Thursday, March 27, 2014

மருத்துவ குறிப்புகளைத் தங்கிவந்த தமிழர் பழமொழிகள்

By பாலமுருகன் - சென்னை,

தமிழர்களால் வழிவழியாகச் சொல்லப்பட்டுவரும் பழமொழிகளால், முந்தைய தமிழ் மக்களின் பண்பாட்டையும், பழக்க வழக்கங்களையும், சமுதாயப் பின்னணியையும் அறிந்து கொள்ள முடிகின்றது. இத்தகைய பழமொழிகளில் மருத்துவச் செய்திகளும், நோய் ஏற்படாமல் இருக்கக் கடைப்பிடிக்க வேண்டிய ஆரோக்கிய வழிமுறைகளும், மற்றும் உணவு மற்றும்  மருந்துப் பொருட்களின் மருத்துவ தன்மைகளும், அதனால் குணமடையக்கூடிய நோய்கள் பற்றிய விபரங்களும் காணக்கிடைக்கின்றன. இத்தகைய மருத்துவப் பழமொழிகள் பெரும்பாலும், மக்களால் சாதாரணமாகப் பேசப்படுவதில்லை. நோய் உண்டான போதும், கேலியாகப் பேசும் போதும் மட்டுமே வெளிவருகின்றன. மக்களின் அனுபவங்களே பழமொழிகள். அரிய மருத்துவச் செய்திகள்
அடங்கிய பழமொழிகள் சிலவற்றைக் காண்போம்...

1. ”இளைத்தவனுக்கு எள்ளைக்கொடு;
கொளுத்தவனுக்குக் கொள்ளைக் கொடு”

எள், கொள்ளு என்பவை இரண்டும் உணவு வகைகள். எள் என்பது நல்ல சத்துள்ள உணவாகும். மிகவும் மெலிந்த தேகம் கொண்டவர்கள் எள்ளைத் தின்றால் நன்கு உடல் பெருக்கும் என்றும், பருமனான உடலைக் கொண்டவர்கள் கொள்ளைத் தின்றால், உடல் மெலிந்து போதுமான அளவோடு இருக்கும் என்றும் இப்பழமொழி கூறுகிறது.

2. ”ஆற்றுநீர் வாதம் போக்கும்; அருவி நீர் பித்தம் போக்கும்; சோற்று நீர் இரண்டையும் போக்கும்“

மனிதர்களுக்கு ஏற்படக் கூடிய அனைத்து நோய்களுக்கும் அடிப்படையாக விளங்குவது வாதம், பித்தம், கபம் என்ற மூன்றுமே ஆகும். இவற்றுள் வாதம், பித்தம் தொடர்பாக ஏற்படும் நோய்களைப் போக்கும் வழிமுறைகளை இப்பழமொழி விளக்குகின்றது. ஆற்று நீரிலும், அருவி நீரிலும் உயர்ந்த தாதுப் பொருட்களும், மூலிகைச் சத்துக்களும், நிறைந்து காணப்படும்.

ஏனெனில், ஆற்றுப் படுகையிலும், அருவிக்கு நீர் வரும் மலைப் பகுதியிலும் மூலிகைச் செடிகள் நிறைந்து காணப்படும். மூலிகைகளின் மீது பட்டு இந்நீர் வருவதால் இத்தகைய குணமுடையதாக உள்ளது. வாதநோய் தொடர்பாக நரம்புக்கோளாறுகளும், பித்தநோய் தொடர்பாக மூளைக் கோளாறும் ஏற்படுகின்றன. இவற்றைக் குணப்படுத்த ஆற்று நீரும், அருவி நீரும் பயன்படுகின்றன. வாதம், பித்தம் இரண்டையும் சோற்று நீர் குணமாக்குகின்றது. இத்தகைய மருத்துவகுணம் கருதியே நாட்டுப்புற மக்கள் காலையில் எழுந்ததும் பழைய சோற்று நீரை அருந்துகின்றனர்.

3.”வேலம் பட்டை பித்தத்தைப் போக்கும்; ஆலம்பட்டை மேகத்தைப் போக்கும்”

வேலம்பட்டையை இடித்து ஒரு குவளை நீர்விட்டுக் காய்ச்சி வடிகட்டி அரைக் குவளையாக்கித் தினமும் காலை வேளை மட்டும் குடித்துவர பித்த நோய்களான, வயிற்றுப்புண், பித்தமயக்கம், கைகால் குடைச்சல் குணமாகும். ஆலமரத்தின் பட்டையைக் குடிநீராக்கி குடித்து வர வாய்ப்புண், வாய்நாற்றம், சிரங்கு, கரப்பான்படை ஆகியன விலகும் என்கிறது பழமொழி.

4. ”மாதா ஊட்டாத அன்னத்தை மாங்காய் ஊட்டும்”

மாங்காய் என்பது மாங்காய் ஊறுகாயைக் குறிக்கும், மாங்காய் ஊறுகாய் பசியைத் தூண்டுகிறது. எனவே உணவில் மாங்காய் ஊறுகாயைச் சேர்த்துக் கொள்வதால் ஜீரண சக்தி அதிகரிக்கும் என்பதை இப்பழமொழி விளக்குகிறது.

5. ”ஒரு போது உண்பான் யோகி; இருபோது உண்பான் போகி; முப்போது உண்பான் துரோகி”

ஒரு வேளை உணவை உட்கொண்டு ஆழ்ந்த யோகப் பயிற்சி மேற்கொள்வதால், மூளையின் அடிப்பகுதியில் ஹைப்போதாலமஸ் என்னும் அமைப்பிற்குக் கீழே உள்ள சுரப்பியானது நரை திரை நோய்களை அணுக விடாது. இருவேளை உணவை உட்கொள்வதால் வாழ்வு நோயற்று இன்பமுடையதாக இருக்கும். மூன்றுவேளை உணவு கொள்பவர்கள் நோயாளிகளாகவே இருப்பர். அஜீரணம், மலச்சிக்கல், குடல்நோய் போன்றவற்றால் இவர்கள் பாதிக்கப்பட்டு, எந்நேரமும் நோயுடன் போராடி வாழும் நிலையை உண்டாக்கும்.

6. ”அழுத பிள்ளை சிரித்ததாம் கழுதைப் பாலைக் குடித்ததாம்”

சில குழந்தைகள் பிறக்கும்போதே நோய்களின் அறிகுறியுடன் பிறக்கின்றன. உள்ளங்கை, உள்ளங்கால் பகுதிகள் நீல நிறமாக இருப்பின் குழந்தை செவ்வாப்பு என்னும் நோயால் தாக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கருதுகின்றனர். இதற்குரிய மருந்தாகக் கழுதைப் பால் புகட்டப்படுகிறது என்பதனை இப்பழமொழி குறிக்கிறது.

7. ”இருப்பவன் இரும்பைத் தின்பான், போறவன் பொன்னைத் தின்பான்“

உடல் இயங்குவதற்கு இரும்புச் சத்து இன்றியமையாதது. இதன் குறைவால் இரத்தச் சோகை என்னும் நோய் ஏற்படுகிறது. எனவே இரும்புச்சத்து அதிகமுள்ள காய் கறி உள்ளிட்ட உணவுப் பொருளை உட்கொள்ளுதல் வேண்டும். போக இச்சையை விரும்புபவர்கள் பொன்னைப் பஸ்பமாக்கி உண்பார்கள். இதனால் நரம்புக் கோளாறு, சிறுநீரகக் கோளாறு போன்றவை ஏற்படும்.  இதனைக் குறிக்க, போறவன் பொன்னைத் தின்பான் என்றார்கள்.

8. ”ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன்”

இதனைக் கிராமப்புற மக்கள் ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்று வழங்குகின்றனர். ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்பதுவே இதன் பொருளாகும். நாட்டுப்புற மருந்துகளில் மூலிகைச் செடிகளும் அவற்றின் வேர்கள் மற்றும் பட்டைகளும் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றுள் குறைந்தது ஆயிரம் வேர்களின் பயன்பாடு பற்றி ஒருவன் தெரிந்திருந்தால் மட்டுமே அவன் அரை வைத்தியன் என்ற நிலையைப் பெற இயலும் என்பதை இப்பழமொழி உணர்த்துகிறது.

9. ”அரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்டாளாம்”

அரச மரத்தைச் சுற்றிவந்தால் குழந்தைப் பாக்கியம் ஏற்படும் என்று யாரோ கூறக்கேட்ட ஒருத்தி, கணவனுடன் சேராமல், அரசமரத்தை மட்டுமே சுற்றி வந்தாளாம். அரசமரமும், வேம்பும் இணைந்த மரத்தினைச் சுற்றிவர காற்றானது கருப்பையில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை வாய்ந்தது என்பதை அறிந்தே நம் முன்னோர்கள் பிள்ளையார் சிலையை இந்த மரத்தின் கீழ் வைத்தனர். குழந்தைப் பாக்கியமற்ற பெண்கள் கும்பிடுவதற்கு இதுவே முக்கிய காரணம் ஆகும்.

10. ”ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி”

ஆலும் என்பது ஆலமரத்தின் விழுதினையும், வேலமரம் என்பது வேப்ப மரத்தின் குச்சியையும், நாலும் என்பது நாலடியாரையும் இரண்டு என்பது திருக்குறளையும் குறிக்கும். இது பொதுமக்கள் அனைவராலும் சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் பழமொழியாகும். ஆலமரத்தின் விழுதினையும், கருவேல மரத்தின் மரக்குச்சிகளையும் நன்கு மென்று பல்விளக்க, பல் நன்கு பளபளப்புடனும், பல் ஈறுகள் நல்ல பலத்துடனும் காணப்படும் என்னும் செய்தி இப்பழமொழியில் விளக்கம் பெறுகிறது.

11. ”பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்”

மருத்துவக் குணம் கொண்ட மிளகு நம் உணவில் பயன்படுத்தப்படும் பொருள்களுள் ஒன்றாகும். இந்த மிளகு நஞ்சு நீக்கும் தன்மையுடையது. பகைவர்களின் வீட்டில் உண்ணும் உணவில் விஷம் கலந்திருந்தாலும், பாம்பின் விஷம் தாக்கியவர்களுக்கு விஷத்தின் தன்மையைக் கண்டறிவதற்கும் மிளகு பயன்படுகிறது. பாம்பால் கடியுண்டவருக்கு மிளகின் எரிப்புச் சுவை தெரியாவிட்டால் உடம்பில் விஷம் தாக்கி விட்டதாகக் கூறுகின்றனர்.

12. ”விருந்தும் மருந்தும் மூன்று நாள்”

சொந்தக்காரர்கள் வீட்டிற்கு விருந்துக்குச் சென்றால் மூன்று நாள் மட்டுமே இருக்க வேண்டும். நீண்ட நாட்கள் இருப்பின் பகையுண்டாகும். மருத்துவரிடம் மருந்து உட்கொள்ளும்போது, ஒரு மருந்தின் ஆற்றல் மூன்று நாட்களுக்குள்ளாக தெரிந்துவிடும். இல்லையேல் மருந்தை மாற்ற வேண்டும் என்கிறது இப்பழமொழி.

13. ”ஆவாரைப் பூத்திருக்கச் சாவோரைக் கண்டதுண்டோ”

ஆவாரைப் பூ இதழ்களைச் சேகரித்து, நிழலில் உலர்த்திக் காய வைத்து, இடித்து வைத்துக் கொண்டு தேநீர்,   கோப்பித்தூள் இவைகளுக்குப் பதிலாக உபயோகித்து வர உடல் வறட்சி, உடல் நாற்றம், நீரிழிவு நோய், தோல் நோய் ஆகிய நோய்களைக் குணமாக்குவதால், ஆவாரைப் பூவின் மகத்துவத்தைக் குறிக்க வந்த பழமொழியாகும்.
இதுபோன்று ஏராளமான பழமொழிகள் மருத்துவக் குறிப்புகளை உணர்த்தும் நோக்கில் சொல்லப்பட்டுள்ளன. உலகில் வேறெந்த இனத்தாரும் இப்படிச் சொன்னதில்லை என்பது தமிழர்களுக்கு பெருமையான விடயம்.
Source : http://www.kalaikesari.com/
தகவல் தந்தவர்  Sathiyananthan Subramaniyan Banumathi

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails