

‘ஃபத்வா என்ற பெயரில் மத குருக்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளுக்கு சட்ட அங்கீகாரம் கிடையாது. அத்தகைய உத்தரவுகளால் எந்த தனி நபர் பாதிக்கப்பட்டாலும் இந்த நீதிமன்றம் நிச்சயமாக உதவிக்கரம் நீட்டி காப்பாற்றும்’.

சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் சந்திரமவுலி குமார் பிரசாத், பினாகி சந்திர கோஸ் சேர்ந்து வெளியிட்ட பிரகடனம் இது.

ஃபத்வா என்பது அரபு மொழியில் ஒரு சொல். கருத்து என்று அர்த்தம். பெரும்பாலும் இஸ்லாம் குறித்தும் இஸ்லாமிய சட்டம் மற்றும் நெறிகள் பற்றியும் எழக்கூடிய சந்தேகங்களுக்கு முஸ்லிம் குருமார் அளிக்கும் விளக்கத்தை ஃபத்வா என்பார்கள்.

சாத்தானின் கீதங்கள் என்ற பெயரில் சல்மான் ருஷ்டி 1988ல் வெளியிட்ட நாவல் பெரும் சர்ச்சையை கிளப்பிய காலகட்டத்தில் முஸ்லிம் அல்லாதவர்கள் மத்தியில் ஃபத்வா என்ற வார்த்தை பிரபலமானது. ‘தலையை கொண்டு வா’ என்பது போன்ற கடுமையான உத்தரவுக்கு பெயர்தான் ஃபத்வா என அந்த மக்களின் மனதில் பதிக்கப்பட்டது. அது மீடியாவின் கைவரிசை.

உண்மையில் குருவிடம் ஃபத்வா கேட்டவர்கூட அந்த ஃபத்வாவை ஏற்க வேண்டிய கட்டாயம் கிடையாது. அது அவரவர் விருப்பத்தை பொருத்தது என முஸ்லிம் சட்ட வாரியம் கோர்ட்டில் விளக்கம் அளித்தது.

அதே போல, மற்ற மதங்களிலும் குருவாக மதிக்கப்படுபவர்கள் சொல்லும் கருத்து ஃபத்வா என்றே ஊடகங்களால் குறிப்பிடப்படுகிறது. ஜெராக்ஸ் என்பது நகல் எடுக்கும் எந்திரத்தை அறிமுகம் செய்த கம்பெனியின் பெயர் என்ற போதிலும், நகல் எடுக்கும் எல்லா கருவிகளையும் ஜெராக்ஸ் மெஷின் என்பதும், நகலையே ஜெராக்ஸ் என்பதும் நடைமுறையாகி விட்டது. அப்படி ஃபத்வா.

’முல்லா, முஃப்தி, சங்கராச்சாரியார், மடாதிபதி, மண்டலேஸ்வர் என்று எந்த மதத்தலைவர் என்ன சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்வதும் நிராகரிப்பதும் மக்களின் உரிமை. கட்டாயப்படுத்த யாருக்குமதிகாரம் கிடையாது. அந்த கருத்துகளுக்கு சட்ட அங்கீகாரமும் கிடையாது’ என்று நீதிபதிகள் கூறினர்.

சட்டத்தின் மாண்புதான் பிரதானம். அதற்கு மேலானவர்கள் எவரும் கிடையாது என்று ஓங்கி உரக்க அறிவிக்கும் தீர்ப்பு. நீதிமன்றம் இத்தனை உறுதியாகவும் சுதந்திரமாகவும் செயல்படும் நாட்டில் குடிமக்களுக்கு நன்மைகள் தவிர வேறெதுவும் நடக்க வாய்ப்பில்லை. அந்த நெகிழ்ச்சியான எண்ணத்துடன் நெஞ்சை நீவும்போது பின்னாலிருந்து கேலிச் சிரிப்பு கேட்கிறது.

திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தால்…

சுப்ரதா ராய்.

சகாரா குழுமத்தின் தலைவர். உச்ச நீதிமன்றத்துடன் கண்ணாமூச்சி விளையாடும் துணிச்சல் மிக்க தொழிலதிபர். தன்னை தலைவர் என சொல்லிக் கொள்வதில் அவருக்கு உடன்பாடு இல்லை. குடும்ப தலைவன் என்கிறார். குடும்பம்? பரிவார் என்றால் குடும்பம். சங் பரிவார் மாதிரி சகாரா பரிவார் என்றுதான் பெயரே சூட்டியிருக்கிறார்.

ரியல் எஸ்டேட், ஏர்லைன்ஸ், டெலிவிஷன் சேனல், சூப்பர் ஸ்டோர்ஸ், தியேட்டர்கள், ஓட்டல்கள் என்று வெவ்வேறு துறைகளில் 4,800 நிறுவனங்கள் இருக்கின்றன. 11 லட்சம் பேர் வேலை செய்கிறார்கள். குழுமத்தின் சொத்து மதிப்பு 1.53 லட்சம் கோடி.

உ.பி.யின் கோரக்பூரில் ஒரு ஓட்டை லாம்ப்ரெட்டா ஸ்கூட்டரில் தெரு தெருவாக போய் பிஸ்கட்டும் காரச்சேவும் விற்றுக் கொண்டிருந்த சுப்ரதா முப்பது ஆண்டுக்குள் இத்தனை பெரிய தொழிலதிபராக முடிந்தது எப்படி?

அந்த ஸ்கூட்டரை விற்றுவிட்டு புதிதாக வாங்க 5,000 ரூபாய் கடன் கேட்டபோது, ‘அவ்வளவு பணம் உன்னை நம்பி தர முடியாது’ என்று ஸ்டேட் பாங்க் மானேஜர் மறுத்துவிட்டார். லக்னோவில் உள்ள கம்பெனி தலைமையகத்தில் கண்ணாடி கூண்டுக்குள் இன்று நினைவுச் சின்னமாக நிறுத்தப்பட்டிருக்கிறது அந்த லாம்ப்ரெட்டா.

அப்போதுதான் குஜராத்தை சேர்ந்த ஒரு சர்தார் சுப்ரதாவுக்கு நெருக்கமானார். அவர் யோசனைப்படி, சீட்டு கம்பெனி ஆரம்பித்தார். ரிக்ஷாக்காரர், பீடாக்காரர் என்று அன்றாடம் தொழில் செய்து பிழைக்கும் ஏழைகளிடம் 2 ரூபாய், 5 ரூபாய் என்று தினசரி சீட்டு பிடித்தார். ஏழைகளுக்கு பஞ்சமில்லாத நாடு என்பதால் சிறு கரன்சிகள் மலையாக குவிந்தது.

தொழிலை விரிவுபடுத்தி ஆகாயத்தை தொட்ட பிறகும் சிறு முதலீட்டாளர்களை அவர் விடவில்லை. ஐயாயிரம், பத்தாயிரம் என்று 3 கோடிக்கு மேற்பட்ட கிராமவாசிகளிடம் வசூலித்தார். லாபத்தில் பங்கு தந்து உங்கள் எல்லோரையும் லட்சாதிபதி ஆக்குகிறேன் என்றார்.

24,000 கோடி திரண்டது. 50 பேரிடம் நிதி வசூலித்தாலே செபி அமைப்பிடம் அனுமதி பெற வேண்டும் என்றுசட்டம் இருக்கிறது. மூன்று கோடி பேர் என்றால் சும்மாவா? புகார்கள் வந்ததும் செபி வழக்கு தொடர்ந்தது.

எந்த சட்டத்தையும் கோர்ட் உத்தரவையும் கண்டுகொள்ளவில்லை சுப்ரதா. உத்தர பிரதேச அரசு அவருக்கு சேவகம் செய்தது. டெல்லி, மும்பய் அரசியல் தலைவர்களும் தொழிலதிபர்களும் திரை நட்சத்திரங்களும் அவருடன் போட்டோ எடுத்துக் கொள்ள வரிசையில் நின்றனர்.

500 கோடி செலவு செய்து இரண்டு மகன்களுக்கு திருமணம் செய்தார். திருமண வரவேற்பில் அமிதாப் பச்சன், ஷாருக் கான் தொடங்கி பாலிவுட் நட்சத்திரங்கள் எல்லாம் வியர்த்து விழும் அளவுக்கு நடனம் ஆடினர். விருந்தினர்களை அழைத்து வரவும் கொண்டு விடவும் 30 விமானங்களை அமர்த்தியிருந்தார். பிரதமர் வாஜ்பாய் தலைமையில் அரசியல் தலைவர்கள் நேரில் வந்து ஆசி வழங்கினர்.

நீதிமன்றத்தின் நீளும் கரங்களை சமாளிக்க நிமிடவாரியாக மீட்டர் போடும் சட்ட மேதைகள் ராம் ஜெத்மலானி, ரவி சங்கர் பிரசாத் மேற்பார்வையில் வழக்கறிஞர் படை சுறுசுறுப்பாக இயங்கியது.

ஆனாலும் விடாப்பிடியாக வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட், 3 கோடி முதலீட்டாளர்களின் முகவரியை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. நிறைய பேர் இறந்து விட்டார்கள்; மீதி பேருக்கு நிரந்தர முகவரி கிடையாது என்று சுப்ரதா பதில் சொன்னார். பணம் கொடுத்தவர்களை கண்டுபிடித்து 26,000 கோடியை திருப்பி கொடுக்குமாறு கோர்ட் உத்தரவிட்டது. எந்த உத்தரவுக்கும் பலன் இல்லாததால் சகாரா சொத்துகளை முடக்க ஆணை பிறப்பித்தது. சம்மன் மேல் சம்மன் அனுப்பியும் சுப்ரதா ஆஜர் ஆகாததால் ஜாமீனில் வரமுடியாத வாரண்ட் பிறப்பித்தது.

இங்குதான் அரசு எந்திரத்தின் அதிர்ச்சி தரும் இயக்கத்தை பார்க்க வேண்டும்.

சுப்ரீம் கோர்ட் கைது உத்தரவு பிறப்பிக்கிறது. டெல்லி போலீஸ் அதை செயல்படுத்த வேண்டும். சுப்ரதா லக்னோவில் இருக்கிறார். அதனால் உ.பி போலீசுக்கு தகவல் அனுப்பி உதவி கேட்கிறது டெல்லி போலீஸ். உ.பி போலீஸ் லக்னோ மாஜிஸ்டிரேட்டிடம் வாரண்ட் கேட்கிறார்கள். அதை வாங்கிக் கொண்டு சுப்ரதாவின் அரண்மனைக்கு – அதை வீடு என்று சொல்ல முடியாது. உலகப்புகழ் பெற்ற இசை, நடன கலைஞர்களை அழைத்து நிகழ்ச்சி நடத்தவும் குடும்பத்தினர் பார்த்து ரசிக்கவும் உள்ளே ஒரு ஆடிட்டோரியமே கட்டியிருக்கிறார் என்றால் வீடு என குறிப்பிட முடியுமா? – போகிறார்கள்.

அனுமதி கிடைக்கவில்லை.
‘எங்களை உள்ளே விடாவிட்டால் டெல்லி போலீஸ் வந்துவிடும். அவர்கள் புறப்பட்டு விட்டதாக தகவல். பரவாயில்லையா?’ என அதிகாரி கேட்கிறார். காலை 10.15க்கு கதவு திறக்கப்படுகிறது. சகாரா மாளிகையின் பிரசித்தி பெற்ற விருந்தோம்பலில் திளைக்கிறது ரெய்டு பார்ட்டி.

கைதெல்லாம் எதற்கு? நானே நீதிக்கு தலைவணங்கி சரண் அடைந்துவிட்டேன் என்று மீடியாவுக்கு செய்தி கொடுங்கள் என்கிறார் சுப்ரதா. அவரது ஆணை நிறைவேற்றப்படுகிறது. நீதிமன்ற வாரண்ட் வந்த பிறகு சரண்டருக்கு வழியில்லையே என்று உள்ளூர் செய்தியாளர்கள் கேட்கவில்லை.

கோர்ட், ஜெயில் எல்லாம் தேவையில்லை; நான் இங்கேயே இருந்துவிடுகிறேன். ஹவுஸ் அரெஸ்ட் என்று சொல்லிவிடுங்கள் என்கிறார். அந்த தகவல் பாஸ் ஆகிறது. அதற்குள் லக்னோ வந்துவிட்ட டெல்லி போலீஸ் கடுப்பாகிறது. அதெல்லாம் முடியாது; நாங்கள் அரெஸ்ட் செய்து டெல்லி ஜெயிலுக்கு கொண்டு போகிறோம் என்கிறது. சரி, சரி, நாங்களே கைது செய்து கொண்டு வருகிறோம் என்று சமாளித்த உ.பி போலீஸ் அணி, 5 மணிக்கு மாளிகையில் இருந்து சுப்ரதாவுடன் வெளியேறுகிறது.

அந்த நேரத்துக்கு பிறகு யாரையும் சிறையில் அடைக்க விதிகள் அனுமதிப்பதில்லை என்பது அவர்களுக்குதான் தெரியுமே.

சிவராத்திரி விடுமுறையை ரத்து செய்துவிட்டு கோர்ட்டில் வந்து காத்திருக்கிறார் மாஜிஸ்டிரேட். ஆடி, பிஎம்டபிள்யு சொகுசு கார்கள் அணிவகுப்பில் சுப்ரதா அங்கு வந்து சேர்கிறார். ஆம், போலீஸ் வேன், ஜீப் எதுவும் கிடையாது.

’டெல்லி போலீஸ் கஸ்ட்டி கேட்கிறது. என்ன சொல்கிறீர்கள்?’ என்று அரசு சிறப்பு வழக்கறிஞரை கேட்கிறார் மாஜிஸ்டிரேட். சரி என்றால் சுப்ரதாவின் கோபத்துக்கு ஆளாவோம்; மறுத்தால் சுப்ரீம் கோர்ட் கோபப்படும் என்று வழக்கறிஞர் யோசித்தாரோ என்னவோ, தெரியவில்லை. திடீரென்று எனக்கு நெஞ்சு வலிக்கிறது என்று சொல்லி அப்படியே உட்கார்ந்துவிட்டார்.

அவசரமாக அவரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிட்டு, போலீஸ் காவலில் வைக்க – நீதிமன்ற காவல் அல்ல – அவசரமாக உத்தரவிடுகிறார் மாஜிஸ்டிரேட்.

வீட்டிலேயே இருக்க அவர் விரும்புகிறார் என்று போலீஸ் சொல்கிறது.

உத்தரவு போட்டு விட்டேன்; இனி உங்கள் பாடு என்று கூறி வீட்டுக்கு கிளம்புகிறார் மாஜிஸ்டிரேட். டெல்லிக்கு கொண்டு போகிறோ; டிரான்சிட் ரிமாண்ட் கொடுங்கள் என்று டெல்லி போலீஸ் கதறுவது அவர் காதில் விழவில்லை.

இதற்குள் உ.பி போலீஸ் புடை சூழ சுப்ரதா புறப்படுகிறார். குக்ரைல் என்ற சுற்றுலா தலத்தில் உள்ள வனத்துறை விருந்தினர் மாளிகை நோக்கி செல்கிறது சொகுசு கார்களின் அணிவகுப்பு. அங்குதான் சுப்ரதா “சிறை” வைக்கப்படுகிறார். சமாஜ்வாடி அரசின் மொத்த அரசு எந்திரமும் எடுபிடிகள் போல சுப்ரதா விரல் நீட்டும் திசையில் சுறுசுறுப்பாக சுழல்கிறது.

சட்டங்களும் விதிகளும் சுப்ரதா ராய்க்காக மட்டும் வளைக்கப்படுவதாக குற்றம் சாட்ட முடியாது. ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாதவர் கோடிகள் செலவிட்டு பந்தயக் குதிரைகள் இறக்குமதி செய்கிறார். ஆயுதங்களுடன் சிக்கிய நடிகர் நினைத்த மாத்திரத்தில் பரோல் வாங்கி குடும்பத்தோடு குலாவுகிறார். போதையில் காரை ஏற்றி பாதசாரிகளை கொன்ற நடிகர் கோடி கோடியாக அட்வான்ஸ் வாங்கி புதுப்படங்களுக்கு கால்ஷீட் கொடுக்கிறார்.

அப்பட்டமாக சட்டத்துக்கு சவால் விட்டு அரசு மரியாதையுடன் வலம் வருபவர்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் ஐந்தாறு பேராவது இருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேரையும் நீதிக்கு தலைவணங்க வைப்பது உச்ச நீதிமன்றத்தின் பொறுப்பு. அதை நிறைவேற்றாதவரை ‘சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம்’ என்பது சராசரி குடிமகன் காதுகளில் ஏமாற்று கோஷமாகவே எதிரொலித்துக் கொண்டிருக்கும்.

அது ஆகக் கடினமான கடமை. ஆனால் யாராவது எங்காவது தொடங்கியாக வேண்டிய கடமை. ஒரு தமிழன் தலைமை வகிக்கும் காலகட்டத்தில் அதற்கான பிள்ளையார் சுழி போடப்பட்டால் காலமெல்லாம் சந்ததிகள் கைகூப்பி நன்றி சொல்லும்.

செல்வாக்குள்ள தனிநபர்களுடன் நீதிபதிகள் பொது மேடையை பகிர்ந்து கொள்வது மக்களின் பார்வையில் எவ்வாறு பதிவாகிறது என்ற ஆய்விலிருந்து கூட ஆரம்பிக்கலாம். அதன் மூலமாக, இதுவரை எவருக்கும் பிடிபடாத பல பரிமாணங்கள் வெளிச்சத்துக்கு வர வாய்ப்பிருக்கிறது.

(இழு தள்ளு 10 / கதிர் / குமுதம் ரிப்போர்ட்டர் 09.03.2014)

 நன்றி
தகவல் தந்தவர்
 கதிர் வேல் Kathir Vel

No comments: