Wednesday, March 26, 2014

மரணருசி

 “வீட்டில் நான் இல்லாதபோது, நான் இருக்கிறேனா என்று யாராவது கேட்டால் ‘இல்லை’ என்றுதான் சொல்வார்கள். இதுபோல நாம் ஏராளமான இடங்களில் இருக்கிறபோதே ‘இல்லை’ ஆகிக்கொண்டிருக்கிறோம். இந்த இன்மையைப் பற்றியெல்லாம் கவலைப்படாத நாம், என்றோ ஒருநாள் நிரந்தரமாக உலகில் ‘இல்லை’ எனப்படும் மரணம் குறித்துதான் எப்பவும் அச்சப்பட்டுக் கொண்டிருக்கிறோம்”

‘கதைகள் பேசுவோம்’ இலக்கிய முகாமில் எஸ்.ராமகிருஷ்ணன் பேசிக்கொண்டிருந்தபோதே, அங்கு வந்திருந்த சில பத்திரிகையாளர்களின் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். வந்துகொண்டிருந்தது. சகோதரர்களான இரு மூத்த பத்திரிகையாளர்களின் தாயார் காலமாகி விட்டார். உடனடியாக செங்கல்பட்டிலிருந்து கிளம்பிவந்து, இறுதிமரியாதையில் கலந்துகொள்ள சாத்தியமில்லை.

மறுநாள் அண்ணன் சிவராமனோடு துக்கம் விசாரிக்க சென்றிருந்தேன். மொட்டை அடித்திருந்தவர் மெதுவாக பேச ஆரம்பித்தார். “நமக்கு இந்த நம்பிக்கையெல்லாம் இல்லைன்னா கூட, அம்மாவுக்கு இதில் தீவிரமான ஈடுபாடு இருந்தது. அதனாலே அவங்க ஆசைப்பட்டமாதிரியே அனுப்பி வெச்சிட்டோம்”

மரணத்துக்கு முன்பாக சில காலம் அவரது தாயார் அனுபவித்த உடல் உபாதைகள், அதன் விளைவாக அவர் மற்றவர்களை சிறுசிறு தேவைகளுக்காகவும் அணுகவேண்டியதினால் ஏற்பட்ட சுயமரியாதை தொடர்பான உளவியல் சிக்கல், மருத்துவ சிகிச்சைகள் என்று பேசிக்கொண்டே இருந்தார்.

சட்டென்று கண்கலங்கியவர் சிறுவயது நினைவுகளுக்குள் நுழைந்தார். தன்னையும், தம்பியையும் அவர் வளர்த்த விதம், தொடர்பான சம்பவங்கள் என்று முன்பின்னாக சொல்லத் தொடங்கினார். தன்னுடைய தாயாரின் நுண்ணுணர்வு குறித்து அவர் சொன்ன தகவல்கள், கேட்பவர்களுக்கு கொஞ்சம் அமானுஷ்யமான தன்மையை தரும். எத்தனையோ வருடங்களுக்கு முன்பாக யதேச்சையாக வீட்டுக்கு வந்தவர்களை, பல வருடங்கள் கழித்து சந்தித்தாலும் துல்லியமாக முந்தைய சந்திப்பின்போது நடந்தவை, பேசியவற்றையெல்லாம் நினைவுகூர்வார் என்றார். அவர் கற்ற கல்விக்கும், வெளியுலக அனுபவத்துக்கும் சற்றும் தொடர்பில்லாத துல்லியமான கேள்விகளை மற்றவர்களிடம் எழுப்பக்கூடியவராக வாழ்ந்திருக்கிறார்.

எண்பத்தேழு வயது தாயை பற்றி அவரால் எண்ணூறு பக்கங்களுக்கு எழுதக்கூடிய நினைவுப்பொக்கிஷங்கள் நிறைய இருக்கிறது என்று தெரிந்தது. மரணம் ருசித்த ஒரு முழு மனிதர் ஒட்டுமொத்தமாக, உலகில் எந்த தடயமுமின்றி இல்லாமல் போய்விடுவதில்லை. நினைவுகள் வாயிலாக உற்றார், உறவினரிடம் சில காலத்துக்கு அவர் இருந்துக்கொண்டுதான் இருக்கப்போகிறார்.

அன்றிரவு எஸ்.ராமகிருஷ்ணனின் ‘உறுபசி’ வாசித்தேன்.

நாவலின் முதல் வரியிலேயே நாயகன் சம்பத் மரித்துப் போகிறான். அவனோடு கல்லூரியில் படித்த மூன்று நண்பர்கள் கானகத்துக்குள் நடந்துக்கொண்டே இருக்கிறார்கள். சம்பத்தின் மரணம் ஒவ்வொருவரையும் ஒவ்வொருவிதமான மனப்பிறழ்வுக்கு ஆளாக்கியிருக்கிறது. அந்த கானகத்துக்குள் தங்கியிருந்த நாட்களில், அவர்களது ஒவ்வொருவரின் மீள்பார்வையாக நாவல் விரிகிறது. இடையில் சம்பத்தின் மனைவி, முன்னாள் காதலி ஆகியோரும் அவரவர் தொடர்புடைய சம்பவங்களை நினைத்துப் பார்ப்பதாக, கிட்டத்தட்ட ‘ரோஷோமான்’ உத்திகொண்டு நாவல் பின்னப்பட்டிருக்கிறது.

சம்பத் குறித்த குழப்பமான பிம்பமே ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. வாசிப்பவர்களுக்கும் அந்த பாத்திரத்தை எடைபோடுவதில் சிக்கல் ஏற்பட்டு தத்தளிப்பதை எழுத்தாளர் விஷமப் புன்னகையோடு ரசிக்கிறார். ஒரு கட்டத்தில் உலகத்திலேயே இவன்தான் புத்திசாலி என்று கருதக்கூடியவனாக இருக்கிறான். மறு சந்தர்ப்பத்தில் அவன் மனநோயாளியா என்று சந்தேகிக்கக்கூடிய சாத்தியங்கள் தோன்றுகிறது. சம்பத்தோடு வாழ்ந்த அவனுடைய மனைவிக்கே கூட இறந்தபின்னும் அவனை எப்படி எடுத்துக் கொள்வது என்கிற குழப்பம் இருக்கிறது. பாதசாரி எழுதிய காசியின் தாக்கம் சம்பத்துக்கு உண்டு என்று எஸ்.ரா சொல்கிறார்.

கல்லூரி நாட்களில் கதாநாயகனாக பார்க்கப்பட்ட சம்பத் காட்டாறாய் வாழ்ந்து தனக்கும் தன்னைச் சுற்றியிருந்தவர்களுக்கும் எதிர்பாராத இன்ப அதிர்ச்சிகளையும், சொல்லவொண்ணா துயரங்களையும் சரிபாதியாய் வழங்குகிறான். மனம்போன போக்கில் வாழவிருப்பப்படும் சம்பத்துக்கு குடும்பமும், சமூகமும் தடைகளாக தோன்றியிருக்க வேண்டும் என்று நாம் யூகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் இரத்தம் சுண்டத் தொடங்கும் நடுத்தர வயது காலக்கட்டத்தில் காமத்தின் தேவைக்காவும், வாழ்க்கைத் துணைக்காகவும் திருமணம் செய்துக் கொள்கிறான். அவன் அன்பான கணவனா அல்லது சைக்கோவா அல்லது இரண்டுமேவா என்கிற தெளிவு நாவல் முடிந்தபோதும் நமக்கு ஏற்படுவதில்லை. ஐந்து பேர் அவனது வாழ்க்கையை அக்குவேறு ஆணிவேறாக அலசியும் கடைசிவரை சம்பத் ஒரு மர்மப் பாத்திரமாகவே, விளங்காத புதிராகவே இருப்பதுதான் நாவல் தரும் சுகமான சுவாரஸ்யம்.

இந்நாவல் மரணம் குறித்த விசாரணைகளை விஸ்தாரமாக அலசுகிறது. நவீன மனிதவாழ்வு மரணங்களை எப்படி எதிர்கொள்கிறது என்பதை அப்பட்டமாக காட்டுகிறது. மரணவீட்டின் அபத்தத்தை கேலி பேசுகிறது (உதா : கணவன் பிணமாக கிடக்கிறான். தலைமாட்டில் அமர்ந்திருக்கும் மனைவிக்கு சிறுநீர் முட்டிக்கொண்டு வருகிறது). மரணத்துக்கு முன்னான நோய்மைக்காலத்தை வலியோடு எழுதுகிறது. மருத்துவமனை வராண்டாவில் இருவர் நடக்கும் காட்சியை, ‘நாங்கள் நோய்மையின் தாழ்வாரத்தில் நடந்துக்கொண்டிருந்தோம்’ என்று விவரிக்கிறார் எஸ்.ரா.

நாவலை வாசித்து முடித்ததுமே இதுதான் தோன்றியது. சாதாரண மனிதனின் மரணம் ஒன்றும் சமூகத்துக்கு அவ்வளவு முக்கியமான நிகழ்வு அல்ல. நாம் அச்சப்படக்கூடிய அளவுக்கு நம்முடைய மரணம் பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்திவிடாது. பைக் பஞ்சர் ஆனதுமே, கடையில் கொடுத்து பஞ்சர் ஒட்டி ஓட்டிக்கொண்டு செல்வதைப் போல, நம்முடைய மரணத்துக்குப் பிறகு ஒரு சில நாள் சோகத்தை முடித்துக்கொண்டு காரியம் செய்துவிட்டு சுற்றமும், நட்பும் வழக்கம்போல வாழத் தொடங்கிவிடும். மிகக்குறைவான நபர்களின் நினைவில் மட்டுமே மரணத்துக்குப் பிறகும் சில காலம் நாம் வாழக்கூடும்.

மரணம் ஒரு சலுகை தருகிறது. வாழும்போது நாம் செய்த காரியங்களில் பெரும்பாலான கெட்டதை எல்லாம் அழித்துவிட்டு, நல்லதை மட்டுமே மற்றவர்களின் நினைவுகளில் உலவவிடுகிறது. மரணித்து விட்டவர்கள் மீது யாருக்கும் கறாரான விமர்சனங்கள் இருப்பதில்லை.

நூல் : உறுபசி
எழுதியவர் : எஸ்.ராமகிருஷ்ணன்
பக்கங்கள் : 136
விலை : ரூ.110
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்
11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை-600018.
போன் : 044-24993448

எழுதியவர் யுவகிருஷ்ணா 
நன்றி  http://www.luckylookonline.com/

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails